Oct 20, 2017

பனிரெண்டுக்குப் பிறகு?

காரைக்கால் செல்கிறோம். அந்த மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது அரசுப்பள்ளிகள் இருக்கின்றன- மேனிலைப்பள்ளிகள். அந்த மாணவர்களுக்கான ஒரு கருத்தரங்கு. மாணவர்களிடம் படம் காட்டுவதெல்லாம் நோக்கமில்லை. பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எப்படி அணுகலாம்? தேர்வை எழுதுவது எப்படி? கல்லூரிகளில் எந்தப் படிப்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் ஒரு முழு நாள் கருத்தரங்கம். சுமார் எழுபது முதல் நூறு மாணவர்கள் கலந்து கொள்வார்கள். மாவட்ட ஆட்சியர் கேசவன் அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். ஆட்சியரே களத்தில் இறங்கி மாணவர்களுக்காக கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று யோசித்துச் செயல்படுத்துவதெல்லாம் பெரிய விஷயம். 

கொச்சியிலிருந்து பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வருகிறார். சேவியர் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர். இவருடன் சேர்ந்துதான் கடந்த ஆண்டு ஒரு கருத்தரங்கை நடத்தினோம். ஆறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிறையப் பேர்கள் ஆயிரங்களைத் தாண்டினார்கள். அந்த மாணவர்களிலிருந்துதான் அசாரூதின், பவித்ரா, சாமிநாதன், விக்னேஷ் உள்ளிட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான கல்வி உதவித் தொகையைச் செய்து, சூப்பர் 16 என்ற பெயரில் மாதாந்திர பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம். ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு பத்து பயிற்சியரங்குகளையாவது நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார். காரைக்காலில் முதல் நிகழ்வு. ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளையெல்லாம் இந்த வருடம் பட்டியலில் வைத்திருக்கிறோம். 

கருத்தரங்கில் தேர்வுகள், பாடம் என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியது என் பொறுப்பு. வாழ்வியல் அறங்கள், தலைமைப்பண்பு, தன்னம்பிக்கை போன்ற விவகாரங்கள் ராதாகிருஷ்ணனின் பொறுப்பு. அரசு தாமசு வந்தால் ஒருங்கிணைக்கும் வேலையைப் பார்த்துக் கொள்வார். 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்தகையை பயிற்சி வகுப்புகள் மிக அவசியம். வெளியுலகமே தெரியாமல் வளர்ந்து விடுகிறார்கள். சில மாணவர்களை இணைத்து ஒரு வாட்ஸப் குழுமத்தைத் தொடங்கியிருக்கிறேன். தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்கள். ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை’ ‘தீபாவளிக் கொண்டாட்டங்கள்’ ‘அஜீத்தை ஏன் பிடிக்கும்?’ ‘விஜய் ஏன் மாஸ்?’ என்பது மாதிரியான கேள்விகளைக் கேட்பேன். ஒரே விதி ஆங்கிலத்தில் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் பதில் சொல்லவே தயங்குகிறார்கள். ஆங்கிலம், தன்னம்பிக்கை என்று பல தடைகள். ‘பரவாயில்லை ஏதாச்சும் எழுது’ என்று ஒவ்வொருவராக அழைத்துப் பேசி எழுதச் சொன்னால் எழுதுகிறார்கள். 

அந்தக் குழுமத்தில்  ‘I am coming to salama capadesani ni 8numbras’.  இப்படியொரு மாணவன் எழுதியிருக்கிறான். நம்ப முடிகிறதா? கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிற மாணவன். பனிரெண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்தில் தேர்வெழுதி தேர்ச்சியடைந்திருக்கிறான். கல்லூரியில் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுதுகிறான். நம் கல்வித்தரத்தின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நூறு மாணவர்கள் படித்தால் வெறும் இரண்டு பேர்கள் தேறினாலே பெரிய விஷயம். ஆனால் தேர்ச்சியடையச் செய்து மேலே மேலே அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அறிவொளி இயக்கம் செய்ய வேண்டிய காரியமான ‘எழுதப் படிக்கத் தெரியும்..அவ்வளவுதான்’ என்பதைத்தான் இன்றைக்கு பல பள்ளிகளும் கல்லூரிகளும் செய்து கொண்டிருக்கின்றன. 

