Sep 19, 2017

இயங்கும் உலகம்

சில க்ளிஷேவான புலம்பல்கள் உண்டு. ‘இந்தக் காலத்து பசங்க இருக்காங்களே...’ என்று ஆரம்பிப்பார்கள். ‘அவனெல்லாம் பொழைக்கறதுக்கு பரதேசம் போய்ட்டான்..ஊரைப்பத்தி அவன் நினைக்கவா போறான்?’ என்பது மாதிரியான தட்டையான புலம்பல்கள். அப்படியெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். மிகச் சமீபத்தில் மட்டும் இரண்டு குழுக்களுடன் தொடர்பு உண்டானது. ஒரு குழு காங்கேயம் பக்கம். இன்னொரு குழு நாமக்கல் பக்கம். தனித்தனி வெவ்வேறு குழுக்கள். அவர்களுக்குள் அறிமுகமில்லை. ஆனால் இரண்டு குழுவினரிடமும் ஒற்றுமை உண்டு. குழுக்களை இயக்குகிறவர்கள் உள்ளூரில் இல்லை. அந்தந்த ஊரில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காக பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் பரதேசம் போனவர்கள்தான். 

நிலம் காய்ந்து நிலத்தடி நீர் வற்றி ஊரே பாலையாகிக் கொண்டிருந்த போது நம் ஊருக்கும் எதையாவது செய்வோமே என்று களமிறங்கியவர்கள் அவர்கள். ஆட்களைத் திரட்டி, நிதி சேர்த்து, என்ன செய்ய வேண்டும் எப்படிச் செய்வது என்றெல்லாம் மண்டை காய்ந்து- அந்தவகையில்தான் தொடர்பு கொண்டார்கள். ‘நீங்க இந்த மாதிரி வேலைகளைச் செய்யறதாச் சொன்னாங்க..நாம பேசுவோமா?’ என்று பேசத் தொடங்கினார்கள். இன்றைக்கு காங்கேயம் அருகில் மரவம்பாளையத்தில் ஐந்து ஏக்கர் குளத்தை ஒரு குழுவினர் சரி செய்ய, பேளுக்குறிச்சியில் இன்னொரு குழுவினர் மற்றொரு ஏரியைத் தூர் வாரியிருக்கிறார்கள்.

இரண்டு ஊர்களிலும் பணி முடிந்துவிட்டது. பேளுக்குறிச்சி ஏரியைத் தூர்வாரிய wakeourlake என்ற குழுவினர் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள். தூர் வாருவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஏரிக்கான நீர் சேகரிப்புப் பகுதியைச் சீராக்கி, தங்களுடைய அனுபவங்களையெல்லாம் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டும் ஆவணம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் ஏரியின் புதர்களை வெட்டி நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்த அடுத்த நாளிலேயே பெருமழை பெய்து ஏரி நிரம்பியிருக்கிறது. தாம் சீர்படுத்திய ஏரி மழை நீரால் நிரம்புவதை நேரடியாகப் பார்ப்பதற்கு பெரும் வரம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 

அடுத்தகட்டமாக கொல்லிமலையில் இருக்கும் ஏரி ஒன்றை நோக்கி மண்வெட்டியையும் கடப்பாரையையும் தூக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். கொல்லிமலையிலிருந்து இறங்கும் நீர் இந்த ஏரியில் சேகரமாகிறது. இந்தப் பணியைச் சரியாக செய்து முடித்தால் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து பேளுக்குறிச்சி வரை சுமாராக 1500 விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும்  ‘உங்களுக்குத் தெரிஞ்ச தன்னார்வலர்கள், ஸ்கூல் என்.எஸ்.எஸ் எல்லாம் இருந்தால் சொல்லுங்க’ என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

இத்தகைய களப்பணியாளர்களிடம் பேசவும் கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கின்றன. எந்த இடத்திலும் துருத்திக் கொண்டிருக்கமாட்டார்கள். தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள். தாம் உண்டு தம் வேலையுண்டு என்று அடுத்தடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறவர்கள் இவர்கள்தான். இத்தகைய மனிதர்களைக் கவனப்படுத்துவதும் ஒற்றைச் சொல்லிலாவது வாழ்த்துச் சொல்வதும் அவசியம். அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அதுவொரு உற்சாக டானிக். 

போகிற போக்கில் கடந்து போனால் இவர்கள் செய்கிற பணிகளின் அருமையும் மகத்துவமும் தெரியாது. 

