காலையிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். மணி பதினொன்று ஆகப் போகிறது. எம்.எஸ்.எஸ் பேருந்திலிருந்து அழைத்திருந்தார்கள். ‘வயசானவர்...வேஷ்டின்னுதான சொன்னீங்க சார்? சில்க் போர்டுல எறங்கிட்டாருன்னு பையன் சொல்லுறான்’ என்றார் மேலாளர். வேல் தனது ஃபோனை மாரத்தஹள்ளி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். அவர் வேறு எதுவும் கேட்டுக் கொள்ளாமல் பேருந்தில் பணியாற்றிய பையனையும் ஓட்டுநரையும் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னார்.
‘நைட் பூரா அவங்க தூங்கல சார்..திரும்பவும் இன்னைக்கு வண்டியேறுவாங்க’ என்று மேலாளர் பம்மவும் ‘நீங்க அனுப்புறீங்களா? இல்ல கான்ஸ்டபிளை வரச் சொல்லட்டுமா?’ என்றார். அடுத்த சில வினாடிகளில் ஃபோனைத் துண்டித்துவிட்டு ‘பஸ் மாறி ஏறியிருப்பாரு...கவலைப்படாதீங்க’ என்றார். பெங்களூரு காவல்துறையில் நயமாகப் பேசுகிறார்கள் என்று அந்தப் பதற்றத்திலும் வேலுக்குத் தோன்றியது.
அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தார். ‘அப்பா ஃபோன் ஸ்விட்ச் ஆகியிருக்குங்கம்மா...நீங்க கவலைப்படாதீங்க..நானே கூப்பிடுறேன்’ என்றான் வேல். மறுமுனையில் வெடித்து அழுதார் அம்மா.
நேற்றிரவு வேல் அம்மாவிடம் பேசியிருந்தான். அம்மாதான் அழைத்து அப்பா பெங்களூரு கிளம்பிய தகவலைச் சொன்னாள். ‘நாங்கதான் தீபாவளிக்கு வர்றோம்ன்னு சொன்னனுங்கள்ல..அதுக்குள்ள ஏங்ம்மா அவரு கிளம்பினாரு?’ என்று கோபமாகத்தான் கேட்டான். அம்மா என்ன செய்வார்? அப்பாவின் பிடிவாதம் அப்படி. ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் உடனடியாகச் செய்துவிட வேண்டும். நான்கு மணி வரைக்கும் பெங்களூரு கிளம்புகிற திட்டமெதுவும் இல்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் மூர்த்தி வாத்தியார் போகிற வழியில் ‘பேரன் செளக்கியமா?’ என்று கேட்கவும் அப்பாவுக்கு நினைப்பு வந்துவிட்டது.
வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக ‘சித்ரா நான் ஒருக்கா பெங்களூரு போய்ட்டு வந்துடட்டுமா?’ என்று அனுமதி கேட்பது போலக் கேட்டார். அதுதான் வழமை. அவர் கேட்டால் மறுப்புச் சொல்வது சாத்தியமில்லை என்று அம்மாவுக்குத் தெரியும். ‘அவரு கூட எத்தன வருஷமா காலங் கொட்டுறேன்..சொன்னா கேட்பாரா கேட்கமாட்டாரான்னு எனக்குத் தெரியாதா?’ என்பதுதான் அம்மாவின் சமாதானமாக இருக்கும்.
‘ராத்திரில போறீங்களா? காத்தால கிளம்பி போலாம்ல?’ என்று மட்டும் கேட்டார்.
‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல..எம்.எஸ்.எஸ்ல டிக்கெட் இருக்குதாமா...சில்க் போர்டுல எறங்குனா மாரத்தஹள்ளிக்கு டவுன் பஸ்..நான் பார்த்துக்குறேன்’ என்று அதோடு முற்றுப்புள்ளி வைத்தார். வேல் மாரத்தஹள்ளியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியதிலிருந்து இரண்டு மூன்று முறை வந்து போயிருக்கிறார். பையன் நன்றாகப் பிழைப்பதாக அவருக்கு கன பெருமை. வந்து போவது கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டார். வந்தாலும் தங்கியதில்லை. ஒருவேளை அல்லது இருவேளை உணவுதான். ஈபீஸ் பேக்கரியில் பேரனுக்கு தேங்காய் பன் ஒரு பொட்டலம் வாங்கிப் பையில் வைத்துக் கொள்வார். அதே பைக்குள் ஒரு வேஷ்டி சட்டையும் இருக்கும். மறக்காமல் கண்ணாடி டப்பா அப்புறம் க்ளூக்கோட்ரால் மாத்திரை அட்டை. ஆஸ்பிரினும் கூட இருக்கும். இவ்வளவுதான் அவரது பயணச் சரக்கு.
