Sep 21, 2017

என்னதான் நடக்கிறது?

‘இந்திய அளவில் ஏன் வேலை வாய்ப்புகள் குறைகின்றன?’ என்ற கேள்விக்கான பதில்களைத் எழுதுகிறேன் பேர்வழி என ஆரம்பித்து ‘மோடிதான் காரணம்’ என்று எழுதினால் ‘த்தா...புள்ளிவிவரம் இருக்கா?’ என்று கூட்டம் வரும். எதுக்குய்யா வம்பு என்று ஒதுங்கினால் ‘மோடிதான் காரணம்ன்னு எழுதவேயில்லை.. நீ என்ன ட்ரவுசரா?’ என்று இன்னொரு கூட்டம் வரும். எத்தனை பேரைப் பார்த்திருப்போம்?

ஏற்றிவிட்டுப் போய்விடுவார்கள். மத்தளமா என்ன? இருபக்கமும் அடி வாங்குவதற்கு? காதிலேயே போட்டுக் கொள்ளாமல் நகர்ந்துவிட வேண்டும். எங்கே விடுகிறார்கள்?

தேசிய அளவிலான வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பேசும் போது மென்பொருள்/தொழில்நுட்பத் துறையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உற்பத்தித் துறை, போக்குவரத்து, கல்வி, நல்வாழ்வு, கட்டமைப்பு என சகலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சர்வதேச பொருளாதார மந்தத் தன்மை போன்ற காரணங்கள் ஒரு பக்கமும், பண மதிப்பிழப்பு, தவறான கொள்கை முடிவுகள் போன்ற காரணங்கள் இன்னொரு பக்கமும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கான தேவைகளின் சுருக்கம் என மற்றொரு பக்கமும் என பன்முகமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் பேச வேண்டியிருக்கிறது.

ஒரு துறையின் வளர்ச்சியும் வேலை வாய்ப்புகளும் ஏன் சுருங்குகிறது என்று ஆராய வேண்டுமானால் மெனக்கெட வேண்டியிருக்கும். நிறையப் புள்ளிவிவரங்களும் தேவை.

உதாரணமாக, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் உற்பத்தித் துறை (Manufacturing) மிக முக்கியமானது. திறனற்ற (Unskilled) மற்றும் அரைத் திறன்(Semi Skilled) தொழிலாளர்களுக்கான லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உற்பத்தித் துறைதான் உருவாக்கித் தருகிறது. மோடி பிரதமர் ஆனபிறகு மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தை பிரம்மாண்டமாக அறிவித்தார். இந்தியாவில் உற்பத்திகளை வலுவூட்டி இன்றைக்கு உற்பத்தியில் ராஜாவாக இருக்கும் சீனாவை வீழ்த்தப் போகிறோம் என்று மார் தட்டினார்கள்.

அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறதா? India's Industrial Production(IIP) என்பது சுரங்கம், மின்சாரம், உற்பத்தி  உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியைக் காட்டக் கூடிய கணக்கீட்டுப் புள்ளி. இதில் 75% உற்பத்தித் துறையின் பங்களிப்புதான். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு குறைந்திருக்கிறது என்று கீழ்கண்ட புள்ளி விவரத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏகப்பட்ட விளம்பரங்கள், பில்ட்-அப்புகளுக்குப் பிறகும் IIP ஐ கீழே இழுத்துக் கொண்டு போகிறது என்றால் அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்றுதானே அர்த்தம்?  ஒருவேளை அந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்குமாயின்  IIP உச்சத்திற்குச் சென்றிருக்க வேண்டும். நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் வெளிநாடுகளுக்குப் பயணிக்கிறார். முதலீடுகளை ஈர்த்து வருவதாகச் சொல்கிறார்கள். அது என்னவோ உண்மைதான். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு 60 பில்லியன் டாலர்கள் வந்து குவிந்திருக்கிறது. ஆனால் அதன் விளைவுகள் என்ன என்பதை யாராவது சொல்ல வேண்டும். 

