Sep 26, 2017

பர்ஸை கண்டுபிடிச்சுக் கொடுங்கய்யா

மழை பெய்து கொண்டிருந்தது. இரவு முழுவதுமாகப் பெய்த மழையின் மிச்சம் அது. சிங்கசந்த்ராவில் இறங்கி வீட்டை அடைவதற்குள் நனைத்துவிடக் கூடிய அளவுக்கு சற்றே வலுவான மழை. அதிகாலை நான்கரை மணி. வேக வேகமாக நடைபோட்டால் நாய் துரத்தும். Singular. பெங்களூரில் வீதிக்கு இருபது நாய்களைப் பார்க்கலாம். அதுவும் அத்துவான வேளைகளில் செருப்பு நிலத்தோடு உரசும் ஒலியைக் கேட்டால் சிலிர்த்து எழும் அவைகளைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். குனிந்து கல்லை எடுத்தால் அல்லது எடுப்பது போன்ற பாவனையைச் செய்தால் பத்தொன்பது நாய்கள் காணாமல் போய்விடும். ஆனால் மீதமிருக்கும் ஒரு நாய் இருக்கிறதே- அது மட்டும் ஓடியும் போகாது. பாய்ந்தும் வராது. குரைத்துக் கொண்டே நிற்கும். நடந்தால் பின்னால் மெல்ல எட்டி வைக்கும். அசந்தால் பின்பக்கமாக ஓடி வந்து கடித்துச் சதையைக் கவ்விவிடுமோ என்னும்படியான பயத்தில் நம்மைச் சிறுநீர் கழிக்க வைத்துவிட்டுத்தான் அடங்கும். 

பேருந்திலிருந்து இறங்கியாகிவிட்டது. மழையில் நனைந்து கொண்டே வேகமாக நடக்கும் போதுதான் அவரைப் பார்த்தேன். நாற்பது வயது இருக்கும். ராயல் என்ஃபீல்ட் ஷோரூமை அண்டியபடி பதுங்கியிருந்தார். நடமாட்டமில்லாத அந்தத் தருணத்தில் பயமாக இருந்தது. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பரமேஸ்வரன் என்று தமிழர் ஒருவர் அப்படியானதொரு கதையைச் சொல்லியிருக்கிறார். மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சில வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு அதிகாலையில் இறங்கிய போது நெருங்கி வந்த ஒருவன் மகளின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டான். என்ன செய்ய முடியும்? பை, பர்ஸ் என எல்லாவற்றோடும் சேர்த்து மனைவியின் நகைகள், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் உட்பட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வந்ததாகச் சொன்னார். 

சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் பக்கத்து வீட்டிலேயே ஒரு திருட்டு நிகழ்ந்தது. அது மாலை வேளை. திடீரென்று வீட்டுக்குள் மூன்று பேர்கள் நுழைந்து கத்தியைக் காட்டிவிட்டார்கள். வயதான அம்மாவும் work from homeஇல் இருந்த மகளும்தான் போணி. இருக்கிற நகைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு- தாலியை மட்டும் விட்டுவிட்டார்கள்- அவ்வளவு செண்டிமெண்ட். இப்படி திருடர்களின் விதவிதமான கதைகளைக் கேட்கும் போது பயமில்லாமல் இருக்குமா? அதன் பிறகு போலீஸ் வந்தார்கள். விசாரித்தார்கள். ஒருவரையும் பிடிக்கவில்லை. ‘கேமிரா மாட்டிக்குங்க..அதான் பாதுகாப்பு’ என்று அறிவுரை சொல்லிவிட்டுப் போனார்கள். 

மழைக்கு அண்டியிருந்தவரைப் பார்த்தால் திருடன் மாதிரி தெரியவில்லை. நமக்கென்ன ஐபிஎஸ் மூளையா? பார்த்தவுடன் திருடன், பிக்பாக்கெட் என்றெல்லாம் கணித்து முடிவுக்கு வருவதற்கு. இத்தகைய சூழல்களில் மனதுக்கு வேலை கொடுத்துவிடக் கூடாது. ‘ச்சீ..பாவம்’ என்று மனம் கருதத் தொடங்கினால் மூளை சறுக்கக் கூடும். பழைய அனுபவமிருக்கிறது. இருந்தாலும் ஒரு கணம் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அவரைப் பார்த்த அந்தக் கணத்தில் அவரும் பார்த்துவிட்டார். பிச்சை கேட்பது போல கையை நீட்டினார். பார்க்காதது போல நடக்கத் தொடங்கினேன். அடுத்த நான்கு அடிகளுக்குள் எனக்குப் பின்பாகவே அவரும் நடக்கத் தொடங்கினார். சில கணங்களில் பயம் பற்றிக் கொண்டது. மனம் கண்டபடி கற்பனை செய்யத் தொடங்கியது.

