எந்தவொன்றையும் கொண்டாட்டத்திற்கான அம்சமாக மாற்றும் போது பலரை தம் பக்கத்திற்கு ஈர்க்க முடியும் என்பது அடிப்படையான வணிக தந்திரம். அரசியலில் அதைத்தான் செய்வார்கள். கோஷம் எழுப்புவதும் கூட்டம் சேர்ப்பதும் ஒரு வகையிலான கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிற வழிமுறை.
இன்றைக்கு பல மதகுருக்களும் அதைத்தான் செய்கிறார்கள். சிவராத்திரிக்களில் நடனமும் உற்சாகமுமாக மதத்தில் கொண்டாட்டத்தைக் கலப்பதும் தியானம் என்ற பெயரில் கூத்தடிப்பதும் அல்லேலூயா கூட்டங்களில் ஆடச் செய்வதற்கும் பின்னணியில் உள்ள காரணம் என்னவாக இருக்கும் என்பதைத் தேடிச் சென்றால் சுவாரசியமாக இருக்கும். மேம்போக்காக ‘வாழ்க்கையின் துன்பங்களை எல்லாம் கொண்டாட்டத்தில் கரையச் செய்கிறோம்’ என்பார்கள். அதை சினிமாக்காரனும், நடன விடுதிக்காரனும் செய்ய முடியும். மதத்தில் அதைச் செய்ய வேண்டியதில்லை. தத்துவார்த்தமான புரிதல்கள், மத நூல்களில் சொல்லப்படும் கருத்துக்களின் வழியாக மனிதனைப் பக்குவப்படுத்தி அவனை துன்பங்களிலிருந்து விடுவிப்பதுதான் மதம் செய்ய வேண்டிய வேலை. இதெல்லாம் வறட்சியான சமாச்சாரங்கள். அமர்ந்து கேட்பதற்கு யாரும் தயாரில்லை. பொறுமையாக கூட்டம் சேர்ப்பதற்கும் இவர்களுக்கு நேரமில்லை. கொண்டாட்டங்கள் கட்டவிழ்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.
மதத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பேசலாம்.
வருடத்தில் இரண்டு கொண்டாட்டங்கள் சூழலை மிக மோசமாகச் சிதைக்கின்றன. ஒன்று விநாயகர் சதுர்த்தி இன்னொன்று தீபாவளி. பல்லாயிரக்கணக்கான விநாயகரின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. மழை பெய்து நீர் பெருகி வரும் இடங்களில் இன்னமும் கணேசனின் தும்பிக்கைகளும் கைகளும் கால்களுமாகச் சிதைந்து கிடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மீன்கள், நீர்த்தாவரங்கள், நுண்ணுயிரிகளை வர்ணங்கள் அழித்திருக்கும் என்பது விநாயகருக்குத் தெரிந்திருக்கக் கூடும். நமக்குத்தான் தெரியவில்லை. ஒவ்வொரு வருடம் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. வீதிக்கு ஐந்து பிள்ளைகளிடம் பணம் கொடுத்து சிலைகளை வைக்க ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் தம்மோடு பத்துக் குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டு அக்கம்பக்கம் வசூல் செய்து ஆட்டம் போட்டு மோரியா மோரியா என்று கொண்டாடியபடியே சென்று கரைத்துவிட்டு வருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு மதம் பற்றிய எந்தவிதமான புரிதலும் அவசியமாக இருப்பதில்லை. அதுவொரு கொண்டாட்ட நிகழ்வு. அவ்வளவுதான்.
விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த அடுத்த இரண்டே மாதத்தில் தீபாவளி. தீபாவளியை ஆதரித்து எழுதுகிறவர்களைப் பார்த்தால் ஆயாசமாக இருக்கிறது. புத்தாடை தரிப்பதும் கோவிலுக்குச் செல்வதும் இனிப்பு உண்பதுமாக எதைச் செய்யச் சொன்னாலும் பரவாயில்லை. ‘பட்டாசுப் புகையில் கொசு ஒழியும்’ அதனால் வெடியுங்கள் என்றெல்லாம் மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார்கள். மதத்தைப் பரப்ப எதை வேண்டுமானாலும் சிதைக்கலாம் என்று மிகப்பெரிய துரோகத்தை பூமிக்கு எதிராகச் செய்கிறார்கள். அடுத்த ஒரு வாரத்திற்கு எத்தனை தெருநாய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுகின்றன என்று கவனிக்கலாம். பறவைகளின் சத்தமே இருக்காது. பல முட்டைகள் பொறிக்கப்படாமலேயே சிதைந்து போய்விடுவதாகச் சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். நோயாளிகள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என இந்த வெடிச்சத்தத்தில் எத்தனை ஆயிரம் பேர்கள் அல்லலுறுகிறார்கள்?
