Sep 7, 2017

நான்காவது கொலை

நான்காவது கொலை இது. அடுத்தடுத்து இருக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடகத்திலுமாகச் சேர்த்து இதுவரை நான்கு பேர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். நான்கு பேர்களும் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்கள். சமூகச் செயற்பாட்டாளர்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொலைச் சம்பவங்கள். பைக்கில் வருகிறார்கள். கிட்டத்தட்ட பத்து அடி தூரத்தில் நின்று நெஞ்சிலும் தலையிலும் சுட்டுவிட்டுத் தப்பிவிடுகிறார்கள். 


முதலில் நரேந்திரா தபோல்கர். புனே மருத்துவர். மூடநம்பிக்கைக்குக் எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பியும் சட்டப்போராட்டங்களையும் நடத்திய இவரை 2013 ஆம் ஆண்டு காலை நடைப்பயணத்தில் இருந்தவரை அடையாளம் தெரியாத இருவர்- கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ‘அடையாளம் தெரியாத’ என்றுதான் சொல்வார்கள்- சுட்டுக் கொன்றார்கள். ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள். இருவர் தலைமறைவாக இருக்கிறார்கள். சிபிஐ விசாரித்தது. ஆனால் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. 

கோவிந்த் பன்சாரேவும் மஹாராஷ்ட்ராவைச் சார்ந்தவர். கலப்புத் திருமணத்தை ஆதரித்து இந்துத்துவாவுக்கான எதிரியாக நின்றவர். காலை நடைப்பயிற்சியில் இருந்தவரை பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றார்கள். இது நடந்தது 2015 ஆம் ஆண்டு. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. போலீஸ் சந்தேகப்பட்டவர் மீது ஆதாரம் எதுவுமில்லை என்று மந்திரி சொல்லியிருக்கிறார். இன்னமும் யாரையும் தண்டிக்கவில்லை.

மூன்றாவது கொலை கலபுரகி. கர்நாடகாவில் நடைபெற்றது. கன்னட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர். சாகித்ய அகடமி விருது வாங்கிய எழுத்தாளர். அடிப்படைவாத இந்துத்துவத்திற்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் எழுப்பியவர். தார்வாட் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மாணவர்கள் என்று சொல்லியபடி வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அவரது நெஞ்சில் குண்டைப் பாயச் செய்துவிட்டு ஓடினார்கள். கருப்புச் சட்டை அணிந்திருந்தார்களாம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

கலபுரகி கொல்லப்பட்டு இரண்டாண்டுகளில் இப்பொழுது கெளரி லங்கேஷ். வழக்கமான அடையாளம் தெரியாத நபர்கள் என்ற பல்லவி. அதே கருப்புச் சட்டை. துப்பாக்கியில் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பித்திருக்கிறார்கள். லங்கேஷின் வீடு ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கிறது. தனது காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழையும் தருணத்தில் துப்பாக்கி ரவைகள் துளைத்திருக்கின்றன.


நேற்று மாலையில் பெங்களூரு டவுன்ஹாலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கூடி மெழுவத்தி ஏந்தி தமது கண்டனத்தைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பாக கெளரியின் உடல் ரவீந்திர கலாஷேத்ராவில் வைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்திருந்த சிலரும் கண்டன கூட்டத்தில் இருந்தார்கள்.

கண்டனக் கூட்டத்தில் ஒருவர் பேசும் போது தமக்கு பயமாக இருப்பதாகச் சொன்னார். இதே பயம் இங்கேயிருக்கும் பலருக்கும் இருக்கக் கூடும் என்றார். ஆமாம் என்றார்கள். அது உண்மை. நேற்றைய மழையின் தூறலும் அந்தியில் பரவியிருந்த மனநிலையும் கண்டன கூட்டத்தில் இருந்தவர்களிடமிருந்த பதற்றமும் அப்படியானதொரு சூழலைத்தான் உருவாக்கியிருந்தன. நம்மைச் சுற்றிலும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்கிற வரைக்கும் தைரியத்தில் பேசலாம். பேசிவிட்டு பேருந்துக்குச் செல்லும் போது எவன் எதிர்ப்பான் என்று யாருக்குத் தெரியும்?

அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கதவைத் திறக்கும் போது மூன்று பேர்கள் சுட்டுக் கொல்வார்கள் என்பதை கெளரி மட்டுமில்லை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? சுதந்திர தேசத்தில் வாழ்கிறோம், நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்வதற்கும் எழுதுவதற்குமான சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்பும் காவல்துறையும் வழங்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையே ஒரு பாவனைதான் என்று உணரும் போது பயம் உண்டாகத்தானே செய்யும்?

சரியோ, தவறோ- ஒருவன் தாம் நம்புவதை வெளிப்படையாகப் பேச முடியவில்லையென்றால் அப்புறம் எப்படி நாம் சுதந்திர தேசத்தில் வாழ்வதாகச் சொல்லிக் கொள்ள முடியும்? வழக்குத் தொடுக்கவும், காவல்துறையை அணுகவும், கருத்துக்களால் எதிர்கொள்ளவும் எல்லாவிதமான வாய்ப்புகள் இருந்தும்  ‘நீ பேசுனா நான் சுடுவேன்’ என்று ஒருவன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுச் சென்ற பிறகு வருடக்கணக்காக ‘சுட்டவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று அரசாங்கங்கள் இழுத்துக் கொண்டிருந்தால் அப்புறம் என்ன பாதுகாப்பு இங்கு இருக்கிறது? 

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்தச் சூழலில் நகர்ப்புறங்களில் நடைபெறும் கொலைச் செயல்களில் கூட குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை என்கிறார்கள். நாம் அதை நம்ப வேண்டும். 

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத மனிதர்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அரசுகளை எப்படி மக்களுக்கான அரசு என்று சொல்ல முடியும்? இவை கருத்தியல் ரீதியிலான கொலை இல்லை என்று அரசாங்கம் சொல்லுமேயானால்- அப்படித்தான் நேற்றிலிருந்து நிறையப் பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்- ‘இந்தக் காரணங்களுக்காகத்தான் கொலை நடைபெற்றது’ என்பதை நிரூபித்து சமூகத்தின் பயத்தை நீக்கும் பொறுப்பு அவர்களுக்குத்தான் இருக்கிறது. அதை ஏன் செய்ய இயலவில்லை? 

கெளரி இறந்துவிட்டார். தமக்கு முன்பாகச் சாகடிக்கப்பட்ட மற்ற மூவரையும் போலவே அவரது சாவுக்கும் நீதி கிடைக்காமல் போய்விடக் கூடும். ஆனால் அவரது நெஞ்சில் பாய்ந்ததைப் போலவே மற்றவர்கள் நெஞ்சுகளிலும் குண்டு பாயாது என்பதில் என்ன நிச்சயமிருக்கிறது? 

‘உசுரு வேணும்ன்னா நீ அமைதியா இருந்துக்க’ என்று யாராவது சொல்வார்கள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன். துப்பாக்கியெடுத்தவனெல்லாம் கருத்தியல் காவலன். 

ஒரே மாதிரியாக நான்கு செயல்பாட்டாளர்களைச் சுட்டுக் கொல்லும் போது பேசலாம் என்று நினைக்கிற பத்துப் பேர்களில் ஐந்து பேர்களாவது அமைதியாகிவிடக் கூடும். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படியும் எழும்புகிற குரல்களுக்கான துப்பாக்கி குண்டுகளை ஒரு கூட்டம் தேடிக் கொண்டிருக்கக் கூடும். இப்படி துப்பாக்கியைக் காட்டி எதிராளிகளின் குரலை இன்னொரு குழு நெரித்துக் கொண்டிருக்கிறது. ‘யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அரசாங்கங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன அல்லது கண்டுபிடித்துவிட்டு அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மழை ஆரம்பித்திருந்தது. கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. தென் அமெரிக்கப் படங்களின் வன்முறைக் காட்சிகளும் கொலைச் சம்பவங்களும் நினைவுக்கு வந்து போயின. துப்பாக்கியை வைத்து இந்தியாவில் சக மனிதர்களைச் சுட்டுக் கொல்வார்கள் என்பதையும் அதை எதிர்த்து நடைபெறும் கண்டனக் கூட்டத்தில் ஒரு பார்வையாளனாக நின்று கொண்டிருப்பேன் என்றெல்லாம் எந்தக் காலத்திலும் நினைத்ததில்லை.