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாகக் கொன்றுவிடுகிறார்கள். குர்கானில் ஒரு பள்ளி வளாகத்திலேயே ஒரு சிறுவன் கொல்லப்பட்டான் அல்லவா? என்ன காரணம் என்று தேடினால் சில்லியான ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். பள்ளியின் கடைநிலை ஊழியன் கழிவறையில் சுயமைதுனம் செய்து கொண்டிருக்கும் போது குட்டிப்பையன் உள்ளே நுழைந்து பார்த்துவிட்டான் என்பதற்காகக் கொன்றானாம். இன்னொரு சாரார் பாலியல் பலாத்காரத்திற்கு ஒத்துவரவில்லை என்று கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். எப்படியோ கொன்றுவிட்டான். பெங்களூரில் விப்ஜியார் என்றொரு பள்ளியில் ஆறு வயதுப் பெண்ணை ஒருவன் கொன்றான். பாலியலுக்காகவும் பணத்துக்காகவும் கொல்வதெல்லாம் பெரிய காரியமே இல்லை. நாம்தான் சூதானமாக இருந்து கொள்ள வேண்டும். 

ஓட்டமெடுத்து ஈரத்தில் வழுக்கி விழுந்து தொலைந்தால் வசமாகச் சிக்கிக் கொள்வோம். நம் மீது அட்லங்கால் போட்டு அமர்ந்து கழுத்த வெறுக் வெறுக்கென்று அறுத்துவிட்டுப் போனால் ‘சொம்பும் போச்சுடா கோவிந்தா’ ஆகிவிடும். மெல்ல நடக்கவும் பயம். கத்தியைக் கொண்டு வந்து பின்னால் குத்தினால் ‘புறமுதுகிட்டு ஓடினான் அந்த மணிகண்டன்’என்று வரலாற்றில் பழிப்புச் சொல் வந்துவிடும். நின்றுவிடுவதுதான் உசிதம். உங்களுக்குச் சிரிப்பு வரலாம். அந்தக் கணத்தில் எவ்வளவு பயமாக இருந்தது என்று எனக்குத்தான் தெரியும். ஈரத்தோடு ஈரமாக யூரின் டேங்க் உடைந்ததா என்று கூடத் தெரியவில்லை. நின்று மெல்லத் திரும்பினேன். ‘உன்னை எதிர்க்க மாட்டேன்’ என்று அவரிடம் காட்டிக் கொள்வதான உடல்மொழியில் திரும்பிய திருப்பு அது. 

‘ஏனு பேக்கு?’ என்றேன்.

‘ஏனு இல்லா’ என்றார். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் அந்த ஆள் சிரித்தது தெரிந்தது. ஒருவேளை மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. நடுக்கம் இல்லாமல் இல்லை.

‘ஓகி...’ என்றேன்.  போ என்று அர்த்தம்.

இரண்டே இரண்டு வாக்கியங்கள்தான் கன்னடத்தில் பேசியிருந்தேன். அதில் எப்படிக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. ‘பணம் கொடு’ என்றான். தமிழில். திருடனேதான். 

தனித்துச் சிக்கியிருக்கும் இடங்களில் சத்தம் போடுவதும் கூட ஆபத்துதான். குரலை அமுக்குவதற்காக கழுத்தை நெரித்தால் சோலி சுத்தம். 

‘இல்லை’ என்று மறுக்கவேண்டும் என மனம் நினைத்தாலும் சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருந்தது. எடுத்து நீட்டினேன். தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்தான். முழுமையாக சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஒற்றை ஆள்தான். பெரிய கல்லாக எடுத்து தாக்கினால் என்ன ஆகிவிடும் என்றும் மனம் கணக்குப் போட்டது. நம்முடைய கணக்கு சரியாக நடந்துவிட்டால் தப்பித்துவிடலாம். ஏமாந்துவிட்டால் வம்பாகிவிடும். எப்படியிருந்தாலும் தாக்கப் போவதில்லை. பணத்தைக் கொடுப்பதற்குத் தயராவதற்குள்ளாகவே இன்னொருவனும் வந்துவிட்டான்.

பர்ஸை எடுத்துக் கொடுத்தேன். பறித்துக் கொண்டார்கள். ஆளரவமில்லாமல் இருந்தது அந்தப் பகுதி. வேகமாக அவர்களைத் தாண்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. செல்போன் தப்பிவிட்டது. அதை அவர்கள் கேட்கவுமில்லை. கேட்பதற்குள்ளாக நகரத் தொடங்கினேன். நடை ஓட்டமாக மாறியது. 

எங்கள் ஏரியாவில் ஒரு ஏரியும் அதன் கரையில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு மஞ்சுநாதா பூசை செய்வார். அவரிடம் சொன்னேன். அவரும் அவருடைய உதவியாளரும் அவர்களுக்குப் பின்னாலேயே நானுமாக ஓடிச் சென்றோம். யாருமில்லை. காவல்துறையில் புகார் அளிக்கச் சொன்னார். அங்கேயிருந்து அழைத்தேன். ஒரு வண்டியில் வந்தார்கள். பேட்ரோல் வாகனம். விவரங்களைக் கேட்டார்கள். அடையாளம் சொன்னேன். ‘சரி தேடுறோம்..நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க’ என்றார்கள். கொடுத்தேன். பர்ஸூக்குள் என்ன இருந்தது என்பதையெல்லாம் விலாவாரியாக எழுதச் சொன்னார்கள்.

