Oct 13, 2017

எவ்வளவு செலவு செஞ்சீங்க?

நிசப்தம் அறக்கட்டளையின் மூன்றாம் வருடத்திற்கான வருமான வரிக் கணக்கு விவரங்களை இன்று முடித்துக் கொடுத்திருக்கிறேன். பெரிய சிரமமில்லை. ஒவ்வொரு ரூபாயும் ஆன்லைன் வழியாகவே கணக்குக்குக் வருகிறது. வெளியே செல்லும் ஒவ்வொரு ரூபாயும் காசோலை அல்லது கேட்பு வரைவோலையாக (Demand Draft) ஆகவே கணக்கிலிருந்து குறைகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் வரைக்குமான ஒவ்வொரு மாத வரவு செலவும் நிசப்தம் தளத்திலேயே இருக்கிறது. வருடக் கடைசியில் இரண்டு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு தொகையும் எதற்காகச் செலவிடப்பட்டது என்ற விவரத்தைக் கொடுத்துவிட்டால் பட்டயக் கணக்கர் அலுவலகத்தில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடந்த மூன்று வருடங்களாகவே தீபக் என்ற ஆடிட்டரின் அலுவலகத்தில் விவரங்களைக் கொடுத்துவிடுவது வழக்கம். அவர் தமி்ழர். வருமான வரித்துறையின் இணை ஆணையர் முரளிதான் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆரம்பத்தில் தீபக் நிறையக் கேள்விகளைக் கேட்பார். பதில் சொல்வேன். இப்பொழுது எதுவும் கேட்பதில்லை. அவருக்கும் ஒரு நம்பிக்கை. தீபக்கின் அலுவலகம் பெரியது. ஐம்பது பேராவது வேலை செய்கிறார்கள் என நினைக்கிறேன். ஐம்பதில் ஒருவரை அழைத்து ‘நீ பார்த்துக்கப்பா’ என்று சொல்லி விடுகிறார். அப்படி நமக்கு வாய்த்தவர் யஷ்வந்த். நல்ல மனிதர். வேண்டிய தகவலை எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வார். என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாக விளக்குவார். 

கணக்கு வழக்கை முடிக்கும் போது ‘பணம் வேண்டாம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். நானாகவே சொற்பமான தொகைக்குக் காசோலையைக் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். பணம் அவர்களுக்கு பொருட்டில்லை. மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்கிற நிறுவனம் அது. நிசப்தம் மாதிரியான துக்கினியூண்டு அமைப்புகளுக்கு வருமான வரிக் கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்வது என்பதை தர்ம காரியமாகச் செய்கிறார்கள். 

‘உங்களுக்கு எப்படி இவ்வளவு பேர் உதவறாங்க?’ என்று அவ்வப்பொழுது ஒரு கேள்வியை எதிர்கொள்வதுண்டு. ஒரே பதில்தான். நிசப்தம் வழியாகத்தான். கடந்த நிதியாண்டில் நன்கொடையாக வந்த தொகை பதினெட்டு லட்சத்து எழுபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு ரூபாய் (ரூ.18,71,916.00). அதில் கல்விக்கு பத்து லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் (ரூ.10,30,848.00) மருத்துவ உதவியாக ஐந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் (ரூ.5,60,364.00) இயற்கை மேம்பாட்டுக்கு என ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் (ரூ.1,15,360.00) என செலவு செய்திருக்கிறோம். கடலூர் பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஊரில் சில பயனாளிகள் விட்டுப் போயிருந்தார்கள். அவர்களுக்கு பனிரெண்டாயிரம் ரூபாய்க்கு சில பொருட்கள் வாங்கித் தரப்பட்டன. ஆக, வந்த பதினெட்டு லட்சத்தில் பதினேழு லட்ச ரூபாயை பயனாளிகளுக்குக் கொடுத்திருக்கிறோம். துல்லியமாகச் சொன்னால் ரூ.17,19,172.00.

நிறையப் பயனாளிகளை நிராகரித்தும் கூட கிட்டத்தட்ட நன்கொடையாக வந்த தொகை முழுவதும் தீர்க்கப்பட்டிருக்கிறது. ‘ஏன் இவ்வளவு கடுமையாக வடிகட்ட வேண்டும்?’ என்ற கேள்விக்கு இதிலேயே பதில் இருக்கிறது என நினைக்கிறேன். தகுதியான நபர்கள் பலருக்கு உதவாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால் பத்து ரூபாய் கூட தகுதியற்ற நபர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவது சாத்தியமில்லை. இவ்வளவு கடுமையான வடிகட்டல் வழியாக மட்டுமே இது சாத்தியம். 

ஆரம்பத்தில் நிறையக் கோரிக்கைகள் வரும். இப்பொழுது கோரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. ‘அவன் தர மாட்டான்’ என்று கூட பேச்சு உருவாகியிருக்கலாம். அப்படியே இருக்கட்டும். அதில் ஒன்றும் தவறில்லை. நெருங்கிய நண்பர்களின் வழியாக வந்த கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. நிறையப் பேருக்குச் சங்கடம்தான். ஆனால் எதுவும் செய்வதற்கில்லை. அவர்களை விடவும் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பக்கமாக இருந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். இதே தீவிரமான வடிகட்டலுடனேயே தொடர்ந்து செயல்படுவோம்.

கடந்த பனிரெண்டு மாதத்திற்கான வரவு செலவும் நிசப்தம் தளத்தில் இருக்கிறது. வருடாந்திரக் கணக்கு முடிப்பு விவரங்களும் இருக்கின்றன. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பவர்கள் புரட்டிப் பார்க்கலாம். கேள்விகள் இருப்பினும் தொடர்பு கொள்ளலாம்.

அறக்கட்டளையைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் பூர்த்தியடைந்த மனநிலை உண்டாகும். வருமான வரிக் கணக்கு விவரங்களை முடிக்கும் போதும் அப்படித்தான். அதனைப் பூர்த்தியடைந்த மனநிலை என்று சொல்ல முடியாது. சுமையொன்றை இறக்கி வைத்த மாதிரி. 

வேறு என்ன சொல்வது?

நிசப்தம் கோடிகளில் புரளும் பெரும் அறக்கட்டளை இல்லை. இதே அளவிலேயே தொடர்வதுதான் சரி. சிறு சுடர் ஒன்றை தொடர்ந்து பற்ற வைத்துக் கொண்டேயிருக்கலாம். அது மெல்ல ஒளியைப் பரவச் செய்யட்டும்.

நன்கொடையாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், நிசப்தம் தளத்தை வாசித்து அறக்கட்டளை குறித்தும் செயல்பாடுகள் தமது வட்டாரத்தில் பேசியும் எழுதியும் அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்லும் வாசகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், உறுதுணையாக இருக்கும் குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான நன்றி. இதே நம்பிக்கையையும் இதையெல்லாம் இழுத்துச் செல்லும் வலுவையும் தக்க வைத்துக் கொள்கிற வரத்தை இறைவனிடம் கோருகிறேன்.

1 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

அடிச்சு ஆடு. இளங் கன்று பய மறி யாது.