எழுப்பப்படும் ஓசையால் உருவாக்கப்படும் மனநோய்க்கூறுகள், காற்றில் கலக்கும் புகையால் உண்டாகும் சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா நோயாளிகளின் அவஸ்தைகள் என எல்லாவற்றையும் வெகு வசதியாக மறந்துவிடுகிறோம். நாம் மதத்தை இறுகப்பற்றுவதற்கும் அடுத்தவர்களுக்கு மதம் மீது ஈர்ப்பை உருவாக்குவதற்கும் பல நூறு வழிவகைகள் இருக்கின்றன. புவியை குரூரமாகச் சிதைப்பதுதான் ஒரே வழியா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. சூழலை சீரழிப்பதுதான் நம் மதத்துக்கான அடையாளமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
தீபாவளியன்று டெல்லியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நிச்சயமாக வரவேற்கலாம். அதே சமயம் இத்தகைய உத்தரவை குறைந்தபட்சம் இந்தியாவில் பெருநகரங்களிலாவது அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில் தவறேதுமில்லை என நினைக்கிறேன். பெருநகரங்களில் பட்டாசு வெடிப்பது பிள்ளைகளுக்கிடையிலான ‘ப்ரெஸ்டீஜ்’ ஆக இருக்கிறது. குழந்தைகளிடம் பேசத் தொடங்கினால் அழுகிறார்கள். ‘அவங்க எல்லாம் பட்டாசு வெடிக்கிறாங்க..நாங்க மட்டும் ஏன் வெடிக்கக் கூடாது’ என்ற கேள்விக்குச் சரியாக பதில் சொல்ல முடிவதில்லை. அக்கம்பக்கத்தில் பல்லாயிரம் ரூபாய்களுக்கு பட்டாசு வாங்கியிருக்கிறார்களாம். ‘போச்சாது..கொஞ்சமா வாங்கிட்டு வந்து கொடு’ என்று வீட்டில் சொல்கிறார்கள். வீட்டிலேயே மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.
இயற்கையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் எப்படியெல்லாமோ போதித்து வைத்தால் இப்படியான பண்டிகைகளின் வழியாக ஒரே நாளில் கிழித்து வீசினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு இயற்கை சார்ந்த உணர்வு எப்படி உருவாகும்? பணத்தைக் கரியாக்குகிறோம் என்பது இரண்டாம்பட்சம். சூழலை மாசுறச் செய்கிறோம் என்கிற குறைந்தபட்சப் புரிதலையாவது அவர்களுக்கு உருவாக்க வேண்டியதில்லையா? காற்று எப்படி மாசுறுகிறது? எப்படி அமைதியைச் சீர்குலைக்கிறோம்? வெடித்துப் பரப்பிய கரித்துகள்களை மழை நீர் அடித்துச் சென்று எங்கே கரைக்கிறது என்பது பற்றியெல்லாம் ஏன் எதுவுமே யோசிக்காமல் ‘வெடித்துக் கொண்டாடுவோம் தீபாவளியை’ என்று எழுதிப் பேசுகிறோம்? நம்முடைய கண்களை ஏன் இறுக மூடிக் கொண்டு ஒரு தவறான விஷயத்தை உற்சாகப்படுத்துகிறோம்?
தொழில்மயம், வாகனப்பெருக்கம், ஜனநெரிசல் என்றெல்லாம் நமது பூமியை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் கொண்டாட்டமும் இன்னொரு அங்கமாகச் சேர்வது சரியானதா என்று நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மதத்திற்கு எதிராக எழுதவில்லை. அப்படி திசை மாற்றவும் வேண்டியதில்லை. இந்த மண்ணும் நீரும் காற்றும் சிதைக்கப்படும் போது வேடிக்கை பார்க்கும் சாமானியனாக இருந்தபடி இதை யோசிக்கலாம். சிரமத்திற்குள்ளாகும் சக உயிர்களுக்காக முடிவு செய்யலாம். வெடியும் புகையும் ஓசையுமில்லாத பண்டிகையாக தீபாவளி இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
9 எதிர் சப்தங்கள்:
You are absolutely right Mani Sir.
