Sep 18, 2017

குஞ்சாமணி பண்டிதர்

பண்டிதர் என்றவுடன் தமிழ் பண்டிதர் போலிருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு அவர் எந்தவிதத்திலும் ஜவாப்தாரி ஆக மாட்டார். அரசியல் பண்டிதர். ‘அது என்ன பண்டிதர் ஜவகர்லால் நேரு? அவருதான் பண்டிதரா? எங்களுக்கும்தான் அரசியல் தெரியும்’ என்று அவர் பிள்ளையார் கோவில் அரசமரத்தடியில் அமர்ந்து அறிவித்துக் கொண்டார். அது அந்தக் காலம். அந்தக் காலம் என்றால் அண்ணாதுரை கட்சி தொடங்கி காமராஜர் தோற்கத் தொடங்குவதற்கு முன்பிருந்த காலம். 

தேர்தல் சமயத்தில் ராத்திரியோடு ராத்திரியாக அண்ணாத்துரையே நேரடியாக ஆள் அனுப்பி குஞ்சாமணி பண்டிதரிடம் பேசி வரச் சொன்னதாகக் கூட ஊருக்குள் பேச்சு உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிக் கேட்டால் பண்டிதர் ஏற்கவும் மாட்டார். மறுக்கவும் மாட்டார். ‘அண்ணாத்துரையும் தெரிஞ்சவந்தான் காமராசனும் தெரிஞ்சவந்தான்...ஒருத்தனுக்கு வேண்டி இன்னொருத்தனை விட்டுக் கொடுக்க முடியுமா? தில் இருக்கிறவன் ஜெயிச்சுக்க வேண்டியதுதான்’ என்று பண்டிதர் பெருந்தன்மையாகப் பேசும் போது மெச்சாத ஆட்களே இல்லை.

எப்பொழுதுமே அரச மரத்தடிதான் பண்டிதருக்குக் காணி. திருமணம் செய்து கொள்ளாத தனிக்கட்டை. அப்பன் கட்டி வைத்திருந்த மண் சுவர் வீடு ஒன்றிருந்தது. முன்பக்கமாக தடுத்து விட்டிருந்தார்கள். நாற்பத்தேழு வீடுகளிருந்த அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லை.  பீடி வாங்கக் கூட பக்கத்து ஊருக்குத்தான் போக வேண்டும்.

நெல்லை நாடார் ஒருவர் வந்து ‘ உங்க வீட்டு முன்பக்கத்துல கடை போட்டுக்கட்டுமா?’ என்றார். நாடார் ஊருக்குப் புதிது. உற்சாகமாக ‘உங்களுக்கும் காமராசருக்கும் சிநேகிதம் உண்டுல்லா?’ என்றார்.

‘அரசியல் வேற.. வேவாரம் வேற... ரெண்டையும் சேர்த்து முடிச்சுப் போடாத.. இங்க பாரு! நான் தனியாளு...எனக்களவா சோறாக்கிக்குவேன்.. வேணுங்குற சாமானத்தையெல்லாம் உங்கடைலதான் எடுத்துக்குவேன்..சரின்னா சொல்லு’ என்றார்.

சற்றே பயந்தாலும் நாற்பத்தேழு வீட்டு வணிகம் நாடாருக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஒத்துக் கொண்டார். பண்டிதரின் வார்த்தை சுத்தம். எந்த அத்துமீறலும் செய்ததில்லை. வியாபாரம் செழிக்கச் செழிக்க கடைச் சாமான் போக மாதம் பதினைந்து ரூபாயைப் பண்டிதரின் கைச் செலவுக்கும் கொடுக்கத் தொடங்கினார் நாடார். 

குஞ்சாமணி என்பது இந்த இடத்தில் முக்கியமான பெயர். ‘அது என்ன குஞ்சாமணி?’ என்ற கேள்விதான் உங்களை இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது என்பது தெரியும். காலையில் குளித்து முடித்து ரசமோ வெஞ்சனமோ வைத்துத் தின்றுவிட்டு வெளுத்து மடித்து வைத்திருக்கும் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வந்து அரசமரத்தடியில் படுத்தால்- படுக்கும் தோரணை முக்கியம்- இரு கைகளையும் கோர்த்துத் தலைக்குக் கீழாக வைத்துக் கொண்டு இடது கால் மீது வலது காலைப் போட்டபடி உறங்கியிருப்பார். ‘உச்சிச் சூடு பொச்சுல எறங்குற வரைக்கும் பண்டிதருக்குத் தூக்கம்தான்’ என்றுதான் பெண்கள் கேலி பேசுவார்கள். அவர் உறங்கும் தோரணையை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தால் அவருடையை பெயருக்கான காரணம் தெரிந்திருக்குமே. அதேதான். யார் வைத்த பெயரோ தெரியவில்லை. அதுவே நிலைத்துவிட்டது.