‘ரெண்டு பேரும் சிட்டுக்குருவிகளாட்ட ஓடிட்டு இருக்குதுக..நாம இருந்தோம்னா நமக்கு டிபன் செஞ்சு சோறாக்கின்னு தனியா வேலை’ என்பார். அவரது சுபாவமே அப்படித்தான் என்று யாரும் வற்புறுத்துவதுமில்லை. ‘நாய்க்கு வேலையில்லை நிக்க நேரமில்லை’ என்று சொல்லிச் சிரித்துக் கொள்வார்.
வேல் அம்மாவின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அப்பாவை அழைத்தான்.
‘பஸ் ஏறிட்டீங்களாப்பா?’
‘இல்ல சாமீ....யாரு அம்மா சொன்னாளா? உங்கிட்டச் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்..அவ சொல்லிட்டாளா?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
‘ஓசூர் தாண்டுனதும் ஃபோன் பண்ணுங்க..நான் பைக் எடுத்துட்டு வந்துடுறேன்’ என்றான். அவர் என்ன பதில் சொல்வார் என்று தெரியும்.
‘நீங்க எல்லாம் தூங்குங்க சாமீ..நானே வந்துடுறேன்’ என்றார்.
‘இல்லீங்கப்பா...நாலு மணிக்கு வந்தா பஸ் புடிச்சு வர்றது சிரமம்...பைக்ல வந்துக்கலாம்’ என்றான். அவர் ஒருவாறு ஆமோதித்தார். இதற்கு முன்பாக பெங்களூரு வந்த போதெல்லாம் பகலில்தான் வருவார். அவன் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. இரவு நேரப் பயணம் என்பதுதான் அவனுக்கு கோபம் உண்டாக்கியது. அப்பாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.
அப்பா பொதுப்பணித்துறையில் ஊழியர். ஒற்றைச் சம்பளம். சம்பளம் வாங்கி சீட்டுப் போட்டு சொசட்டியில் உறுப்பினர் ஆகி உள்ளூரில் இரண்டு சைட் வாங்கி வீடு கட்டி பையனையும் பெண்ணையும் படிக்க வைத்து ஒரு சைட்டை விற்று வேல்முருகனின் அக்காவுக்குத் திருமணம் செய்து- அக்கா இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறாள்- ஐடி மாப்பிள்ளை. அப்பா சிரமம் பார்க்காமல் உழைத்தார். அம்மாவும் அப்பாவுக்கு எல்லாவிதத்திலும் ஒத்தாசை. அரை அரிசி வீணாகப் போகாது. அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாம் நேர்பட ‘சித்ரா வேக்யானம்’ என்பார்கள். அந்தப் பக்கமாகச் சென்று ‘எச்சக் கைல காக்கா ஓட்டமாட்டா’ என்று பழிப்பார்கள்.
இப்பொழுதுதான் கொஞ்சம் செலவு செய்கிறார். முந்தய மனிதராக இருந்திருந்தால் அரசுப் பேருந்தில்தான் ஏறியிருப்பார். ஐம்பது காசு அதிகம் என்பதால் எந்தக் காலத்திலும் அன்புபவனில் டீ குடித்ததில்லை. இரண்டு ரூபாய் கொடுத்து கார்னர் கடையில் செடில்தான் டீ குடிப்பார். அப்படியான மனிதர். ‘மிச்சம் புடிச்சு என்ன சாமீ பண்ணுனேன்..உங்களுக்குத்தானே?’ என்று அக்காவிடம் ஒரு முறை அப்பா சொன்ன போது அவள் உடைந்து போனாள்.
நான்கு மணிக்கு அவர் இவனை அழைத்திருக்க வேண்டும். ஐந்தரை ஆகியும் அழைக்கவில்லை. மடிவாலா எம்.எஸ்.எஸ் பேருந்து அலுவலகத்தை அழைத்தான். யாரும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வண்டியை எடுத்துக் கொண்டு சில்க் போர்ட் சென்றிருந்தான். அதற்குள்ளாகவே நண்பர்கள் ஒரு சிலரை எழுப்பியிருந்தான். எம்.எஸ்.எஸ் ஓட்டுநரின் எண்ணை கணேஷ்தான் தேடிப் பிடித்திருந்தான்.
