நேற்றிலிருந்து நிறையப் பேர் அழைத்திருக்கிறார்கள். ‘நீ எப்படிடா பட்டாசு வெடிக்கக் கூடாதுன்னு சொல்லலாம்’ என்பதுதான் அவர்களின் கேள்வி. வெடி இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று முந்தாநாள் எழுதியதன் விளைவு. அரசியல், திரைப்படம், இலக்கியவாதிகள் பற்றியெல்லாம் விமர்சித்து எழுதிய போது வராத அழைப்புகள் இவை. கிறித்துவர்களையும், இசுலாமியர்களையும் விமர்சனம் செய்த போதும் இப்படி யாரும் பேசியதாக நினைவில் இல்லை. ‘கட்டுரையைப் படிச்சீங்களா?’ என்று கேட்டால் ‘அப்படின்னா?’ என்று கேட்கிற ஆட்களாக இருந்தார்கள்.
ஒரு சில்வண்டு ஏதோவொரு பத்தியை மட்டும் எடுத்து வாட்ஸப்பில் போட்டு கீழே எண்ணையும் கொடுத்திருக்கிறது. அது எண் விட்டு எண் பறந்து நாடு விட்டு நாடு கடந்து- என்னை வைத்து தீபாவளி கொண்டாடுகிறார்களாம். ‘இருடா மச்சான்..நான் பேசிட்டு வர்றேன்’ என்று ஒவ்வொருவனும் கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு அழைப்புகளை எதிர்கொண்ட போது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. பேசியவர்கள் யாருமே உருப்படியானவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. வாட்ஸப்பில் பிறந்து வளர்ந்தவர்கள். பிறகு நானும் அவர்களைப் போலவேதான் பேசினேன். ‘நீ பேசுறதையெல்லாம் ரெக்கார்ட் செஞ்சு வாட்ஸப்பில் போடுவேன்’ என்றான் ஒருவன். ‘அப்படின்னா... இடையிடையே உங்களோடு பேசிக் கொண்டிருப்பது வா.மணிகண்டன் ஃப்ரம் நிசப்தம்.காம்ன்னு சொல்லிக்கட்டுமா..விளம்பரமா இருக்கும்’ என்றேன். உடனடியாகக் கெட்ட வார்த்தைகளுக்கு மாறிவிட்டான். இணைப்பைத் துண்டித்துவிட்டேன். இவர்களுக்கு புதன்கிழமையன்று தீபாவளி. விடுமுறை தினம். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் உருப்படியாக இல்லை போலிருக்கிறது. ‘ஒருத்தன் சிக்கியிருக்கான்..முட்டுச்சந்துக்குத் தூக்கிட்டு போலாம்..நல்லா டைம்பாஸ் ஆகும்’ என்று திட்டமிடுகிறார்கள். நமக்கு அப்படியா? பெங்களூரில் வெள்ளிக்கிழமைதான் தீபாவளி. விடுமுறை அளிப்பதாக இல்லை. சனிக்கிழமை கூட வேலை செய்யச் சொல்லி மண்டவலி மேனேஜர் மின்னஞ்சல் அனுப்புகிறார்.
மேலாளரைச் சமாளிப்பதா? இவர்களைச் சமாளிப்பதா?
எந்தவொரு சித்தாந்தத்திலும் அதன் ஆழ அகலங்களைப் புரியாத அடிப்படைவாதிகள் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அடையாளங்கள் மட்டும்தான் முக்கியம். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அடையாளங்களைக் காப்பாற்றிவிட்டால் தமது சித்தாந்தங்களைக் காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகிற அடி முட்டாள்கள். இவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். விவாதங்கள், உருப்படியான கருத்துப் பரிமாற்றங்கள், கலந்து எடுக்கப்படும் முடிவுகள் என்பதில் எல்லாம் எந்தவிதமான நம்பிக்கையுமில்லாமல் தமது நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களை டார்ச்சர் செய்து அடக்கிவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த சித்தாந்தத்தையோ, அமைப்பையோ அல்லது இயக்கத்தையோ அடிப்படைவாதிகளால் காப்பாற்றிவிட முடியாது. அப்படியானதொரு மாயத் தோற்றத்தை வேண்டுமானால் உருவாக்கலாம். அதிகாரத் தோரணையில் ‘நாங்க ஒரு மாஃபியா’ என்ற எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் எதன் மீதும் பெரிய பிடிப்பில்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிற மக்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள்தான் இங்கு பெரும்பான்மை. அவர்கள் ‘இது பரவால்ல போலிருக்கு’ என்று எதன் பக்கம் சாய்கிறார்களோ அதுதான் அதிகாரத்திற்கு வரும். அரியணை ஏறும். முதலிடம் பிடிக்கும். இதுதான் காலங்காலமாக நிகழ்ந்து வருகிற வரலாறு. அரசியல், மதம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நியதியாக இருக்க முடியும்.
