கடந்த இரண்டு நாட்களில் பல தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. ‘ஆயிரம் மதிப்பெண்களைத் தாண்டக் கூடிய தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க விரும்புகிறோம்’ என்று சொன்னால் பெரும்பாலான ஆசிரியர்களின் பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. தலித் மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முதல் மதிப்பெண்களை வாங்குவதில்லை. முதல் மதிப்பெண்கள் என்றில்லை ஆயிரங்களைத் தாண்டுவதும் வெகு அரிதாகவே இருக்கிறது. ‘பிசி பையன் ஒருத்தன் இருக்கான். எம்பிசி பொண்ணு ஒருத்தி இருக்கா’ என்கிறார்கள். அவர்களை நிராகரிக்க வேண்டும் என்றில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் பயிற்சியை விரிவாகச் செயல்படுத்த வேண்டிய அவசியமிருப்பின் அப்பொழுது இணைத்துக் கொள்ளலாம்.
அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். அப்பொழுதுதான் ஐந்து மாதங்களாவது மாணவர்கள் சுயமாகப் படிப்பதற்கு நேரம் கிடைக்கும். ஆனால் மாணவர்களைச் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. தகுதியான மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும். வழக்கமாக இத்தகைய கட்டுரைகளை எழுதினால் எனக்கு அங்கொரு மாணவனைத் தெரியும்; இங்கொரு மாணவியைத் தெரியும் என நிறைய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் சத்தமே இல்லை. என்னவோ சிக்கல் இருக்கிறது.
நிறைய தலித் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் இந்தப் போட்டி யுகத்தை எதிர்கொள்கிற அளவுக்கான வலுவில்லாமல் திணறுகிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தை நம்ப வேண்டியதில்லை- அவர்கள் செய்ய மாட்டார்கள்- தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து களத்தில் நிற்கும் போராளிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவர்களது சமூக மற்றும் குடும்பச் சூழல், வறுமை என பல காரணிகள் இம்மாணவர்கள் மதிப்பெண்களில் சோடை போவதற்குக் காரணமாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் களைவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படாமல் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் களைவது சாத்தியமா என்ற விவாதங்கள் அவசியமானவையாகின்றன.
விதிவிலக்கான மாணவர்களும் இருக்கிறார்கள். குணசுந்தரி என்ற மாணவியைப் பற்றி சில நாட்களுக்கு முன்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் கூலித் தொழிலாளர்கள். குடிசையில்தான் வசிக்கிறாள். தனியார் பள்ளிகள் கொத்திச் செல்லாத மாணவிகளில் ஒருத்தி. 1070 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். இப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் சேர்ந்திருக்கிறாள். கடந்த வருடம் இத்தகைய பயிற்சியை நடத்தியிருந்து குணசுந்தரிக்கு பயிற்சியளித்திருந்தால் அவளால் நிச்சயமாக மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்க முடியும். இத்தகைய மாணவ மாணவிகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது. இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டும் பிரச்சினையில்லை. தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியளிப்பதில் இன்னொரு சிக்கலும் கண்ணுக்கு முன்னால் இருக்கிறது. தேர்வுக்கு தயார் செய்வதற்குத் தேவையான தரமான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவு. ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில்பட்டன. ஆனால் அவையெல்லாம் சோபிக்காத புத்தகங்கள். வெகு சுலபமான கேள்விகளை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். இந்தக் கேள்விகள் எதற்கும் பயன்படாதவை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அக்டோபர் மாதமே வந்துவிட்டது. அரசாங்கம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நேரம் தேர்வுக்கான பயிலரங்குகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் மற்றும் மாதிரி வினா விடைகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ம்ஹூம். இந்த வருடமும் செயல்படுவார்கள் என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ‘அதிரடி அறிவிப்பு வெளியாகும்’ என்று அவ்வப்பொழுது பேசிக் கொண்டேயிருக்கிறார். இப்படி சொல்லிச் சொல்லியேதான் அனிதாவைக் கொன்றார்கள். இந்த வருடம் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
நீட் தேர்வு அவசியமில்லை; தேர்வினை ரத்து செய் என்பதெல்லாம் அரசியல் ரீதியிலான போராட்டங்கள். அது ஒரு பக்கம் தொடரட்டும். தேர்வினை இவர்களால் தடுத்த நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படி இயலாதபட்சத்தில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையாவது செய்ய வேண்டும் அல்லவா? பதினொன்றாம் வகுப்பு பாடங்களும் நீட் தேர்வில் சேர்த்தி. இரண்டு வருடப் பாடங்களும் சிபிஎஸ்சி திட்டத்தின் அடிப்படையில். இயற்பியலில் எத்தனை பாடங்கள், வேதியலில் எவ்வளவு பாடங்கள், உயிரியலில் எவற்றையெல்லாம் படிக்க வேண்டும் என்கிற தெளிவை இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டியதில்லையா? எந்தப் பாடத்திற்கு எவ்வளவு ‘வெயிட்டேஜ்’ என்கிற அளவுக்கு நுட்பங்களை ஆசிரியர்களுக்காவது சொல்லித் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே பல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வின் அ, ஆ, இ, ஈ கூடத் தெரியவில்லை.
