‘எப்படி பல் வெளக்குவீங்க?’ இப்படித்தான் அந்தப் பெண்மணி கேட்டார். பல் மருத்துவர். ஒவ்வொரு மாதமும் யாராவது அலுவலகத்தில் முகாம் போட்டுவிடுகிறார்கள். கண் மருத்துவர்கள், காது மருத்துவர்கள் என்று வந்தமர்ந்து பரிசோதனைச் செய்துவிட்டு ‘இதைச் செய்ய பரிந்துரைக்கிறோம்’ என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். இன்னமும் மசாஜ் பார்லர்கள் ஆட்கள் மட்டும்தான் பாக்கி. மருத்துவர்களின் வரிசையில் பல் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு சோனாலி என்று பெயர். பெண்ணாக இருந்தால் பெயரைக் கேட்டுவிட வேண்டுமல்லவா?
‘ப்ரஷ்லதான் டாக்டர்’
‘மேல இருந்து கீழாகவா? பக்கவாட்டிலா?’
விட்டால் பல்லுக்கு ஒரு கேள்வி கேட்பார் போலிருந்தது. பொறுமையாக பதில் சொல்லி வைத்தேன். வெளியிடமாக இருந்தால் லோலாயமாக பதில் சொல்லலாம். அலுவலகத்தில் என்றால் போட்டுக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். டெல் நிறுவனத்தில் பணியாற்றிய போது இப்படி ஒரு மருத்துவரிடம் எடக்கு மடக்காகப் பேச - அவர் ஒரு வடகிழக்கு மாநில மருத்துவர்- மனித வளத்துறையில் போட்டுக் கொடுத்துவிட்டார். மின்னஞ்சலாகவே அனுப்பியிருந்தார். அவர் மாட்டிவிட்ட விவகாரம் எனக்குத் தெரியாது.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து காலையில் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே மேலாளர் அழைத்து ‘எப்போ வருவ?’ என்றார். ஒரு மணி நேரம் ஆகும் எனச் சொன்னதற்கு மனித வளத்துறை ஆட்கள் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்.
சோலி சுத்தம். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? அப்படிப் பார்க்க விரும்பினாலே வேலையை விட்டுத் தூக்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். விரல்களில் நடுக்கம் பரவியிருந்தது. ‘என்ன காரணம்?’ என்று மேலாளரிடம் கேட்டதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. ‘கிளம்பி வா’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். எனக்கு முன்பாகவே மேலாளரையெல்லாம் விசாரித்து வைத்திருந்தார்கள்.
அறைக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியே ‘டாக்டர்கிட்ட என்ன பேசுன?’ என்பதுதான். பொய் சொல்கிறான் என்று தெரிந்தால் குத்திவிடுவார்கள் என்று தெரியும். அச்சுபிசகாமல் சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு ‘இனி இப்படி லோலாயம் பண்ணுன....’ என்ற எச்சரிக்கையுடன் விட்டுவிட்டார்கள். அதைக் கதையாகவே எழுதலாம். எழுத வேண்டும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அலுவலக வளாகத்தில் சுண்டெலி மாதிரி நடந்து கொள்வேன். இருக்கிற இடம் தெரியாது.
அறைக்குள் நுழைந்தவுடன் முதல் கேள்வியே ‘டாக்டர்கிட்ட என்ன பேசுன?’ என்பதுதான். பொய் சொல்கிறான் என்று தெரிந்தால் குத்திவிடுவார்கள் என்று தெரியும். அச்சுபிசகாமல் சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு ‘இனி இப்படி லோலாயம் பண்ணுன....’ என்ற எச்சரிக்கையுடன் விட்டுவிட்டார்கள். அதைக் கதையாகவே எழுதலாம். எழுத வேண்டும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அலுவலக வளாகத்தில் சுண்டெலி மாதிரி நடந்து கொள்வேன். இருக்கிற இடம் தெரியாது.