‘நாலேகாலுக்கு சில்க் போர்டைத் தாண்டிடுச்சு சார்..’ என்ற போதுதான் விபரீதம் புரிந்தது. அப்பா குறித்தான விவரங்களைச் சொன்னான். ‘நான் கவனிக்கல சார்..பையன்கிட்ட விசாரிச்சுட்டு கூப்பிடுறேன்’ என்றார். அதன் பிறகுதான் போலீஸ் ஸ்டேஷன், புகார், அம்மாவின் அழைப்பு என்று இழுத்துக் கொண்டேயிருக்கிறது. மனைவியை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு காவல் நிலையம் வந்தான். ‘ஏதாச்சும் பிரச்சினைன்னா மடிவாலா ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டிருப்பாங்க சார்...அங்கேயும் இன்பார்ம் பண்ணியாச்சு’ என்றார் காவலர். அரைகுறையான கன்னடம். சில்க் போர்டில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். மாரத்தஹள்ளிக்குப் பதிலாக வேறு இடத்துக்கு பேருந்து மாறி ஏறியிருக்க வேண்டும் என்று அவனை சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனாலும் பயமில்லாமல் இல்லை.
என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பர்கள் இரண்டு மூன்று பேர்கள் வந்திருந்தார்கள். பேருந்துப் பையனும் ஓட்டுநரும் வந்து சேர்ந்த போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.
‘ட்ராபிக் சார்..அதான் லேட் ஆகிடுச்சு’என்றார் ஓட்டுநர்.
‘சில்க் போர்டுலதான் எறங்குனாரா?’ இதே கேள்வியை மீண்டும் ஆய்வாளர் கேட்கவும் பையன் கொஞ்சம் பதறினான். ஓட்டுநர் குறுக்கே புகுந்து ‘அப்படி யாரும் எறங்கலன்னு சொல்லுறான் சார்’ என்றார். அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள்.
‘வேஷ்டி சட்டையில் ஒருத்தர் ஏறுனதைப் பார்த்திருக்கான்..ஓசூர் தாண்டி எங்கேயோ எறங்கியிருக்காரு..ஆனா எங்கேன்னு தெரியலங்கறான்’ எனவும் ஆய்வாளர் அவரை முறைத்தார். ‘வரும் போது சொல்லிட்டு வந்தான் சார்’ என்றார். பையன் பிதுங்கப் பிதுங்க விழித்தான். பதினெட்டு வயதுக்குள்தான் இருக்கும். வேல் முகத்தில் பதற்றம் கூடியிருந்தது. கணேஷ் அவனது கைகளை இறுகப் பற்றினான்.
‘எங்கெல்லாம் நிறுத்துனீங்க?’
‘மொம்மசந்திரா, எலெக்ட்ரானிக் சிட்டி, கூட்லு கேட் அப்புறம் பொம்மனஹள்ளி, சில்க் போர்டு சார்’
ஒரு கணம் யோசித்த ஆய்வாளர் ‘ஹெப்பகோடி போலீஸ் ஸ்டேஷன்ல கூப்பிட்டுக் கேளு’ என்று ஒரு காவலருக்கு உத்தரவிட்டார். பொம்மசந்திரா அந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஹெப்பகோடி காவல்நிலையத்திலிருந்தே சூர்யா நகர் காவல் நிலையத்திலும் விசாரித்துவிட்டு ஒன்றும் தகவல் இல்லை என்றார்கள். நான்கைந்து மணி நேரம் ஆகிவிட்டது. எலெக்ட்ரானிக் சிட்டி, கூட்லு கேட் இரண்டுமே எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தின் எல்லைதான். அழைத்து விசாரித்தார்கள்.
ஆய்வாளர் கணேஷையும் வேலையும் அழைத்து அமரச் சொன்னார். ‘ஆக்ஸிடெண்ட்....கூட்லு கேட்ல இறங்கியிருக்காரு...ஒரு கேப் அடிச்சு வீசிட்டு போயிருக்கான்’ என்றார். வேலுக்கு மூச்சு ஒரு கணம் நின்று கண்கள் இருண்டு போயின.
