Sep 6, 2017

இனி என்ன செய்ய வேண்டும்?

சில காரியங்களை மெல்லிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் செய்திருப்போம். ஆனால் அது மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துவிடும். அப்படியான செய்தி இது. கனடாவில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் சிவாவும் செந்திலும் கலந்து கொண்டார்கள். அவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைக்குத்தான் முதல்பரிசும் கிடைத்திருக்கிறது. இருவருமே மென்பொறியாளர்கள். வேலையைத் தாண்டி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் கணிமைக்கு எதையாவது செய்து கொண்டேயிருக்கும் இத்தகையவர்களால்தான் இணையத்தில் தமிழ் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது.


பரிசு வாங்கிய பிறகு சிவா ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

சிவாவையும் செந்திலையும் கவனித்து வைத்துக் கொள்ளலாம். அடுத்த பத்து வருடங்களில் தமிழ் கணிமையில் மிக முக்கியமான செயல்களைச் செய்த மனிதர்களாக இருப்பர். குறள்பாட்டை வடிவமைத்ததும், நிசப்தம் தளத்தின் முதல் செயலியை (App) வடிவமைத்ததும் இந்த சிவாதான்.

சிவாவுக்கும் செந்திலுக்கும் வாழ்த்துகள். அணில் மண் அள்ளிப்போட்டது போலத்தான் என் பங்களிப்பு.

                                                       ******

அன்புள்ள மணிகண்டனுக்கு,

சிவா எழுதுவது. கனடாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டில் நாங்கள் சமர்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆய்வுக் கட்டுரையை அடுத்த படிக்கு எடித்துச் செல்ல தேவையான நிதி உதவியை தமிழக அரசு மூலம் பெற ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளனர். (எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் கிடைத்தால் நிச்சயம் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும் பலரும் இதே போல தமிழ் கணிமை பற்றி ப்ராஜெக்ட் செய்ய ஊக்கமாக இருக்கும்)

உங்களுக்கு மிக்க நன்றி! நீங்கள் அந்த பதிவு எழுதியிராவிடில் எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்காது. மேலும் மாநாட்டுக்கு சென்று அறிவு விருத்தி மட்டுமல்லாமல் சில நல்ல மனிதர்களை பார்த்துப் பேசவும், பழகவும் முடிந்தது. தமிழ் கணிமைத் துறையின் முன்னோடிகள் பலரிடமும் நேரடியாக பேச முடிந்தது. அவர்கள் உரைகளும் ஊக்கமூட்டக் கூடியதாக இருந்தது.

மீண்டும் ஒரு முறை மிக்க அன்பும் நன்றியும். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி,
சிவா

                                                                  ***

சிவாவும் செந்திலும் தமிழ் இணைய மாநாட்டில் சமர்பித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம். (சிவா எழுதியது)

சர்வதேச அளவில் உத்தமம் என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழைத் தொழில்நுட்ப உதவியோடு வளர்ப்பதும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஊர்களில் தமிழ் இணைய மாநாடு நடத்துகிறார்கள். இப்போது நாம் கணிணி, செல்பேசியில் தமிழில் தட்டச்சிடுவதற்கு உதவியாக ஒருங்குறி (யூனிகோட்) கொண்டு வந்தது, ப்ராஜெக்ட் மதுரை மூலம் தமிழ் இலக்கியங்களை கணிணித் தரவுகளாக சேர்த்தது போன்ற பல நல்ல காரியங்களில் இவர்கள் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள். 