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தம்முடைய நேரத்தையும் உழைப்பையும் ஏரியைத் தூர் வாருவதிலும் குளத்தை ஆழப்படுத்துவதிலும் செலவிடுவதற்கு பெரிய மனம் வேண்டும். உள்ளூர்களில் எவ்வளவு ஆதரவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஒரு திட்டம் வெற்றிகரமாக முடியும் போது வேண்டுமானால் நிழற்படத்துக்கு பாவனை காட்டுவதற்காகக் கூட்டம் சேரும். ஆனால் களத்தில் வேலை நடக்கும் போது ஐந்து சதவீத உள்ளூர்வாசிகள் கூட நிற்கமாட்டார்கள். விதிவிலக்குகள் என ஒன்றிரண்டு ஊர்கள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊர்களில் நிலைமை அப்படித்தான். ‘வர்றவங்க வரட்டும்..நாம் முடிவு செய்ததை நாம் செய்வோம்’ என்கிற மனநிலை மட்டும் இல்லையென்றால் துரும்பைக் கூட அசைத்துப் போட முடியாது.


(பேளுக்குறிச்சி நீர் வரத்துப் பாதை)



(நிரம்பிய ஏரி)

இத்தகைய நற்காரியங்களை வாழ்நாள் முழுக்கவும் ஒரு மனிதனால் செய்து கொண்டேயிருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவர்களைப் பார்த்து ஏதேனுமொரு ஊரில் வேறொரு ஒரு குழு இறங்கும். அவர்களைப் பார்த்து இன்னொரு குழு செயல்படத் தொடங்கும். ஷங்கர் படத்தில் நிகழ்வது போல ஒரேயிரவில் அத்தனையும் மாறப் போவதில்லை. விடியும் போது பசுமை பூத்துக் குலுங்கவும் போவதில்லை. ஆனால் ஒவ்வொன்றும் தொடர்புடைய சலனங்கள். ஒன்றின் விளைவு இன்னொன்றில் தெரியும். ஆங்காங்கே யாராவது அடுத்தவர்களுக்கான பணிகளைச் செய்து கொண்டேதான் இருப்பார்கள். 

உலகம் இயங்குவதும் கூட இத்தகைய முகம் காட்டாத இளம் போராளிகளால்தான். மனமார வாழ்த்தலாம்! 

நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான wakeourlake குழுவினரின் வழிகாட்டுமுறைகள்:



1) ஏரி அல்லது குளத்துக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.
2) உள்ளூர்வாசிகளிடமும் மூத்தவர்களிடமும் பேசி நீர் நிலையின் வரலாறைத் தெரிந்து கொள்ளவும்.
3)  நீர் நிலையின் கொள்ளவைத் தெரிந்து ஐத்திருப்பதும் அவசியம்.
4) நீர் நிலைக்கான நீர் வரத்துப் பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள், நிரம்பும் போது வடிகால்கள் முதலியனவற்றைப் பற்றிய புரிதல் வேண்டும்.
5) உள்ளூர்வாசிகளிடம் நம்முடைய செயல்பாடுகள் குறித்துப் பேசுவது முக்கியம்.
6) உள்ளூர் மக்கள் நம்முடைய செயல்பாடு குறித்து நேர்மறையான எண்ணத்தைக் கொண்டிருப்பது அவசியம். நேர்மறையான எண்ணத்தை உருவாக்க முடியவில்லையென்றாலும் அவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனை உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
7) கிராமநிர்வாக அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்/மாவட்ட வன அலுவலரிடம் தகுந்த அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது முக்கியம்.
8) ஜேசிபி எந்திரம் எவ்வளவு நேரம் ஓட வேண்டும், மனித ஆற்றல், மண்ணை வெளியேற்றும் முறை, இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதைக் கணித்துக் கொண்டு பணியை ஆரம்பிக்கவும்.
9) பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக உள்ளூர் மக்கள், அதிகாரிகள், தன்னார்வலர் குழுவை வைத்து ஒரு கூட்டம் நடத்துவது அவசியமானது.
10) நம்முடையத் திட்டம் என்ன, அதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம், எந்த வரிசையில் பணிகளைச் செய்யப் போகிறோம் என்ற தெளிவான திட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்துவிடவும். (இவற்றை ஆவணப்படுத்தி வைத்துக் கொள்வதும் அவசியம்)
11) திட்டப்பணி குறித்தான விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடவும். 
12) உள்ளூர்வாசிகளைக் கொண்ட குழுவொன்றை அமைப்பதும் மிக முக்கியம்.
13) தூர்வாரும் பணியின் போது கிடைக்கும் மண்ணை வெளியேற்றுவது குறித்தான துல்லியமான திட்டமும் அனுமதியும் மிக அவசியம்
14) உள்ளூரில் பதாகைகள், துண்டுச்சீட்டுகள் வழியாகவும் அரிமா சங்கம் உள்ளிட்ட சேவை சங்கங்களின் வழியாகவும் விளம்பரப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கவும்
15) அக்கம்பக்கத்து கல்லூரிகள்/பள்ளிகளிடம் தெரியப்படுத்தி என்.எஸ்.எஸ் முதலான குழுக்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும்.