முந்நூறு ரூபாய்க்குள்ளாகத்தான் இருந்திருக்கும். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் பிரதிகள் இருந்தன. ஐசிஐசிஐ வங்கியின் பண அட்டை ஒன்றையும் வைத்திருந்தேன். 

வாங்கிப் படித்தார். ‘கடனட்டை ஒன்னுமில்லையா சார்?’ என்றார்.

இல்லையென தலையை ஆட்டினேன். முந்நூறு ரூபாய்க்காக ரிஸ்க் எடுக்கமாட்டார்கள் போலத் தெரிந்தது. அப்படியே பிடித்தாலும் தூக்கிலா போடப் போகிறார்கள்? ‘ஜாக்கிரதையா இருந்துக்குங்க’ என்றார். எதிர்பார்த்ததுதான். ‘உங்க துப்பாக்கியைத் தர்றீங்களா..சேஃப்டிக்கு வெச்சுக்குறேன்’ என்று கேட்கலாமா எனத் தோன்றியது. கடுப்பாகி என்கவுண்ட்டரில் போட்டாலும் போட்டுவிடுவார்கள் எனத் தோன்றியது.

‘ஆயித்து சார்’ என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மழை நின்றபாட்டைக் காணோம்.

12 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

கராத்தே குங்பு கத்துண்டேள்னா செமயாருக்கும் :-)

ABELIA said...

அந்த மாதிரி நேரத்துல ஆள் தப்பிக்கிறதே பெரிய விஷயமில்ல...! நீங்க தப்பி வந்ததே ரொம்ப சந்தோஷம்..!

Vaa.Manikandan said...

நான் பெரிய ரவுடிதாங்க..ஆனா பாருங்க... திங்கட்கிழமைன்னா ரத்தம் தொட மாட்டேன்..

Saravana Kumar N said...

//திங்கட்கிழமைன்னா ரத்தம் தொட மாட்டேன்..// புரட்டாசி வேற

Anonymous said...

Is it possible to nab the theif using mobile signal? Along with your mobile signal few signals would have been acitive at that time in that tower location. The petty theives may be regular offenders and need to grab them! You may be the eyewitness. You will also get some experiences to write about that!!!

சங்கர் நீதிமாணிக்கம் said...

இன்றைய நாட்களில் சிலநேரங்களில் அமைதியாய் இருப்பதே உசிதமாக இருக்கும் போல..

Life said...

இனி பூனை படையோடு போங்க

அன்பே சிவம் said...

உண்மையா இரு (ந்தா!?) Sorry Sir.
நான் தனியா பேசறேன். மெயil வழியே.

Selvaraj said...

ஹா ஹா ஹா உண்மையாக இந்த வரிகளை படிக்கும்போது வாய்விட்டு சிரித்தேன், கத்தியைக் கொண்டு வந்து பின்னால் குத்தினால் ‘புறமுதுகிட்டு ஓடினான் அந்த மணிகண்டன்’என்று வரலாற்றில் பழிப்புச் சொல் வந்துவிடும். (அந்த தருணத்தின் உங்கள் தவிப்பு புரிகிறது)

சேக்காளி said...

//பிச்சை கேட்பது போல கையை நீட்டினார்.//
அப்பவே அந்த ஐம்பது ரூபாயை கொடுத்து களவு டெஸ்டிங் பண்ணி பாத்துருக்கலாம்.

Vinoth Subramanian said...

//கத்தியைக் கொண்டு வந்து பின்னால் குத்தினால் ‘புறமுதுகிட்டு ஓடினான் அந்த மணிகண்டன்’என்று வரலாற்றில் பழிப்புச் சொல் வந்துவிடும். நின்றுவிடுவதுதான் உசிதம். உங்களுக்குச் சிரிப்பு வரலாம். அந்தக் கணத்தில் எவ்வளவு பயமாக இருந்தது என்று எனக்குத்தான் தெரியும்.// எனக்கு சிரிப்பு வரவில்லை. அந்த வரியை வாசிக்கும்போது பயமாய்த்தான் இருந்தது. முடிந்த அலவுக்கு கவனமாய் செல்லவும். சிலரால் பயத்தில் ஓடக்கூட முடியாது. அதனால் ஓடி இருக்கலாம் என்றுகூட சொல்ல இயலாது. ஆனால்... இனிமேல் நீங்கலும் பாதுகாப்புக்கு கையில் ஏதாவது எடுத்துச்செல்லவும். இந்தச் சில்லி ஸ்ப்ரே என்றெல்லாம் சொல்கிறார்களெ அந்த மாதிரி. முடிந்தால் ஒரு போலித்துப்பாக்கி வாங்கி வைத்துக்கொல்லவும்.

Anonymous said...

Next time you may keep your cards in the secret pocket in your pants Then 100 Rs in ten denominations. When they ask you can give that too.