2017 ஆம் வருடத்திற்கான மாநாடு கனடாவின் டொரோன்டோ மாநகரில் நடைபெற்றது. அதைப் பற்றி வா. மணிகண்டன் அவர்கள் நிசப்தத்தில் ஏற்கனவே எழுதி இருந்தார். அந்த கட்டுரையைப் படித்த பிறகு தான் இந்த அமைப்பைப் பற்றி தெரிய வந்தது. மாநாட்டில் சமர்ப்பிக்க ஆய்வுக் கட்டுரைகளை கேட்டிருந்தார்கள். நானும் நண்பன் செந்தில் குமாரும் ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்பி இருந்தோம். அது தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நாங்கள் இருவரும் அங்கு சென்று துறையின் அறிஞர்கள், முன்னோடிகள் முன் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தோம். எங்கள் ஆய்வுக்கட்டுரைக்கு, சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான பரிசு கிடைத்திருக்கிறது. மணிகண்டனுக்கு எங்களது முதல் நன்றி. இனி இந்த ஆய்வுக் கட்டுரை பற்றி சுருக்கமாக பார்ப்போம். பயப்பட வேண்டாம், முடிந்த வரையில் எல்லோருக்கும் புரியும்படி எளிய மொழியில் விளக்க முயன்றுள்ளேன்.

1) திடீரென்று ஒரு நாள் குறுந்தொகையின் காதல் பாடல்களை படிக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறது. ஆனால் இணைய இணைப்பு உங்களிடம் இல்லை. இணைய இணைப்பு இல்லாவிடிலும் தமிழ் இலக்கியங்களை இணையதளம் வழியாக‌ படிக்க இயலுமா?

2) 'பைய' என்கிற வார்த்தையை திருவள்ளுவர் 'மெதுவாக' என்ற பொருளில் ஒரு குறளில் பயன்படுத்தி உள்ளார். இதே வார்த்தை திருநெல்வேலி வட்டார வழக்கில் (மேலும் சில வட்டாரங்களிலும்) இன்றும் அதே பொருளில் பயன்படுத்தபட்டு வருகிறது. 2000 வருடங்கள் கழித்தும் ஒரு சொல் பல தலைமுறை கடந்து வாழ்ந்து வருகிறது. இதே போல மேலும் சுவையான ஆராய்ச்சிகளை பொது மக்களும் எளிதாக நடத்த ஒரு தொழில்நுட்பம் உருவாக்க முடியுமா?

இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முயல்வது தான் இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம். முதலில் நாம் நேரடியாக ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்து விடுவோம். அதன் பிறகு சற்று விரிவாக அலசலாம். இந்த ஆய்வுக் கட்டுரைக்காகக் குறுந்தொகைக்கென நாங்கள் ஓர் எளிய இணையதளத்தை உருவாக்கி உள்ளோம். https://kurunthogai.herokuapp.com/ இத்தளத்தை இணைய இணைப்பு கொண்டு ஒரு முறை பார்வையிடுங்கள். பின் உங்கள் இணைய தள தொடர்பை அணைத்து விட்டு மீண்டும் இந்த தளத்தைப் பார்வையிட்டால் தளம் முன்பு போலவே வேலை செய்வதை நீங்கள் காணலாம். 

நன்றாக இருக்கிறதா? இதுதான் கான்செப்ட்.

தமிழில் தற்போது இலக்கியங்கள் ப்ராஜெக்ட் மதுரை, தமிழ் விக்கி போன்ற பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கின்றன. யாராவது ஒரு மனிதர் இந்த இலக்கியங்களை வித்தியாசமான வடிவங்களில் (உதாரணமாக குறள்பாட், இணைய இணைப்பில்லாமல் செயல்படக் கூடிய தளங்கள்) தற்போது உள்ள சூழ்நிலையில் அது மிகக் கடினம். எனவே முதலில் தமிழ் இலக்கியங்களை நிரலி (program / code) வழியாக அணுகுமாறு செய்ய வேண்டும். அதற்கு தமிழில் Application Program Interface(API)கள் உருவாக்கப்பட வேண்டும்.