‘எட்டுப் பேர்களுடன் ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருக்கிறேன்’ என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். அந்த மாணவனைக் குறை சொல்ல முடியாது. அவ்வளவுதான் நம் கல்வி அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அரசுப்பள்ளிகள், தமிழ்வழிக் கல்விக் கூடங்களில் இருக்கும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் இறங்கிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது. அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. செய்வார்களா என்று தெரியாது. கல்வியமைச்சர் பார்த்து மனம் வைக்க வேண்டும். 

அவர்கள் செய்வதைச் செய்யட்டும். நம்மால் முடிந்தளவுக்கு உழைக்க வேண்டியதுதான். மாணவர்களோடு மாணவர்களாக இறங்கி ஒரு தீக்குச்சியை உரசி வீசிவிட வேண்டும். ஐநூறு மாணவர்களுக்கு பயிற்சியளித்தால் குறைந்தது நூறு பேராவது தலையை மேலே தூக்கிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதுதான் நோக்கமும் கூட.

                                                                      ***

நாளை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் கட்டுரையின் பிரதி-

தேர்வுகள் நெருங்குகின்றன. லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுவார்கள். எழுதட்டும். பதற்றமடையத் தேவையில்லை. பதறுகிறவனைவிடவும் மிகத் தெளிவாக யோசனை செய்து செயல்படுத்துகிறவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். தேர்வுகள், போட்டி, மதிப்பெண்களையெல்லாம் தாண்டி முக்கியமானது ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பது. முக்கால்வாசிப்பேரின் எதிர்காலத்தை ப்ளஸ் டூ முடித்த பிறகு தேர்ந்தெடுக்கப் போகிற படிப்புதான் நிர்ணயம் செய்கிறது. தேர்வு நெருங்க நெருங்க ஒவ்வொருவரும் குழப்புவார்கள். ஆசிரியர்கள், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள், உறவினர்கள் என்று ஆளாளுக்கு அறிவுரைகளைச் சொல்வார்கள். கேட்டுக் கொள்வதில் தவறேதுமில்லை. நூறு விதமான கருத்துக்களைக் கேட்டு உள்ளே போட்டுக் குதப்பி நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று இறுதியில் முடிவெடுக்கலாம். ஆகவே, காதுகளைத் திறந்து வையுங்கள். ஆனால் யாருடைய கருத்துமே உங்களை வீழ்த்திவிடாத தெளிவோடு இருங்கள். அடுத்தவர்களிடம் நீங்கள் கேட்பது ஆலோசனைகள்தான். உங்களுக்கு உதவக் கூடிய ஆலோசனைகள். மற்றபடி, நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுத யாரையும் அனுமதிக்காதீர்கள். அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

 1) சிறு வயதிலிருந்து விருப்பமான துறை எது? (ஒன்று அல்லது இரண்டு துறைகளை முடிவு செய்வது நல்லது - கணிதம், அறிவியல், கணக்கியல், விலங்கியல், மருத்துவம், பொறியியல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.)

 2) நமக்கு விருப்பமான துறைக்குள் நுழைய உதவும் படிப்புகள் என்ன இருக்கின்றன? அவற்றை எந்தெந்தக் கல்லூரிகள் சொல்லித் தருகின்றன?

 3) படிப்புக்கான வேலை வாய்ப்புகள் எப்படி? (அரசு வேலை வாய்ப்பு, தனியார் வேலை வாய்ப்பு, மேற்படிப்பு பிறகு ஆராய்ச்சி, சுயதொழில் என்று சகலத்தையும் யோசிக்க வேண்டும்)

 4) நாம் படிக்கிற படிப்பை வைத்துக் கொண்டு எந்தவிதமான போட்டித் தேர்வுகளை எழுத முடியும்?

இவை மேம்போக்கான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். பதில்கள் கிடைக்கக் கிடைக்க நமக்கு வேறு சில கேள்விகள் தோன்றும். பதில்களை ஆழமாகக் கண்டறியத் தொடங்கும் போதுதான் எதிர்காலம் குறித்தான விதவிதமான எண்ணங்களும் வழிகளும் கதவுகளும் தெரியும். 

உதாரணமாக, கால்நடைகள் சம்பந்தமாக ஆர்வமிருக்கிறது என்றால் பி.வி.எஸ்.சி (B.V.Sc) மட்டும்தான் படிப்பு என்று இல்லை. சற்றே மெனக்கெட்டு விரிவாகத் தேடினால் மீன்வளத்துறைக்கான படிப்பு இருக்கிறது, வனவியல் படிப்பு இருக்கிறது, பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பு இருக்கிறது - இப்படி நிறையப் படிப்புகள் நம் கண்களில்படும். வனவியல் படிப்பை மேட்டுப்பாளையத்தில் படிக்கலாம். மீன்வளத்திற்கான படிப்பை சென்னையிலும் தூத்துக்குடியிலும் படிக்கலாம். பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பை கோவையிலோ அல்லது மைசூரிலோ படிக்கலாம். 

