Oct 13, 2017

இறவா நினைவுகள் - போட்டிக்கதை 08

“ஹலோ! சிரஞ்சீவி பிரைன் காபியர்ஸ்”

“எஸ் மேடம்.”

“என்னோட பேரு ஜான்வி. உங்க விளம்பரத்தை நான் டிவில பார்த்தேன். நீங்க என்ன மாதிரி சர்வீஸ் பண்றீங்கனு கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“நிச்சயம் மேடம். எங்க கம்பெனிதான் உலகத்தோட முதல் மற்றும் ஒரே brain copier கம்பெனி. தங்களுக்கு பிடிச்சவங்களோட மறைவுக்கு அப்புறம் அவங்களையே நினைச்சு வருத்தப்படுறது சாதாரணமா நடக்குற விஷயம். அந்த வருத்தத்தை தீர்த்து வைக்கிறதுதான் எங்க கம்பெனி நோக்கம்.”

“இன்ட்ரஸ்டிங். ஆனா எப்பிடி இதை செய்வீங்க”

“நியுரல் நெட்வொர்க் கேள்விப்பட்டு இருக்கீங்களா?”

“இல்லையே”

“நியுரல் நெட்வொர்க்னா மனித மூளை போலவே செயல்படுற கம்ப்யூட்டர். நியுரல் நெட்வொர்க் வச்சு செயல்படுற ரோபோ மனுசனை மாதிரியே யோசிக்கும்”

“ஸோ நீங்க இறந்தவங்க உருவத்துல ரோபோ செய்து குடுத்துடுவீங்க”

“நீங்க சொல்றது கிட்டத்தட்ட சரி. ஆனா உருவம் மட்டும் இறந்தவங்க மாதிரி இருக்காது. அதோட குரல், செயல்பாடுகள், நினைவுகள் எல்லாமே இறந்தவங்க மாதிரியே இருக்கும்”

“நினைவுகளா?”

“எஸ். உங்களுக்கு விருப்பமானவர் மரணப்படுக்கையில் இருக்கும்போதே நீங்க எங்களை தொடர்பு கொண்டா நாங்க அவங்க மூளைய ஸ்கேன் செஞ்சு அவங்களோட நினைவுகள்,குணாதிசியங்கள்,மூளையோட கனெக்ஷன் எல்லாத்தையும் டவுன்லோட் செஞ்சுக்குவோம். அவங்க மூளையில் இருக்குற நரம்பு இணைப்புகள் போலவே நியுரல் நெட்வொர்க் உருவாக்கிடுவோம். நினைவுகளை அந்த நியுரல் நெட்வொர்க்ல இன்ஸ்டால் பண்ணிடுவோம். உதாரணமா ...”

“ரொம்ப டெக்னிகல் டீடைல் வேணாம். இப்டி செஞ்சா என்ன ஆகும்னு மட்டும் சொல்லுங்க”

“அங்கதான் வரேன். இப்படி நாங்க உருவாக்குற நியுரல் நெட்வொர்க் மூளையை இறந்தவரோட உருவத்தில நாங்க உருவாக்குற ரோபோவில் பொறுத்திடுவோம். இப்போ ரோபோ முழுக்க முழுக்க இறந்தவர் மாதிரியே சிந்திக்கும். தவிர இறந்தவரோட பழைய நினைவுகள் ரோபோவுக்கு இருக்குறதால நீங்க அது கூட பழைய கதைகளை பேசலாம். நீங்க உங்க பிரியமானவரோட
இழப்பை உணரவே மாட்டீங்க”

“நம்பவே முடியல”

“நம்புறது கஷ்டம்தான். ஆனா இதுவரை பத்து கஸ்டமர் வரைக்கும் நாங்க சர்வீஸ் செஞ்சு இருக்கோம்”

“ஓகே. அப்போ உடனே இந்த அட்ரஸ் வர முடியுமா?. இங்க என்னோட கணவர் சீரியஸா இருக்கார். அவரோட மூளையை ஸ்கேன் செய்யணும்.”

“அவரை காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சர்டிபிகேட் குடுத்துட்டாரா?”

“எல்லாம் இருக்கு. நீங்க சீக்கிரம் வாங்க”

“ஓகே மேடம். ஆனா இது ரொம்ப செலவு பிடிக்கும் மேடம். ”

“எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. நீங்க வாங்க. அட்ரஸ்.......”

இரண்டு நாட்களுக்குப் பின் ஜான்வியின் வீட்டு கதவு தட்டப்பட்டது.

“சிரஞ்சீவி பிரைன் காபியர்ஸ்ல இருந்து வரோம் மேடம். உங்க ரோபோ, சாரி உங்க கணவர் இதோ” என்றவாறு அந்த ரோபோவை காட்டினார்.

“இது நடக்குமா?”

“நடக்காது மேடம். இதுக்கு கண் வைக்கவும், நடக்க வைக்கவும் கவர்மென்ட் பெர்மிசன் தரல. சிக்கல் வந்துரும்னு பயம்”

“சரி. வச்சுட்டு போங்க” என்றாள் ஜான்வி.