தம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே தம்மை அதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிட்டதாக நம்பி அழிச்சாட்டியங்களைச் செய்வது பெரும்பான்மை மக்களை அலுப்புறச் செய்யும். அவர்களிடம் அதீதமான பொறுமை உண்டு. பெரிதாக எதிர்விளைவுகளைக் காட்ட மாட்டார்கள். ‘இவனுகளுக்குப் போய் வாய்ப்புக் கொடுத்தோமே’ என்று தமது அத்தனை எரிச்சலையும் உள்ளே அடக்கி வைத்திருப்பார்கள். காலம் வரும் போது மிகச் சரியாகக் காட்டுவார்கள்.
‘நீ இந்து பேரில் சுத்துகிற கிறித்துவன்தானே?’ என்கிறான் ஒருவன்.
‘எப்படித் தெரியும்?’ என்றால் ‘நினைச்சேன்டா’ என்றான்.
இயற்கையை, சூழலை, சக உயிர்களை வதைக்காமல் பச்சை தீபாவளியைக் கொண்டாடலாம் என்றுதான் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சொல்லுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களிடம் போய் ‘நீ முதல்ல கறி திங்குறதை நிறுத்து’ ‘வாகனத்தில் போகாம நடந்து போ’ என்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான தீபாவளி என்பது அவ்வளவு வன்முறையான கருத்தா என்ன? திரைத்துறையைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என்று யார் சொன்னாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்ன மாதிரியான ஜனநாயகம்? அவர்களிடம் அலும்பு காட்டினால் அமைதியாகிக் கொள்வார்கள். ஆனால் எந்தக் காலத்திலும் இவர்களை ஆதரிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
அட்ராசிட்டிகளின் மொத்த உருவமாகத் திரிந்து கொண்டிருக்கும் சில்வண்டுகள் ஆபத்தானவர்கள். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. இரண்டு நாட்களுக்கு எண்ணை அணைத்து வைத்தால் ஜிமிக்கி கம்மல் மாதிரி ஏதாவதொன்று வரும். விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இவர்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற காவல் தெய்வங்களுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை- ‘சூழலைச் சிதைக்காமல் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்’ என்று அறிவுறுத்துவது மிகப்பெரிய பலன்களைத் தரும். நீங்கள் எண்ணெய் ஊற்றுவது போலவே பேசிக் கொண்டிருந்தால் துள்ளுகிறவர்கள் துள்ளிக் கொண்டேதான் இருப்பார்கள். ‘மதம் என்பது அடையாளங்களில் இல்லை’ என்று முதலில் புரிந்து கொள்ளட்டும். மதம் இன்னமும் வலுப்பெறும்.
14 எதிர் சப்தங்கள்:
பகிர்வுக்கு நன்றி
சில்வண்டுகளை கண்டு கொள்ள வேண்டியது இல்லை. தீவு திடல் போய் ஏராளமான படடாசுகள் வாங்கி வந்தேன். கௌரவத்திற்காக அல்ல, வெடிக்க வேண்டும் என்பதற்காக. வெடிகளுக்காக அலைந்த ஏக்கத்தை தீர்த்து கொள்ளலாம் என்று நினைத்து வாங்கினேன். உங்கள் கட்டுரையை படித்தேன். வாங்குவதற்கு முன்பு படித்து இருக்க வேண்டும் என்று வேதனை பட்டேன். சொன்னது அனைத்தும் உண்மை.
ஒரு 1000 wala கொளுத்தினேன். 30 முதல் 40 வினாடிகள் தான். ஒரே குப்பை. எங்கும் புகை. எனக்கே மூச்சடைத்து விட்டது.
வீட்டில் இருந்த 2 நாய்களும் உள்ளே வைத்து பூட்டி விட்டார்கள். அதன் உடல் அதிர்வதை பார்க்க முடிந்தது. தன் வலியை சொல்ல முடியாத ஜீவன்களை வதைப்பது!! தெரு நாய்கள் எங்கு செல்ல முடியும். ஏதோ சுற்றி வளைத்து தாக்குவது போல் இருந்தது. உயிர் வதை ஒன்றுதான். அதில் மனிதன்|மிருகம் என்று வித்தியாசம் பாக்க வேண்டியது இல்லை என்று புரிந்தது.