முந்தைய ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் எவ்வளவு சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் இருந்தனவோ அதே சதவீதத்தில்தான கடந்த மூன்றாண்டுகளாகவும் தொடர்கிறது (சுமார் 30%). மீதமிருக்கும் எழுபது சதவீத முதலீடானது சேவைத் துறைக்குத்தான் செல்கிறது. மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களில் மேக்-இன் இந்தியா பற்றிப் பேசுகிறார். இதனை அவரது கனவுத் திட்டமாகவும் சொல்கிறார். ஆனால் அவரால் ஏன் உற்பத்தித் துறையில் பெருமளவும் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். முப்பது சதவீதம் வெளிநாட்டு முதலீடும் கூட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டனவா என்றும் ஆராய வேண்டியிருக்கிறது. கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளாகவே உற்பத்தித் துறையில் முதலீடு செய்யப்படும் பணமானது பிற நிறுவனங்களை வாங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக நிறுவனம் X இல் முதலீடு செய்யப்படும் பெருந்தொகையைக் கொண்டு நிறுவனம் Y ஐ வாங்கி தம்மோடு இணைத்துக் கொள்வார்கள். இருப்பதை இணைத்தால் புதிதாக எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்? வெறுமனே முதலீடு மட்டும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. நாட்டின் பல இடங்களிலும் அதற்கான களம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, பொருளாதார சிறப்பு மண்டலங்கள் ஆகியவை சுறுசுறுப்பாக அறிவிக்கப்பட்டதோடு சரி. கடந்த மூன்றாண்டுகளில் என்ன முன்னேற்றம் இருக்கிறது? எல்லாவற்றையும் செய்திகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதே சமயம் கடந்த இரண்டாண்டுகளாக நிலவிய கடும் வறட்சியானது உழவுத்தொழிலைக் கடுமையாக பாதித்ததையும் அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான தேவை குறைந்ததையும் புள்ளிவிவரங்களில் சேர்க்காமல் உற்பத்தித் துறையின் சுணக்கத்தைப் பேச முடியாது. மேக்-இன்-இந்தியா மாதிரியான பெரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் கூட இந்தியாவானது Free Trade Area என்பது முக்கியமான விஷயம். இங்கே தொடங்கப்படும் நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள பெருமளவு கட்டுப்பாடுகள் இல்லை. இறக்குமதி அதிகரிக்கும் போது இங்கேயிருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பதும், ஆட்களைக் குறைப்பதும், புதிய வேலைகளை உருவாக்காததும் வேலைச் சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன.

உலகளவிலான வணிகம், பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் என மேக்ரோ காரணங்களும் மைக்ரோ காரணங்களும் கலந்து காலி செய்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சேவைத் துறையில் கிட்டத்தட்ட எழுபது சதவீத வெளிநாட்டுப்பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சேவைத் துறை என்றால் வங்கிகள், ஆயுள் காப்பீடு, கல்வி, தொழில்நுட்பம் என நிறையத் துறைகள் உண்டு. ஆனாலும் அவை பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்கான தரவுகள் எதுவுமில்லை. உற்பத்தித் துறையில் ஏன் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்று காரணங்களைப் பட்டியலிடுவதைப் போலவே ஒவ்வொரு துறையிலும் காரணங்களை அலச முடியும். அதற்கு அசாத்திய பொறுமையும், நிறைய புள்ளிவிவரங்களும் தேவைப்படும்.