கடந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் flukeஇல் அடித்தவர்கள்தான். யார் எப்படி மதிப்பெண்கள் வாங்கினார்கள் என்றெல்லாம் தெரியாது. வாங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த வருடம் அப்படி இருக்காது. தனியார் பள்ளிகளும் பயிற்சி நிறுவனங்களும் மாணவர்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் உருட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அரசாங்கம்தான் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு அரசுப்பள்ளி மாணவர்களாவது மருத்துவப்படிப்பில் சேர்ந்தார்கள். இந்த வருடம் போட்டி அதிகரிக்கும். நீட் கட்-ஆஃப் தேர்வும் தமிழகத்தில் அதிகரிக்கும். இந்த லட்சணத்தில் அரசாங்கம் இருக்குமானால் இரண்டு மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது கூட சாத்தியமில்லாமல் போய்விடும். வெறும் புருக்கு வெளக்கெண்ணெய்க்குக் கேடு என்றொரு சொலவடை உண்டு. தமிழக அரசும் அமைச்சர்களும் டர்புர் கேஸூகளாக இருக்கிறார்கள். பாராட்டு விழாக்களை நடத்தி நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதை விட்டுவிட்டு உருப்படியான செயல்களில் கல்வித்துறை இறங்குவதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.
4 எதிர் சப்தங்கள்:
//ஆனால் சத்தமே இல்லை. என்னவோ சிக்கல் இருக்கிறது.//
சிக்கல் இருக்கிறதுதான். தலித் சமூகம் மீது காட்டப்படும் அறவுணர்வை, சலுகை என்று புரிந்து வைத்திருக்கும் கூட்டம் பல்கி பெருகிக்கொண்டிருக்கிறது. எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றும் விதமாக, இப்போது நடக்கும் சமூக முன்னெடுப்புகள் , தலித் விடுதலை சார்ந்த போராட்டங்கள் மென்மேலும் அந்த "சலுகை" உணர்வை தூண்டி விடுகின்றன...
ஆளுங்கட்சினருக்கு இப்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஓன்று தமிழ்நாடு அரசு நீட் வேண்டாம் என்று துணிந்து கடுமையான சட்ட போராட்டம் நடத்தி நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கேட்க வேண்டும் ( முயற்சித்தால் எதுவும் சாத்தியமே ) அல்லது மாணவர்களை தேர்விற்கு தயார் படுத்தவேண்டும். "உண்மையிலேயே பல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வின் அ, ஆ, இ, ஈ கூடத் தெரியவில்லை" இதில் அதிர்ச்சியடைய எதுவுமில்லை தெரிந்தால்தான் அதிர்ச்சியடைய வேண்டும். " தேர்வுக்கு தயார் செய்வதற்குத் தேவையான தரமான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவு" இந்தவரிகள்தான் அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது.
சமூக நீதி… தலித் சமூகம் , RESERVATION FOR DALITS ARE FASHION STATEMENTS OF TAMILNADU POLITICIANS.மேடை பேச்சாலும் அலங்கார வார்த்தைகளாலும் அழிந்த மாநிலம் நமது தமிழ்நாடு. மக்களைச் சுற்றி INDHA "MAYA VALAI" ULLADHU.
NAMM THAN ARUTHU KONDU VELIYE VARAVENDUM.
IDHU THAN REAL 'NAMAKKU NAME' THITTAM.
NO POLITICIAN WILL HELP.
STATE POLITICIANS ARE AFTER POWER.
CENTRAL POLITICIANS ARE NOT BOTHERED.
IN CASE OF TAMIL NADU THEY WILL ACT/OPPOSE WITH VENOM AND VENGENCE.
IN MY VIEW MORE MORE THAN '8' MONTHS ARE THERE FOR 2018 'NEET ' EXAM.
WE CAN REQUEST DALIT LEADERS TO SUBMIT NAMES OF BRIGHT STUDENTS.
MANY STUDENTS WHO HAVE FAILED IN 2017 WILL BE REPEATERS IN 2018.
WE CAN TAKE THAT LIST FROM TN MEDICAL DEPT.
THIS WILL BE A DEVITION BUT WORTH IF WE WANT 'DALIT' STUDENTS'
WE CAN TAKE ONE GOOD BOOK FOR EACH SUBJECT AND START TRANSLATING ON A WAR FOOTING.
ONE GOOD BOOK WILL DO.
"PALA MARAM PATTHA THATCHAN ORU MARAMUM VETTA MATTAN". SO ONE GOOD BOOK WILL DO.
மெய்வருத்தம் பாராDHU KADAMAIYAI SEYVOM.
2018 'NEET' VETTRIKKU கருமமே கண்ணாYAI PADHU PADUVOM.
ANBUDAN,
M.NAGESWARAN.
//‘பிசி பையன் ஒருத்தன் இருக்கான். எம்பிசி பொண்ணு ஒருத்தி இருக்கா’ என்கிறார்கள். //
ஆனால் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமே என்று பரப்புவார்கள்.
பெருமூச்சொன்றை வெளியேற்றி மௌனமாக தான் கட்டுரையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
Post a Comment