சில நிகழ்வுகளை நம்பவே முடிவதில்லை. என்னால் மட்டுமில்லை- யாராலும் நம்ப முடியாது. சந்திரசேகர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ‘நாலு நாள் விடுமுறையில் ஊருக்கு வர்றேன்...பசங்க கூட ஏதாச்சும் ப்ரோகிராம் இருந்தா சொல்லுங்க வந்துடுறேன்’ என்பதுதான் தகவல். அதுவரை எந்தத் திட்டமும் இல்லை. சந்திரசேகர் மாதிரியானவர்கள் கிடைத்தால் நழுவ விடக் கூடாது. சூப்பர் 16ல் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அழைத்துப் பேசிய பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்வை வைத்துக் கொள்வதாகத் திட்டமிட்டோம். சந்திரசேகரைப் பற்றிச் சொல்லவில்லையல்லவா? ஐ.ஏ.எஸ் அதிகாரி. 2014 பேட்ச். சேலத்துக்காரர். தற்பொழுது கேரள மாநிலம் தலசேரியில் சப்-கலெக்டர்.
கடந்த முறை வருமான வரித்துறை துணை ஆணையர் கீர்த்தி நாராயணன் தொடரூர்தியில் பதிவு செய்து பயணச்சீட்டு உறுதியாகாமல் அமர்ந்தபடியே வந்து சேர்ந்தார். இந்த முறையும் அப்படியெதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக சேலத்து நண்பர் விஜய் மூலமாக வாடகைக்கு கார் ஒன்றும் ஏற்பாடு செய்துவிட்டு சந்திரசேகரை அழைத்தால் ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நான் பார்த்துக்கிறேன்’ என்றார். எவ்வளவு வற்புறுத்தியும் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை.
‘சேலத்திலிருந்து வர எவ்வளவு நேரம் ஆகும்?’ என்றார். காரில் என்றால் ஒன்றரை மணி நேரம்.
‘நான் பஸ்ல வர்றேன்’ என்றார். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுக்கிறார்கள்.
‘நீங்க பஸ்ல வர வேண்டாங்க...வண்டி ஏற்பாடு செஞ்சுக்கலாம்’ என்றால் ‘அங்கே வேலை இருக்கு; இங்கே வேலை இருக்கு’ என்கிறாரே தவிர எங்கே வந்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற முகவரியை மட்டும் வாங்க முடியவில்லை.
‘நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுறேன்..நீங்க பைக் எடுத்துட்டு வாங்க..நாம போய்க்கலாம்’ என்று பேச்சை அத்தோடு முடித்துவிட்டார்.
எங்கள் அம்மா வருவாய்த்துறையில் இருந்தவர். ஆர்.டி.ஓக்களிடம் அவரது துறையைச் சார்ந்தவர்கள் பம்முவதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆர்.டி.ஓ, சப்-கலெக்டர்களை விடுங்கள். எத்தனை அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறோம்? மிகச் சாதாரண கடை நிலை ஊழியராக இருப்பார். ஆனால் முகம் கொடுத்தே பேச மாட்டார்கள். அலைக்கழித்துத் திருப்பியனுப்பி இழுத்தடிப்பார்கள். அப்படியிருக்க ஒரு சப்-கலெக்டர் பேருந்தில் வருகிறேன் என்று சொல்வதை எப்படி நம்புவது? ஆனால் அப்படித்தான் வந்து இறங்கினார்.
உண்மையிலேயே மனம் நெகிழ்வாக இருக்கிறது. பதினாறு மாணவர்களுக்கும் பயிற்சியைத் தொடங்கும் போது இப்படியெல்லாம் நிகழும் என்று நினைக்கவேயில்லை. நகர்ப்புறத்தில் இருந்து வெகுவாக ஒதுங்கிய கிராமத்துப் பள்ளியில் விடுமுறை நாட்களில் சப்தமில்லாமல் வகுப்புகளை நடத்துகிறோம். சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு எப்படியாவது கை கொடுத்து சற்றே தூக்கிவிடலாம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.டி.ஏ.எஸ் என்று பெருந்தலைகள் மிகச் சாதாரணமாக வந்துவிட்டுப் போகிறார்கள். அக்கம்பக்கத்தில் யாருக்குமே எதுவும் தெரியாது. தங்களது ஊருக்குக் கலெக்டரும் கமிஷனரும் வந்து போகிறார்கள் என்பதை அந்த ஊர் மக்களே கூட நம்பமாட்டார்கள். யோசித்துப் பார்த்தால் பதினாறு மாணவர்களுமே கொடுத்து வைத்தவர்கள்தான். ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் முரடாக இருந்தார்கள். மெதுவாக வடிவத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
‘நிசப்தத்தில் எழுதுவதால் உனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது?’ என்று சமீபத்தில் யாரோ கேட்டிருந்தார்கள். இதையெல்லாம்விடவும் வேறு என்ன பலனை நான் எதிர்பார்க்க முடியும்? கனவிலும் எதிர்பார்த்திராத செயல்கள் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூகத்தை நேசிக்கிற அதிகாரிகளை, கனவு நாயகர்களை மிகச் சாதாரணமாக எழுத்து வழியாக எதிர்கொண்டபடியே இருக்கிறேன். தங்களது பதவி, அந்தஸ்து என எதைப்பற்றியும் கிஞ்சித்தும் கவலையுறாமல் தொடரூர்தியிலும் பேருந்திலுமாகச் சொந்தச் செலவில் வந்து போகிற உயர் அதிகாரிகள். இதைவிடவும் எனக்கு வேறு என்ன வேண்டும்?