சோனாலியிடமும் அப்படி நடந்து கொள்வதுதான் நல்லது. பதில்களையெல்லாம் கேட்டுக் கொண்டு ‘உங்க பல்லை சுத்தம் பண்ணனும்...பண்ணிடலாமா?’ என்றார். பல் துலக்கிவிடுவதற்குக் கூட யாராவது ஆள் வைத்துக் கொள்வார்களா? நம்மை மாதிரியான பெரிய மனுஷன் என்றால் அப்படித்தான். விஜய், அஜீத், சூர்யாவுக்கு அப்புறம் நாம்தானே?
‘வலிக்குமா டாக்டர்?’
‘ச்சே..ச்சே..பத்து நிமிஷம் கூட ஆகாது’ என்றார். சரி என்று சொல்லிவிட்டேன். முகமூடியொன்றை அணிந்து கொண்டு குத்திக் குடைவார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. வாகாகப் படுக்க வைத்து இரண்டு மூன்று சாதனங்களை உள்ளே விட்டு... அட சாமீ! புஸ்ஸென்று நீரைப் பீய்ச்சியடிக்கும் ஒரு கம்பியை வைத்துக் கொண்டு குடாய்ந்துவிட்டார் குடாய்ந்து. பேசவும் முடியவில்லை. கத்தவும் முடியவில்லை. கையை உயர்த்தும் போதெல்லாம் ‘ஆச்சு ஆச்சு’ என்று சொல்லியபடியே சுரண்டி ஒவ்வொரு பல்லாக சுளுக்கெடுத்துவிட்டார்.
இடையிடையே எச்சில் துப்ப மட்டும் அனுமதித்தார். ரத்த ரத்தமாக வந்தது. பிறந்ததிலிருந்தே பல் துலக்காமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு சுரண்ட வேண்டியதில்லையே டாக்டர் என்று மனதுக்குள் நினைத்தபடியே நாற்காலியின் கைப்பிடியை இறுகப்பற்றிக் கிடந்தேன். வலியையும் மீறி எனக்கு ஒரே நம்பிக்கைதான். பற்கள் எப்படியும் ஜொலி ஜொலித்து சிநேகாவின் பற்கள் மாதிரி பளீரென இருக்கும் என்ற நப்பாசை.
வெளியே வந்தவுடன் வாய் நிறைய புன்னகையுடன் ஒரு நிழற்படத்தை எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸப் என அத்தனை இடங்களிலும் படத்தை மாற்றிவிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை. முகம் தெரிகிறதோ இல்லையோ- நிழற்படத்தில் பற்கள் தெரிய வேண்டும். கடைசியில் கண்ணாடியைக் காட்டினார். ஆங்காங்கே ரத்தம் வந்த சிவப்புப் புள்ளிகள் தெரிந்தன.
‘என்ன டாக்டர்..கலர் கோலம் போட்ட மாதிரி இருக்கு?’ என்று கேட்டதற்கு சிரித்தார்.
‘அந்த இடத்தில் எல்லாம் ஈறு பலவீனமாக இருக்குன்னு அர்த்தம்’ என்றார். கத்தியை வைத்துக் குத்தினால் உடலில் எல்லா இடமுமே பலவீனமாகத்தானே இருக்கும்? இப்பொழுதும் அந்த வடகிழக்கு மருத்துவச்சிதான் நினைவுக்கு வந்தாள். அடங்கிக் கொண்டேன்.
அப்பா இருந்தவரைக்கும் வீட்டில் எப்பொழுதும் கருவேலம் குச்சி ஒரு கட்டு வைத்திருப்பார். ஊருக்குப் போகும் போதெல்லாம் வண்டியை எடுத்துக் கொண்டு போய் அளவான நீளத்தில் வெட்டி முட்களை நீக்கி ஒரு கட்டுத் தயார் செய்து எடுத்து வருவார். அவ்வப்பொழுது அதில் பல் துலக்குவார். ஆலம் விழுதைப் பார்க்கும் போதெல்லாம் கிள்ளி மென்று துப்புவார். அவருக்கு மருத்துவம் எதுவும் தெரியாது. யாரோ எப்பொழுதோ அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். கடைசி வரைக்கும் அதைப் பின்பற்றினார். வறுத்த பட்டாணியை கடக் முடக்கென்று கடித்துத் துப்ப அவரால் முடிந்தது. கரும்பு கடிக்க முடிந்தது.
