Aug 7, 2017

பெண் ஓவியங்கள்

‘அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்தால் கடிகாரம் மெதுவாக ஓடத் தொடங்கிவிடும்’ - நேற்றுப் பார்த்த Cashback  படத்தில் வரும் வசனம் இது. படத்தைப் பற்றித் தேடிய போது கசமுசா படம் என்று எழுதியிருந்தார்கள். கிராதகர்கள். அப்படியெல்லாம் முத்திரை குத்திவிட முடியாது. ஆங்காங்கே ஊறுகாயாக உண்டு. அது கூட இல்லையென்றால் என்ன ஆங்கிலப்படம்? அதுவும் பிரிட்டிஷ்காரன் படம்.

பென் அடிப்படையில் ஓர் ஓவியன். பெண் உருவங்களின் மீது அவனுகு அதீத பிரேமை- அது கலை சார்ந்த பிரேமை. உடலின் அழகியலை கோடுகளாகவும் மடிப்புகளாகவும் அவனால் வரைய முடிகிறது. அதுதான் அவனது passion. பால்யத்திலிருந்தே அவன் அப்படித்தான். வெறுமனே ஒரு ஆணுக்கு பெண்ணுடல் மீது இருக்கும் பிரேமைக்கும் கலைஞனுக்கு இருக்கும் பிரேமைக்கும் வேறுபாடுகள் உண்டல்லவா? கலைஞன் தன்னுடைய வலிகளையும் தனிமையையும் வேதனைகளையும் தனது ரசனைகளுக்குள் புதைத்துக் கொள்கிறான். அந்தப் புதைப்பிலிருந்தே அவன் மேன்மேலும் தன் கலையை மெருகூட்டிக் கொண்டேயிருக்கிறான்.

பென்னின் காதல் முறிவிலிருந்துதான் படம் தொடங்குகிறது.  காதலி அவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் இணங்கிவிடுகிறாள். பென்னுக்கு தனிமையும் பிரிவும் மிகுந்த வலியூட்டுகின்றன. தான் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து ஒரு நாள் இரவில் அவளை தொலைபேசியில் அழைத்து ‘நாம் மறுபடியும் சேர்ந்துக்கலாமா?’ என்கிறான். அவள் சாத்தியமில்லை என்று சொல்லிவிடுகிறாள். அதன் பிறகு பென்னுக்கு உறக்கம் வருவதில்லை. உறங்காத இரவுகள் யுகங்களாக நீள்கின்றன. இருப்பதிலேயே கடினமான பணி என்பது நேரத்தைக் கரைப்பதுதானே? அதுவும் தனிமையில். பல நாட்கள் தூக்கத்தைத் தொலைத்தவன் காலத்தைக் கரைப்பதற்காக இரவு நேரப் பணியாளனாக ஒரு கடையில் வேலைக்குச் சேர்கிறான். 

தொடக்கத்தில் அந்த வேலையும் கூட அவனுக்கு அலுப்பூட்டுவதாக இருக்கிறது. அங்கே அவன் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு வருகிறான். கடைக்கு வரும் அழகான பெண்களை ரசிக்கிறான். தனது கற்பனையில் காலத்தை உறையச் செய்து அவர்களது ஆடைகளைக் கழற்றி நிர்வாணங்களை மனக்கண்ணில் கொண்டு வருகிறான். படத்தில் இதுவொரு ஒரு கசமுசா பகுதி. அவனுக்கு ஏன் பெண்களின் நிர்வாணத்தின் மீது காதல் என்பதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக்கும் உண்டு. சிறுவயதில் அவன் பார்க்கக் கூடிய பக்கத்துவீட்டுப் பெண்மணியின் நிர்வாணமும் அவளது வாளிப்பான தேகமும் அவனது அவனை காமம் தாண்டியும் பெண்ணின் உடலை ரசிக்கச் செய்கிறது.


பென்னுக்கு ஒரு நண்பன் இருக்கிறான். இருவரும் ஐந்து வயதிலிருந்தே நண்பர்கள். அவன் ஒரு ஜிலுஜிலு பார்ட்டி. பென்னுக்கு புரியாத புதிர்களை எல்லாம் விளக்குகிறவன் அவன்தான். வீட்டில் யாருமில்லாத போது போர்னோகிராபி சஞ்சிகைகளைக் காட்டுவதிலிருந்து பக்கத்துத் தெருவில் பணம் வாங்கிக் கொண்டு உடலைக் காட்டும் சிறுமி வரைக்கும் அவன் ஒவ்வொன்றாகக் பென்னின் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து தருகிறான். அவையெல்லாமே காமத்தைவிடவும் அல்லது காமத்துடன் சேர்த்து பென்னின் கலை நுணுக்கத்தை வளர்க்கின்றன.

பென் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைந்து கொண்டேயிருக்கிறான். விதவிதமான பெண்ணுடல்கள். புதிய புதிய வளைவுகளும், கோடுகளும். பகலில் பல்கலைக்கழகத்தில் ஓவிய மாணவாகவும் இருக்கிறான்.

