Aug 3, 2017

நீ பெரிய காளமேகப்புலவரா?

காளமேகப்புலவரின் சரித்திரம் வெகு சுவாரசியமானது. 1902 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்று இணையத்தில் சிக்கியது. இப்படி பழங்காலச் சரக்கைத் கண்டுபிடிக்க வேண்டுமானால் நூலகம்.நெட் நல்ல தளம். அங்கு பல குப்பைகளும் உண்டு. அதிலிருந்து ரத்தினங்களை நாம்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். காளமேகப்புலவரின் சரித்திரம் அப்படியானதொரு புத்தகம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திறந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் துளித்துளியாக வாசித்து முடித்துவிட்டேன். 

ஆரம்பத்தில் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தது. கோயிற் றாசி ஒருத்தி என்றிருந்தது. கோயில் தாசி என்று அனுமானிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. பத்துப் பக்கங்களை தம் கட்டிவிட்டால் அதன் பிறகு புரிந்து கொள்வதில் சிக்கல் இல்லை. 

கும்பகோணத்து பிராமணன் ஒருவன் திருமால் கோவிலில் சமையல் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மோகானங்கி என்ற தாசி மீது காதலும் காமமும். அவளும் பிராமணனுடன் இருக்கிறாள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவள் சைவத்தைச் சார்ந்தவள். அவள் சிவன் பாடல்களைக் கோவிலில் பாடும் போது மற்ற தாசிகள் சிரிக்கிறார்கள். ‘ஐயங்கார் கூட இருந்துட்டு சிவன் கோயிலில் பாடுறா’ என்று பரிகசிக்க அவளுக்கும் சுள்ளென்றாகிவிடுகிறது. அடுத்த முறை பிராமணன் வரும் போது அவனை வெளியில் நிறுத்தியபடியே ‘நான் உனக்கு வேணும்ன்னா தீச்சை வாங்கிட்டு சைவன் ஆகிடு’ என்கிறாள் சொல்கிறாள் மோகனாங்கி. அவனுக்கு அவன் மீது இருந்த காதலுக்கு சைவத்துக்கு மாறுவதெல்லாம் பிரச்சினையில்லை. ஜாகையை மாற்றி சிவன் கோவிலில் சமையல்காரன் ஆகிவிடுகிறான்.

இப்படி கொஞ்ச நாள் லவ்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.  

அதே ஊரில் வேறொரு சிவபக்தன் பூஜை புனக்ஸ்காரம் என்று வாழ்ந்து வருகிறான். தீவிரமான தவம். அவன் மீது பரிதாபம் கொண்டு அவனைப் பார்க்க அகிலாண்ட நாயகியே சிறு பெண்ணின் வடிவத்தில் வருகிறார். சாமிகள் உடனே வரம் கொடுத்துவிடுவார்களா என்ன? விளையாட்டுக் காட்டத்தானே செய்வார்கள்? வாய் நிறைய வெற்றிலையோடு உபாசகனிடம் சென்று ‘நீ வாயைத் திறப்பியாமா..நான் உள்ளே துப்புவேனாம்’ என்கிறார். கடுப்பாகத்தானே செய்யும்? கடுப்பானவன் ‘அடியே...யாருன்னு நினைச்ச?  பல்லைக் கழட்டிடுவேன் பார்த்துக்க’ என்று துரத்திவிடுகிறான்.

அந்த நேரத்தில் பிராமணன் மோகானங்கியிடம் ‘நீ வேலையெல்லாம் முடிச்சுட்டு போகும் போது எழுப்பு..நாம சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம்’ என்று சொல்லிவிட்டு மண்டபத்திலேயே படுத்துக் கொள்கிறான். மோகானங்கி தனது கோயில் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு வந்து பிராமணனைத் தேடிப் பார்க்கிறாள். ஆளைக் காணவில்லை. எங்கேயோ மேயப் போய்விட்டான் போலிருக்கிறது என்று நினைத்தபடியே அவளும் கிளம்பிச் சென்றுவிடுகிறாள். ராத்திரி நேரம் அல்லவா? கண்ணும் அவ்வளவாகத் தெரியவில்லை. வெற்றிலைக்குதப்பலோடு வந்த மகாதேவி இவனிடம் வாயைத் திறக்கச் சொல்லவும் அவன் மோகனாங்கி என்று நினைத்துக் கொள்கிறான். ‘இவ சொல்லுறதைச் செய்யலைன்னா அவளுக்கு கோபம் வந்துடுமே’ என்று பயந்து வாயைத் திறக்க அவன் வாயினுள் மகாதேவி தாம்பூலத்தை உமிழ்கிறாள். 

மொத்த அருளும் எச்சில் வழியாக உள்ளிறங்கி பிராமணன் காளமேகப்புலவன் ஆகிறான். மழை பெய்வது போல பாடல் பாடத் துவங்குகிறார்.

நம்புகிறோமோ இல்லையோ- சுவாரசியமாக இருக்கிறதல்லவா? யாராவது வந்து வாயைத் திறக்கச் சொன்னால் எச்சில் என்றும் பார்க்காமல் வாயைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். காலாகாலத்துக்கும் நம் பாடல்கள் நின்றுவிடும்.