எனக்கு அதற்கெல்லாம் நேரமும் இல்லை. செய்கிற முனைப்பும் இல்லை. பல் இருக்கும் வரைக்கும் பக்கோடா தின்ன வேண்டியது. உதிர்ந்துவிட்டால் பக்கோடா தின்பதை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
அறுநூற்றைம்பது ரூபாய் கேட்டார்கள். சுத்தம் செய்ததற்கான தொகை. இருப்பதிலேயே விலை உயர்ந்த ப்ரஷ் வாங்கினாலும் கூட பதின்மூன்று ப்ரஷ்கள் வாங்கி அவை தேயும் வரைக்கும் தேய்த்துத் தள்ளியிருக்கலாம். கொடுத்த காசுக்கு ஒரு கேள்வியாவது கேட்டு விட வேண்டும் என ‘பல்லு வெள்ளையாகலையே’ என்றேன். சிநேகா அளவுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் நயன்தாரா? ம்ஹூம்.
‘அதுக்கு ப்ளீச்சிங் பண்ணனும்’ என்றார். பல் துலக்கவே அறுநூற்றைம்பது ரூபாய். பட்டி பார்த்து வெள்ளைப் பெயிண்ட் அடிக்க எவ்வளவு கேட்பார்களோ என்று தெரியவில்லை. பணத்தை வாங்கும் போது ‘ப்ளீச்சிங் பண்ணனுமா?’ என்றார். வீட்டிலேயே ப்ளீச்சிங் பவுடர் இருக்கிறது. நானே பார்த்துக் கொள்வதாக முடிவு செய்து கொண்டு ‘மிக்க நன்றி டாக்டர்’ என்று வெளியே வந்துவிட்டேன்.
8 எதிர் சப்தங்கள்:
Super....
// ‘ப்ளீச்சிங் பண்ணனுமா?’ என்றார். வீட்டிலேயே ப்ளீச்சிங் பவுடர் இருக்கிறது. நானே பார்த்துக் கொள்வதாக முடிவு செய்து கொண்டு ‘மிக்க நன்றி டாக்டர்’ என்று வெளியே வந்துவிட்டேன்.//
வீட்டுக்கு வந்து ப்ளீச்சிங் பண்ணிட்டீங்களா?
தலையும் பளிச்
பல்லும் பளிச்.
கலக்குறீங்க.
பல் ஏதும் சிதறலியே... ! எனக்கு அப்படி செய்யும்பொழுது உட்பக்கமா ஒரு பல்லுல இலேசா பல் சிதறிடுச்சி. கேட்டதுக்கு அது பலவீனமா இருந்ததாலே அப்படி ஆகிடுச்சுன்னுட்டாங்க. அவ்வ்...!
வருடத்திற்கு ஒரு தடவையாவது பற்களை சுத்தம் செய்யணும். its called tartar buildup.
புரியுது சார். நீங்க எங்கள மாதிரி இலவட்ட பசங்களுக்கு சொல்ரது புரியுது சார். எவ்வலவு அழகா இருந்தாலும் பல் டாக்டர் கிட்ட மட்டும் பல்ல காட்ட கூடாது.
பாட்டி வைத்தியங்களை விட பேத்திகளின் வைத்தியத்திற்கு மவுசு மவுத்தும் அதிகம் போல
எல்லாத்துக்கும் இந்த மகேஷுப் பய தேன் காரணம் BIG பாஸூ. இவ்(LOVE) வேல
பாக்குற உங்களையும், உங்கள உடுங்க. என்னை யுமே கண்டுக்கற தில்ல. தமிழ்நாட்ல இல்லன்ற தைரியம். அவனுக்கு புத்தி வர அவங் கூர திருப்பி வாங்கிடனும். இதுக்கும் வலி இருந்தாலும், எதுனா ஒரு வழி கண்டு புடிங்க BIG பாஸூ.
Post a Comment