10 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

சுழன்றும் ஏர் பின்னது உலகம் - வள்ளுவன் வாக்கு ...

இயங்கும் இளைஞர் பின்னது உலகம் - வா ம வின் கூற்று ...

சேக்காளி said...

//இத்தகைய மனிதர்களைக் கவனப்படுத்துவதும் ஒற்றைச் சொல்லிலாவது வாழ்த்துச் சொல்வதும் அவசியம்.//
இவுங்களுக்கு வாழ்த்துச் சொல்லாம அத சே(ர்)த்து வச்சு போம்போது கொண்டுட்டா போப்போறோம்.
மரவம்பாளையக்காரர்களே வாழ்த்துக்கள்.
பேளுக்குறிச்சி காரர்களே வாழ்த்துக்கள்.
(வாழ்த்துக்கள் போடும்போது எழுத்துக்கள் வண்ணமாக மாற நடவடிக்கை எடுக்கவும் மொல்லாளி)

Vinoth Subramanian said...

விலை உயர்ந்த கார்களில் சுற்றிக் கொண்டு நதிகளை இணைக்கிறேன் என்று வெட்டிக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் சில பேருக்கு இந்த மாதிரி இறங்கி வேலை செய்யும் ஆட்களைப் பற்றிய பதிவுகள் போய் சேரட்டும். வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

Unknown said...

ஏரிகளை உயிர்த்து எழுவூம் பணிக்கு ஆதரவு தெரிவித்து களப்பணிக்கு வந்த 80% பேர் அந்த ஏரிக்கும் ஊருக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் தான் ,உங்களையும் சேர்த்து :),தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்ற எண்ணம் தான் ஒருங்கிணைத்தது ,அவர்களுக்கு தான் மனமார்ந்த நன்றிகளை சொல்ல வேண்டும் ,ஒரு சின்ன ஆவா ,wakeourlake .org என்னும் இணையதளத்தை குறிப்பிட்டு புன்னகை ஏரியின் சீரமைக்கும் தேதி செப் 29,30,aug 1,2 என்னும் தேதியை குறிப்பிட்டால் களப்பணிக்கு(volunteer ) வருவதற்கு நெறய வெளியூர் நண்பர்கள் பதிவு செய்ய கூடும் ,இந்த நான்கு நாட்கள் விடுமுறை நாட்கள் ,கிராமத்து உணவு கொல்லிமலை இயற்கையில் பரிமாற படும் ,தங்குவதற்கு சுகாதாரமான இடமும் செய்து தரப்படும்,வாருங்கள் ஏரிகளை உயிர்த்து எழுப்புவோம் !!!

Anonymous said...

Thank you for giving your ideas and writing about us. We really appreciate your efforts.

--Maravapalayam Youth empowerment group

அன்பே சிவம் said...

நல்ல மனங்கள் வாழ்க.

Jaypon , Canada said...

அருமை. வாழ்க தன்னார்வலர்கள்.

Asok said...

Now, it gives more confident and hoope on our youths and future generations, I already sent message about my help from their websites, if someone from wakeourlake group can talk to me, my email id asokkumarc@gmail.com.

அன்பே சிவம் said...

நீர் இன்றி அமை யாது லகம்.

நீரே உலகினா தாரம்.

நீர் தொட்டது எல்லாம் துலங்கும்.

இனிதான துவக்கம்.

நீர் உரு கினால் வாயு. இறுகினால் திடம்.

திடமட்டுமல்ல, தெளிவு மெளிமையு முள்ளது.

உம்மிடம். சாதி அதைத் தாண்டி சாதி.

சாதிக்கு மோர் நேர்மறை தலைவனை

சந்தித்த இறுமாப்புடன் உறங்கச்செல்கிறேன்.

நிச்சயம் விடியும். எனும்

நம்பிக்கையு(ன்னு)டன் நான்.

Anonymous said...

http://www.livemint.com/Science/LsVM5xmJMKyDUi7m0xtgIJ/Earths-sixth-mass-extinction-likely-by-2100-MIT-study.html