Sep 13, 2017

அப்பா போயாச்ச்ச்ச்

ஒரு வாரமாக இரவுப் பணி. மதியம் இரண்டு மணிக்கு வந்தால் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் அலுவலகத்தில் இருக்க வேண்டும். கடந்த முறை இப்படி இரவு நேரப் பணிக்கு வந்த போது அலுவலகத்திலிருந்தே கார் அனுப்பி வைத்தார்கள். அது பெருந்தொந்தரவு. வண்டி வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். ராத்திரி ஒரு மணிக்கு வர வேண்டிய ஓட்டுநரைக் காணவில்லை. அலைபேசியில் அழைத்தாலும் எடுக்கக் காணோம். எங்கள் அலுவலகத்தில் மொத்தமே ஐம்பது பேர்கள்தான். சிறு அலுவலகம். பாதுகாவலரைப் பூட்டிக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியில் வந்து சிக்கிக் கொண்டேன். குளிரென்றால் குளிர் அப்படியொரு குளிர்- எல்லாவற்றையும் தனித்தனியாகக் கழற்றி வைத்தது போல நடுங்குகிறது.

இரண்டேகாலுக்கு அழைத்து ‘சார் ரெடியா?’ என்றார். 

‘என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க ரோட்டுல குந்த வெச்சு உக்காந்துட்டு இருக்கேன்’ என்றேன். வந்து பல கதைகளைச் சொன்னார். பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு கார்தான் வீடு. சவாரிகளுக்கிடையில் அவ்வப்பொழுது. அன்றும் அநேகமாகத் தூங்கியிருக்கக் கூடும். அதுதான் காரணம். அதன் பிறகு வண்டியேறி வீட்டுக்குச் சென்று மூன்று மணிக்குப் படுத்தால் ஏழரை மணிக்கு மகி எழுப்பிவிட்டுவிடுவான். ‘அப்பா ஆய் போயாச்சு’ என்று கத்தினால் எவ்வளவுதான் தூக்கத்தில் இருந்தாலும் எழுந்து செல்ல வேண்டும். அதன் பிறகு படுத்தால் தூக்கம் வராது.

வண்டிக்கான காத்திருப்பு, ஆய் மேட்டரையெல்லாம் கணக்குப் போட்டுவிட்டு ‘இந்தத் தடவை நானே பைக்குல வந்துடுறேன்’ என்றேன். ஒன்றரை மணிக்குத் தூங்கி ஏழரை மணிக்கு எழுந்துவிடலாம்.

‘பாதுகாப்பு இல்லையே’ என்றார் மேலாளர்.

‘யாருக்கு? எனக்கா? ராத்திரியில் நான் ஊருக்குள்ள சுத்துனா ரவுடிகளுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அர்த்தம்’ என்றேன். அப்பொழுது அவர் முகத்தை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். பயத்தில் நடுங்கு நடுங்கிப் போனார். நம்பமாட்டீர்கள் என்று தெரியும். சும்மாவாச்சும் நம்புவதாகத் தலையை ஆட்டுங்கள்.

முதல் நாள் இரவில் சற்று பயமாகத்தான் இருந்தது. வழி மறித்து பர்ஸைக் கேட்டால் என்ன பதிலைச் சொல்ல வேண்டும், லேப்டாப்பை கேட்டால் கொடுத்துவிட்டு அலுவலகத்தில் என்ன சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.  இந்த ஊர் பேயை மிரட்டிவிடும் போலிருக்கிறது. எந்நேரமும் வாடகை வண்டிகள் பறந்து கொண்டேயிருக்கின்றன. வண்டிகள் மட்டுமா? பிரிகேட் சாலையில் மூன்று நான்கு இளஞ்சிட்டுகள் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். ‘ராத்திரியில் ரோட்டில் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க’ என்று சொல்லியிருக்கலாம்தான். ‘எங்களுக்குத் தெரியும்’ என்று பொத்துகிற சைகை காட்டத் தயங்கவே மாட்டார்கள்.  ஃபோரம் மாலுக்கு முன்பாக ஒரு பைக்கில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்து- இத்தனைக்கும் காவலர்கள் வண்டிகள் சென்றபடியேதான் இருக்கின்றன. எதுவும் கேட்பதில்லை போலிருக்கிறது. இனியாவது பெங்களூருவில் வசிப்பதற்கு அர்த்தமுள்ளது போல ஏதாவதொரு காரியத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இதையெல்லாம் பார்த்த பிறகு பயம் எப்படி வரும்?

எந்த இடத்திலும் சிவப்பு சிக்னல் இல்லை. முறுக்கிப் பிடித்தால் நடுவழியில் ஒருவன் குறுக்காட்டினான். வழிப்பறியேதான். பதறிப் போய் வண்டியை நிறுத்தினால் போக்குவரத்து காவலர். 

‘சார் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?’ என்று கேட்பதற்குள்ளாகவே ‘சிக்னல் ஜம்ப்’ என்றார். நிஜமாகவே அந்த சிக்னலை நான் கவனிக்கவே இல்லை. ஆள் பிடிப்பதற்கென்றே சிக்னலை எரிய விட்டு ஒளிந்து நின்றிருப்பார்கள் போலிருக்கிறது. எப்படியோ சிக்கியாகிவிட்டது.

‘நீங்க ஃபைன் போட்டுக்குங்க...நான் ஆன்லைன்ல கட்டிக்கிறேன்’ என்றேன்.

‘ஒரிஜினல் லைசன்ஸைக் கொடுத்துட்டுப் போ..கட்டிட்டு வந்து ரசீதைக் காட்டிட்டு வாங்கிக்க’ என்றார். ஓட்டுநர் உரிமத்தின் அசலைக் கேட்கிறார்- தமிழ்நாட்டைப் பார்த்துக் கெட்டுப் போயிருக்கக் கூடும்.

