Sep 8, 2017

ஒரு மாணவி

இன்று ஒரு மாணவியிடம் பேச வேண்டியிருந்தது. அவரது ஆசிரியர் முதலில் பேசினார். ‘அட்டகாசமா படிக்கிற பொண்ணு சார்’ என்றார். அரசுப் பள்ளியில் படித்த பெண். ஆயிரத்து அறுபது மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். பிரச்சினை என்னவென்றால் தமிழிலும் ஆங்கிலத்திலும் வாங்கிய மதிப்பெண்கள் மற்ற நான்கு பாடங்களை விடவும் அதிகம். அரசுப்பள்ளி மாணவர்களிடம் இந்தப் பிரச்சினை முக்கியமானது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரே அளவிலான முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள். மொத்த மதிப்பெண்கள் சுளையாக இருக்கும். கட்-ஆஃப் அடி வாங்கியிருக்கும். இவளுக்கும் அதே பிரச்சினைதான். தாழ்த்தப்பட்ட பிரிவில் வருகிறாள். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கிடைத்திருக்கிறது.  

பிரச்சினை என்னவென்றால் வீட்டில் பணம் இல்லை. அப்பா கூலி வேலை. அதுமட்டுமில்லை- அவரிடம் வேறு சில பிரச்சினைகளும் உண்டு. ‘பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கு’ என்பதோடு கையை விரித்துவிட்டார். அவள் அழுது போராடியிருக்கிறாள். வேறு வழியில்லை. அண்ணன் ஒருவன் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறான். ‘வேணும்ன்னா பங்க்குக்கு வேலைக்கு வா’ என்றானாம். அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவ்வளவுதான் அவர்களின் புரிதல். தப்பிப்பதற்காகவாவது கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். தேடி வந்த கல்லூரி நிர்வாகத்தினர் ‘பணம் எல்லாம் வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று சேர்த்திருக்கிறார்கள்.

இன்று காலையில்தான் மாணவியின் ஆசிரியர் பேசினார். அவள் வருந்துவதாகவும் அழுதபடியே கல்லூரிக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார். அனிதாவின் நினைவு வருவதை தவிர்த்திருக்க முடியாது. மாணவியின் எண்ணை வாங்கி அவளிடம் பேசினேன். தைரியமாக இருக்கிறாள். ஆனால் மனவருத்தத்தோடு பேசினாள். எல்லாவற்றையும் விசாரித்து முடித்துவிட்டு ‘நீ திருச்சியில் சேர்ந்துக்க..பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்ற பிறகு அழுவதை நிறுத்தியிருக்கிறாள். அநேகமாக திங்கட்கிழமை திருச்சி கல்லூரியில் சேர்ந்துவிடுவாள் என நினைக்கிறேன். இனி அவளது வீட்டில் இருப்பவர்களிடம் பேசி வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

அவளைக் கல்லூரியில் சேர்த்ததைச் சொல்வதற்காக எழுதவில்லை. 

ஆயிரத்து அறுபது மதிப்பெண்கள் வாங்கியவள் கட்-ஆஃப் குறைவாக வாங்கியிருக்கிறாள். இதே மொத்த மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் வாங்கிய தனியார்/நகர்ப்புற மாணவர்களைத் தெரியும். அவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியல் மட்டும்தான் முக்கியம். தமிழும் ஆங்கிலமும் பிரச்சினை இல்லை. நமது கல்வியைப் பொறுத்த வரையிலும் இத்தகைய சிக்கல்களைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. களநிலவரம் இதுதான் எனவும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. புள்ளி விவரங்களை மட்டுமே முழுமையாக நம்பினால் ஒற்றைப்படையான உரையாடலோடு தேங்கிவிடுவதற்கான சூழல் உருவாகிவிடக் கூடும். 

சில நாட்களுக்கு முன்பாக அருளமுதன் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் நீட் தேர்வு குறித்தான இரண்டு முக்கியமான புள்ளிகளைச் சுட்டிக் காட்டியிருந்தார்-

1) நீட் தேர்வு நிலப்பரப்பு சார்ந்த பொதுத்துவத்தை அழித்துவிடும். சாதி, பணக்காரன், ஏழை என்றில்லை- இது நிச்சயமாக நகர்ப்புற மாணவர்களுக்குத்தான் உதவும். இரண்டாம் கட்ட நகரங்களிலிருந்து எத்தனை மாணவர்களால் ஐஐடி மாதிரியான நிறுவனங்களுக்குள் நுழைய முடிகிறது?

2) மூன்று முறை நீட் தேர்வைத் திரும்பத் திரும்ப எழுத முடியும். அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் சென்னையிலிருந்து மூன்றாவது ஆண்டாகத் தயாரிப்பு செய்து கொண்டு வரும் மாணவனுடன் போட்டியிட வேண்டும். 

அருள் அமுதன் குறிப்பிட்டிருக்கும் இரண்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை. 