அதன் பிறகு வெடிக்க வில்லை. இன்னும் நெறய இருக்கிறது. புஷ்வானம் மட்டும் கொளுத்தலாம் என்று இருக்கிறேன். இன்னும் ஒரு பாக்ஸ் திறக்கவே இல்லை, தீபாவளியே முடிந்து விட்டது.
யாருக்காவது குடுத்து விட வேண்டும், குறைந்த பட்சம் நாய்கள் இல்லாத ஏரியாவில் உள்ளவர்களுக்கு.
சாமர்த்தியமாக வளர்க்கப்பட்டு, கஷ்டங்களுக்கு பழகி கொண்டு, பல சொத்துக்களை வாங்கி கொண்டு, ஏதாவதொன்றை பிடித்து தொங்கி கொண்டு... நம் வளர்ப்பில் மிக பெரிய குறை உள்ளது. அது ஒவ்வொரு நொடியும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. சீரழிந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அன்பு என்பதே இல்லை.
நாம் செய்வதை கண்டனம் செய்யாமலோ ஆதரிக்காமலோ கவனிக்கும் போதுதான் செயலின் தீவிரம் புரிகிறது. நன்றி மனசார சொல்றேன் நன்றி
Given the cost of the crackers, its really a rich men's affair.
By the way, Yesterday bought some sparklers here in Bengaluru and they were not charging any GST. (Anyhow they are not giving any bill).
Heard that the central and state govt. were doing purchases in disguise and charging businesses if they find any GST violation. Hope they are doing it for these cracker shops also.
Does these crackers exempt from GST or they dont want to go against the Mafia in the election year?
Anyhow lets not complicate things and Live in Peace :)
Happy Deepavali.
தெருவுல போற •••
இருட்டுல நின்னுகிட்டு கண்ணடிச்சிட்டு பந்தா காட்டுற கும்பல். விடுங்க மணி.
superb sir
அப்படின்னா... இடையிடையே உங்களோடு பேசிக் கொண்டிருப்பது வா.மணிகண்டன் ஃப்ரம் நிசப்தம்.காம்ன்னு சொல்லிக்கட்டுமா..விளம்பரமா இருக்கும்’
கலகலப்புலயும் கிளுகிளுப்பு
‘நீ இந்து பேரில் சுத்துகிற கிறித்துவன்தானே?’ என்கிறான் ஒருவன்.
‘எப்படித் தெரியும்?’ என்றால் ‘நினைச்சேன்டா’ என்றான்.
ROFL max
அய்யா ,ஏதேனும் விதிமுறைகள் போடுவதாக இருந்தால் போடுங்கள்.ஆனால் பட்டாசை தடை செய்யாதீர்.அந்த பண்டிகைக்கென்றே உள்ள சில மகிழ்ச்சியான விஷயங்களை தடை செய்ய வேண்டாமே.பட்டாசு தொழிலார்கள் ,உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.
எது எப்பிடியோ பின்ணுடக்காரங்க ஒன்னும் பண்ணலை பின்ணுடப்பொட்டடிய தூக்கி கக்கத்தில வச்சிராதிங்க.
உங்கள் பதிவை வரவேற்கிறேன். தீபாவளி என்பதே ஒரு வக்கிரமான பண்டிகை என்பது என் சின்ன வயதில் இருந்தே மனதில் அடியோடிய எண்ணம். பொங்கல் போன்று இயற்கையோடு ஒன்றிய பண்டிகை இல்லை. எளிய மக்கள் - அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்கள் 100க்கு 60 பேர் இந்தியாவில் தினம் ஒரு வேலை சோற்றுக்கே அல்லாடும் நேரத்தில் கடன் வாங்கி, ஊரை ஏமாற்றி, பகட்டாக புதுத்துணி உடுத்தி, பட்டாசு வெடித்து, பார்த்தாலே இன்சுலின் குறைபாடு வரும் அளவுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி / செய்து உண்டு ....நமது நாடு இருக்கும் இருப்பில் ஒரு பொறுப்பில்லாத பண்டிகை. இதை தடை செய்வது இன்றிய தேதியில் மித அவசியம். முதல் படியாக பட்டாசை தடை செய்ய வேண்டும்.
Comes under 28% GST. prices are included GST.-)
you are anti indian-h.raja vgroup
நீங்கள் பெரிய ரவுடின்னு தெரியாது போலிருக்கிறது
Post a Comment