அமைதி தேசத்தில் புறாக்களின் சிறகுகளை ஒவ்வொன்றாக இணுங்கி கதுமையான ப்ளேடுகளால் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகம், சுதந்திரம் என்ற சொற்கள் ரத்தங்களில் குளித்துக் கொண்டிருக்கின்றன.

6 எதிர் சப்தங்கள்:

Suresh said...

இவை அனைத்தின் பிறப்பிடம் தனி மனித சுய ஒழுக்க வழுவலே ஆரம்ப புள்ளி......!!! துரதிஷ்டவசமாக இதைப்ற்றிய கவலை அனேக இல்லங்களில் இல்.லை என்பது மிகவும் கவலை அளிக்க கூடிய வலி மிகுந்த உண்மை .....!!!

வெங்கி said...

பதிவு செய்ததற்கு நன்றி மணி.

சேக்காளி said...

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத மனிதர்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அரசுகளை //
ஜெயலலிதா மரணத்தையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். முறை தான் வேறு.

Anonymous said...

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத மனிதர்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அரசுகளை எப்படி மக்களுக்கான அரசு என்று சொல்ல முடியும்?
'ARASE' SEIDHA 'கொலை GAL' THANE IVAI'
CIA/FBI KILLED JOURNALISTS AND NATIONAL LEADERS. IN PHLIPPINES ONE PRIME MINISTER TOOK PRIDE IN KILLING A JOURNALIST.
SOLOMON RUSHDIE AND TASLIMA HAD TO RUN FOR THEIR LIVES FOR WRITING VERY HARMLESS THINGS.
REMEMBER THE 'WHITE VAN ' OF LANKA. THE NO OF KILLINGS DURING EMERGENCY IN INDIA WAS COUNTLESS.
DURING JEYALALITHA'S RULE PRESS/MEDIA WAS SCARED BEYOND A POINT. KANJA AND FALSE CASE WERE HER WEAPONS.
FOR KALAIGNER IT WAS SUN TV EMPLOYEES.
FOR A TRUTH SPEAKER/COMMITTED JOURNALIST THIS IS THE FATE/'THALAI VIDHI.'
BJP IN ADDITION TO GUN HAS ANOTHER WEAPON. "PATRIOTISM".
ANY ONE WHO OPPOSES THEIR POLICIES/SCHEMES WILL BE A 'DHESA DROHI'/TRAITOR.
THE EARLIER THREE KILLINGS WERE MALES. LATEST KILLING IS A LADY.
POLICE/GOVT./PARTISAN PRESS WILL GIVE ALL KINDS OF STORIES. WORSE THAN KILLING HER.

ஜனநாயகம், சுதந்திரம் என்ற சொற்கள் ரத்தங்களில் குளித்துக் கொண்டிருக்கின்றன. 'UNMAI THAN'.
ANAL NALLAVARGAL IRUKKUM VARAI வயிர முடையநெஞ்சு ULLAVARGAL IRUKKUM VARAI தொடர்ந்து குரல் எழுப்பி KONDE IRUPPARGAL'.
NISAPTHAMUM APPADI PATTATHU THANE.
'SIKANDIGAL' CAN NEVER WIN.
DONT WORRY. WE WILL WIN.
ANBUDAN,
M.NAGESWARAN.

Unknown said...

"நம்பிக்கையே ஒரு பாவனை தான்.....????..!!!!...?????"

அன்பே சிவம் said...

மூத்தவர் அய்யா M.N. அவர்கள் வாக்கு பலிக்கும். இது வெறும் நம்பிக்கையின்பால் வந்த வார்த்தையல்ல.

மணிதர் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்த அறியா அறிவிலிகள், தம்
ஆத்திரத்தை மட்டும் ஆயுதத்தின் துணை கொண்டு நிரூபிக்க முயல்கின்றனர்.

ஏசுவுக்கும், காந்திக்கும், கட்ட பொம்முவுக்கும் நடந்ததை நம் கண் முன் நடத்தி பயிற்று விக்கின்றனர். பயில்வோம்.