‘அடையாளம் கேளுங்க’ என்றான் கணேஷ்.
‘வேஷ்டி, கையில் ஒரு பை வெச்சிருந்தாராம்..இந்தியா சில்க் ஹவுஸ் பை’
‘பாடி விக்டோரியாவுல இருக்கு’
இறந்துவிட்டதை அந்தச் சொல் உறுதிப்படுத்தியது. கணேஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வேலுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. மனைவியை அழைத்தான். குழறியபடி ‘அப்பா போய்ட்டாரு’ என்றான். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. கதறியபடி இணைப்பைத் துண்டித்தான். அவனது அம்மாவை அழைக்க ஃபோனை எடுத்தான். விரல்கள் எண்களைப் பிசைந்தன. ஆனால் அழைக்கவில்லை. ‘அம்மாகிட்ட என்ன சொல்லுறதுன்னு தெரியலடா’ என்ற போது அவனது மொத்த நாடியும் அடங்கி ஒடுங்கியது.
‘எதுக்கும் கன்பார்ம் பண்ணிட்டு சொல்லிக்கலாம்’ என்றான் கணேஷ்.
அப்பா தன்னை சைக்கிளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் சென்றதிலிருந்து ஒவ்வொன்றாக மனக்கண்ணில் ஓடின. வேல் சரிந்து அமர்ந்தான். வானம் இருட்டிக் கொண்டிருந்தது.
12 எதிர் சப்தங்கள்:
Sir, appa vazhi thavari marupadiyum varra maadiri mudichu irukalam. Story ah irundhalum manasu valikkuthu
தமிழகத்திலிருந்து மகன் வீட்டுக்கு வந்த ஒரு பெரியவரை சில மாதங்களுக்கு முன்பாக ஒரு Cab அடித்துக் கொன்றது. அந்நிகழ்ச்சி சில்க் போர்டில் நடைபெற்றது. அதைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன்.
வலியுடன் தான் ஒவ்வொரு வரியையும் வாசித்தேன்.. மனம் கனத்துக் கிடக்கிறது மணி சார்!! பாராட்டுகள் ங்க!!
கதையா? நான் கடைசிவரையும் கூட இருந்த ப்ரென்ட்களில் நீங்களும் ஒருத்தர்னு நினைச்சுட்டே படித்தேன். யார் பெற்றோரை இழந்க்கும் செய்தி படித்தாலும் நான் இழந்த என் பெற்றோர்களை மீண்டும் மீண்டும் இழக்கிறேன் . ம
மின்னலை போன்றது தான் வாழ்வு என சொல்லிய
மின்னல் கதை
அன்புபவன், ஈபீஸ்னு ஊருக்கு வந்துட்டு போன மாறி இருந்துது. கடசீல மனசு கணமாயிருச்சு.
கஷ்டமாக இருக்கிறது. நிஜத்தில் இறந்தவரின் மனைவிக்கும் மகனுக்கும் அந்த பேரனுக்கும் இது வாழ்நாள் முழுதும் மன உளைச்சல் தந்துவிட்டது. அப்படி என்ன வேகமாய் போக வேண்டும் அந்த கேப்.
உங்களுக்கு உண்டான வலியை ,எழுத்தின் வழி எங்களுக்கும் கடத்தி விட்டீர்கள் ...
:(
- Somesh
கதை உண்மையான செய்தியாகத்தான் இருக்க வேண்டும் என எங்கும் இல்லை சார். அவர் தூக்கத்தில் ஓசூரில் இறங்கி, பின் வேறு பஸ் பிடித்து வீட்டை 9மணி அளவில் சேர்ந்தார்-என முடித்திருக்கலாம் சார். துயர முடிவு நன்றாக இல்லை.
இந்த எழுத்தாளர்களே இப்படித்தான். சோகமா முடிச்சு தாக்கத்தை உண்டாக்குறாங்களாம்
அட போய்யா.,
இப்பல்லாம்
ஞா'யிறு'ம்
காத்திருக்க முடில.
அடுத்து 6 ஆ 4 ன்னு இல்ல.
I mean -- மீன் ஒட -- மீன் எப்ப வரும் னு
காத்திருக்கும் கொக்கா யிட்டோம் நாங்க.
இருக்கும் போது முதியோர் இல்லத்தில் பத்திர படுத்துகிறோம்
இறந்த பின்பு நினைவுகளை.
Post a Comment