Aug 7, 2017

ரெய்டு வருவாங்களா?

தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவக்குமாரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே அழைத்து காபி கொடுக்கவா போகிறார்கள்? அந்த வீதியில் நின்றிருந்தவர்களுடன் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்றாக நின்றிருந்தேன். D.K.சிவக்குமார். சுருக்கமாக டி.கே.எஸ். கர்நாடகா காங்கிரஸில் முக்கியமான கை. கூட்டம் சேர்க்கவும் செலவும் செய்யவும் இவரைக் கட்சி வெகுவாக நம்பியிருக்கிறது. அவரது பின்னணியைத் தேடினால் சாதாரணக் குடும்பத்தில் இருந்து வந்தவர். இன்றைக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி.. கிரானைட், ரியல் எஸ்டேட், குவாரி, கல்வி என்று இவர் கை வைக்காத தொழிலே இல்லை என்கிறார்கள். அவரது வீடு பெங்களூரு சதாசிவ நகரில் இருக்கிறது. செல்வந்தர்களின் குடியிருப்பு அது.

நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சல்லடை போட்டுச் சென்ற பிறகு மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. தெருவில் சில செய்தியாளர்களும், கட்சிக்காரர்களும் நின்றிருந்தார்கள். கட்சிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அவரது தொகுதிக்காரர்கள்- கனகபுராவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். கர்நாடகாவில் சாதி அரசியல் ஆழமாக உண்டு. லிங்காயத்துக்களுக்கு எடியூரப்பா மாதிரி ஒக்கலிகர்களுக்கு தேவகெளடா, எஸ்.எம்.கிருஷ்ணா- அந்த வரிசையில் சிவக்குமாரும். எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்தார் என்பதால் டி.கே.எஸ்ஸின் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். இப்பொழுது சில அரசியல் பலாபலன்களுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.கவுக்குச் சென்று சத்தமில்லாமல் அமைதியாகிவிட்டார். இன்றைய சூழலில் தேவகெளடாவும் சிவக்குமாரும் ‘எலியும் பூனையும்’ மாதிரி. சிவக்குமார் முதன் முறையாக எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றதும் கூட தேவகெளடாவுக்கு எதிராகத்தான். ஒரே உறைக்குள் எப்படி இரண்டு வாட்கள் இருக்க முடியும்? 

டி.கே.எஸ் முரட்டு அரசியல்வாதி. ‘ஆமாய்யா..சி.எம் ஆகணுங்கிறதுதான் என் கனவு..அதுக்கு என்னங்கறீங்க?’ என்று வெளிப்படையாகவே கேட்கக் கூடிய ஆள். அதே சமயம் ‘எனக்கு வயசு இருக்கு..சீனியர்ஸ் எல்லாம் பதவியை அனுபவிக்கட்டும்..எனக்குக் காலம் வரும்’ என்று ஊடக நேர்காணல்களில் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர். அவரது சாதிய செல்வாக்கு, பணம், கூட்டத்தைச் சேர்க்கும் திறன் என்பதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் அவரது கனவு அடைந்துவிடக் கூடிய தொலைவில்தான் இருக்கிறது. பா.ஜ.கவில் என்றில்லாமல் காங்கிரஸ் கட்சியிலேயே கூட இவர் பேசுவதைக் கேட்டு அலறுகிறவர்கள் உண்டு. இப்பொழுது அவரது அடிமடியில் கை வைத்திருக்கிறார்கள்.

‘குஜராத் எம்.எல்.ஏக்களை காப்பாத்த சாய்புரு தலையை நீட்டுனதுதான் பெரிய சிக்கல்’ என்று ஒரு கட்சிக்காரர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாஜகவின் அமித்ஷாவுக்கும் சோனியாவின் வலது கை அகமது பட்டேலுக்கும் பழைய பகைமை இருக்கிறது. இருவரும் குஜராத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிடுகிறார்கள். சமயம் பார்த்து சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சியை விட்டுக் கிளம்பிவிட அவரோடு சேர்ந்து சில எம்.எல்.ஏக்களும் கிளம்பியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு நாற்பத்தியேழு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் அகமது பட்டேல் எம்.பி ஆக முடியும். நாற்பத்து நான்கு பேர்தான் மிச்சமிருக்கிறார்கள். தேசியவாத காங்கிரஸின் உதவியோடு வென்றுவிடலாம் என்றாலும் கூட இருக்கிறவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் குஜராத்தின் கூவாத்தூரை பெங்களூரில் வடிவமைத்திருந்தார்கள்.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் கைவசமிருக்கும் பெரிய மாநிலம் கர்நாடகாதான். தென்னிந்தியா என்பது இன்னமும் பாதுகாப்பு. நாற்பத்து நான்கு பேரையும் இங்கே மாநிலம் கடத்தியிருக்கிறார்கள். ஆன போதிலும் கூட கட்சித்தலைமை உட்கட்சிக்காரர்களைவிடவும் குஜராத்திய தொழிலதிபர்களிடம்தான் பெரும்பாலான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறது. தமிழகத்தைப் போலவே காங்கிரஸ் கட்சியினரும் இங்கே அடக்கித்தான் வாசித்திருக்கிறார்கள். ‘எலக்‌ஷன் வரப் போகுது..நமக்கு எதுக்கு வம்பு’ என்கிற மனநிலைதான். ஆனால் டி.கே.எஸ் இதனை வேறு மாதிரியாகப் பார்த்திருக்கிறார். இது நல்ல வாய்ப்பு அல்லவா? கட்சித்தலைமையின் பார்வை நேரடியாகத் தம் மீது விழும். சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் கிடைக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் களத்தில் இறங்கியிருக்கிறார்.

