Aug 8, 2017

மரம் வைக்கப் போகிறீர்களா?

மைவிழி அழைத்து ‘அண்ணா செடி வேணும்..எங்க கிடைக்கும்? எங்க ஊர்ல வைக்கிறேன்’ என்று சொன்ன போது எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. மரக்கன்றுகளை நடுவது பெரிய காரியமில்லை. காப்பாற்றி மேலே கொண்டு வருவதில் இருக்கிறது சூட்சமம். தண்ணீர் ஊற்றுவதிலிருந்து ஆடு மாடுகளை கொண்டு வந்து மேய்க்கவிடுகிறவர்களிடமிருந்து காப்பாற்றுவது வரை மற்றவையெல்லாம் இரண்டாம்பட்ச காரியங்கள் என்றால் உள்ளூர்க்காரர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுவதைச் சமாளிப்பதுதான் பெரிய காரியம். ‘பொழப்புக் கெட்டுத் திரியறாங்க’ என்பதில் ஆரம்பித்து வீட்டில் இருப்பவர்களே கூட எதையாவது சொல்வார்கள். செடி வைக்கிறேன் மரம் வைக்கிறேன் என்று ஆரம்பித்தவர்கள் இதையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்.

பொதுவாகவே களத்தில் இறங்கிச் செயலாற்றும் போது இப்படியான எதிர்மறையான எதிர்வினைகளைச் சந்தித்தால் சோலி சுத்தம். பெரும்பாலானவர்களின் ஆர்வம் வற்றிவிடும். ‘இந்த நாடும் நாட்டு மக்களும்..’ என்று ஒதுங்கிக் கொள்கிறவர்கள்தான் அதிகம். சிலர் தப்பித்துவிடுவார்கள். ‘இப்படி வந்தாத்தானே அப்படிச் சொல்லுவீங்க..நான் அப்படி வர்றேன்’ என்று டேக்கா கொடுத்து மாற்று வழிகளைத் தேர்ந்தெடுத்துச் செயலாற்றுகிறவர்கள் வென்றுவிடுகிறார்கள். வெறும் வாயை மெல்கிறவர்களிடமிருந்து தப்பி நம்முடைய ஆர்வமும் உற்சாகமும் குன்றிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான அற்புதமான வழியும் கூட.

SayTrees என்றொரு அமைப்பினர் பெங்களூரில் செயல்படுகிறார்கள். NGO. என்.ஜி.ஓ என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜிதான். முக்கால்வாசிப்பேர்கள் பணத்தைச் சுருட்டுவதற்காக என்.ஜி.ஓ என்று சொல்லிக் கொண்டு வெப்சைட்டும், கையேடுமாக இருக்கிறவர்கள்தான். SayTrees தங்களை என்.ஜி.ஓ என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் செயல்படுகிறார்கள். நிறையத் தன்னார்வலர்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள், பெரும் நிறுவனங்களுடன் பேசி அவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்வது என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஏரிக்கரை, வனப்பகுதி என்றெல்லாம் தேடி செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு சதவீதம் வெற்றியடைந்தார்கள் என்று தெரியவில்லை. உறுதியாகச் சொல்ல முடியும். அதன் வெற்றி சதவீதம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். எங்கள் தெருவில் ஒரு வேம்புச் செடியை வளர்க்க முடிவதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லி இலைகளை மொத்தமுமாக உருவிக் கொண்டு போய்விடுகிறார்கள். ஒரு நாள் தெருவில் நின்று சாபம் கூட விட்டேன். யார் காது கொடுக்கிறார்கள்? யுகாதி அன்று அடியோடு முறித்துச் சென்றிருந்தார்கள். இத்தனைக்கும் இது பெரு நகரம். படித்தவர்கள், ஐடி ஆட்கள் வாழும் பகுதி. எதுவுமே வேலைக்கு ஆவதில்லை. மனிதர்கள் எல்லாப் பக்கமும் மனிதர்களாகவேதான் இருக்கிறார்கள். ‘தாம் வாழ வேண்டும்’ அவ்வளவுதான்.

ஏரிக்கரை, குடியிருப்புப் பகுதிகளில் மரம் நட்டுவதோடு நிறுத்தியிருந்தால் Saytrees அமைப்பும் கூட்டத்தோடு கூட்டமாகத் தேங்கிப் போயிருப்பார்கள். ஆனால் இவர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். எலெக்ட்ரானிக் சிட்டியில் பாலத்தில் நெட்டுக்குத்தலாக செடிகளை நட்டு சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிலும் ஆயிரம் பிரச்சினைகள்- செடிகளைப் பிடுங்கிக் கொண்டு செல்கிறவர்கள்- வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறார்களாம். நீரூற்றுவதற்கான குழாயை கத்தரித்து எடுத்துச் செல்கிறவர்கள். மோட்டார் பம்ப்பை ஆட்டையப் போட்டவர்கள் என்று பல சோதனைகள். ஆனாலும் விடாமல் அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி நிறைய இடங்களில் அமைக்கவிருக்கிறார்களாம். 



