Oct 14, 2017

ஆபிஸ் ரூமுக்கு வாங்க!

சனிக்கிழமை சென்னை வரப் போவதாகச் சொன்ன போது ஜீவ கரிகாலன் ‘ஆபீஸூக்கே வந்துடுங்க’ என்றார். ராயல்டி கொடுப்பது போலக் கொடுத்து அலுவலகத்துக்கு வர வைத்து நம்மை மொக்கிவிடுவார்களோ என பயமில்லாமல் இல்லை. ஆள் வைத்தெல்லாம் அடிக்க வேண்டியதில்லை. ஜீவ கரிகாலன் - அநேகமாக நூற்றுப்பத்து கிலோ இருப்பார்- அதில் பாதி கூட நான் இல்லை. எனது வலது கையை முறுக்கி தனது இடது கையை மேலே போட்டால் புலியிடம் சிக்கிய கோழிக்குஞ்சாகத்தான் இருப்பேன். க்கிய்யா, க்கிய்யா என்று கத்திக் கெஞ்ச வேண்டியதுதான்.

யாவரும் பதிப்பகத்தினர் அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். வேளச்சேரியில் சென்னை சில்க்ஸ் பக்கத்தில். பதிப்பகம் ஆரம்பித்து இது நான்காவது வருடம். இதுவரைக்கும் இருபத்தாறு தலைப்புகளில் புத்தகம் கொண்டு வந்துவிட்டார்கள். இப்பொழுதுதான் தனியான அலுவலகம் வாய்த்திருக்கிறது. சத்தமேயில்லாமல் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். 

‘இல்லைங்க..டைரக்டர் வீட்டிலேயே தங்கிக்குறேன்’ என்றேன். 

இயக்குநர் சசிக்கு கே.கே.நகரில் ஒரு வீடு இருக்கிறது. பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு சமீபத்தில் வேறொரு புது வீட்டுக்கு மாறிச் சென்றுவிட்டார். பழைய வீடு எழுத்தாளர் எஸ்.ராவின் வீடு இருக்கும் அதே அடுக்ககத்தில்தான் இருக்கிறது. நிறைய முறை தங்கியிருக்கிறேன். இயக்குநர் ‘இரட்டைக் கொம்பு’ படத்துக்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாகியிருக்கிறார். இரட்டையா, ரெட்டையா என்று தெரியவில்லை. சித்தார்த்தும்- ஜி.வி.பிரகாஷூம்தான் ஆளுக்கொரு கொம்பு. இந்தக் கதையின் விவாதங்களில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வரும் போதெல்லாம் அந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம். கடந்த முறை வந்திருந்த போது எஸ்.ராவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

‘மார்க்ஸ் பத்தி நீங்க பேசுன வீடியோவைப் பார்த்ததிலிருந்து ஒரு தடவையாவது நேர்ல பேசணும்ன்னு தோணுச்சு சார்’ என்று சொல்லிவிட்டு பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் பேசினார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் மார்க்ஸ், ஜென்னி பற்றியெல்லாம் அந்த உரைக்குத் தாம் செய்த தயாரிப்புகளைப் பற்றியெல்லாம் சொன்னார். எஸ்.ரா அருவி. நேரம் மட்டும் இருந்தால் அவரைப் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அவர் எழுதுவதற்கு என ஒரு தனி அறை இருக்கிறது. அந்த அறையில் அந்த நாற்காலியில் சுற்றிலும் புத்தகங்களுடன் என அது ஓர் அற்புதமான சூழல். வரப்போவதாக அறிவிக்காமல் சென்றிருந்தேன். தமது புத்தகங்களுக்கென எஸ்.ரா தனியொரு பதிப்பகம் ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட தமது இருபது புத்தகங்களை தனது தேசாந்திரி பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுகிறார் போலிருக்கிறது.

‘இன்னொரு தடவை முன்னாடியே உங்ககிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று கிளம்பி வந்தேன்.

ஜெ.மோவிடம் ஊட்டி நித்யா கவிதை அரங்கில், பெங்களூரில் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க வந்த போது என அவருடன் தனியாகப் பேசியிருக்கிறேன். ‘இவங்களுக்கு எப்படித்தான் இத்தனை விஷயம் தெரியுமோ?’ என்று யோசிக்க வைத்துவிடுகிறார்கள். நானும் கூடத்தான் புதியதாக யாரையாவது சந்திக்கும் போது ‘நான், என், எனது’ என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான விஷயங்களைப் பேச வேண்டும் என யோசிப்பேன். பேசி முடித்த பிறகு கணக்குப் போட்டுப் பார்த்தால் பேச்சு முழுவதும் மணிகண்டன் நிறைந்திருப்பான். என்னுடன் பேசியவர் குறித்தான கேள்வி பதில்கள் நிறைந்திருக்கும். அடுத்த முறையாவது  திருத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டுமொரு முறை சங்கல்பம் எடுக்க வேண்டியிருக்கும். ம்க்கும். அறிவார்ந்த தளத்தில் இயல்பாகப் பேசுவது ஒரு கலை. 

