Sep 8, 2017

மோ யான்

மூர் மார்கெட்டில் ஒரு புத்தகம் கிடைத்தது. மாற்றம். சீன மொழியிலிருந்து தமிழுக்கு எம்.ஸ்ரீதரனால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது. ஸ்ரீதரன் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஐ.எஃப்.எஸ் அதிகாரி. தமது பணியின் காரணமாக சீன மொழியைக் கற்றுக் கொண்டவர். பயணி என்ற புனைப்பெயரில் ‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் சீன மொழியின் சங்கப்பாடல்களை மொழி பெயர்த்திருந்தார். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறாராம். அந்தளவுக்கு மட்டும் அவரைப் பற்றித் தெரியும். 

வழக்கமாக வெளியூர் பயணமெனில் பகல் நேரப் பயணங்கள்தான் ஜாலி. அப்பொழுதுதான் ஊர்களை வேடிக்கை பார்க்க முடியும். அருகில் அமர்ந்திருப்பவர்கள் உறங்காமல் இருப்பார்கள். பேச்சுக் கொடுத்து மொக்கை போடலாம். அப்படியும் இல்லையென்றால் புத்தகங்கள் வாசிப்பதற்கு நான்கைந்து மணி நேரங்கள் சேர்ந்த மாதிரி கிடைக்கும். இரவுப் பயணங்களில் வெறும் இருட்டுதான். ஒவ்வொரு ஊராக அவற்றின் இருள் திரையைக் கிழித்துக் கொண்டே போவது போன்ற பிரமை. விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கிவிடுவேன். கடந்த முறை சென்னையிலிருந்து பெங்களூருவுக்குத் திரும்பிய போது பைக்குள் புத்தகம் எதுவுமில்லை. புத்தகங்களைத் துழாவுவதற்காக மூர் மார்கெட் சென்றிருந்த போதுதான் மாற்றம் சிக்கியது. மூர் மார்க்கெட்டில் திரும்பிய பக்கமெல்லாம் புத்தகங்கள்தான். ஆனால் அத்தனையும் மருத்துவம் பொறியியல் என்று கல்வி சார்ந்த புத்தகங்கள். எங்கேயாவது ஒன்றிரண்டு கடைகளில் மட்டும் தமிழ் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ.

‘மாற்றம்’ புத்தகத்தை ஆம்பூர் தாண்டுவதற்குள்ளாக வாசித்து முடித்துவிட்டேன். துக்கினியூண்டு சுயசரிதை. ஒரு பள்ளிக் கூடம்- நாவலாசிரியர் மோ யான் படித்த பள்ளிக் கூடம். அங்கே படித்த மாணவர்களின் வாழ்க்கை வழியாக அந்தக் காலகட்டத்தில் சீன நாட்டின் வரலாற்றையும், மக்களின் வாழ்க்கையையும் வேகமாகச் சொல்லிச் செல்லும் சுய சரிதை. சற்றேறக்குறைய நாற்பது-ஐம்பதாண்டு காலக் கதை இது. 

பொதுவாகவே வரலாறு சுவாரசியமானது. ஆனால் அதைக் கதையாக யாரேனும் சொல்லிக் கேட்க வேண்டும். ஒரு வரலாறை வாசிக்கும் போது அதிலிருந்து நிறையக் கிளைக் கேள்விகள் உண்டாகும். அவற்றுக்கான விடைகளைத் தேடிச் செல்லும் போது ஒரு நிலம் அல்லது மனிதன் குறித்தான முழுமையான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. மாற்றம் அப்படியான நாவல். சீன-ஜப்பான் போர், சீனாவின் கம்யூனிஸ அரசு, அதற்கு முன்பான சீன தேசம், மக்களின் வாழ்வியல் குறித்தெல்லாம் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிற நாவல்.

இந்நாவல் காலச்சுவடு வெளியீடு. ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

மாற்றம் நாவலில் ஓரிடத்தில் Red Sorghum படப்பிடிப்புக்காக படப்பிடிப்புக் குழுவினர் தமது ஊருக்கு வந்தது பற்றி மோ யான் சொல்லியிருப்பார். Red Sorghum நாவலும் மோ யான் எழுதியதுதான். இந்த நாவலுக்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 

Red Sorghum,  மோ யானின் தாத்தா பாட்டி பற்றிய கதை அது. நாலாபுறமும் சிவப்புச் சோளம் நிறைந்த நிலம் அது. ஒரு அழகிய ஏழைப் பெண்ணை வைன் தயாரிக்கும் கிழவனுக்குக் கட்டி வைக்கிறார்கள். அவன் தொழுநோயாளி. வசதியானவன் என்பதால் கட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். அவளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு தூக்கியில் வைத்து நான்கைந்து இளைஞர்கள் ஆட்டபாட்டமாகத் தூக்கிச் செல்கிறார்கள். ‘அவன் தொழுநோயாளி..அவனை வேண்டாம்ன்னு சொல்லிடு’ என்று அந்தக் கூட்டத்தில் ஒருவன் சொல்கிறான். அவள் பதிலேதும் சொல்லாமல் அழுகிறாள். அதன் பிறகு யாரும் எதுவும் பேசாமல் அழைத்துச் சென்று கணவனது வீட்டில் விட்டுவிடுகிறார்கள். 


