பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுத்தது அதீத கவனம் பெற்றிருக்கிறது. சென்னையில் ஒரு நிகழ்ச்சியாக நடத்துவதன் சாதக பாதக பலன்கள் இதுதான். அதுவும் சென்னையில், உதயச்சந்திரன் அவர்களை வைத்து நடத்தியதால் நிறைய வெளிச்சம். அவந்திகா என்றொரு பெண்- வடக்கத்திப் பெண்- சென்னையில் ஒரு புகழ்பெற்ற ஊடகவியல் கல்லூரியில் படிக்கிற பெண். ‘காலேஜ் அசைன்மெண்ட்டுக்கு உங்கள் நிகழ்ச்சியைப் பத்தி ஒரு ரிப்போர்ட் தயாரிக்கணும்’ என்றாள். அந்தப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. நிசப்தம் என்ற பெயர் கூடத் தெரியவில்லை. ‘யார் சொன்னாங்க?’ என்றதற்கு ஏற்கனவே ஒன்றிரண்டு பெண்கள் கட்டுரை எழுதியிருக்கிறார்களாம்.
நான்கைந்து கேள்விகளைக் கேட்டிருந்தாள். நல்லவன் வல்லவன் என்று வரிக்கு வரி எழுதி நடுநடுவால மானே தேனே பொன்மானே எல்லாம் தெளித்து ஒரு கட்டுரையை அனுப்பி வைக்கச் சொன்னேன். ‘எனக்கும் மெயில்ல அனுப்பிடு கண்ணு’ என்ற பிறகு சத்தத்தையே காணவில்லை. அநேகமாக கன வேகமாக கட்டுரை தயாராகிக் கொண்டிருக்கக் கூடும்.
அந்நிகழ்வில் பதினைந்து பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைப்பதற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. தலா பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்கள். இதற்கு முன்பாக பனிரெண்டு பள்ளிகளுக்கு இதே மாதிரி வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இந்த பதினைந்து பள்ளிகளும். ஒரு அறிவிப்பைச் செய்தவுடன் பல பக்கங்களிலிருந்தும் ஆர்வமாக ‘எங்களுக்கும் கொடுங்க’ என்பார்கள். ஆர்வத்துக்கும் ஆர்வக்கோளாறுக்கும் இருக்கும் நுண்ணிய வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். தெரியாத்தனமாகக் கொடுத்துவிட்டால் ஒன்றிரண்டு மாதங்களில் புத்தகங்களை ஆளுக்கொன்றாக வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். வேறொரு பிரச்சினையும் உண்டு- நூலகத்தை அமைத்துக் கொடுத்த பிறகு இரண்டாவது மாதத்தில் பொறுப்பான ஆசிரியர் இடமாறுதலில் வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடுவார். அதன் பிறகு புத்தகங்களைக் கண்டு கொள்ளவே ஆள் இருக்காது. இப்படியான படிப்பினைகள்தான் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கான அடிக்கோலிடுகின்றன.
முன்பே நூலகம் அமைத்துக் கொடுத்த பனிரெண்டு பள்ளிகள், தற்போது சேர்க்கப்பட்ட பதினைந்து பள்ளிகள் மட்டுமில்லை. சமீபத்தில் மெரினா புக்ஸ் கடையிலிருந்து அழைத்திருந்தார்கள். அதே பட்டியலை ஆங்காங்கே பதினோரு பள்ளிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். யார் வாங்கிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. யாரோ படிக்கிறார்கள். பட்டியலைப் பார்க்கிறார்கள். ‘இந்த ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க’ என்று அவர்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறார்கள். மொத்தம் எத்தனை பள்ளிகளில் நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். ஒரு நிகழ்வுக்கான கவனம் ஏன் தேவை என்பதற்கான காரணம் இதுதான். மெல்ல அசைத்துவிட்டால் போதும். பிறகு அது தொடர்ந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். ஒரு கிராமத்துப் பள்ளியில் தொடுதிரை அமைத்துக் கொடுத்தால் அதைப் பார்த்து நான்கைந்து அக்கம்பக்கத்துப் பள்ளிகளில் தொடுதிரை வகுப்பை அவரவர் முயற்சிகளில் அமைக்கத் தொடங்குகிறார்கள். உதாரணங்களைக் காட்ட முடியும். சமூகத்தில் நம்மால் செய்ய முடிந்தது இதுதான். மெல்லிய அசைப்பு. எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால்- அதுவும் இன்றைய அரசாங்கம்- வேண்டாம் விடுங்கள்.
மெரினா புக்ஸ் தளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலை அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள். புத்தக அலமாரி மாதிரியான வடிவமைப்பு. பள்ளிகளுக்கு வழங்க விரும்புகிறவர்கள் நேரடியாகவே மெரினா புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ளலாம். (அலைபேசி: 95006 96558)
புத்தகங்களின் பட்டியல்:
1) அலமாரி வடிவமைப்பில்
2) ஸ்லைடு வடிவமைப்பில்
பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதாக இருப்பின் பின்வரும் ஒன்றிரண்டு அம்சங்களையாவது கவனத்தில் வைத்துக் கொள்ளவும் என்பது என் பரிந்துரையாக இருக்கும்-
1) ‘நான் படிச்ச ஸ்கூல்’ ‘எங்க ஊர் ஸ்கூல்’ என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் நல்ல பள்ளியாக இருந்திருக்கக் கூடும். இன்றைய தலைமையாசிரியர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேண்டியது அவசியம்.
2) பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒரு முறையேனும் பேசிவிடவும். அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்று கவனித்துவிட்டு சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உருவானால் மட்டுமே அந்தப் பள்ளியைப் பரிசீலிக்கவும்.
3) தலைமையாசிரியர்/பொறுப்பாசிரியருக்கு ஆர்வமிருப்பின் வாரம் ஒரு முறை நூலக வகுப்பு என்று ஒதுக்கி அதில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்கு சம்மதம் வாங்கிக் கொள்ளவும்.
4) வருடத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் நம்மால் அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் நேரடியாகச் சென்று வருவதற்கான சாத்தியங்களைப் பற்றி யோசித்து முடிவெடுக்கவும்.
கிட்டத்தட்ட முப்பத்தெட்டு பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மகிழச் செய்கிறது. அத்தனை புகழும் எல்லோருக்கும் உரித்தாகுக. தொடர்ந்து செயல்படுவோம்.
நன்றியும் வாழ்த்துக்களும்.
8 எதிர் சப்தங்கள்:
நல்லது
//‘எனக்கும் மெயில்ல அனுப்பிடு கண்ணு’//
போன் நம்பரை குடும்மா.SAVE பண்ணிக்குறேன் ன்னு கேட்க வேண்டியது தானே.அதை விட்டு விட்டு ஏன் இந்த காதை சுத்தி நெத்தியை தொடுற வேலை?
எந்தரோ மஹானு பாவலு.! அந்தரிக்கி வந்தனம்.
இன்னக்கீ வீட்டோட கச்சேரி போல..
வழக்க, மத்தவங்களுக்கு சொல்லும் ஒரு வார்த்தை HAPPY 'SON'Day With MAHI
Seriously!!! Super!!
"சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
Thanks a Lot for the Efforts.
Note :
you can click side image of any book and get more details of the book
Animated grid:
http://www.marinabooks.com/list?key=schoolbooks&showby=grid2&sortby=
List:
http://www.marinabooks.com/list?key=schoolbooks&showby=list&sortby=
Another type of List:
http://www.marinabooks.com/list?key=schoolbooks&showby=mailist&sortby=
Great. Momentum was created by you. It will take further leaps.
Post a Comment