விநாயகர் சதுர்த்தி WAS BASICALLY A MAHARASHTRIAN FESTIVAL CREATED FOR A PATRIOTIC PURPOSE.
IN TAMIL NADU IT WAS NOT CELEBRATED AT THIS LEVEL. THE ATROCITIES/COLLECTION COMMITTED IN THE NAME GOD WILL NOT BE FORGIVEN BY GOD HIMSELF. IF ONE TALK'S LIKE THIS ALL WILL LABEL US AS NON BELIEVERS.விநாயகர் WILL KNOW THE TRUTH.
IN OUR CHILDHOOD IT WAS CELEBRATED AT HOME LEVEL IMMERSING CLAY 'PILLAIYAR' (NO CHEMICALS/NO POLLUTION) IN THE HOUSE WELL.
NOW விநாயகர் IS MADE OF CHEMICALS AND IMMERSED IN SEA AND WATER WAYS.
INSTEAD OF BRINGING UNITY EVERY YEAR THEY PRODUCE RELIGIOUS TENSIONS.
ALL POLITICAL PARTIES IN TAMIL NADU MUST CO OPERATE IN BUILDING விநாயகர்S WITH ORGANIC/ECO FRIENDLY MATERIALS.
IN FACT 'DEEPAVALY' MEANS ONLY FESTIVAL OF LIGHTS. CRACKERS CAME INTO PICTURE VERY VERY LATE.
IT WAS OLAI VEDY AND CAPE. AGAIN ECO FRIENDLY.
வெடியும் புகையும் ஓசையுமில்லாத பண்டிகையாக தீபாவளி இருக்கட்டும்.
POSSIBLE IF WE ALL JOIN TOGETHER.
ANBUDAN,
M.NAGESWARAN.
பெரிதாக எந்த முயற்சியு மில்லாமலேயே பட்டாசு பற்றிய ஒரு நேர்மறை பார்வை எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு (என்னையும் சேத்து தான்) வந்து விட்டது. ஆப் இ! தீவாளி.
Dear Manikandan
You can emphasize pollution free Deepavali or any other celebration. I also welcome your article.We will start this initiative from our home first .But you unnecessarily dragging Siva raathiri celebration here.In what way the people affected by this?Except this issue the article is fine.
I think he mentions the Sivarathri festival conducted near coimbatore - you should visit there to witness the chaos , pollution and disturbance to the wildlife- not for one day ,but for ten days -the amount of disturbances to all living nearby is beyond words. Thank you for understanding.
பெரும்பான்மையானவர்கள் ஏதேனும் ஒன்றை செய்யாமலிருக்க பயம் காட்ட வேண்டும். செய்ய வைக்க ஆசை காட்ட வேண்டும்.இவை தவிர்த்து சிந்தித்து செயல் பட அல்லது செயல் படாமலிருக்க செய்வது மிகக் கடினம்.
தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரிடம் தமிழில் உரையாடுவது போல் தான் எனக்கு இந்த கட்டுரை தோன்றுகிறது.வளர்த்து ஆளாக்கிய அப்பன் ஆத்தாக்களுக்கு சோறு கொடுக்க சால்சாப்பு சொல்லும் மக்களிடம் சூழலை மாசுற செய்கிறோம் என்பதை பற்றிய புரிதலை எப்படி உருவாக்குவது?.
அந்த காலத்தை போலில்லாமல் இன்று பெரும்பாலனவர்களிடம் வாகனங்கள் இருக்கிறது. அதில் அஞ்சாறு துணிப்பைகளை வைத்துக் கொண்டால் பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்கலாம்.அதன் மூலம் மாசு சீர்கேடலை சில சதவீதம் குறைக்கலாம்.வாசிக்கும் எத்தனை பேர்களால் அதற்கான உறுதியை எடுத்து செயல் பட முடியும்?.
யாருய்யா அது, "முக்கி முக்கி முயற்சித்தும் ஒண்ணுக்கே வராதவன் கிட்ட போயி எளநி ல தண்ணி கொறவா இருக்கு" ங்கறது?
What about azaan? isn't it creating noise pollution everyday?
apo varusha kanakka sivagasi la indha oru naalukaga hard work panrangale? avanga vayithu pozhappuku vazhi?
This article is an eye opener
Post a Comment