இப்படி பெரும்பாலானவர்களின் கவனத்திற்கு ஆளாகாமல் ஆனால் மிகச் சிறந்த அரசு வேலை வாய்ப்புகளையும், சுய தொழிலுக்கான திறப்புகளையும் கொண்ட படிப்புகள் நிறைய இருக்கின்றன. 

எல்லோரும் படிக்கிறார்கள் என்று பொறியியல், மருத்துவம் என்பதை மட்டுமே நாமும் குறி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதற்காக அவற்றைக் குறை சொல்வதாக அர்த்தமில்லை. நல்ல கல்லூரியில் நாம் விரும்பும் பாடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால் அதே குட்டையிலேயே குதிக்க வேண்டும் என்பதில்லை. விட்டுவிட்டு யாருமே கண்டுகொள்ளாத ஆனால் வேறு வாய்ப்புளைக் கொண்டிருக்கும் பாடங்களில் சேர்ந்து கொடி கட்டலாம்.

உணவு பதப்படுத்துதல், கடல்வளம் உள்ளிட்ட சில பாடங்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதாலும் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடப் போவதில்லை. இயற்பியல், வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதன் வழியாக மேற்படிப்பு, ஆராய்ச்சி என்று கொடி கட்ட முடியும். வரலாறு பாடத்தைப் படிக்க நம்மூர்களில் ஆட்களே இல்லை. ஆனால் இன்றும் தொல்லியல் துறையில் ஆட்களின் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. நாம்தான் தேட வேண்டும்.

நுணுக்கமாக திட்டமிட்டால் மிகச் சரியான பாடத்தைக் கண்டறிந்துவிட முடியும். இங்கே கொண்டாடப்படும் ஒவ்வொரு படிப்புக்கும் மிகச் சிறந்த மாற்றுப் படிப்புகள் இருக்கின்றன. ஆனால் நமக்குத் தெளிவு வேண்டும். அதே சமயத்தில் வித்தியாசமாகச் செய்கிறேன் என்று மாட்டிக் கொள்ளவும் கூடாது. படித்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற புரிதல் இருந்தால் போதும். சொல்லி  அடிக்கலாம். அதற்கான தேடல்களைத்தான் இனி நாம் விரிவாகச் செய்ய வேண்டியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் அல்லது காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆக வேண்டும் என்றோ அல்லது இத்தகையை உயர்பதவிகளை அடைய வேண்டும் என்றோ விருப்பமுடையவர்கள் கடினமான படிப்புகளில் சேர்ந்து மெனக்கெட வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. எளிய பாடம் ஒன்றைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கலாம். மூன்று வருடங்கள் முடிந்தவுடன் உடனடியாக தேர்வுகளில் கவனம் செலுத்த முடியும். 

அதே போலத்தான் பட்டயக் கணக்கர் (Chartered account) ஆக விரும்புகிறவர்களுக்கும். பட்டமே படிக்காமல் நேரடியாகத் தேர்வு எழுத முடியும்.

ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நேரடியாக அறிவியலில் முனைவர் பட்டம் வாங்க முடியும். இப்படி நிறைய இருக்கின்றன. நமக்குத்தான் தெரிவதில்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணி- தோண்டத் தோண்டத்தான் நீர் சுரக்கும். அப்படித்தான் - தேடத் தேடத்தான் விவரம் கிடைக்கும்.

விவசாயம், பொறியியல், மருத்துவம், கலை அல்லது அறிவியல் என எதுவாக இருப்பினும் அலசி ஆராய்ந்து நமது எதிர்காலப் படிப்பினை முடிவு செய்யும் போது நம்மிடம் இரண்டு பாதைகள் கைவசம் இருக்க வேண்டும். உதாரணமாக புள்ளியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அரசுப்பணிக்குச் செல்வது நம்முடைய இலக்காக இருக்கலாம். ஒருவேளை படிப்பை முடித்த பிறகு ஏதோ சில காரணங்களால் அரசாங்க வேலை கிடைக்கவில்லையென்றால் அடுத்த வாய்ப்பு என்ன என்பது குறித்தான தெளிவினை வைத்திருக்க வேண்டும். முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டது போல ஆகிவிடக் கூடாது. ‘இது இல்லையென்றால் எது?’.அது தெரிந்தால் துணிந்து நுழைந்துவிடலாம். 