இதன் மீது எனக்குப் பெரிய ஆர்வமில்லை. ஆனால் மியவாக்கி முறையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமான செயல். மியவாக்கி முறை என்பது அடர்வனம். மைவிழியிடம் இதைத்தான் சொல்ல வேண்டும் என நினைத்தேன். மைவிழி மட்டுமில்லை- மரம் வைக்க விரும்புகிற யாராக இருந்தாலும் சரி- இதை முயற்சித்துப் பார்க்கலாம். ஒரேயிடத்தில் நிறையச் செடிகளை வைப்பது. முப்பது செண்ட் இடமிருந்தால் ஆயிரக்கணக்கான செடிகளை நட்டுவிட முடியும். முதலில் இரண்டடி ஆழத்துக்கு மண்ணை அள்ளி வெளியில் கொட்டி உரம் கலந்து மீண்டும் குழியை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நெருக்கமாக செடிகளை நட்டுவிடலாம். ஒவ்வொரு செடிக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதில்லை. இடம் முழுமைக்கும் சேர்த்து கம்பி வேலி அமைத்துக் கொள்ளலாம். ஒன்றரை வருடங்கள் வரை நீரூற்ற வேண்டும். சொட்டுநீர்பாசனம் அமைத்துக் கொள்ளலாம். இப்படித் தொடக்கத்தில் சில செலவுகள் உண்டு. 

ஒரு முறை செலவு செய்து செயல்படுத்திவிட்டால் தொண்ணூறு சதவீதம் மரங்களை நிச்சயமாகக் காப்பாற்றிவிட முடியும். இரண்டாண்டுகளில் மரங்கள் நெருக்கமாக வளர்ந்துவிடும். அதன் பிறகு மனிதர்களே உள்ளே நுழைவது சிரமமாகத்தான் இருக்கும். அவ்வளவு நெருக்கமாகத்தான் மரங்களை வைக்கிறார்கள். மியவாக்கி முறையில் எல்லா வகையான செடிகளையும் கலந்துதான் வைக்க வேண்டும். அதனால் சரியான திட்டமிடல் வேண்டும். வேம்பு மெதுவாக வளரும்; புங்கன் வேகமாக வளரும். ஒன்றின் நிழல் இன்னொன்றைச் சாகடித்துவிடக் கூடாது. அனுபவஸ்தர்களிடம் பேசி திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் மியவாக்கி முறையில் இப்படியோர் அடர்வனத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே களம் அறக்கட்டளை பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறேன்.


SayTreesன் இந்தச் சலனப்படத்தைப் பார்த்தவுடன் சாலையோர மரங்கள் வைத்து செடிகளைக் கொல்வதைக் காட்டிலும் இப்படி ஊருக்கு ஓர் அடர்வனத்தை அமைத்தால் போதும் என்று தோன்றுகிறது. எட்டு மாதங்களுக்கு முன்பாக இந்த அடர்வனத்தை அமைத்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே இடம் கொடுத்திருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் பணம் கொடுத்திருக்கி்றார்கள். கிட்டத்தட்ட நாற்பது வகையான மரங்கள். மரங்களை இன்னமும் நெருக்கமாக வைத்திருக்க வேண்டும். பறவைகள், பூச்சிகளைத் தவிர நாய் நரி கூட உள்ளே நுழையாதபடிக்கு இருக்க வேண்டும். ஆனால் தவறில்லை. இதுவே பெரிய சாதனை. நகரத்துக்குள் ஒரு வனம்.

மரம் வைக்கிறேன் பேர்வழி என்று வீட்டில் இருப்பவர்களிடமும் ஊரில் இருப்பவர்களிடம் திட்டு வாங்கி ஆட்களைத் திரட்டி உழைப்பைச் செலுத்தி குழி தோண்டி சுற்றிலும் பாதுகாப்புக்கு எனச் செலவு செய்து மரங்கள் மேலே வருமா வராதா என்று தெரியாமல் வெற்றி சதவீதம் வெகு குறைவாக இருப்பதைக் காட்டிலும் இத்தகைய மாற்று முறைகளை கைக் கொள்ளலாம். பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும். அடர்வனங்களின் குளிர்ச்சியும் விளைவுகளும் அக்கம்பக்கம் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர்கள் வரைக்கும் இருக்கும். வெறுமனே குளிர்ச்சி மட்டுமில்லை- பறவைகள் வாழ்வதற்கான இடத்தையும் உருவாக்கிக் கொடுத்த மாதிரி ஆகிவிடும். மரம் வைக்க விரும்புகிற யாருமே இந்த மியவாக்கி முறை பற்றி பரிசீலிக்கலாம். 

விவரங்கள் வேண்டுமானால் கேளுங்கள். சரியான ஆட்களைக் கோர்த்துவிடுகிறேன்.

3 எதிர் சப்தங்கள்:

kailash said...

Miyawaki methods and planting on streets and other places is totally different , we need both methods . Each has its merits and demerits. Don't discourage by saying planting trees on street is of no use . Dense Forest alone is not enough and it requires lot of work . I agree there are difficulties in maintaining trees in streets but miyawaki method needs own space and lot of funding . If you have space and funding go for Miyawaki - dense forest method . If you plant trees in streets make sure you maintain it or ensure maintenance from neighbors in that area. Miyawaki method is mostly applicable for schools/colleges/private lands where as planting trees is suitable for public place.

MV SEETARAMAN said...

yes i agree with kailash, the best method in city area is to make the PARK allotted place is protected by planting multiple trees with the local NGO type participation, for this local flat/housing society can be tapped. they will respond as it involves their wellbeing

in small towns, the fallow land owners may be requested to allow for fencing and planting

சேக்காளி said...