Sep 29, 2017

கமல் கமலாகவே வரட்டும்

நந்தி வழிபாடு தமிழகத்தில் பழங்காலத்தில் இருக்கவில்லையாம். சமணர்களை தாங்கள் அடக்கிவிட்டதற்கான அடையாளமாகத்தான் - சமணத்தில் ரிஷப கணம், சிம்மகணம் என்றெல்லாம் உண்டு- லிங்கத்தின் முன்பாக ரிஷபம் அடங்கியிருக்கிறது என்பதான குறியீடாக நந்தி வழிபாடு தொடங்கியது என்று ஒரு வரலாற்றாய்வாளர் சொன்னார். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. காவி என்பது கருப்புக்குள் அடக்கம் என்று நடிகர்- இன்றைய தினம் வரைக்கும் நடிகர்தானே?- கமல்ஹாசன் பேசிய போது இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். அவர்தான் தெளிவாகச் சொல்லமாட்டார் அல்லவா? நாம்தான் எதையாவது புரிந்து கொள்ள வேண்டும். சமீபகாலம் வரைக்கும் தாம் தெளிவாக இருந்தபடியே அடுத்தவர்களைக் குழப்புகிறார் என்பதுதான் அனுமானமாக இருந்தது. ஆனால் அவரே பெருங்குழப்பத்தில்தான் இருக்கிறார்.

கமல் அரசியலுக்கு வருவதில் தவறு எதுவுமில்லை. தனிமனிதர்களால் இந்தச் சமூகத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது. மாற்றம் வேண்டுமென விரும்பினால் அவன் இயக்கமாக மாற வேண்டும். ஒரு சித்தாந்தம் அல்லது தனிமனிதனை உச்சியில் நிறுத்தி அந்த மையத்தைச் சுற்றிலும் ஒரு கூட்டத்தை உருவாக்க வேண்டும். அந்தக் கூட்டம் விரிவடையும் போது மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும். தனிமனிதர்களாகச் செயல்பட்டால் சலனங்களை வேண்டுமானால் உருவாக்கலாம்- விமர்சனமோ பாராட்டோ வரும்போது அதையும் தனியொருவனாகவே ஏற்றுக் கொள்ளவும் கழுத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். அதுவே இயக்கம் என மாறும் போது அவனது சிந்தாந்தத்தையும் தனிமனித பிம்பத்தையும் காப்பாற்றுவதற்கு ஒரு கூட்டம் துணையாக இருக்கும். கீழ்மட்ட எதிரிகளுக்கு எதிராகக் கத்தியைச் சுழற்றுகிற வேலையை கூட்டம் பார்த்துக் கொள்ளும். தமக்கு எதிரான பெரும் தடைக்கற்களை உடைக்கிற வேலையைத் தலைவன் செய்தபடியே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டேயிருக்கலாம். எந்தவொரு வரலாறுமே இப்படித்தான் உருவாகியிருக்கிறது. 

ரசிகர் மன்றமாக இருக்கும் வரைக்கும் தனிமனித துதியைச் செய்து கொண்டிருக்கிற கூட்டம் அது. யாரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அதுவே அரசியல் இயக்கமாக மாறும் போது தமக்கான கொள்கையையும் தெளிவாக முன்வைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. கமல் அரசியலுக்கு வரப் போகிறார் என்பதற்குப் பிறகான நேர்காணல் ஒன்றில் தான் ‘நாயகன்’ பட வெற்றி விழாவுக்காக தமிழகத்தில் பதினெட்டு ஊர்களுக்குச் சென்றதாகப் பேசியிருந்தார். அரசியலுக்கு வந்த பிறகு மீண்டும் சுற்றுப்பயணம் இருக்கும் என்பதான பேச்சு அது. ஆச்சரியமாக இருக்கிறது. 1987 ஆம் வருடம் நாயகன் படம் வெளியானது. முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதையும் சுற்றிப் பார்த்ததை வைத்துக் கொண்டுதான் தமது கட்சிக்கான கொள்கைகளை வழிவகுக்கப் போகிறாரா என்ன? அந்த அர்த்தத்தில்தான் புரிந்து கொண்டேன். இரண்டாயிரத்தில் இருந்த தமிழகம் இன்றில்லை. வெறும் பதினேழு ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கின்றன. தூர்தர்ஷன் கூட முழுமையாக பரவியிராத முப்பதாண்டுகளுக்கு முன்பான தமிழகத்தை தாம் பார்த்ததைப் பெருமையாகச் சொல்லுகிற மனிதருக்கு இந்த நிலம் குறித்தும் அதன் மக்கள் குறித்தும் என்னவிதமான புரிதல் இருக்கும் என்று அயற்சியாக இருக்கிறது.

தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதி அரசியலில் தொடங்கி வரிசையாக அடுக்கலாம். தலைவனாக உருவெடுக்கிறவர்களுக்கு ஒவ்வொன்று குறித்தும் குறைந்தபட்சமான புரிதலும் நிலைப்பாடும் இருக்க வேண்டும். இதெல்லாம் நம்முடைய எதிர்பார்ப்புதான். ஆனால் அது அரசியலுக்கு அத்தியாவசியமானது இல்லை. அண்ணாயிசம், காந்தியிசம், சோஷலிசம், கம்யூனிசம் என எல்லாவற்றையும் சேர்த்துத் தக்காளி ரசமாக வைத்த எம்ஜியாரை நம் தமிழகம் ஏற்றுக் கொள்ளவில்லையா? ‘பசி’ ‘ஏழை’ என்கிற சொற்களை தமது சித்தாந்தத்தின் முதுகெலும்பாக எம்ஜிஆர் காட்டினார். அதையே அச்சுபிசகாமல் விஜயகாந்த் பின்பற்றினார். அவரது கெட்ட நேரம், தமிழகத்தின் நல்ல நேரம்- முடங்கிப் போனார். கமல்ஹாசனும் கிட்டத்தட்ட புளிரசம் கான்செப்ட்தான். காவியுடன் கூட்டணி, கருப்பு அணிந்த நாத்திகன், இடதுசாரி பார்வையாளன், முதலாளித்துவத்தின் நண்பன் என ஒன்றுக்கொன்று முரணான எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு சித்தாந்தத்தை உருவாக்கக் கூடும். அதன் முதுகெலும்பாக ‘ஊழல்’ என்ற ஒற்றைச் சொல்லை முன்னிறுத்துவார் போலிருக்கிறது.

கமல் அரசியலுக்குள் நுழைந்தால் அது நிச்சயமாக திமுகவுக்கான பாதிப்புகளை உருவாக்கும். கமல் ஆட்சியமைக்கிறாரோ இல்லையோ- கடந்த முறை மக்கள் நலக் கூட்டணி திமுகவுக்குச் செய்த சேதாரத்தை கமல் நிச்சயமாக உருவாக்குவார். ‘பழம் பழுத்து தம் மடியில் விழும்’ என்று நம்பிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் கனவு சிதையவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு மத்திய அரசாங்கம் தினகரன், ஸ்டாலின் என எல்லோருக்கும் ஏதாவதொரு வகையில் செக் வைத்திருக்கிறது. ஆனால் கமலுக்கு இதுவரை அழுத்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு தமிழக அரசியலில் உருவாகியிருக்கும் வெற்றிடம் நிறைய நாவுகளை தொங்கச் செய்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் வலுவாகக் கோலோச்சிக் கொண்டிருந்த போது வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது நாக்கைச் சுழற்றுகிறார்கள். அதிகாரம் என்பது அட்டகாசமான போதை. அதை ருசிபார்க்கும் ஆசை ரஜினிக்கும் இருக்கிறது. கமலுக்கும் இருக்கிறது. யாராக இருப்பினும் சுயமாக அரசியலுக்கு வந்தால் மனமார வரவேற்கலாம். களம் காணட்டும். போராடட்டும். மக்கள் ஏற்றுக் கொண்டால் அதிகார பீடமேறட்டும். ஆனால் எந்தவொரு அரசியல்வாதியும் இன்னொருவருக்கான ஸ்லீப்பர் செல்லாக களத்தில் காலடி வைப்பார்களேயெனில் முழுமையாக எதிர்க்க வேண்டும். தமது கொள்கைகளையும் அபிலாஷைகளையும் தம்மால் ஊடுருவச் செய்ய முடியாத போது இன்னொரு முகமூடிகளைத் தேடிக் கொண்டிருக்கிறவர்கள் ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து மெல்ல உள்ளே திணிக்கிறார்கள். கமல் அப்படியானதொரு ஆளாக இருக்கக் கூடாது என பிரியப்படுகிறேன். ‘நீ ஆசைப்பட்டால் அந்தக் கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் ஆகு’ என்று சொல்ல வேண்டும். தனிக்கட்சி, தனிக்கொடி என்று தொடங்கி கூட்டத்தைச் சேர்த்து இன்னொருவன் அரியணை ஏறுவதற்கு முதுகைக் கொடுத்தால் அது அயோக்கியத்தனம். 