API என்பது நிரலி வழியாக நமக்கு தேவையான தகவல்களைப் பெறுவது. உதாரணமாக மேலே குறிப்பிட்டபடி, திருக்குறள் API யில் பைய என்கிற வார்த்தை உள்ள குறளை எனக்கு எடுத்துகொடு என்று நிரலி வழியாகக் கேட்க முடியும். அது பல்வேறு இடங்களில் தேடி எடுக்கும். அவ்வாறு வரும் பதிலை நமக்கு விரும்பிய வடிவத்தில் மக்களுக்கு காண்பிக்க முடியும். மேலே நீங்கள் பார்த்த இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் இயங்கக் கூடிய குறுந்தொகை தளம் கூட இந்த API மூலம் உருவாக்கப்பட்டது தான்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழ் இலக்கியங்களை முதலில் நிரலி மூலம் பெறுவதற்கான கட்டமைப்புகளை செய்ய வேண்டும். அதை அனைத்து மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் இலவசமாகவே கிடைக்கும்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால் இணைப்பில் இல்லா இணையதளங்கள், குறள் பாட் போன்ற பல்வேறு வித்தியாசமான முயற்சிகள் தமிழில் நடைபெறும். நமது தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தி விடலாம்.

இனி அடுத்த கட்ட வேலைகள் பற்றி பார்க்கலாம். 

மேலே சொன்னவாறு தமிழின் அனைத்து இலக்கியங்களுக்கும் API அமைப்பது என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போல. பல கைகள் தேவைப்படுகின்றன. இப்போதைக்கு எங்களுக்கு ஆர்வம் இருக்கக் கூடிய நிரலர்கள்(Programmer) தேவை. விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். சேர்ந்து பணியாற்றலாம்.

அன்புடன்,
சிவா,  செந்தில்.
மின்னஞ்சல்: vengaishiva@gmail.com

7 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

//
நாம் கணிணி, செல்பேசியில் தமிழில் தட்டச்சிடுவதற்கு உதவியாக ஒருங்குறி (யூனிகோட்) கொண்டு வந்தது, ப்ராஜெக்ட் மதுரை மூலம் தமிழ் இலக்கியங்களை கணிணித் தரவுகளாக சேர்த்தது போன்ற பல நல்ல காரியங்களில் இவர்கள் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள். //

ப்ராஜக்ட் மதுரை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அதில் செந்தில், சிவா வின் பெரும் பங்களிப்பு இருந்தது என்பது ஆச்சர்யமான புதிய தகவல். தங்களைப் போன்றவர்களால்தான் இதுபோன்றவர்கள் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்து நிரலர்களுக்கும் அன்பும் வாழ்த்துகளும்..!

Vaa.Manikandan said...

அன்புள்ள பழனி,

சிவா குறிப்பிடுவது ப்ராஜக்ட் மதுரையில் ‘உத்தமம்’ அமைப்பினரின் பங்களிப்பு குறித்து. இவர்கள் இருவரும் பங்களித்ததாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

சேக்காளி said...

// https://kurunthogai.herokuapp.com/
பாடல்களுக்கு இலக்கம் குறிப்பிட்டால் என்ன வேங்கைகளே?

சேக்காளி said...

// கனடாவில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் சிவாவும் செந்திலும் கலந்து கொண்டார்கள். அவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைக்குத்தான் முதல்பரிசும் கிடைத்திருக்கிறது. இருவருமே மென்பொறியாளர்கள்//
மென்பொறி வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

"தமிழ் கணிமை"
விளக்கம் தேவை. விளக்காவிட்டால் vaamanikandan.Sarahah.com ல்
கேட்பேன்.
அப்புறம் அந்த இருநூறு ஓவா (பொதிகை நிகழ்ச்சி பார்த்து கை தட்டியதற்கான கூலி) பற்றி கொஞ்சம் யோசிக்கவும்.

அன்பே சிவம் said...

ஒரு வேள சேக்க சரியில்லயோ? இந்த சேக்காளிய பேசாம புதுவைக்கோ!
பெ(உ)ங்களூருக்கோ? கூட்டி போயி வச்சி செஞ்சிறலாமா.. ன்னு தோனுது. அந்த எர நூறு ஓவா.! உம்மது..😡 மத்த செலவெல்லாம்..? எம்மது. டீலா. 😈

சேக்காளி said...

யோவ் !!!!அன்பே சிவம். நீங்க என்னை கூட்டிட்டு போயி வச்சி செய்யுங்க. இல்ல வைக்காம(ல்) செய்யுங்க.
அதுக்கு முன்னாடி "தமிழ் கணிமை" ன்னா என்ன ன்னு சொல்லிருங்க.