நூலின் முதல் ஒன்றிரண்டு பக்கங்களில் இந்தக் கதை. பெயருக்குத்தான் சரித்திரம். காளமேகப்புலவரின் காலம் கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. 1902 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட புத்தகத்தில் அவ்வளவுதான் எதிர்பார்க்க வேண்டும். மற்றபடி நூல் முழுமையும் காளமேகப்புலவரின் பாடல்கள் மட்டும்தான். ‘மும்மூர்த்திகள், அவர்களது உணவு என்பதையெல்லாம் சேர்த்து ஒரு வெண்பா பாடுய்யா’என்று யாரோ கேட்க அதற்கு ஒரு பாடல். திருமாலின் அவதாரம் பத்தையும் வெண்பாவில் கொண்டு வரச் சொன்னால் அதற்கு ஒரு வெண்பா. இப்படியேதான் நூல் முழுவதும்.

தமிழ் மொழியின் வீச்சையும் ஆழ அகலத்தையும் புரிந்து கொள்ள விரும்பினால் காளமேகப்புலவரின் பாடல்களையெல்லாம் நேரம் கிடைக்கும் போது புரட்டிப் பார்க்க வேண்டும்.

ஊரில் பந்தாகாட்டி புலவன் ஒருவன் தனது வேலையாளைக் கடைக்கு அனுப்பி ‘மழை, பசு, ரத்தினம் மூணும் இருக்கிற ஒரு ஐட்டமா வாங்கிட்டு வா’ என்றானாம். அந்தப் புலவன் தன்னுடையை புலமையைக் காட்டுகிறானாம். எங்கள் ஊர் மூக்குத்தி கடையில் சென்று அப்படிக் கேட்டால் கையில் சிக்கியதை எடுத்துச் சாத்திவிடுவான். அந்தக் கடைக்காரன் ஒரு அப்புராணி. மண்டை காய்ந்திருக்கிறான். அந்தப்பக்கமாக இருந்த காளமேகப்புலவர் ‘காராமணியைக் கொடுத்தனுப்பு’ என்றாராம். கார்- மேகம்-மழை; ஆ- பசு; மணி என்றால் உங்களுக்கே தெரியும். தனியாகச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? 

நூலகம்.நெட் தளத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேனா என்று நினைவில் இல்லை. வாய்ப்பிருக்கும் போது துழாவி அந்தக் காலத்துப் புத்தகங்களை எடுத்து வாசிப்பதுண்டு. பழைய காலத்து நூல்தான் முதல் விருப்பம். ‘நீ ஏன் எப்பவும் பகலிலேயே பஸ்ல போற?’ என்று ஒரு நண்பர் கேட்டார். பலருக்கும் பகல் நேர பேருந்துப் பயணம் என்பது கடுப்பேற்றக் கூடியது. வெயிலும் கசகசப்புமாக முகத்தைச் சுளிப்பார்கள். எனக்கு அப்படியில்லை. ஒருசேர நான்கைந்து மணி நேரம் கிடைக்கும். ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடலாம். கிண்டில் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். காளமேகப்புலவர் சரித்திரம் மாதிரியான - அச்சில் கிடைக்காத ஆனால் ஆன்லைனில் கிடைக்கக் கூடிய புத்தகங்களை வாசிக்க அதுதானே தோது?

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//நூலகம்.நெட் நல்ல தளம். அங்கு பல குப்பைகளும் உண்டு. அதிலிருந்து ரத்தினங்களை நாம்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்.//

Saravanan Sekar said...

மணி என்றால் உங்களுக்கே தெரியும். தனியாகச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? /

Vaare VA.. Rathiname. Manikandare... Semma... Epdi boss ungalaala mudiyuthu...

இரா.கதிர்வேல் said...

மணிகண்டன் சார்,
சென்னைக்கு வந்த புதிதில் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்வதற்காகவே பகலில் பயணம் செய்து சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வேன்.

நானும் அலுவலகத்திற்கு செல்வதற்கான இரண்டு மணி நேர பேருந்து பயணத்தில் தினமும் புத்தகம் படித்துக்கொண்டுதான் செல்கிறேன். கிண்டில் வாங்கலாம் என ஒரு திட்டம் இருக்கின்றது. தினமும் நான்கு ஐந்து புத்தகங்களுடன் பேக்குடன் அலுவலகத்திற்கு செல்வது பெரும்சுமையாகவும் இருக்கிறது. கிண்டில் வாங்கிவிட்டால் அந்த பிரச்சனை ஒழிந்து விடும் என நினைக்கிறேன். கிண்டில் கருவி வாங்கிய பின் மறக்காமல் அதைப்பற்றிய பதிவை இட்டு விடுங்கள். நான் கிண்டில் பற்றி சேகரித்த தகவல்களை இங்கு தருகிறேன். உங்களுக்கு உதவலாம்.

http://www.writerpara.com/paper/?p=11641
http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7163-217978-read-this-before-you-buy-kindle-book-reader.album
http://thiruttusavi.blogspot.in/2015/07/blog-post_51.html
https://www.youtube.com/watch?v=-FJqUSExwHk
http://southindianhistory-india.blogspot.in/2014/10/reading-experience-on-kindle-paperwhite.html

Kindle Paper White நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.... உங்களுடைய கிண்டில் ஆராய்ச்சியையும் பதிவாக இடுங்கள் மற்றவர்களுக்கும் பயன்படும். வாங்கிடுவோம்.

இப்படிக்கு,
உங்கள் வாசகன் கதிர்வேல்.

Anonymous said...

http://noolaham.net/project/112/11195/11195.pdf

ஆர். அபிலாஷ் said...

சுவாரஸ்யம்!

Jaypon , Canada said...

பயனுள்ள தகவல். நன்றி.