அரசியல் ஒன்றும் கேக் இல்லை. வெட்டி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவெல்லாம் முடியாது. ‘அது என் பர்சனல்’ என்று சினிமாவில் இருக்கும் வரைக்கும் சொல்லலாம். அடுத்தவனுக்கு விழும் வாக்குகளைப் பெற முயற்சித்தால் அவன் நம்முடைய ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி அந்தரங்கத்தில் வெளிச்சம் அடிப்பான். கிழித்துத் தொங்கவிடுவார்கள். இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. 

எல்லாவற்றையும் தாண்டி ஒருவேளை அரசியலுக்கு வருவதாக இருப்பின் கமல் கமலாகவே வரட்டும். எந்தவொரு அரசியல் சார்புமில்லாமலேயே அவரால் தமக்கான களத்தை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து இந்த மண்ணின் பிரச்சினைகளின் நுனியையாவது பார்த்துவிட்டுக் கொள்கைகளையும் கட்சியையும் அறிவித்தால் நன்றாக இருக்கும். 

4 எதிர் சப்தங்கள்:

Selvaraj said...

முடிவெடுத்தால் யாம் முதல்வர் அடுத்த படத்திற்கு நல்ல தலைப்பு. இணையதளம் பயன்படுத்துபவர்கள் பத்து சதவீதம் பேர் ? இருப்பார்கள் என்று இன்றைய கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தீர்கர்கள் அப்படியென்றால் twitter பயன்படுத்துபவர்கள் மிக குறைவாகவே இருப்பர். (நானெல்லாம் சுசிலீக்ஸ் வந்தநேரம் twitter கணக்கு தொடக்கி தற்போது எந்த லீக்ஸும் இல்லாததால் மீண்டும் முகநூலுக்கு திரும்பியவன்)
நடிகர் கமல் திடீரென மக்கள்மீது அக்கறைகொண்டு அதுவும் ஆளுங்கட்சியுடன் இவ்வளவு நேரடியாக கருத்து மோதல் செய்கிறார் என்றால் இவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் அது யாரென்று மனதில் கணித்தபடியே ‘தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி’ என்று அறிவித்தவுடன் புரிந்துவிட்டது. மக்களே கோபப்படுங்கள் என்று சொல்லி இவர் பிக்பாஸ் நெறியாளராக செயல்பட போய் விடுகிறார். நிச்சயம் இது அவருடைய பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் அவ்வளவுதான். கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசிவருவது ஏனோ நியாபகத்திற்கு வருகிறது.




சேக்காளி said...

// கமல் அப்படியானதொரு ஆளாக இருக்கக் கூடாது என பிரியப்படுகிறேன்.//
நானுந்தான். ஆனால் அண்ணனும் ,முன்னாள் இணைவியும் இருக்கும் கூடாரத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாததை பார்க்கும் போது
தம்மால் ஊடுருவ முடியாத போது இன்னொரு முகமூடியை தேடி ஸ்லீப்பர் செல்லை கண்டறிந்து மெல்ல உள்ளே திணித்திருப்பதாகவே தெரிகிறது.

S.NEDUMARAN , said...

நடிகர் என்பதனால் எதிர்க்கவும் வேண்டாம்.அதே காரணமாக ஆதரிக்கவும் வேண்டாம்.

Life said...

கமலும் தேவைப்பட்டால் கமலத்துடன் சேர்வேன் என்று சொல்லி இருக்கிறார் நிர்வாக ரீதியாக.தமிழக கப்பல் மத்திய அரசின் நங்கூரத்தால் கலையாமல் நிற்கிறது வரும்.இதில் கமல் மட்டும் விதி விளக்கா என்ன?