சந்திரசேகரின் பயிற்சி வகுப்பு வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பேடுகளை மூடி வைக்கச் சொன்னார். வட்டமாக அமர்ந்திருந்தவர்களிடம் இயல்பாகப் பேசத் தொடங்கினார். செடிகளின் ஒளிச்சேர்க்கையிலிருந்து ஃபாரடேவின் விதிகள் வரை என எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்- ஆனால் முக்கியமில்லை என்று நினைத்திருக்கக் கூடிய விஷயங்களாகத் தொட்டுக் காட்டினார். ‘நியூரான்ல எங்கயோ இருக்கு..ஆனால் ஞாபகம் வரல’ என்கிற மாதிரியான பாவனையில் மாணவர்கள் இருந்தார்கள். connecting the dots எனத் தோன்றியது எனக்கு. ‘உங்களுக்கு எவையெல்லாம் தெரியாது’ என்பதைச் சொல்லாமல் சுட்டிக்காட்டினார். இப்படியானதொரு பயிற்சி வகுப்பு மிக அவசியம். மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள்.
பொதுவாகவே பயிற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். சந்திரசேகர் மாணவர்களிடம் மிகச் சாதாரணமாகப் பேசி எவ்வளவு பெரிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்று புரிந்தது. ஒவ்வொரு மாணவரும் தமது பேச்சில் அதைத்தான் வெளிக்காட்டினர்.
அபியும், கீர்த்தியும், சந்திரசேகரும் நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றை தூண்டிவிட்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி இன்னமும் பதினாறடி தைரியமாகப் பாயலாம். எவ்வளவு ஆத்மார்த்தமாக முன்வருகிறார்கள் பாருங்கள். இத்தகைய வலுவேறிய தோள்கள் துணைக்கு இருந்தால் எத்தனை மாணவர்களை வேண்டுமானாலும் தூக்கி விட முடியும். நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சமூகத்தில் எந்தச் சலுகையுமே கிட்டாத மாணவர்கள் அவர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு பெரும் அதிகாரியுடன் சரிக்குச் சமமாக அமர்ந்து பாடங்களை கவனிக்கிறார்கள்.
நிகழ்வு முடிந்த பிறகு கார்த்தியும், தாமஸூம் நானுமாக வந்து சித்தோடு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டோம். தானொரு துணை ஆட்சியர் என்கிற துளி கணம் கூட சந்திரசேகரிடம் இல்லை. ஈரோடு செல்கிற பேருந்து வந்து நின்றது. பயணி நிற்பதைத் தெரிந்தும் கூட ஓட்டுநர் வண்டியைத் தொடர்ந்து முன்னகர்த்தினார். பேருந்துக்கு முன்பக்கமாகச் சென்று ஓட்டுநரிடம் சைகை காட்டினேன். அவர் வண்டியை நிறுத்துவதாகத் தெரியவில்லை. சந்திரசேகர் பதறியபடி ‘நீங்க இருங்க மணி..நான் ஏறிக்குறேன்’ என்று சட்டைப்பையில் கையை வைத்துச் சில்லரை தெறிக்காமல் பிடித்துக் கொண்டு மிகச் சாமானியனைப் போல ஓடி ஏறி அமர்ந்தார்.
இத்தகைய மனிதர்களைப் பார்த்தால் என்னையுமறியாமல் கண்கள் கசிந்துவிடும். ‘ஆண்டவா, இவரைப் போன்ற அதிகாரிகள் எந்த அழுத்தமுமில்லாமல் பல்லாண்டு வாழட்டும்’ என மனமுவந்து வேண்டிக் கொண்டேன்.
இத்தகைய மனிதர்களைப் பார்த்தால் என்னையுமறியாமல் கண்கள் கசிந்துவிடும். ‘ஆண்டவா, இவரைப் போன்ற அதிகாரிகள் எந்த அழுத்தமுமில்லாமல் பல்லாண்டு வாழட்டும்’ என மனமுவந்து வேண்டிக் கொண்டேன்.