நுழைவுத்தேர்வுகள் என்று வந்தால் தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் போட்டியிடுவது கடினம் என்பதும், இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம் என்பது பல வீடுகளிலும் சாத்தியமில்லை என்பதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியவைதான். இந்த மாணவியைக் கூடச் சுட்டிக்காட்டலாம். செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அந்த மாணவி கல்லூரியில் பணம் கட்டியிருக்க வேண்டும். கட்ட முடியவில்லை. கடந்த ஏழெட்டு நாட்களாக வீட்டில் ரணகளம். ‘அம்மாவும் அப்பாவும் சண்டைப் போட்டுட்டே இருந்தாங்க’ என்றாள். எங்கேயாவது போய் சேர்ந்து கொள்ள அவளுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்திலேயே கோயமுத்தூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். பல வீடுகளிலும் இதுதான் நிலைமை. பத்து நாட்கள் பொறுத்துக் கொள்ளவே தயாரில்லை. ‘அடுத்த வருஷம் பரிட்சை எழுதறேன்’ என்று கோரினால் அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிது.

தமிழக கல்விச்சூழல் பற்றிய விவாதங்களில் இத்தகைய மாணவர்களின் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்வுகளை நோக்கி நகர்ந்தால் முழுமையானதாக இருக்கும். 

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Idhu namadhu Manavar/Manavikigallukku mattumthaana?

Anonymous said...

This year statistics below show that Namakkal students lost big in Medical admissions.

http://www.thehindu.com/news/cities/chennai/after-neet-1-in-7-medical-seats-goes-to-chennai/article19634355.ece?homepage=true

I like the fact that Namakkal schools should be banished for life. NEET helps for that. But unfortunately poor students also get affected by NEET.

Other fact is that TN is not sending good amount of students to IIT and NIT. Rajasthan sent about 4300 students whereas TN sent only 795.

https://swarajyamag.com/politics/the-utterly-confounding-and-corrupt-ecosystem-of-medical-education-in-tamil-nadu


Why are we not talking about this one? Its the greed of rich people affecting poor people rather than NEET alone. I am against any of these objective type questions. They don't test for all your abilities.

ISRO is filled with only 2% of people from IITs. But they are doing wonderful job!

Ram said...

>>>> மூன்று முறை நீட் தேர்வைத் திரும்பத் திரும்ப எழுத முடியும். அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன் சென்னையிலிருந்து மூன்றாவது ஆண்டாகத் தயாரிப்பு செய்து கொண்டு வரும் மாணவனுடன் போட்டியிட வேண்டும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் +2 தேர்வு எழுதலாம் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட மறுதேர்வு எழுதும் சென்னை மாணவனுடன் கிராமப்புற மாணவன் போட்டி போட்டாக வேண்டுமென்ற இதற்கு முந்தைய நிலையிலிருந்து, இப்போதுள்ள நீட் நிலை ஒன்றும் வித்தியாசமில்லை என்று நினைக்கிறேன்.

உங்களின் பொதுவான நிலைப்பாடுகளுடன் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே. இருந்தும், சில நேரம் நீங்கள் அளவுக்கு அதிகமாக நகர்ப்புற மாணவர்களுக்கு பொருளாதார, போக்குவரத்து வசதிகள் உள்ளதாக கணிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அம்பத்தூர் மாதிரியான புறநகர் பகுதிகளிலிருந்து டி.நகர் மாதிரியான கோச்சிங் செண்டர் உள்ள பகுதிகளுக்கு வாரம் இருமுறை கடின பாடத்திட்டத்தின் நடுவே போய் வருவதே மிகக் கடினம். மிக மிக அதிகமான அர்ப்பணிப்பு அவசியம் (தொடர்ந்து செய்ய). அவர்கள் பார்வையில், இவ்வாறெல்லாம் குறிக்கோளுக்காக பாடுபடும் எனக்குக் கிடைக்காத அந்த சீட்டுகள் மாநிலப் பாடத்திட்ட +2 பாடத்தை இருவருடங்களாக மனனம் செய்து அச்சு பிறழாமல் எழுதிக்கொட்டி, அதைத் தவிர வேறெதுவும் செய்யாத இன்னொருவருக்கு கிடைப்பது வஞ்சகம் என்பதே.

Anonymous said...

We have to come up with a plan to provide free NEET coaching to poor students, let me know if there are any such a plan.

சேக்காளி said...

//‘நீ திருச்சியில் சேர்ந்துக்க..பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்ற பிறகு அழுவதை நிறுத்தியிருக்கிறாள். அநேகமாக திங்கட்கிழமை திருச்சி கல்லூரியில் சேர்ந்துவிடுவாள் என நினைக்கிறேன்//
அண்ணனுக்கு ஒரு "நிஜாம் பாக்கு" பார்சேல்ல்ல்ல்ல்.

Anonymous said...

ராசிபுரம் SRV மற்றும் பாவை, திருச்செங்கோடு விகாஸ் பள்ளிகள் தனியார் மையத்துடன் இணைந்து ரூ 55000 முதல் ரூ150000 நீட் தனி பயிற்சிகளை வகுப்பு நேரத்திலேயே எடுக்க ஆரம்பித்தது விட்டார்கள். அடுத்த வருடம் தமிழக பிராய்லர் பள்ளி மாணவர்கள் நீட் மூலம் இந்திய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேர்வார்கள்.

saravanan said...

பெயில் ஆனவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை திரும்பவும் எழுதலாம். ஆனால் இம்ப்ரூவ் மெண்ட் தேர்வை எழுத முடியாது. ஒரு முறை மட்டுமே பிளஸ் டூ எழுத முடியும்.