படிப்பை முடிவு செய்துவிட்டால் அடுத்த முக்கியமான கேள்வி- கல்லூரி.

நாம் விரும்புகிற பாடம் கிடைத்துவிட்டது என்பதற்காக போனாம்போக்கிக் கல்லூரியில் சேர்ந்து எதிர்காலத்தைத் தொலைப்பதைவிடவும் நல்ல கல்லூரியில் கிடைக்கும் பாடத்தில் சேர்ந்து அந்தப் பாடத்தை விரும்புவது எவ்வளவோ தேவலாம் என்றுதான் சொல்வேன். 

உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியர்களின் திறன், எதிர்காலத் திட்டமிடுதலுக்கான வசதி வாய்ப்புகள் (exposure) என எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொண்டுதான் கல்லூரியை முடிவு செய்ய வேண்டும். மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்றும் வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். யாரோ சொல்கிறார்கள் என்று கண்ட கண்ட கல்லூரியில் கண்ட கண்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து மாட்டாமல் இருந்தாலே வாழ்க்கையில் பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரிதான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நல்ல கல்லூரியை எப்படிக் கண்டுபிடிப்பது? 

மிக எளிது. நண்பர்கள், ஆசிரியர்கள், சீனியர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று சுமார் பதினைந்து அல்லது இருபது கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு ‘விசிட்’ போய்வருவது நல்லது. வெறுமனே போய் வராமல் அங்கேயிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தும் விசாரிக்கலாம். இப்படி இருபது கல்லூரிகளை ஒரு சேரப் பார்க்கும் போது நமக்கே ஒரு எண்ணம் கிடைத்துவிடும். ‘அய்யோ இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா?’ என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. துணிந்து இறங்கிவிட வேண்டும். நம்முடைய எதிர்காலத்திற்காகத்தானே செய்கிறோம்?

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரே ஆளிடம் ஆலோசனை கேட்பது குழியில் தள்ளிவிடும். நம் ஊரில் தெரிகிறதோ தெரியவில்லையோ அட்வைஸ் கொடுக்க மட்டும் தயங்கவே மாட்டார்கள். அதனால் குறைந்தது பத்து ‘தகுதியுள்ள’ நபர்களிடம் ஆலோசனை கேட்பதுதான் நல்லது. தகுதியுள்ள என்று எழுதியதற்கு அர்த்தம் புரிகிறதுதானே? விரிவாகவே சொல்லிவிடுகிறேன். தன் மகனோ அல்லது மகளோ பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காக இஸ்ரோ சயிண்டிஸ்ட் என்கிற நினைப்பில் பீலா விடும் அறிவுசீவிகள் நம் ஊரில் அதிகம். தன் மகன் படிப்பதனாலேயே அந்தப் படிப்புதான் ஒஸ்தி என்று அடித்துவிடுவார்கள்.  இத்தகைய ஆட்களை நாசூக்காக கத்தரித்துவிட்டு விடும் வழியைப் பாருங்கள்.

தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவிருந்தே தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவசரப்படுத்துவார்கள். ‘உடனடியாகச் சேராவிட்டால் அத்தனை இடங்களும் தீர்ந்துவிடும்’ எனச் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். பல கல்லூரிகள் ஊர் ஊராக கூடாரம் போட்டு ஆள் பிடிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இயல்பாக இருக்கும் பதற்றத்தை அறுவடை செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் அவர்கள். பணத்தைக் கட்டச் சொல்வார்கள். அவசரத்தில் நிறையப் பேர் கட்டிவிட்டு ‘சரி ஆண்டவன் கொடுத்த வழி’ என்று இருப்பதை கவனித்திருக்கிறேன். 

நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. நிறையப் பாடங்கள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு செய்ய வேண்டும்.தேர்வு முடிவுகள் வரும் தினம் வரைக்கும் கல்லூரி குறித்தும், பாடத்திட்டம் குறித்தெல்லாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருந்தால் ஓரளவுக்கு தெளிவு கிடைத்துவிடும். ‘ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம்’ என்று மட்டும் தயவு செய்து சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். பன்னிரெண்டு வருடம் உழைத்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்தானே? சோம்பேறித்தனம்படாமல் உழையுங்கள். தயக்கமேயில்லாமல் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டுமொத்த நகர்வும் நீங்கள் எடுக்கவிருக்கும் இந்த ஒரு முடிவில்தான் இருக்கிறது. 