முந்தின நாள் இரவில் அவர் எம்.எல்.ஏக்களோடு ரிசார்ட்டில் இருக்க நள்ளிரவில் டூரிஸ்ட் வாகனத்தில் வந்தவர்கள் வீடு புகுந்திருக்கிறார்கள். ‘இதெல்லாம் நாங்க மாசக்கணக்குல ப்ளான் போட்டது..அவர் எம்.எல்.ஏக்களை காப்பாற்றுவதற்கான பழிவாங்குகிற நடவடிக்கை இல்லை’ என்று யார் சொன்னாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை. 

அடுத்த வருடம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ‘லிங்காயத்துக்களுக்குத் தனி மதம்’ ‘இந்திரா உணவகம்’ என்றெல்லாம் முதலமைச்சர் சித்தராமைய்யா காய் நகர்த்திக் கொண்டிருக்க பாஜக ஒரேயடியாகப் போட்டிருக்கிறது. ‘இந்த ஆட்சியே ஊழல் ஆட்சிதான்’ என்பதுதான் அவர்களின் கோஷமாக இருக்கிறது. முன்பு இதே கோஷத்தை முன்வைத்துத்தான் எடியூரப்பா தோற்கடிக்கப்பட்டார். அவரைவிடவும் காங்கிரஸ்தான் ஊழல்கட்சி என்று காட்டுவதுதான் பாஜகவின் அஸ்திரமாகியிருக்கிறது. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிவிட்டால் பாஜக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க முடியாது என்று சொல்ல முடியும். பாஜகவின் வலிமையான திட்டமிடலுக்கும் அதிரடித் தாக்குதலுக்கு எதிர்நின்று விளையாடுகிற வலிமையை காங்கிரஸூம், ராகுல்காந்தியும் இழந்துவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. பயப்படுகிறார்கள். கர்நாடகாவில் அடுத்தடுத்து இத்தகைய அதிரடித் தாக்குதல் நடைபெறும் என்றுதான் காங்கிரஸ் கட்சியினர் பயப்படுவதை நேரடியாக உணர முடிகிறது. தங்களை defensive mode இல் வைத்திருக்கும் போது பாஜக அடித்து ஆடத் துவங்கியிருப்பதுதான் அவர்களை ஆட்டம் காணச் செய்கிறது. ‘டி.கே.எஸ் மேலேயே கை வெச்சுட்டாங்க..நாம எல்லாம் எம்மாத்திரம்’என்ற மனநிலைக்குக் கொண்டு வந்துவிட்டால் தேர்தல் களத்தில் பாஜகவின் பணி சுலபமாகிவிடும்.

தமிழக பத்திரிக்கையாளர் ஒருவர் அங்கே நின்றிருந்தார். ‘டி.கே.எஸ்கிட்ட ஒரு இண்டர்வியூ வாங்கணும்..வீட்டுக்குள் போக யாரைப் பிடிக்கணும்?’ என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போதைக்கு யாரையும் உள்ளே விடுவதாகத் தெரியவில்லை. இரவில் அவரே பத்திரிக்கையாளரைச் சந்திப்பார் என்றார்கள். ‘உங்களுக்கு கன்னடம் தெரியுமா?’ என்றார் அந்தப் பத்திரிக்கையாளர்.

‘மொழிபெயர்க்கிற அளவுக்கெல்லாம் தெரியாதுங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். 

மஹாராஷ்டிரா, கோவாவில் பாஜக ஆட்சி. ஆந்திராவில் பாஜகவின் தோழர் சந்திரபாபுவின் ஆட்சி. தெலுங்கானாவில் கேட்காமலேயே பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கும் டி.ஆர்.எஸ்ஸின் ஆட்சி. தமிழகத்தில் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கேரளாவும் கர்நாடகாகவும்தான் மிச்சம். கர்நாடகாவில் இந்த லட்சணம். கேரளாவுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

யாரோ எப்படியோ போகட்டும். 

பரப்பன அக்ரஹாராவுக்கு சசிகலாவைச் சந்திக்க தினகரன் எப்பொழுது வருவார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன். பார்த்துவிட்டு வந்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். 

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பாஜக அடித்து ஆடத் துவங்கியிருப்பதுதான் அவர்களை ஆட்டம் காணச் செய்கிறது//
இன்றைய தமிழக அரசியல் நிலையை கடந்த வருடத்தின் இதே நாளில் யாராவது கற்பனையாவது செய்திருப்பார்களா?.

Anonymous said...

எளிய வரை
எள்ளு தலும் excuse me என
தள்ளு தலும் நம தருமம் மாச்சே.

Vinoth Subramanian said...

Nice article mani sir!!! Like savukku...