மாலை வேளைகளில்தான் குஞ்சாமணி பண்டிதரின் சபை கூடும். உருமால்களும் பீடிகளும் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். பண்டிதருக்கு பீடி சிகரெட் பழக்கமில்லை. அடுத்தவர்கள் புகைப்பதைத் தடுப்பதில்லை. திண்ணைப் பள்ளிக் கூட படிப்பும் செய்தித்தாள் வாசிப்பும் ரேடியோ செய்திகளும் பண்டிதரை பேச வைத்திருந்தன. சுற்றிலும் இருப்பவர்கள் அதிசயமாகக் கேட்பார்கள். சரியோ தவறோ- அவர் பேசுவார். மற்றவர்கள் கேட்க வேண்டும். எதிர்த்துப் பேசினால் ‘எந்திரிச்சுப் போடா டேய்...’ என்று துரத்தியடித்துவிடுவார். அதில் ஒரு செண்டிமெண்ட் உருவாகியிருந்தது. அவர் யாரையெல்லாம் அடித்துத் துரத்துகிறாரோ அவர்கள் பெரிய ஆள் ஆகிக் கொண்டிருந்தார்கள். 

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலம் அது. உள்ளூர் பொடியனொருவன் ஆட்களைத் திரட்டிப் போய் இரட்டை இலையில் ஐக்கியமாகியிருந்தான். அடுத்து வந்த தேர்தலில் அவனுக்குத்தான் தொகுதியை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். தனக்குத் தெரிந்த அரசியல் சூத்திரங்களையெல்லாம் பெருக்கி வகுத்து அவன் தோற்றுவிடுவான் என்றுதான் பண்டிதர் முடிவு கட்டியிருந்தார். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. ‘நம்மூர்க்காரன் ஜெயிச்சா சந்தோஷமப்பா’ என்று மற்றவர்களிடம் பேசினார். எம்.ஜி.ஆரின் தகதகப்பும் ஈர்ப்பும் பண்டிதரின் கணிப்பை தவிடு பொடியாக்கியிருந்தது. பொடியனாக இருந்தவன் எம்.எல்.ஏவாக ஆனார். அவனைத் தனது சபையிலிருந்து துரத்தியடித்தது பண்டிதருக்கு நினைவுக்கு வந்து போனது.

பதவியேற்பை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து ஊர் திரும்பும் போது எம்.எல்.ஏவுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள். அது எம்.எல்.ஏவே தனக்காக நடத்திக் கொள்கிற கூட்டம் என்பது பண்டிதரின் அனுமானம். 

‘கூட்டத்துல நீங்க பேசோணும்ன்னு அண்ணன் ஆசைப்படுறாரு’ என்று ஒருத்தன் வந்து பண்டிதரிடம் கேட்டான்.

‘வக்காரோலி அவன் வந்து கேட்க மாட்டானா? ஆள் அனுப்பிக் கேட்கிறாம்பாரு...’ என்று நினைத்துக் கொண்டவர் ‘அதுக்கென்ன அப்புனு..வந்து பேசறேன் போ’ என்று சொல்லியனுப்பிவிட்டு மேடையேறியிருந்தார். அதே வெற்றுடம்பும் அதை மறைக்க ஒரு துண்டும் தோளில் கிடந்தன.

புது எம்.எல்.ஏ பந்தா காட்டத் தொடங்கியிருந்த தருணம் அது. அவர் மேடைக்கு வருவதற்கு முன்பாகவே ‘இப்பொழுது...நம்மூர் அரசியல் மாமேதை குஞ்சாமணி பண்டிதர் அவர்கள் அண்ணனை வாழ்த்திப் பேசுவார்’ என்று அறிவித்து பண்டிதரைப் பேச அழைத்தார்கள். தொண்டையைக் கனைத்துக் கொண்டு ‘நம்ம பையன் ஜெயிச்சுட்டான்.. சந்தோஷம்... நெம்ப சந்தோஷமப்பா... நான் திண்ணையைப் புடிச்சு நடக்கிறப்போ என் சுன்...’ என்று பேச்சை வளர்க்க வளர்க்க கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் வேண்டுமென்று அப்படிப் பேசவில்லை என்பது அவரைப் புரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா?

