Sep 22, 2017

கேள்வி பதில்கள்

நிசப்தம் blog மூலமா வருகின்ற உங்களது சொந்த வருமானம் எவ்வளவு வருடத்திக்கு ?

நிசப்தம் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. சமீபத்தில் ஒரு மாணவி கல்லூரியியொன்றில் சான்றிதழ்களைக் கொடுத்து பணத்தையும் கட்டிவிட்டாள். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. தான் சேர்ந்திருந்த கல்லூரியில் சான்றிதழ்களைக் கேட்ட போது நவம்பருக்கு மேலாகத் தருவதாகச் சொல்லிவிட்டார்கள். தகவல் கிடைத்த பிறகு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் மூலமாக கல்லூரியில் பேசினோம். இன்று காலை அந்தப் பெண் அழைத்து சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி நன்றி தெரிவித்தாள். மாணவியை அறிமுகப்படுத்தியவர் நிசப்தம் வாசிப்பவர். கல்லூரியில் பேசிய அதிகாரி நிசப்தம் வாசகர். இதுவொரு சாம்பிள். இத்தகைய தொடர்புகளும் நட்புகளும்தான் நிசப்தம் மூலமான எனது வருமானம். தினசரி இரண்டு அலைபேசி அழைப்புகள். மாதம் இருபத்தைந்து மின்னஞ்சல்கள். மற்றபடி, வருடந்தோறும் அறுநூறு ரூபாயை நிசப்தம்.காம் என்ற டொமைனுக்காக கூகிளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

"சனியன் தொலைந்தது" என்று நிசப்தத்தில் எழுதியபோது கடுமையாக மிரட்டப்பட்டீர்களா?

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வந்தது. ‘சசிகலாவை சிறையில் சந்திக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு நல்லதொரு புரிதல் உருவாகும். ஏற்பாடு செய்கிறோம்’ என்றார். மிரட்டுவதற்காக அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்த எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. உடனடியாகச் சந்திக்க விரும்பவில்லை என்றும் சில காலம் கழித்து நானே தொடர்பு கொள்வதாகவும் சொல்லித் தவிர்த்தேன். 

எல்லா மக்கள் வரிப் பணத்தையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழான்னு சொல்லி எல்லா மாவட்டத்திலும் செய்து கட்சியை விளம்பரப்படுத்துறாங்க. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கு செய்த செலவை வேற நல்ல விஷயத்துக்கு, குறைந்த பட்சம் விவசாய முன்னேற்றத்திற்காவது செலவு செய்ய வேணும்னு சொல்லி அய்யாக்கண்ணு நீதிமன்றம் கதவை தட்டப்போறதா உங்களுக்கு கனவு வந்ததா?

அணைகிற மெழுகு எப்பொழுதும் பிரகாசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வது இயல்புதான். சொன்னால் மட்டும் கேட்கவா போகிறார்கள்? 

சில எழுத்தாளர்களுக்கு இணையத்தில் வாசகர்கள் எழுதும் கடிதங்களை வாசித்திருக்கிறேன் பெரும்பாலானவர்கள் தங்களை மிக தாழ்மையாக காட்டிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது "பிழை இருப்பின் அடியேனை மன்னியுங்கள் போன்ற வரிகளை படிக்க நேரிடும்போது அது ஒருவித மரியாதையாக இருந்தாலும் ஒரு அதீதமான அடிமைத்தனம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எழுத்தாளர்கள் என்றாலே எல்லாம் தெரிந்தவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. நெருங்கிப் பார்த்தால் சாமானிய மனிதரைவிடவும் இலக்கியம் தெரிந்தவர்களிடம்தான் வன்மமும் பொறாமையும் எரிச்சலும் சிறுமைத்தனமும் அடுத்தவர்களை மட்டம் தட்டும் குணமும் அதிகமாக இருக்கும். தம்மைப் பற்றிய அளவுகடந்த பிம்பத்தை தமக்குத்தாமே கட்டி வைத்திருக்கிற எழுத்தாளர்கள் நிறைய உண்டு. கடந்த சில வருடங்களாக இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகக் கூட கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதும் கூட இத்தகைய மனநிலையினால்தான். எழுத்தை ஆராதிப்பதற்கும் எழுத்தாளர்களை ஆராதிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

வாழ்க்கையில் தேவையில்லாத குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே உள்ளது. சிறு சிறு விஷயங்களுக்கு கூட. விடுபட வழி கூறவும்.