9 எதிர் சப்தங்கள்:
சத்தியமா சொல்ரேன் சார். என்ன சொல்ரதுனெ தெரியல. இப்படிப்பட்ட மனிதர்களைப்பற்றி எழுதுவதற்கும் வாழ்வில் கடந்து வருவதற்கும் உங்களுக்கு கொடுப்பனை இருக்கிறது. இந்தப் பதிவை படிப்பதற்கு நான் கொடுத்துவைத்திருக்கிறேன். அவ்வலவுதான். எத்தனைநாட்கள்தான் காமராஜரையும் கக்கனையும் பாராட்ட? ஒரு புத்தகம் வெளியிடுங்கள். தயவு செய்து எழுதி வெளியிடுங்கள். அது நேர்மையான அதிகாரிகளைப்பற்றியதாக மட்டும் இருக்கட்டும். இந்த காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று வரும் சந்ததியினர் வாழ்த்தட்டும். ஒரு உண்மையைச்சொல்கிறேன். இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நிசப்தம் என்னும் வளைதளம் படிப்பவர்கள் வணங்கும் புனிதத்தளமாகவும் மாறிவிடும். மாறிவிட்டது.
ணல்லவர்களை உங்களை ணோக்கி இழுக்கும் காண்தமா ணீங்க மாரிட்டிங்க என்பது வெட்டவெளிச்சமா தெரியுது. உங்கள் உயர்ண்த என்னங்களுக்கு எர்ப்ப ஒரு பிரதிபலிப்பா இண்த மாதிரி மனிதர்களை ஊழ் உங்களிடம் கொன்டுவருகிறது.
எவ்வளவு உயரம் போனாலும் சில மனிதர்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள். உயர் பதவியில் இருப்பவர்களில் இந்த எளிமையை நிச்சயம் நிசப்தம் வாசகர்களில் ஒரு சிலராவது உள்வாங்கிக்கொள்வார்கள். சாதாரணமாக இருசக்கர வாகனத்திலேயே வக்கீல் போலீஸ் ஆர்மி என்று தங்களின் உத்தியோக அடையாளங்களை பதித்து நடமாடும் நம்மிடையே இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். கடைசி இரண்டு பத்திகளை படிக்கும்போது மனதை எதுவோ இனம்புரியாத உணர்வு ஆட்க்கொண்டது. இவர் நல்ல உடல் உள நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துவோம்
வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் பண்பில் செருக்கு சேராது.
கேட்டுப் பாத்தா அவரோட அய்யனோ, தாத்தனோ காட்டுல ஆடு மேய்ச்சவராகவும் இருக்கக்கூடும்.
// ‘ஆண்டவா, இவரைப் போன்ற அதிகாரிகள் எந்த அழுத்தமுமில்லாமல் பல்லாண்டு வாழட்டும்’//
ரிப்பீட்
//சமூகத்தை நேசிக்கிற அதிகாரிகளை, கனவு நாயகர்களை மிகச் சாதாரணமாக எழுத்து வழியாக எதிர்கொண்டபடியே இருக்கிறேன். தங்களது பதவி, அந்தஸ்து என எதைப்பற்றியும் கிஞ்சித்தும் கவலையுறாமல் தொடரூர்தியிலும் பேருந்திலுமாகச் சொந்தச் செலவில் வந்து போகிற உயர் அதிகாரிகள். இதைவிடவும் எனக்கு வேறு என்ன வேண்டும்?//
நெசமாவே ஒம்ம மேல பொறாமை யா இருக்கு ய்யா.
//முகவரியை மட்டும் வாங்க முடியவில்லை.//
விடா(மணி)கண்டனும் (முகவரியை) கொடாக்கண்டனும்.
"ஒரு புத்தகம் வெளியிடுங்கள். தயவு செய்து எழுதி வெளியிடுங்கள். அது நேர்மையான அதிகாரிகளைப்பற்றியதாக இருக்கட்டும்" - மிக நல்ல யோசனை. நாம் ஆயிரக்கணக்கில் வாங்கி அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவோம். ஒரு 4 பேர் மனம் மாறினால் கூட மிகவும் சந்தோஷம்.
ஐயா ...இவர் எங்கையா இருந்தார் , எப்படி கண்டு பிடித்தீர் ...உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது அந்த பாதையில் இவர் போன்ற நல்ல மனிதர்கள் கை கோர்ப்பார்கள்...இது போன்ற மனிதர்களை நினைக்கும் பொழுது மனசு நெகிழ்கிறது ...படிக்கும் பொழுதே கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது ...
Post a Comment