Aug 6, 2017

மாற்றிவிடுவார்களா?

பத்து நாட்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அவரை மாத்திடுவாங்க போலிருக்கு’ என்றார். வருத்தமாகத்தான் இருந்தது. அவர் சொன்னது உதயச்சந்திரன் இ.ஆ.ப குறித்துத்தான். அப்பொழுதே எங்கேயாவது அரசல்புரசலாகவாவது எழுத வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இத்தகைய விவகாரங்களில் அவசரக் குடுக்கையாகச் செயல்பட வேண்டியதில்லை.  பொதுவாகவே எந்த அதிகாரிகள் மக்களிடம் ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் தட்டி வைப்பதுதான் அரசியல்வாதிகளின் வழக்கம். கொஞ்சம் மேலே துருத்துவதாக இருந்தாலும் தட்டுவார்கள்; இடத்தை மாற்றிவிடுவார்கள். இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றெல்லாம் இல்லை- எல்லாக் கட்சியின் ஆட்சியிலும் இதுதான் வாடிக்கை. கிட்டத்தட்ட அத்தனை மாநிலங்களிலும் இதுதான் நிலவரம். 

அதனால்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று டேராடூனில் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெறும் போது 'Anonymity' என்பது அவர்கள் உருவேற்றும் தாரக மந்திரங்களில் ஒன்று. ‘செயல்களை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்- புகழை ஆட்சியாளர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்கிறார்கள். மேலே சொன்ன அதே காரணம்தான். ஊடகங்களிலும் மக்களின் மத்தியிலும் நல்ல அதிகாரிகளைப் பற்றிய வெளிப்படையான பாராட்டுக்கள் ஆட்சியாளர்களை சலனமுறச் செய்வது இயல்பானதுதான்.

பள்ளிக்கல்வித்துறையிலிருந்து சீர்திருத்த அறிவிப்புகள் வெளியான சமயங்களில் ‘உதயச்சந்திரன் கலக்குகிறார்’ என்ற யாராவது சொல்லும் போது ‘செங்கோட்டையன் அவரை விட்டு வெச்சிருக்காருல்ல..அதுதான் முக்கியம்’என்று தோன்றாமல் இருந்ததில்லை. அது சரிதானே? அமைச்சர் விரும்பாவிட்டால் அதிகாரி எப்படித் தொடர முடியும்?.

தமிழக அரசியல் நிலவரமும் அதற்கேற்ப இருந்தது. குழப்பங்களும் நிலையின்மையும் ஆட்சியை அசைத்துக் கொண்டிருந்தன. அடுத்தவர்களைப் பற்றி யோசிப்பதைவிடவும் தமது பதவிகளை எப்படி நிலைப்படுத்திக் கொள்வது என்பதில்தான் ஆட்சியாளர்கள் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள். இந்த வாய்ப்பை உதயச்சந்திரன் பயன்படுத்திக் கொண்டு வேகமாகக் காரியங்களை ஆற்றினார். சீர்திருத்த அறிவிப்புகள், பாடத்திட்ட மாற்றம், அதற்கான கருத்தரங்குகள் என்று தமிழகம் முழுவதிலும் பள்ளிக் கல்வித்துறையின் மாறுபாடுகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்த ஆட்சியில் செயல்படக் கூடிய துறைகளாக விளங்கிய ஒன்றிரண்டில் பள்ளிக் கல்வித்துறை முக்கியமானதாக இருந்தது என்றால் அது மிகையில்லை. 