மென்பொருள் துறை சுருங்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள், உலக அளவிலான தொழில்துறை அழுத்தம், ஆட்டோமேஷன் என்று நிறையக் காரணங்களைப் பட்டியலிடலாம். 2021 ஆம் ஆண்டுவாக்கில் ஐடியின் சேவைத் துறை (Services) கிட்டத்தட்ட பதினான்கு சதவீதம் சுருங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மென்பொருள் பராமரிப்பு (Software Maintenance) என்பதன் வழியாக பல நிறுவனங்கள் வருமானம் கொழித்துக் கொண்டிருக்கின்றன. ஐந்து பேர்களை ஆன்-சைட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள். நாற்பது பேர்கள் இந்தியாவில் இருப்பார்கள். ஐந்து பேர்களும் வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் ‘அந்த வேலையைச் செய்ய நாலு பேரு வேணும்..இந்த வேலையை ரெண்டு நாள்ல முடிச்சுத் தர்றோம்’ என்று பேசிப் பேசி வாங்கி அனுப்புவார்கள். இங்கே வேலை செய்து அனுப்பி வைப்பார்கள். இப்பொழுது பல நிறுவனங்கள் பராமரிப்பு என்பதை செலவினத்தில் சேர்த்திருக்கின்றன. செலவைக் குறைக்க முயற்சிக்கின்றன. அதற்காக ஆட்களைக் குறைக்கிறார்கள். சர்வீஸ் நிறுவனங்கள் அடி வாங்க இதுவொரு முக்கியக் காரணம். எல்&டி பதினான்காயிரம் பேர்களை வெளியேற்றியது. காக்னிசண்ட், விப்ரோ, டிசிஎஸ், டெக் மஹிந்திரா போன்ற பல சேவை சார்ந்த நிறுவனங்கள் ஆட்களை வெளியேற்றியதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். 

புதிய நுட்பங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுதான் ஐடிதுறையில் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜூன் 2017 இல் எக்னாமிக் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் அறுபத்தைந்து சதவீதம் பேர் புதிய தொழில்நுட்பங்கள்தான் பழைய ஆட்களை வெளியில் தள்ளுகின்றன என்று பயப்பட்டிருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். இதைத்தான் திரும்பத் திரும்பப் பேச வேண்டியிருக்கிறது.

ஒரு துறை சுணங்கிப் போவதற்கு யார் காரணம்? என்ன காரணம்? என்கிற விவாதங்கள் தேவைதான். நிறையப் பேசலாம். ஆனால் பொருளாதார நிபுணர்கள் பேச வேண்டிய விவகாரம் இது. என்னைப் போன்ற அரைவேக்காடுகளும், போலி பொருளாதாரப் புலிகளும், உட்டாலக்கடி புரட்சியாளர்களும் பேசினால் முன்முடிவுகளுடன் ஒற்றைத்தன்மையுடன்தான் அணுகுவார்கள்.  அப்படி அணுகுவதால் ஏதேனும் பயன் இருந்தால் செய்யலாம்தான். யாராவது சண்டைக்கு வந்தால் பதிலுக்குப் பதில் என்று சூடான களமொன்றை உருவாக்கி கூட்டம் சேர்த்து பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கலாம்.

சச்சரவுகளிலிருந்து விலகி நின்று புதிய தொழில்நுட்பங்கள் என்ன, எவற்றுக்கான தேவை இருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என உரையாடினால் தேடலும் விரிவாகும் யாராவது ஓரிருவருக்காவது பயன்படவும் செய்யும். அதைச் செய்யலாம். 

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Good post Mani!
The earlier post related to Big data is here, for reference for the readers - http://www.nisaptham.com/2017/08/blog-post_15.html

சேக்காளி said...

ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய சமாசாரம் இது.அவரவர்க்கு அக்கறை வர வேண்டும்.
தொழில்நுட்பங்களை கற்க அடிப்படை கல்வி அவசியம். கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டோம். எனவே காசின்றி கல்வி கற்க முடியாது.கல்லாதவன் வாழ வழி என்ன என யோசித்தால் அரசியலில் நிலைக்க முடியாது.
வெளிநாடு செல்.
பணக்கார நண்பர்களுக்கு கான்ட்ராக்ட் வாங்கிக் கொடு.
சுவீட் எடு
கொண்டாடு.