ஒரு சமயம் மதுரை கோவிலில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த போது ஆசிரியை ஒருவர் அறிமுகமானார். தமிழாசிரியை. சனி, ஞாயிறுகளில் மட்டும் கோவிலில் வழிகாட்டியாகச் செயல்படுவார். வெளிநாட்டுக்காரர்களுக்கு அவர் விளக்கிக் கொண்டிருந்த போது ஒட்டிக் கொண்டேன். கோவில் பற்றியும் அதன் கட்டிடக் கலை பற்றியும் ஏகப்பட்ட விஷயங்களைச் சொன்னார். ஒரு கோபுரத்தைப் பார்க்கும் போதும் கோவிலில் அலையும் போதும் அதில் நமக்குத் தெரியாத ஆயிரம் நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதைப் புரிய வைத்தவர் அந்த ஆசிரியை. அதுவரை ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பதற்கு மேல் ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் ஒன்றும் தெரியாதுதான் என்றாலும் உண்மையில் கோபுர தரிசனம் என்பது கோடி நுணுக்கங்கள் என்கிற அளவுக்கு மூளை விஸ்தாரமாகியிருக்கிறது.
கோவில் கட்டிடக்கலைகள் பற்றி ஒன்றிரண்டு புத்தகங்களை வாசித்திருக்கிறேன். ஆனால் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரிதான் இருக்கும். ‘எப்படிடா அந்தக் கல்லைக் கொண்டு போய் உச்சாணில வெச்சான்’ என்கிற அளவில்தான் ஆச்சரியப்படுவதோடு நிறுத்திக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. உண்மையில் புத்தகத்தை வாசித்து கோவில்களின் கட்டிடக் கலைச் சிறப்புகளைப் புரிந்து கொள்வதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லை. அங்கேயே அலைய வேண்டும் அல்லது அணு அணுவாக ஆராய வேண்டும். அதெல்லாம் சாத்தியமில்லையென்றால் யாரேனும் விஷயம் தெரிந்தவர்கள் பேசினால் காதுகளைத் திறந்து வைக்கலாம்.
அப்படியான ஒரு நிகழ்ச்சியை வருகிற சனி, ஞாயிறுகளில் ஓசூரில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இரண்டு நாட்கள் கருத்தரங்கு. தென்னிந்தியக் கட்டிடக் கலைகள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கிறார்கள். களப்பயணம், ஹொய்சாளர் கட்டிடங்களின் பாணி, கலிங்கர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என வெவ்வேறு காலகட்டத்தின் கட்டிடக்கலைகள் குறித்தான தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.
கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். கடைசி நேரத்தில் ஏதாவது வேலை வந்து சேரக் கூடாது என்று நிலவணிந்த சிவனை வேண்டிக் கொள்கிறேன். சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்கான களப்பயணமும் கருத்தரங்கின் திட்டத்தில் இருக்கிறதாம்.
விவரம் தெரிந்தவர்களுக்கு களத்தை விரிவாக்கக் கூடும். என்னை மாதிரியான அரை மண்டைகளுக்கு இத்தகைய கருத்தரங்குகள் கலை சார்ந்த கண்களைத் திறந்துவிட்டுவிடும். ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி அவர்களிடம் சொல்லி ஓர் இருக்கையை பதிவு செய்து வைத்திருக்க்கிறேன்.
விவரம் தெரிந்தவர்களுக்கு களத்தை விரிவாக்கக் கூடும். என்னை மாதிரியான அரை மண்டைகளுக்கு இத்தகைய கருத்தரங்குகள் கலை சார்ந்த கண்களைத் திறந்துவிட்டுவிடும். ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி அவர்களிடம் சொல்லி ஓர் இருக்கையை பதிவு செய்து வைத்திருக்க்கிறேன்.
‘ச்சே எப்படி சிலையை வடிச்சிருக்காங்க?’ என்பதைத் தாண்டி இருக்கக் கூடிய நுணுக்கங்களைக் கற்றுத் தரக் கூடிய பேரறிவாளர்களை ஒரேயிடத்தில் சந்திப்பதையும் விவாதிப்பதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். துக்கினியூண்டையாவது கற்றுக் கொண்டு வந்து அடுத்த வாரத்தில் கொஞ்சம் பந்தா காட்டுகிறேன்.
மேலதிக விவரங்கள் தேவைப்படுகிறவர்கள் திரு.சுகவனமுருகனைத் தொடர்பு கொள்ளலாம்.
98426 47101
90421 99667
3 எதிர் சப்தங்கள்:
முடிந்தால் காணொளி பதிவிடவும்.
to the organizers,must upload video,please,i'm waiting for this type of programm for long time....but not possible to attend this programm, please must upload videos
√
Post a Comment