இதுவரையிலும் அரசு வழங்கிக் கொண்டிருக்கும் இலவச செருப்புகளை அரசுப்பள்ளி மாணவர்கள் ஏன் விரும்பி அணிவதில்லை என்பதில் ஆரம்பித்து, இலவச புத்தகப்பைகளில் வைக்கக் கூடிய புத்தக அறைகளின் எண்ணிக்கை, தைத்து வழங்கப்படும் சீருடைகளில் உள்ள குறைபாடுகள் வரைக்கும் பல்வேறு கீழ்மட்ட பிரச்சினைகளையெல்லாம் உதயச்சந்திரன் தெரிந்து வைத்திருந்தார். இதையெல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும் அவரிடம் தெளிவு இருந்தது. ‘இதில் எல்லாம் இவர் கை வைத்தால் எத்தனை கோடி ரூபாய் லஞ்சமாகச் செல்வது தடுக்கப்படும்’ என்று கேள்வி எழாமல் இல்லை. எத்தனை டெண்டர்கள்? எத்தனை ஒப்பந்ததாரர்கள்? எத்தனை கமிஷன்கள்? எல்லாவற்றுக்கும் மிகப்பெரிய தடுப்பணையை மெல்ல மெல்லக் கட்டிக் கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக இருந்ததைப் போல இப்பொழுது சூழல் இல்லை. தமிழக அரசின் நிலைமை இன்று மாறியிருக்கிறது. ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஓபிஎஸ்ஸால் பெரிய அளவில் எதையும் செய்ய முடியவில்லை. தினகரனுக்கும் கட்சியிலும் மக்களிடத்திலும் பலமில்லை என்பது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. திமுகவும் அடக்கி வாசிக்கிறது. 2019 ஆம் ஆண்டு வரக் கூடிய மத்திய பொதுத்தேர்தல் வரைக்கும் இந்த ஆட்சிக்கு பெரிய பாதகம் இல்லை என்ற நிலைமைதான் நிலவுகிறது. இப்பொழுது வழக்கமான ஆட்சியாளர்களாக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறையின் சீர்திருத்தங்களில் ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பைச் செய்த எல்லோருக்குமே அடிமனதில் ஒரு பயமில்லாமல் இல்லை- ‘இவரை மாற்றினால் அத்தனையும் வீணாகப் போய்விடும்’ என்பதுதான் அந்த பயம். சமீபத்தில் விகடனில் ஒரு கிசுகிசு பாணியில் செய்தி வெளியாகியிருந்தது. ‘இந்த ஆட்சிக்கு ஒரே ஒரு நல்ல பெயர், அந்தத் துறையிலிருந்துதான் கிடைத்து வருகிறது. அதை அப்படியே விட்டுவிடுவார்களா அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அவர்களின் பி.ஏக்கள்? மற்ற துறைகளில் நடப்பது மாதிரியான இடமாற்ற வசூலை இங்கும் தொடங்கினார்கள். நல்ல பெயர் வாங்கித் தரும் அந்த அதிகாரி, “இதையெல்லாம் செய்து தர முடியாது” என்றாராம். “அப்படியானால் இந்தத் துறையில் நீங்கள் இருக்க முடியாது” என்று அவருக்குப் ‘பாடம் கற்றுத் தரும்’ வகையில் மிரட்டலைத் தொடங்கிவிட்டார்கள். அவருக்குத் துறை மாற்றம் விரைவில் இருக்கும் என்கிறார்கள்!’. இதை அவர்களால் வெளிப்படையாக எழுதியிருக்க முடியும். ஆனால் அவர்களும் கூட ‘நாம தேவையில்லாமல் பிரச்சினையை பெரிதாக்க வேண்டியதில்லை’ என்று நினைத்திருக்கக் கூடும். அது சரியான அணுகுமுறைதான்.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியில் அறிவிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வந்த போது சவுக்கு சங்கரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. ‘ஃபெயிலானவங்களை விடுங்க பாஸ்..ஒரு மார்க்ல முதலிடத்தை கோட்டை விட்டவனுக்கு விழக் கூடிய அர்ச்சனைகளை நினைச்சுப் பாருங்க’ என்றார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் குத்திக் காட்டுவார்கள். வீட்டிலேயே அர்ச்சனை விழும். ‘அன்னைக்கு அந்த படத்துக்குப் போகாம படிச்சிருந்தா ஒரு மார்க் சேர்த்து வாங்கியிருக்கலாம்ல’ என்பதில் ஆரம்பித்து எல்லாவிதத்திலும் அவனை குற்றவுணர்ச்சிகளால் நிரம்பியனவாக்கிவிடுவார்கள். அப்பொழுதும் கூட அவர் உதயச்சந்திரனைப் பாராட்டியதைவிடவும் கே.ஏ.எஸ்ஸை அதிகமாகப் பாராட்டினார். ‘அவர் விட்டு வெச்சிருக்காருங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ‘இவர் என்ன இப்படி பாராட்டுகிறார்?’ என்று கூட நினைக்கத் தோன்றியது.