ஜீவகரிகாலனுக்கே வருகிறேன். 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கரிகாலனை அழைத்து ‘சென்னைல என்னங்க நடக்குது’ என்று கேட்பது வாடிக்கை. அவருக்கு நிறையத் தொடர்புகள் உண்டு. தொடர்புகள் என்றால் அந்தத் தொடர்புகள் இல்லை. அவருக்கு ஆர்.எஸ்.எஸ்ஸிலும் ஆட்கள் உண்டு. இசுலாமிய இயக்கங்களிலும் தொடர்பு உண்டு. காலச்சுவடு பற்றியும் தெரியும். உயிர்மை பற்றியும் சொல்வார். கிசுகிசு கேட்பதில் ஒரு சுவாரஸியம் இருக்கிறது அல்லவா? சொல்வார்.பிரதியுபகாரமாக சினிமா கிசுகிசுக்களைச் சொல்வேன். நான் தான் சம்பளம் வாங்காத சினிமாக்காரன் ஆகிவிட்டேனே!  

மெய்யாலுமே இயக்குநர், நடிகர், நடிகையர்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதெல்லாம் ஒரு பந்தாவுக்கு உதவுகிறது. எங்கள் ஊரில் ஏதேனும் விஷேச காரியங்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் ‘அந்தப் படம் எப்போ ரிலீஸ்’ ‘அந்த இயக்குநர் அடுத்த படம் என்ன பண்ணுறார்’ என்று கேட்கிறார்கள். எழுதிய புத்தகம் பற்றியோ, நிசப்தம் அறக்கட்டளை பற்றியோவெல்லாம் கேட்கிற ஆட்கள் வெகு சொற்பம். நானும் விடாக்கண்டன் அல்லவா?

‘ஆமாங்க..த்ரிஷாவுக்கு அவ்வளவு சம்பளம்.. இல்லல்ல.. இருங்க.. நயன்கிட்டயே கேட்டுச் சொல்லுறேன்’ என்று இல்லாத அலும்பு செய்துவிடுவேன். நயன் என்பதை உச்சரிக்கும் போது ஒரு தனித்த அலும்பைக் காட்ட வேண்டியிருக்கும்.

ஆக, சமீபகாலமாக சென்னைக்கும் எனக்குமான தொடர்புகள் இப்படியெல்லாம்தான் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

யாவரும் பதிப்பகமும் அகிலாவும் சேர்ந்து வீடு பிடித்திருக்கிறார்கள். யாவரும் புத்தகங்கள், பதிப்பக வேலைகளுக்கு என வீட்டின் ஒரு பகுதி. குழந்தைகளுக்கான கதை சொல்லல், குழந்தைகள் சார்ந்த செயல்பாடுகளுக்காக அகிலாவுக்கு மீதிப் பாதி. கரிகாலனையும் கண்ணதாசனையும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும். வேல்கண்ணன், சாத்தப்பன், பாலா இளம்பிறை உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து ஆளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் போட்டு லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தகத்தை வெளியிட்டார்கள். அதுதான் பதிப்பகத்தின் முதல் புத்தகம். அப்பொழுது என்னுடைய ஒரே தயக்கமெல்லாம் ‘நம்மை புக்கை பப்ளிஷ் செஞ்சு கையைக் கடிச்சுக்கக் கூடாது’ என்பதாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு பெயர் தெரிகிற பதிப்பகமாக வளர்ந்திருக்கிறார்கள். தீவிரமாக உழைக்கும் யாரையுமே சென்னை கைவிடுவதில்லை. கண்ணதாசனும், கரிகாலனும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம்மோடு இருப்பவர்கள் மேலே செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியது. யாவரும் பதிப்பகத்தின் புது அலுவலகத்தின் வரவேற்பறையில் அமர்ந்து இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது சொற்கள் இல்லாத அந்த மகிழ்ச்சியை உணர முடிகிறது.

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//சொற்கள் இல்லாத அந்த மகிழ்ச்சியை உணர முடிகிறது.//