குசலமூட்டியொருவன் எம்.எல்.ஏ மேடையேறுவதற்கு முன்பாகவே பண்டிதரின் பேச்சை வரி வரியாக போட்டுக் கொடுத்துவிட்டான். ‘நெசமாவே அதைப் புடிச்சு நடந்தேன்னு பேசுனானா கெழவன்?’ என்றான். அவன் ஆமாம் என்று தலையை ஆட்டவும் ‘இந்ந்ந்தததத குஞ்சாமணிய....’ என்று கருவிக் கொண்டான். ‘பொம்பளைங்க எல்லாம் காதை மூடிட்டாங்கண்ணா’ என்று குசலமூட்டி கொஞ்சம் எண்ணெய்யையும் ஊற்றினான். நிகழ்ச்சி முழுக்கவும் எம்.எல்.ஏவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன. ஆனால் பண்டிதரை என்ன செய்ய முடியும்? கத்தியைத் தூக்கிக் கொண்டு குத்தச் சென்றால் கூட ‘தம்பீ..இவடத்தை குத்துனீன்னா சீக்கிரம் உசுரு போயிரும் கண்ணு’ என்று வாகான இடத்தைக் காட்டுவார்.

அரசியலில் பண்டிதரால் தனக்கு எந்தச் சலனத்தையும் உண்டாக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள எம்.எல்.ஏவுக்கு வெகு காலம் பிடிக்கவில்லை. பண்டிதரின் அரசியல் வேறு. எம்.எல்.ஏவின் அரசியல் வேறாக இருந்தன. ஐம்பதும் நூறுமான தாள்கள்தான் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை எம்.எல்.ஏ புரிந்து கொண்ட அளவுக்கு பண்டிதர் புரிந்து கொள்ளவில்லை. 

‘எல்லாம் மாறிடுச்சு’ என்பது பண்டிதரின் புலம்பலாகியிருந்தது. வெற்றுப் புலம்பல். காலமும் உலகமும் ஓடுகிற வேகத்தில் ஓட முடியாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் பற்றிக் கொள்கிற இரண்டு சொற்கள் அவை. அவற்றையேதான் பண்டிதரும் பற்றியிருந்தார். ‘நீங்க எலெக்‌ஷன்ல நிக்கலாம்ல’ என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் யாராவது கேட்டதுண்டு. ‘அந்தக் கருமாந்திரம் நமக்கெதுக்கு?’என்று கேட்டு அவர் சிரித்த தருணங்கள் அநேகம். எப்பொழுதுமே தான் பதவிக்கு வர வேண்டும் என அவர் விரும்பியதில்லை. தன்னைவிடவும் நல்லவர்கள் இருப்பதாக நம்பியிருந்தார். அவர்கள் வென்று பதவிக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. 

‘இவனே ஜெயிச்சுட்டு இருக்கிறான்... வேற யாராச்சுக்கும் உடுலாம்ல?’ என்கிற இடத்துக்குப் பண்டிதர் வந்து சேர்ந்திருந்தார். காலம் ஓட ஒட எம்.எல்.ஏ அமைச்சரானார். அல்லக்கைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. தொகுதிக்குள் சைரன் வைத்த காரில் வரும் போதும் போகும் போதும் அரசமரத்தடியும் பண்டிதரும் அமைச்சரின் கண்களில் படாமல் இல்லை. ஆனால் இறங்கிப் பேச வேண்டும் என்றெல்லாம் அமைச்சர் நினைத்ததில்லை. அமைச்சரின் வண்டி கடக்கும் போதும் கூட பண்டிதரும் அதே தோரணையில்தான் படுத்திருப்பார்.

கட்சியின் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் ‘பண்டிதர் மாதிரி ஓர் ஆள் ஊர் ஊருக்கு வேணும்’ என்று அமைச்சர் பேசியதாகப் பண்டிதரிடம் சொன்ன போது பண்டிதர் வறப்புன்னகையை உதிர்த்தார். கம்யூனிசம் தெரியுமோ இல்லையோ- மார்க்ஸ் என்றும் ஜென்னியென்றும் அமைச்சர் பேசுவதெல்லாம் பண்டிதரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். அம்பேத்கரும், பெரியாரும் யாரென்று சொல்லிக் கொடுத்ததும் பண்டிதர்தான். இருந்துவிட்டுப் போகட்டும். பழைய பல்லவியையும் பாட்டையும் யார் கேட்கிறார்கள்? பண்டிதரின் அரசியல் சாணக்கியத்தனம் செல்லாகாசாகிவிட்டன. முன்பு போல அவரது சபைக்கும் யாரும் வருவதில்லை. டிவி விவாதங்களில் பெருமாள்மணியும் சிவஜெயராஜனும் அரசியல் பேசுவதைக் கேட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறார்கள். பண்டிதர் மட்டும் பொழுது சாயும் வரைக்கும் அதே அரச மரத்தடியில் படுத்திருந்துவிட்டு பிறகு எழுந்து சென்று கட்டையைச் சாய்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார். நாடாரின் மகன் கடையை விரிவுபடுத்தி மாதாந்திரத் தொகையை அதிகமாக்கியிருக்கிறான். யாராவது வழியில் பார்க்கும் போது ‘நல்லாருக்கீங்களா பண்டிதர்?’ என்று கேட்பதுண்டு. பேச்சுக் குறைந்து போன பண்டிதர் யாரைப் பார்த்தாலும் சுரத்தே இல்லாமல் தலையை ஆட்டிக் கொள்கிறார். 