‘என்கிட்ட இல்ல சார்’ 

‘ஒண்ணா பணத்தைக் கட்டு இல்லைன்னா ஒரிஜினலைக் கொடு இல்லைன்னா வண்டியை விட்டுட்டுப் போ’

சத்தியமாகவே எழுபது ரூபாய்தான் கைவசமிருந்தது. அசல் கையில் இல்லை. வண்டியைக் கொடுத்துவிட்டு எப்படி வீடு போய்ச் சேர்வது?

‘சார்...... என்ன சார்?’ என்றால் ஓட்டை விழுந்த ரெக்கார்டர் மாதிரி தொனி மாறாமல் ‘ஒண்ணா பணத்தைக் கட்டு இல்லைன்னா ஒரிஜினலைக் கொடு இல்லைன்னா வண்டியை விட்டுட்டுப் போ’ என்றார்.

எனக்குள் இருந்த ரவுடி ஒடுங்கி கெஞ்சத் தொடங்கி விடுவான் போலிருந்தது. அதற்கு முன்பாக ‘இந்நேரத்துல இப்படிச் சொல்லுறீங்க? வேணும்ன்னா ஜாய்ண்ட் கமிஷனர்கிட்ட பேசட்டுமா?’ என்று உதார் விட்டேன். நிஜமாகவே உதார்தான். ரெக்கார்டர் மீண்டும் உடைந்தது. ‘ஒண்ணா பணத்தைக் கட்டு இல்லைன்னா ஒரிஜினலைக் கொடு இல்லைன்னா வண்டியை விட்டுட்டுப் போ’.

காவல்துறையில் ஒன்றிரண்டு அதிகாரிகளைத் தெரியும். ஆனால் இரவும் ஒன்றரை மணிக்கு எழுப்பி ‘ட்ராபிக் போலீஸ் புடிச்சுட்டாங்க’ என்று சொன்னால் ‘நூறு ரூபாய் காசுக்கு இந்நேரத்துல எழுப்புறான் பாரு’ எனக் கடுப்பாகி ‘இரு கிரைம் போலீஸை அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டால்? நேரங்கெட்ட நேரத்தில் இவனால் யாரிடமும் பேச முடியாது என்று போலீஸ்காரருக்குத் தெரியாதா என்ன? மறுபடியும் ரெக்கார்டர் உடைவதற்கு முன்பாகவே அமைதியாக ஓரத்தில் நின்று கொண்டேன். 

விதிப்படி நடக்க வேண்டியதெல்லாம் நடந்தே தீரும்.

சாவியை வாங்கி பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு இன்னொரு வண்டியை மடக்கினார் அந்த காக்க காக்க சூர்யா. அப்பாடா என்றிருந்தது. பேச்சுத் துணைக்காவது ஆள் சிக்கியது என்ற நப்பாசைதான். அதுவும் இரண்டு பெண்கள். மனசுக்குள் றெக்கை முளைத்தது. அவர்களுக்கும் அதே காரணம்- சிக்னல் ஜம்ப். எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. குறைந்தபட்சம் என் முகத்தையாவது ஒரு முறை பார்த்திருக்கலாம் அல்லவா? ம்ஹூம். பர்ஸைத் திறந்து பணத்தைக் கொடுத்தார்கள். கிளம்பினார்கள்.

சலிப்பாக இருந்தது. துணைக்குக் கூட ஆள் இல்லை.

அவர்கள் போன பிறகு ‘கார்டுதான் சார் இருக்கு..ஏடிஎம் வரைக்கும் போய்ட்டு வரட்டுமா’ என்றேன்.

‘நாங்க கார்டு வாங்கிக்குவோமே’ என்றார். 

‘ஏன் சார் முதல்லயே சொல்லல?’ என்று கடுப்பு குறையாமல் கேட்டால் ‘உன்கிட்ட கார்ட் இருக்கும்ன்னு எனக்கு எப்படித் தெரியும்’ என்று தெனாவெட்டு குறையாமல் சொன்னார்.

‘என்னைப் பார்த்தால் சாப்ட்வேர்காரன் மாதிரி தெரியலையா?’ என்றால் ‘பெங்களூருல எவனைப் பார்த்தாலும் இதேதான் சொல்லுறான்’ என்றார். 

துலாம் ராசிக்கு குருப்பெயர்ச்சிப் பலன்படி மூன்று மாதம் வாயைத் திறக்கக் கூடாதாம். அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. விடியப் போகிறது. மூன்று மணிக்கு இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நாளைக்கு ‘நான் கம்பெனி வண்டியிலேயே போய்க்கிறேன்’ என்று மேலாளரிடம் சொல்லப் போகிறேன். ஏழரை மணிக்கு மகி எப்படியும் எழுப்பிவிட்டுவிடுவான். ‘அப்பா போயாச்ச்ச்ச்’ என்பான்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ராத்திரியில் நான் ஊருக்குள்ள சுத்துனா ரவுடிகளுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அர்த்தம்’//
என்னை பயங்காட்டுறாராமாம்.

Anonymous said...

உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...

Vinoth Subramanian said...

அந்த ரெண்டு பெண்கள் கிட்ட ஒரு 100 ரூபா கடன் வாங்கலாம் இல்ல. போலிஸ்காரனுக்கு ஒரு சிம்பதி வந்திருக்கும்.

அன்பே சிவம் said...

எனக்கு ஆத்திரங்கள் வருது., மக்களே.😡

வெட்டி ஆபீசர் said...

உங்களுக்கே பைன் போட்ட அந்த போலீஸ் கை கால் முறியாம இன்னும் இருக்காரா என்ன?