தவறு செய்யாத மனிதர்கள் உண்டா? தவறு செய்யும் போதெல்லாம் ‘செய்தாகிவிட்டது. இனி இதைச் செய்யமாட்டேன்’ என்று விருப்ப தெய்வத்தின் மீது மனதார சத்தியம் செய்துவிடுவேன். முயற்சித்துப் பாருங்கள். அப்படியும் முடியவில்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களைவிடவா மிகப்பெரிய தவறுகளை நாம் செய்துவிடப் போகிறோம்?

ஒரு கற்பனைக் கேள்வி. கமல் கட்சி தொடங்கினால் அவரது கட்சியில் இணைந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போடலாமே? உங்களது கருத்து.

கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் மிகச் சுலபமாக ஜெயிப்பார்.

நான் புத்தகம் வெளியிட வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். ஆனால் அதற்கான வழிமுறைகள் குறித்து தெரியவில்லை. ஏதாவது உதவி செய்ய முடியுமா தோழரே?

புத்தகம் வெளியிடுவதற்கு முன்பாக படைப்புகளை பல்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள். அவை வெளியானால் நம் எழுத்தில் ஏதோவொரு ஈர்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். வெளியாகவில்லையெனில் எதனால் நிராகரித்தார்கள் என்று யோசித்துப் பார்த்து நம் எழுத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். ஓரளவுக்குப் பரவலாக படைப்புகள் வெளியாகி நம்முடைய பெயருக்கு கவனம் கிடைத்துவிட்டால் பதிப்பாளர்களை அணுகுவதில் சிரமம் இருக்காது. அப்படியில்லையெனில் போலி பதிப்பாளர்கள் நிறைய இருக்கிறார்கள். புத்தகம் வெளியிடுவதற்கே காசு கேட்பார்கள். அதற்கு பெயர் வெளியிடுதல் இல்லை. அச்சிடுதல். பணத்தை வாங்கிக் கொண்டு அச்சிட்டு பிரதிகளை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். நோட்டீஸ் கொடுப்பது போல ஆளாளுக்கு ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டியதுதான். 

நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன-

பொண்டாட்டி தாலியை 
அடகு வச்சு 
புஸ்தகம் போட்டேன் 
தாயோளி 
விசிட்டிங் கார்டு மாதிரி 
ஓசியில் தர வேண்டியிருக்கு

Sarahah வில் வந்த கேள்விகள்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// அப்படியும் முடியவில்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களைவிடவா மிகப்பெரிய தவறுகளை நாம் செய்துவிடப் போகிறோம்?//
அந்தாளு குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட யோசனை கேட்டா அரசியல் வாதிகளை நெனைக்கணுமாம் ல்ல.
பெறவு அவரு மொத்த குத்தத்துக்கும் குத்தகைக்காரரா ஆகிருவாரு.

சேக்காளி said...

//நெருங்கிப் பார்த்தால் சாமானிய மனிதரைவிடவும் இலக்கியம் தெரிந்தவர்களிடம்தான் வன்மமும் பொறாமையும் எரிச்சலும் சிறுமைத்தனமும் அடுத்தவர்களை மட்டம் தட்டும் குணமும் அதிகமாக இருக்கும்.//
இலக்கியம் தெரிந்தவர்கள் என்பதை விடவும் பெரிய மனிதர்கள் என தம்மை தாமே சொல்லிக் கொள்பவர்களைச் சொல்லலாம்.

சேக்காளி said...

//கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் மிகச் சுலபமாக ஜெயிப்பார்.//
அதிருதுல்ல. சும்மா அதிருதுல்ல.
இந்த பயம். இந்த பயம் தான் அவர்களை வெற்றி பெற வைக்கிறது.