அரசமரத்தடியில் படுத்திருக்கும் போதுதான் பண்டிதரின் உயிர் பிரிந்தது. ஊரில் யாருக்கும் பெரிய வருத்தம் எதுவுமில்லை. இறுதி ஊர்வலத்தில் அமைச்சரும் கலந்து கொண்டார். நிறையக் கூட்டம். பண்டிதர் இல்லாத வெறுமையை அடுத்தடுத்த நாட்களில் மரத்தடி காட்டிக் கொடுத்தது. ‘ஒரு காலத்துல எப்படி இருந்த இடம் ஜேஜேன்னு...’என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதே அரசமரத்தடியில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. பண்டிதர் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயரையே சூட்ட வேண்டும் என கவுன்சிலர் பேச்சை ஆரம்பித்து வைத்தார். அடுத்த வாரத்திலேயே பஞ்சாயத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மரியாதைக்காக அமைச்சருக்கும் தீர்மானத்தின் ஒரு பிரதியை அனுப்பினார்கள்.

அமைச்சருக்கும் ஆட்சேபனை எதுவுமில்லை. ‘குஞ்சாமணி பண்டிதர்ன்னு வேண்டாம்..அவரோட உண்மையான பேரிலேயே இருக்கட்டும்’ என்று சொல்லி அனுப்பியிருந்தார். உள்ளூர்வாசிகள் அமைச்சர் சொல்வதும் சரியென்றார்கள். பண்டிதரின் நிஜப் பெயரைத் தேடாத இடமேயில்லை. வாக்காளர் அடையாள அட்டையிலிருந்து ரேஷன் கார்டு வரைக்கும் எல்லாவற்றிலும் குஞ்சாமணி பண்டிதர் என்றே இருந்தது. அந்தப் பெயரை அவர் உள்ளூர விரும்பியிருக்கிறார். பண்டிதரின் வயதையொத்தவர்களுக்கும் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை. ஒருவர் சுப்பிரமணி என்றார். இன்னொருவர் கந்தசாமி என்றார். குழப்பம் அதிகமானது. வீட்டுப்பத்திரம் கூட அவரது அப்பாவின் பெயரில்தான் இருந்தது. கடைசியில் குஞ்சாமணியைக் கத்தரித்துவிட்டு பண்டிதர் வீதி என்ற பெயர்ப் பலகையை அமைச்சர் திறந்து வைத்தார். வருடங்கள் ஓடிவிட்டன. பழையதாகிக் கிடக்கும் அந்தப் பெயர்ப்பலகை இன்னமும் அங்கேயதான் இருக்கிறது. அதன் மீது சதுரங்க வேட்டை திரைப்படத்தின் போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள்.

6 எதிர் சப்தங்கள்:

கே.எஸ்.சுரேஷ்குமார் said...

I had last 3 lines. Wonderful Mani.

ADMIN said...

கடைசிவரைக்கும் கெத்தோட இருந்துருக்காரு குஞ்சாமணி பண்டிதர்.

Anonymous said...

அது என்ன பண்டிதர் ஜவகர்லால் நேரு? அவருதான் பண்டிதரா? எங்களுக்கும்தான் அரசியல் தெரியும்’ என்று அவர் பிள்ளையார் கோவில் அரசமரத்தடியில் அமர்ந்து அறிவித்துக் கொண்டார்.
MEENDUM, MEENDUM INDHA VARIGALAI PADITHU RASITHEN.
REMEMBERED A LOT OF PEOPLE FROM MY VILLAGE.
INDHA 'KINDALUM' , "KELIYUM" THAN மின்னல் கதைகLIN SIGARAM, SIRAPPU
HATS OFF.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...

//காலமும் உலகமும் ஓடுகிற வேகத்தில் ஓட முடியாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் பற்றிக் கொள்கிற இரண்டு சொற்கள் அவை//
எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லியே ஆக வேண்டும்.

சேக்காளி said...

"A" certificate
//அவர் உறங்கும் தோரணையை மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தால் அவருடையை பெயருக்கான காரணம் தெரிந்திருக்குமே.//
இந்த வரிகளை அதே தோரணையில் படுத்துகொண்டிருக்கும் போது தானே பிடித்தீர்கள்?

Selvaraj said...

னிய புடிச்சிட்டு நடந்தான். ஹாஹாஹா. எதுகை மோனைனா இப்படி இருக்கணும். வழக்கமான உங்கள் துள்ளல் கலந்த யதார்த்தமான ஒரு கதை. அருமை