அவரது கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது. திரு. உதயச்சந்திரனை மாற்றப்போவதாக சவுக்கு தளத்தில் சங்கர் எழுதியிருக்கும் கட்டுரை பரவலான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இணையவெளியிலும் வாட்ஸப் முதலான சமூக ஊடகத் தளங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் கட்டுரையின் வழியாக பல தரப்பினரும் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்கிற ப்ளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

தமிழக மாணவர்களைப் பெருமளவில் அச்சுறுத்தும் நீட் தேர்வு, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் அறியாமை, தரம் குறைந்திருக்கும் பாடத்திட்டம் என சகலமும் பூதாகரமான பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கின்றன. தமிழகம் முழுவதும் பரவலாகச் செயல்படுத்தப்பட்டிருக்கும் பள்ளிக்கல்வி குறித்தான மாற்றங்கள், ஆசிரியர் திறன் மேம்பாட்டுச் செயல்த்திட்டங்கள், பயிற்சியரங்குகள், பாடத்திட்டச் சீரமைப்புக் குழுக்கள் என பல்வேறு நடவடிக்கைகள் ஆசிரியர்களிடமும் கல்வித்துறை ஆர்வலர்களிடமும் ஒருவிதமான நம்பிக்கை ஒளியை உருவாக்கியிருக்கின்றன. தமிழகக் கல்வித்துறையில் இத்தருணம் மிக முக்கியமானது. உதயச்சந்திரன் மாதிரியான திறனூக்கமும் ஆர்வமும் கொண்ட அதிகாரிகள் இத்துறைக்கு இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறார்கள்.

எங்கள் ஊர் எம்.எல்.ஏ என்ற அடிப்படையிலும் துறையின் அமைச்சர் என்கிற முறையிலும் கே.ஏ.எஸ் அவர்களிடம் வெளிப்படையாக முன்வைக்கும் கோரிக்கை இதுதான் - தங்களின் ஆட்சி ஸ்திரமாகிவிட்டது. இன்னமும் இரண்டாண்டுகளுக்காவது திரு.உதயச்சந்திரன் இத்துறையிலேயே இருக்கட்டும். தமிழக அரசியல் வரலாற்றில் எப்பொழுதும் நினைவில் நிற்கும் அமைச்சர்களின் பெயர்களின் வெகு சொற்பம். தங்களின் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெறட்டும்.  அதற்கு உதயச்சந்திரனால் மட்டுமே உதவ முடியும்.

4 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

ஏன் மாற்றக் கூடாது என்பதை அவர் உரையை கவனித்தவர்கள் உணர்வர். இந்த வருத்தம் தரும் தகவலை மக்களிடம் சேர்க்க வேண்டும். வேறென்ன செய்ய.?

Unknown said...

தடுக்க ஏதேனும் வழி உள்ளதா?

சேக்காளி said...

நாம திருந்த மாட்டோமாம். செங்கோட்டையனும், பழனிச்சாமியும் மட்டும் திருந்தணுமாம்.
நல்லாருக்குடே(ய்) ஒங்க ஞாயம்.

Vinoth Subramanian said...

Very sad indeed.