அவன் சென்ற பின்னர் கதவை அடைத்துவிட்டு அதனுடன் பேசினாள்.

“காபி சாப்பிடுறயா நிக்கி”

“வேணாம் ஜானு. எனக்கு பசியே எடுக்கல. ஏன்னு தெரியல” என்றது அது.

“சரி சொல்லு. எதுக்கு என்னை விட்டுட்டு போன” என்றாள். 

அதனிடமிருந்து பதில் இல்லை.

“நிக்கி! நான் சொல்றதை தெளிவா புரிஞ்சுக்கோ. நீ ஏற்கனவே இறந்துட்ட. மிச்சம் இருக்குறது உன்னோட நினைவுகள் மட்டும்தான். நீ தயங்கவோ குற்ற உணர்ச்சியோட இருக்கவோ
காரணமே இல்ல. ஓபன் அப்”

“சாரி ஜான்வி. ஆன்சைட் வாங்கி இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சு போச்சு. விசா முடிஞ்ச அப்புறமும் எனக்கு கிளம்ப மனசு இல்ல, அதான் வேற வழி தெரியாம
இங்க சிட்டிசன்ஷிப் வாங்க ஸ்டெல்லாவை கல்யாணம் செஞ்சுகிட்டேன்.”

“நீ செஞ்சது தப்புன்னு தோணலியா உனக்கு?”

“தோணிச்சு. ஆனா எனக்கு திரும்ப இந்தியா வர பிடிக்கல. ஆனா இந்த ஸ்டெல்லா எனக்கு தீராத நோய் இருக்குன்னு தெரிஞ்சதும் என்னை விட்டுட்டு போயிட்டா. இன்னும் நல்ல வேளை நீ
என்னை எப்பிடியோ தேடி கண்டுபிடிச்சு வந்து என்னோட கடைசி நாட்கள்ல நல்லா பார்த்துகிட்ட. தேங்க்ஸ் ஜானு”

“வெல்கம்”

“அதுமட்டும் இல்லாம என்னோட நினைவுகளை காப்பாத்தி என்னை இன்னும் உயிரோட வச்சு இருக்கியே. உன்னோட அன்பை புரிஞ்சுக்காம நான்...”

“ஸ்டாப் இட் நிக்கி! நான் உன்னை தேடி வந்தது உன் மேல இருக்குற பாசத்துல இல்ல. உன்னை கொலை செய்யதான். ஆனா சரியா பேச முடியாம பாதி சுய நினைவோட இருக்குற உன்னை பழிவாங்க எனக்கு மனசு வரல. எப்படியும் உன்னை குணப்படுத்தி பழிவாங்கிடமுன்னு நெனச்சேன். ஆனா நீ குணமாகல. அப்போதான் சிரஞ்சீவி கம்பனியோட விளம்பரம் பார்த்தேன். என்னோட ஆத்திரம் தீரணும்னா நீ சுயநினைவோட இருக்குறப்போ உன்னை நான் கொல்லனும். அதுக்காக உன்னோட நினைவுகளை காப்பாத்தி வச்சேன். இப்போ அதை அதை அழிச்சு உன்னை ரெண்டாவது தடவை கொல்லப்போறேன்”

“வேண்டாம் ஜான்வி. ப்ளீஸ்” என்றது அது. ஜான்வி கண்டு கொள்ளாமல் அதன் மேல் பாய்ந்து அதை உடைத்து ஒவ்வொரு வயராக உருவத் தொடங்கினாள்.

வத்திக்குச்சி
jaya.thecoder@gmail.com

4 எதிர் சப்தங்கள்:

வரதராஜலு .பூ said...

செம சூப்பர்

Anonymous said...

இந்த கதையோட ஒரிஜினல் கான்செப்ட் -- https://en.wikipedia.org/wiki/Be_Right_Back

V said...

@anonymus, நான் இதுவரை ஷெர்லாக் ஹோம்ஸ் தவிர எந்த ஆங்கில சீரியலும் பார்த்ததில்லை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்த ஒற்றுமை எனக்கே ஆச்சரியமாக உள்ளது. ரோபோவில் மனித மூளை என்பதுதான் எனது அடிப்படை கரு. அதில் கொஞ்சம் சென்டிமென்ட், பழிவாங்கல் மசாலா கலந்து யோசித்த பின் பின் தோன்றிய கதை இது. என்னுடைய thinking ஹாலிவுட் லெவலில் உள்ளது என்பதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது.

பேசாமல் அடுத்த கதையை ஒரே மாதிரி சிந்திக்கும் நபர்கள் என்ற கான்செப்டிலேயே எழுதி விட வேண்டியதுதான்.


சேக்காளி said...

//என்னோட ஆத்திரம் தீரணும்னா நீ சுயநினைவோட இருக்குறப்போ உன்னை நான் கொல்லனும். அதுக்காக உன்னோட நினைவுகளை காப்பாத்தி வச்சேன். இப்போ அதை அதை அழிச்சு உன்னை ரெண்டாவது தடவை கொல்லப்போறேன்”//
வளர்ச்சியில் எத்தனை உயர்த்திற்கு சென்றாலும்
வன்மம் வன்மம் தான்.