Sep 18, 2017

கேள்வியும் பதிலும்

ரா.மணிகண்டன் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும்?
இரா.மணிகண்டனா? அவர் இப்பொழுது குமுதத்தில் ஆசிரியராக இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்தால் குமுதம் வேறொருவரை வேலைக்கு எடுக்கும்.

வழுக்கை விழுந்தவர்களை பெண்கள் நிராகரிக்கிறார்களே அவர்களுக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்களேன்?
நிராகரிக்கரிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியாது. அடிக்க வந்துவிடுவார்கள். நிராகரிக்கப்படுகிறவர்களே! ஆளுக்கு ஒரு விக் வைத்துக் கொள்வோம்.

தற்போதைய சூழலில் ஏதாவது வெறுமை வந்தது உண்டா! எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் ஏதாவது?
பயமும் வெறுமையும்தான் வாழ்க்கையின் மீதான பிடிப்பை நீடிக்கச் செய்கின்றன. காரணமேயில்லாமல் வெறுமையும் பயமும் பீடித்துக் கொள்ளும். அந்தத் தருணங்களில் மனதுக்கு நெருக்கமானவர்களை அலைபேசியில் அழைத்துப் பேசுவேன்.

மனம் சோர்ந்து போகும் சமயத்தில் அதிலிருந்து மீண்டு வர என்ன செய்வீர்கள்?
மேலேயிருக்கும் கேள்விக்கான பதிலின் கடைசி வரியைப் படிக்கவும். 

சராசரி மதிப்பெண் பெற்று, கிடைக்கும் வேலை செய்து பொழுதும் வாழ்வும் போகுதே. ஏன் பெரிய வெற்றிகளில் மனம் செல்வதில்லை?
மாணவர்களிடம் பேசும் போது ‘நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என்ற வரியை அவ்வப்பொழுது நினைத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. நமக்கொரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள சுலபமான வழி அது. நாற்பது வயதைத் தாண்டியவர்களாக இருந்தால் ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பேன். இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டிய பருவம் அது. வயதுக்கேற்பதான் வாழ்க்கையும் ஓட்டமும் இருக்க வேண்டும்.

உமக்கு தூக்கமே வராதா? ராத்திரி 3 மணிக்கும் தூங்க மாட்டீரா?
கடந்த வாரம் அதிகாலை 3 மணிக்கு ஒரு பதிவைப் பதிப்பித்த போது அதிர்ச்சியடைந்த ஒருவர் கேட்ட கேள்வி இது. என்ன பதில் சொல்வதென்று ஒரு மணி நேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Why all the amma's are always support and special care to 1st son. Is it true? If yes what you get from amma (உங்க தம்பிக்கு இல்லாம உங்களுக்கு ஸ்பெஷலா கிடைச்சது)
இரண்டாவது படிக்கும் போது தலையில் நறுக் நறுக்கென்று கொட்டு கிடைத்தது. இப்பொழுது நிறைய திட்டு கிடைக்கிறது. இவை தவிர வேறு எதுவும் ஸ்பெஷலாகக் கிடைத்ததாக எவ்வளவுதான் யோசித்தாலும் ஞாபகத்தில் வரவில்லை.

என்னிடம் பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறிவிட்டு, இறங்குகையில் ஒரு நன்றி கூட சொல்லாமல் ஏதோ சொந்த வண்டிக்கு ட்ரைவர் வைத்துக்கோண்டு போவது போல் போவான்கள். கொலைவெறி தலைக்கேறி ரத்தக்கொதிப்பில் நவத்துவாரங்களிலும் சிவப்பு எட்டிப்பார்க்கும். இந்த சில்லரை விஷயத்துக்கே இப்படி... நீங்களோ லட்சக்கணக்கில் உதவிகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக தானம் கொடுத்த மாட்டை எவனாவது பல்லை ஆட்டிப்பார்த்து முகம் சுளித்திருப்பான், அதை நீங்களும் நாகரீகம் கருதி எழுதாமல் விட்டிருப்பீர்கள். அப்படியான படிக்கும்போதே BPஐ எகிறவைக்கும் சம்பவம் பற்றி சொல்லுங்கள்.
தென் தமிழகத்து ஆசிரியர் ஒருவர்- தன்னை வெகுவாக பிரஸ்தாபித்துக் கொள்வார். தன்னுடைய பிரதாபங்களை மின்னஞ்சலில் அனுப்புவார். பிறகு அதையே வாட்ஸப்பில் அனுப்புவார். அதே செய்திகளை செய்தித்தாளில் வர வைத்து அந்த பேப்பர் கட்டிங்கையும் அனுப்புவார். அவர் சில உதவிகளைக் கேட்டிருந்தார். முகத்தில் அடித்தாற்போல இல்லையென்று சொல்லிப் பழகாத காலம் அது. ‘பரிசீலித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லித் துண்டித்திருந்தேன். சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பரிடம் பேசும் போது ‘அவனா? செய்யறேன்னு சொல்லுவான்..செய்யமாட்டான்’ என்று ஒருமையில் திட்டினாராம். இப்படி நிறையச் சம்பவங்கள். பலருக்கும் அவர்கள் உதவி கேட்கும் போது கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால்  ‘நான் கேட்டு இல்லைன்னுட்டான்’ என்று திட்டுவார்கள். நம்மூரில்தான் தம்மை மட்டுமே பெரிய ஆளாக நினைத்துக் கொள்கிற மனநிலையைக் கொண்டவர்கள் அதிகமாயிற்றே! இதையெல்லாம் கேள்விப்படும் போது அயற்சியாக இருக்கும். நம்முடைய பணத்தையா கொடுக்கிறோம்? அடுத்தவர்களின் பணம்தானே? இதையெல்லாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

Sarahahவில் கேட்கப்பட்டவை.

4 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

7வது கேள்விக்கு மட்டும்.! எனக்கு பதில் தெரியு மணி. சத்தியமா உமக்கு பதில் தெரியாதுன்றதும் எனக்கு தெரியும்.
நீர் கொடுத்து வச்சது அவ்(LOVE)தான்.
க.க..க...கடைசி புள்ளயா பொறக்க (கடவுளுக்கே லஞ்சம்) குடுத்து வச்சிருக்கனும்.😢

அன்பே சிவம் said...

"நிராகரிக்கரிக்கிறவர்களுக்கு"
உம்மிடம் ரொம்ப எதிர்பார்கிறோம்.

சேக்காளி said...

// அதிகாலை 3 மணிக்கு ஒரு பதிவைப் பதிப்பித்த போது அதிர்ச்சியடைந்த ஒருவர் கேட்ட கேள்வி இது. என்ன பதில் சொல்வதென்று ஒரு மணி நேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்//
அப்ப நாலு மணி வரைக்கும் தூங்கல.

Anonymous said...

உள்ள(த்)தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்த தடா.

அன்பே சிவம்.