என்ன படிக்கப் போகிறோம், எங்கே படிக்கப் போகிறோம் என்பது குறித்தான முடிவுக்கு வருவதற்காக நிறையப் பேரிடம் நிறையப் பேச வேண்டியிருக்கும். ‘யாரிடம் பேசுவது?’ என்று தெரியாதவர்கள் இணையத்தில் தேடுங்கள். ‘எங்கள் ஊரில் இணையமே இல்லை’ என்றால் தயங்கவே வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு உதவுகிறோம்.

8 எதிர் சப்தங்கள்:

Narayanasami Vijayaraghavan said...

ஆங்கிலமொழி பயிற்சி பற்றி நீங்கள் சொல்வது ரொம்பச் சரி. ஆங்கில மொழிப்பாடம் நமது நாட்டில் எளிய முறையில் பயிற்றுவிக்கப் படுவதில்லை. ரொம்பக் கடினமாக்கி, மாணவன் நொந்துபோகிறான்.
ஒரு மொழியைக் கற்கும் வழிமுறையாக அறிஞர்கள் சொல்லும் படிநிலைகள்:
முதலில் கேட்டல் --> பேசுதல் --> உரையாடுதல்/பயன்படுத்துதல், பின்னர் படித்தல் --> எழுதுதல்.

பாடத்திட்டம் என்னவோ இந்தப் படிக்குத்தான் உள்ளது (பள்ளி ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்). ஆனால், நம்ம ஊரில் ஆசிரியர்கள் நடத்துவது தலைகீழ்.

இவர்கள் முதலில் ஆரம்பிப்பது எழுதுதல் --> படித்தல். அப்புறம் பேசுதல், கேட்டல் எல்லாம் இல்லவே இல்லை.

இதில் இலக்கணம் என்ற ஒன்று. ஒரு புதிய மொழியைப் பேசவே பழகுவதற்கு முன்னர் இலக்கணம் என்ன தேவைக்கு?
முதலில் இலக்கணம் என்ற ஒன்றைச் சொல்லாமலேயே, இலக்கணப்படிக் கேட்க, பேசப் பயிற்சியளிக்க வேண்டும். ஓரளவு புரிய, பேசத் தொடங்கிய பின்னர் இதன் இலக்கணம் இதுதான் என்று அறிமுகப்படுத்தினால் எளிமையாக இருக்கும். நம் ஊரில் மாட்டுக்கு முன்னால் வண்டியைப் பூட்டுகிறோம். ஏனென்றால், ஆசிரியர்களுக்கு இத்தகைய பார்வை இல்லை. பரம்பரைப் பழக்கம். மாணவன் தெறித்து ஓடுகிறான்.

வாழை அமைப்பின் பயிலரங்கங்களில் நாங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தி, ஓரளவு பலன் கிடைத்தது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டுமணிநேர வகுப்பில் பெரிதான பலனைக் கொணர முடியவில்லை. மாணவர்களுடன் தொடரச்சியான பயிற்சியில் இருக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு இது மிகவும எளிது.

சேக்காளி said...

// சில மாணவர்களை இணைத்து ஒரு வாட்ஸப் குழுமத்தைத் தொடங்கியிருக்கிறேன்//
நல்ல துவக்கம். முதலில் மாணவர்களிடம் ஆங்கிலம் பேசுவதில் இருக்கும் கூச்சத்தை நீக்குங்கள்.உரையாடலுக்கு தேவையான எளிமையான் சொற்களை சொல்லிக் கொடுங்கள்.அத்தியாவசியமாக "YES" மற்றும் "NO" ஆகிய எளிய வார்த்தைகளில் இருக்கும் பதிலுக்கான கேள்விகள் இருத்தல் நலம் (உங்கள் மொழியில் சொல்வதென்றால் BINARY) . ஆனால் இந்த வார்த்தைகளில் சொல்லும் பதில்கள் கேள்வியை உள்வாங்கி அப்புறமாய் சொல்லும் பதில்களாய் இருக்க வேண்டும் என்பது விதியாய் இருக்கட்டும்.இந்த முறை எளிதில் பதிலளிக்கச் செய்யும் திறவுகோல்.ஆனால் அதேவேளை கேள்விகளை மனதினுள் போட்டு குதப்பி எடுக்கும் பயிற்சியாய் அமையும்.
அடித்து துவைத்து தொங்க விடுங்கள்.
"இன்றைய கைப்புள்ள"

அன்பே சிவம் said...