மூன்றாம் நாள் புதுப்பெண் பிறந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது பாரம்பரியமாம். அப்படித் திரும்பிச் செல்லும் போது ஒருவன் அவளை சோளக்காட்டுக்குள் தூக்கிச் செல்கிறான். தூக்கியைத் தூக்கிச் சென்றவர்களில் ஒருவன்தான் அவன். அதை வலுக்கட்டாயமான வன்புணர்வு என்று சொல்ல முடியாது. அவளுக்கும் அவன் மீது விருப்பமுண்டு. 

‘என்னை ஏன் தொழுநோயாளிக்கு கட்டி வெச்சீங்க’ என்று அப்பனிடம் சண்டையிட்டுவிட்டுத் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வரும் போது அவளது கணவன் கொல்லப்பட்டிருக்கிறான். யார் கொன்றார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட முடியும். கணவனின் வைன் தொழிலை அவள் தொடர்ந்து நடத்துகிறாள். தூக்கியும் இவளோடு வந்து சேர்ந்து கொள்கிறான். ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவனின் தந்தை. குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் ஜப்பானிய படை சிவப்புச் சோளத்தை அழித்து ஊருக்குள் நுழைந்து அழிச்சாட்டியம் செய்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை. 

சீனர்களிடம் இன்னமும் ஜப்பானியர்கள் மீது ஆழமான வன்மமும் வெறுப்புமுண்டு. அதற்கான காரணத்தை இந்தப் படம் இயல்பாகச் சொல்கிறது. அருமையான திரைப்படம். ஒருவேளை நாவலாக வாசித்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும். யூடியூப்பிலேயே சப்-டைட்டிலுடன் கிடைக்கிறது. 

மாற்றம் நாவலில் ஒரு சரக்குந்து (ட்ரக்) இடம்பெறும். கிட்டத்தட்ட அதுவொரு கதாபாத்திரம் மாதிரிதான். அந்த வகுப்பில் அழகான பெண்ணின் அப்பாவுடைய ட்ரக் அது. மாற்றம் நாவலின் இறுதியில் தனது பள்ளிக்கூட நண்பனிடம் ‘அந்த சரக்குந்து என்னாச்சு?’ என்று மோ யான் கேட்பார். அதை அவளது அப்பாவிடமிருந்து நிறையப் பணம் கொடுத்து அந்த நண்பன் வாங்கியிருப்பான். ‘Red sorghum படத்துல கடைசிக்காட்சியில் எரியுமே..அதுதான்’ என்பான் நண்பன். படத்தில் அந்த ட்ரக்கைப் பார்த்த போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த நாவலையும் திரைப்படங்களையும்  பார்க்கும் போது அவை உண்டாக்குகிற தூண்டல்கள் அலாதியானவை. நம்முடைய தேடலை விரிவடையச் செய்பவை. மாற்றம் நாவலை வாசித்து Red sorghum படத்தைப் பார்த்துவிட்டு சீன-ஜப்பான் போர் குறித்தான தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். 

‘நம்முடைய உலகம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிறு வட்டத்தைத் தாண்டி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. எதை எங்கே தொடங்குவது என்றுதான் தெரிவதில்லை. யாரேனும் ஒருவர் டார்ச் அடித்துக் காட்ட வேண்டுமல்லவா? அப்படி வெளிச்சம் காட்டுகிற வேலையைப் பயணி மாதிரியான மொழிபெயர்ப்பாளர்களால் செய்ய முடிகிறது.

5 எதிர் சப்தங்கள்:

Uma said...

நான் ஒருமுறை The Rape of Nanking என்பதைப் பிடித்து தேடிக்கொண்டே போய் சீனா-ஜப்பான் போர் பற்றி வாசித்தேன். சீனர்கள் என்றுமே ஜப்பானியர்களை மன்னிக்கமாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள். அவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது.

RAJ said...

அன்புள்ள மணி அவர்களுக்கு வணக்கம் ,
நீங்கள் திரு கி .இராஜநாராயணன் அவர்களின் கதைகளை படித்ததுண்டா .
இல்லையையென்றால் படித்து பார்க்கவும் .அவ்வளவும் கிராமிய மணம்

ந .இராஜூ

அன்பே சிவம் said...

😤

சேக்காளி said...

//தூக்கியில்//
பல்லக்கு தானே?

தமிழ்ப்பூ said...

Excellent