Sep 25, 2017

கேள்வி பதில்கள்

பல பள்ளிகளுக்குச் செய்த உதவியைப் பற்றி எழுதுகிறீர்கள். நசிந்து வரும் கோபி, வைர விழா மேல்நிலைப் பள்ளிக்கும் நிசப்தத்தின் உதவியை அளிக்கலாமே?

நான் படித்த பள்ளி என்ற காரணத்துக்காக உதவுவதாக இருந்தால் என் சம்பளத்திலிருந்துதான் உதவ வேண்டும். அறக்கட்டளையின் பணத்திலிருந்து உதவுவது சரியாக இருக்காது. பொருளாதார ரீதியில் வலுவில்லாமல் இருக்கும் பள்ளியாகவும் சரியான தலைமையாசிரியரைக் கொண்டதாகவும், மாணவர்களின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறேன். வைரவிழா மேனிலைப்பள்ளி பழைய பெருங்காய டப்பாவாக இருக்கிறது என்பதுதான் என் புரிதல்.

தற்போது ஏதாவது தின பத்திரிகைகளில் அல்லது வார இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறீர்களா ?

யாரும் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அனுப்புவதில்லை.

பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு சென்று உள்ளீர்கள். ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளுக்கு சென்ற போது அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விட எண்ணியதுண்டா?

கரட்டடிபாளையத்துக்கு மாதம் இரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அது தடைபடுமெனில் எந்த வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

கணவன் மனைவிகிடையிலான உறவில் மூன்றாம் நபர் வரும் பட்சத்தில் எப்படி விரட்டி விடுவது? கண்டும் காணமலும் விடமுடியவில்லை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அது பாட்டுக்கு காட்டாறு வெள்ளமாக காதல் ஓடுகிறது.

மிகக் கடினமான கேள்வி. பிரச்சினையின் பரிமாணங்கள் தெரியாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் அது சரியான பதிலாக இருக்குமா எனவும் புரியவில்லை.

வருடம்-1991. குமரியில் தொழிற்சாலைகள் இன்றி வேலைவாய்ப்புகள் குறைந்து அதே சமயம் படித்தவர்கள் நிறைந்த சூழலில், அவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெற பலர் நேரடியாக லஞ்சம் கொடுத்து அரசு போக்குவரத்து துறையில் சேர்ந்தனர். நிறையப் பேர் அதை நோக்கி படையெடுத்த போது அத்துறையில் அதுவரை இல்லாத, ஆனால் புதிய பணி நிலைகள் உருவாக்கப்பட்டு அந்த புதிய பணிகளுக்கு லஞ்சம் பெறப்பட்டு வேலை கொடுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அதிக நிதிசுமைக்கான சூழலுக்குள் தள்ளப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதும் அதற்கு மானியமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதும் நடைபெறுகிறது. ஒரு அரசு துறையை மோசமான சூழலுக்கு தள்ளிய கே.ஏ.செங்கோட்டையனை நீங்கள் ஆதரிப்பது நியாயம் என கருதுகிறீர்களா?

கே.ஏ.எஸ் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகள் நிறைய. அப்பாவை ஏதோவொரு ஊருக்கு பணிமாற்றம் செய்த போது ‘அண்ணனுக்கு கோபியில் போஸ்டிங் போடுங்க’ என்று ராஜ.கண்ணப்பனை(அப்போதைய மின்துறை அமைச்சர்) வலியுறுத்தி வாங்கிக் கொடுத்தார். விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்த அம்மாவை பணியிலிருந்து விடுவிக்காத கோட்டாச்சியரைக் கடிந்து விடுவித்தார். ஒவ்வொரு முறையும் வேட்பாளராக அறிவிக்கப்படும் போதும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் ஆதரவு கேட்டார். எங்கள் வீட்டில் பெரும்பாலான நிகழ்வுகளில் அவர் கலந்திருக்கிறார். ஜெயலலிதாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் அடைத்திருந்த போது தினசரி பதினைந்து நிமிடங்களாவது நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்- என்னை மதித்துப் பேசினார். ஆனால் கடந்த தேர்தலில்தான் ‘செங்கோட்டையன் ஏன் தோற்க வேண்டும்?’ என்று துண்டுச்சீட்டு அச்சடித்து பரப்புரை செய்தேன். கோபியில் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொன்ன போது ‘அப்படி அவன் பிரச்சாரம் செய்தால் எனக்கு மருத்துவமே வேண்டாம்’ என்று அப்பா கோபப்பட்டார். அவரைச் சமாதானம் செய்துதான் மைக் பிடித்தேன். அப்பா இறந்ததற்கு கே.ஏ.எஸ் வரவில்லை. என்னுடைய பிரச்சாரம் காரணமாக இருக்கலாம். சமீபத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் அந்நிகழ்வில் பேச முடியுமா என்றும் அழைத்தார்கள். ‘எதைப் பாராட்டிப் பேசுவது?’ எனக் கேட்டு மறுத்தேன். எந்த அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

கமல் அரசியல் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

ஒருவேளை சாருவை மதித்தால் கமல்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. சாரு எப்பொழுது யாரை எதிர்ப்பார் என்றும் தெரியாது. ஆதரிப்பார் என்றும் தெரியாது. நாம் ஏன் தலையைக் கொடுக்க வேண்டும்?

பாஸ், எப்ப பாஸ் இந்த ஆப்பிள் போனுக்கு நிசப்தம் ஆப் கிடைக்கும்?

கூகிள் ப்ளே ஸ்டோர் வழியாக செயலியை வழங்கினால் காசு கொடுக்க வேண்டியதில்லை. ஆப்பிள் ஸ்டோரில் நம் செயலியை நிறுவ காசு கொடுக்க வேண்டுமாம். வேலைக்கு ஆகாது போலிருக்கிறது. 

சில கேள்விக்கு பதில் அளிப்பதை (மத்திய அரசிற்கு எதிரானது போன்று பொருள் வரக்கூடிய) தவிர்க்கிறீர்கள்தானே?

எதையும் தவிர்ப்பதில்லை. இருநூறுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. கலவையான கேள்விகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வாரத்தில் இரண்டு முறை மட்டுமே கேள்வி-பதில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அதனால் நிறையக் கேள்விகள் பதில் சொல்லப்படாமல் இருக்கின்றன.

Sarahah கேள்விகளும் பதில்களும்..

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//. இருநூறுக்கும் அதிகமான கேள்விகள் இருக்கின்றன. கலவையான கேள்விகளாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். //
அப்ப நான் கேட்டது கலவைக்குள் இல்லாத கேள்வியா?

Anonymous said...

செயலிக்கு பதிலாக progressive web app முயற்சி செய்யலாம். ஆனால் Safari browser ஆதரிக்காது. Chrome browser ஆதரிக்கிறது.

Mani said...

நீங்க progressive web app முயற்சி பண்ணலாம்

Selvaraj said...

செங்கோட்டையன் உங்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக நின்ற வேட்பாளருக்கு ஆதரவாக நிசப்தத்தில் எழுதினீர்கள் என்று நியாபகம். உங்கள் இடத்தில வேறுயாரும் இருந்தால் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவே எழுதியிருப்பர்.

Anonymous said...

Your opinion about this article:

http://www.vikatan.com/news/coverstory/103390-environment-and-economic-perspective-on-indias-river-linking-project.html