இறங்கி ஆடுங்க. ஏறி அடிங்க. தாரைத் தப்பட்டை கிழிந்து தொங்கட்டும்.

Selvaraj said...

முதலில் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்! மாணவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் கட்டுரை பிரதி மிக நன்றாக தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த மேற்படிப்பில் சேருவது என்பது இப்போதும் மாணவர்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை மாணவர்களின் பெற்றோர்தான் பெரும்பாலும் முடிவெடுப்பர் அதனால் இனி வரும்காலங்களில் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் இதில் பங்கெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Anonymous said...

The way you train the +1, +2 students doesn't work. You must start the trainino from 8th std. Sorry.

Vaa.Manikandan said...

ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருப்பவனைக் கையை நீட்டிக் காப்பாற்றிவிடுகிற வேலையைச் செய்ய வேண்டும். அவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கச் சொல்கிறீர்கள். எது Work ஆகும் ஆகாது என்று அனுபவத்தின் வழியாகவே கற்றுக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் இதே பயிற்சியைத்தான் கொடுத்தோம். என்ன பலன் என்று நிசப்தத்திலேயே எழுதியிருக்கிறேன். நன்றி :)

Anonymous said...

You must start the trainino from 8th std. (NOT DESIRABLE/RECOMMENDED)
NORMALLY I DO NOT RESPOND/DISCUSS COMMENTS ON 'NISAPTHAM'S BLOG TRUSTING EACH PERSON IS ENTITLED TO HIS VIEWS/OPINION AND IT IS NOT CORRECT/FAIR TO DISCUSS/DEBATE THE COMMENTS.
SINCE THIS COMMENT INVOLVES STUDENTS/ MY PERSONAL DIRECT EXPERIENCE I CHOOSE TO RESPOND.
PLEASE UNDERSTAND.

AIEEE, NEET,CPT ARE THE MAIN ENTRANCE EXAMS FOR ENGG/MEDICINE/ CHARTERED ACCOUNTANCY ARE ALL BASED ON 12TH/11TH PORTIONS ONLY. SAME IS THE CASE FOR ENTRANCE EXAMS OF LAW AGRICULTURE ETC.
THE STUDENTS WILL IDLE IF IT STARTS IN 8TH STANDARD. AT THAT YOUNG AGE (12/13) THEY WILL NOT HAVE A FIRM IDEA/AIM. IT WILL BE CONSTANTLY CHANGING. FROM PILOT TO POLITICIAN ALL THOUGHTS WILL COME. ONLY AGE/HIGHER CLASSES WILL GIVE FIXED/DEFINITE GOALS.
ESSENTIAL AIM IS ONLY SPOKEN ENGLISH/HIGH LIGHTING OF VARIOUS COURSES/CAREERS TO TAKE UP AFTER 12 TH.
KEEPING A RURAL STUDENTS SPARK/INTEREST ALIVE FOR 4 YEARS WILL BE IMPOSSIBLE. THEY WILL THINK IT IS A WASTE OF TIME. IN THIS FAST WORLD 4 YEARS IS A LONG TIME AND ALL THINGS INCLUDING EXAM PATTERN/SYLLABUS.
RURAL STUDENTS HAVE A 'KARPOORA BUDDHI'. ONCE YOU TELL THEM IT GOES IN TO THEIR SYSTEM.
I CAN NAME A FEW FROM MY VILLAGE FAR AWAY FROM TRICHY WHO HAVE WROTE COMPETITIVE/BANK EXAMS AND STOOD SUCCESSFUL.
WHAT THEY WANT IS ONLY GUIDANCE/ENLIGHTENING OF VARIOUS AVENUES.
COACHING INSTITUTES WHICH START FROM 8TH STANDARD ONLY GIVE HOME WORKS AND TEACH PORTIONS BEYOND THE CAPACITY OF STUDENTS LEADING TO VARIOUS PROBLEMS. ONE CAN VERIFY FROM VARIOUS COACHING INSTITUTES.
AT THIS AGE OUR CHILDREN REQUIRE PARENTAL LOVE/SUPPORT/GUIDANCE.IT COSTS NOTHING.
LET US GIVE OUR CHILDREN THESE IN ABUNDANCE.
LET US ALLOW OUR CHILDREN TO ENJOY LIFE.
ANBUDAN,
M.NAGESWARAN.

எம்.ஞானசேகரன் said...

இந்த மகத்தான பணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்