இப்படித்தான் திரைக்கதை நகர்கிறது. அங்காடியின் முதலாளி, அங்கே இருக்கும் சக பணியாளர்கள், பென்னின் கூடவே இருக்கும் பால்யகால நண்பன் என திரைக்கதைக்கு சுவாரசியமூட்டக் கூடிய எல்லா அம்சங்களும் உண்டு. படம் முழுக்கவும் இழையோடும் நகைச்சுவை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘ஒரு காதல் உடைவதுடன் எல்லாமும் முடிந்துவிடுவதில்லை’ என்று பென்னின் நண்பன் உசுப்பேற்றுகிறான். பென்னுக்கும் அது புரிகிறது. தன்னோடு பணியாற்றும் பெண்ணை அவனுக்குப் பிடித்துப் போகிறது. ஆனால் சகபணியாளன் ஒருவன் குறுக்கே புகுந்து அவளை சினிமாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் படம் முடிந்த பிறகு தங்களுக்குள் எல்லாமும் முடிந்துவிட்டதாகவும் சொல்லி கடுப்பேற்றுகிறான். 

பென்னுக்கு அவள் மீதான ஆர்வம் குறைவதில்லை. அவளிடமே நேரடியாகக் கேட்டுவிடுகிறான். ‘அவன் என்ன சொன்னான்?’ என்கிறாள். பென் சிரித்துக் கொண்டே சொல்கிறான். ‘ச்சீ...ச்சீ..சினிமாவுக்கு போனோம்...அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பேச்சை முடித்துக் கொள்கிறார்கள். இருவரும் தங்களது கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அது கிட்டத்தட்ட காதலுக்கு முதல்படியாகிறது. இருவரும் டேட்டிங்குக்காக ஒரு நாளைக் குறித்து வைக்கிறார்கள். அது அங்காடி முதலாளியின் பிறந்தநாள் பார்ட்டி. இருவருக்குமான காதல் கனிந்து வரக்கூடிய தருணத்தில் பென்னின் பழைய காதலி இடையில் புகுந்து போட்டு உடைக்கிறாள். பென்னின் கலை ஆர்வம் வெற்றியடைகிறதா? காதல் கனிகிறதா என்பதுதான் முடிவு.

ஆர்ப்பாட்டமில்லாத சுவாரசியமான படம். நேற்று மாலை பொழுது போகாமல் இணையத்தில் ‘Movie about artists' என்று தேடிக் கொண்டிருந்த போது கிடைத்தது. IMDB தளத்தில் 7.2 குறியீட்டு எண்ணை வழங்கியிருந்தார்கள். 6.5 ஐத் தாண்டினாலே படம் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். அந்த நம்பிக்கை எப்பொழுதுமே பொய்ப்பதில்லை. படம் முழுக்கவும் தெறிப்புகளாக வசனங்கள் உண்டு. எனக்கு மிகப்பிடித்திருந்தது. 

Sean Ellis இயக்கிய படம். படம் பிடித்துப் போனதனால் நேற்றிரவில் மீண்டும் அவரது வேறு சில படங்களை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். மெட்ரோ மணிலா என்ற இன்னொரு படம் சிக்கியது. Cashback படத்துக்கு நேரெதிரான படம் அது. பிலிப்பைன்ஸ் கிராமத்திலிருந்து விவசாயத்தை விட்டுவிட்டு பிழைப்புக்காக வேலை தேடி தலைநகரான மனிலாவுக்குச் செல்கிற குடும்பம் அங்கே சந்திக்கிற சிக்கல்களும் துக்கங்களும்தான் படம். அப்பா, அம்மா ஓர் அழகான பெண் குழந்தை, நான்காவதாக பச்சிளம் குழந்தை. நான்கு பேரும் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டார்கள். 

படத்தைப் பற்றி நிறைய எழுதலாம். நிறையப் பேசலாம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பிலிப்பைன்ஸின் அழகும், கதாபாத்திரங்களின் வலியும்- அற்புதம். ஒரே நாளில் ஒரே இயக்குநரின் இரண்டு படங்கள். இரண்டுமே திருப்தியான திரைப்படங்கள். fmovies.se தளத்தில் இரண்டு படங்களுமே கிடைக்கின்றன.

ஷான் எல்லிஸ் அடிப்படையில் ஒரு நிழற்படக்காரர். கேஷ்பேக் படம் குறும்படமாக இயக்கப்பட்டு அது ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டதாம். பொதுவாக நல்ல திரைப்படங்களைப் பார்த்த பிறகு அது குறித்தான விமர்சனங்களை இணையத்தில் தேடி வாசிப்பதுண்டு. நாம் தவறவிட்ட நல்ல அம்சங்களையும் குறைகளையும் அடுத்தவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று அதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம் மற்றும் திரை மொழிகள் குறித்தான நம் புரிதல்கள் தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாகவே அடுத்தடுத்த கட்டங்களை அடைகின்றன. இவை குறித்துப் பேசுவதன் வழியாக நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கவனிக்கத் தொடங்குகிறோம். அப்படி நுணுக்கங்களைக் கண்டடடைவதுதான் நம்மை அந்தக் கலைப்படைப்பு நோக்கி இஞ்ச் இஞ்ச்சாக நகர்த்துகின்றன. அப்படியான நகர்தல்தான் கலை இலக்கியம் சார்ந்த தேடலின் அடிநாதம். இல்லையா?

3 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

K'NOW'COMMENT

சேக்காளி said...

//நேற்று மாலை பொழுது போகாமல்//
என்னது????????????????????????????????

Anonymous said...

"இரண்டுமே திருப்தியான திரைப்படங்கள். fmovies.se தளத்தில் இரண்டு படங்களுமே கிடைக்கின்றன." - இது தான் பெரிய மனுஷன் அப்டிங்கறத நிரூபிக்குறது.......