Aug 16, 2017

அப்போ டைனோசர் இருந்திருக்குமா?

சுதந்திர தினத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. மகியையும் யுவியையும் அழைத்து லால்பாக் செல்லலாம் என நினைத்தேன். ‘வார வாரம் குழந்தையை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டியதில்லையா?’ என்று யாராவது கேட்டால் ‘அழைத்துச் செல்ல வேண்டுமா?’ என்று திருப்பிக் கேட்கத் தோன்றும். நம் தலைமுறையில் அம்மாவும் அப்பாவும் எத்தனை முறை நம்மையெல்லாம் அழைத்துச் சென்றார்கள்? ‘அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறில்லையா?’ என்ற கேள்வி வரும். வேறுதான். ஆனால் வெளியில் அழைத்துச் சென்றால் மால், பூங்கா, சினிமா, உணவகம்- எப்படிப் பார்த்தாலும் வீண் செலவுதான். குழந்தைகளை எப்பொழுதாவது அழைத்துச் சென்றால் போதும். அது effective ஆக இருக்க வேண்டும் என நினைப்பேன்- வெகு நாட்களுக்கு நினைவில் நிற்பது போல.

என்னிடம் யமஹா ரே இருக்கிறது. அதைக் கொண்டு போய் லால்பாக் மெட்ரோ ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு பதினைந்து ரூபாய்க்கு பயணச்சீட்டு வாங்கினால் அடுத்த மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். ஒரு மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை வரக் கூடிய பாதையாகத் தேர்ந்தெடுத்தேன். பொடியன்கள் மெட்ரோவில் பயணித்ததில்லை. சுரங்கப்பாதைக்குள் நுழையும் போது ‘வெளியே பாருங்க’ என்றேன். கால்களை இறுகப்பற்றிக் கொண்டார்கள். கே.ஆர்.மார்கெட்டில் இறங்கி மீண்டும் லால்பாக்குக்கு வண்டி ஏறும் போது கனகூட்டம். மொத்த பெங்களூரும் லால்பாக்கை நோக்கிப் போவது போல பிரமை.

ஹைதர் அலி ஆரம்பித்து வைக்க திப்பு சுல்தான் கட்டி முடித்த லால்பாக்கில் வருடம் இரு முறை மலர்கண்காட்சி நடத்துகிறார்கள். அதற்குத்தான் அத்தனை கூட்டம். நுழைவுச் சீட்டு வாங்குகிற இடத்திலேயே பிதுக்கிவிட்டார்கள். மலர்கண்காட்சிக்குள் நுழையவே முடியாது போலிருந்தது. பேசாமல் பூங்காவில் சுற்றிப் பார்த்துவிட்டு ‘இதுதான் மரத்தோட Fossil. இதுக்கு இருபது மில்லியன் வயசு ஆகிடுச்சு’ என்றேன். ‘டைனோசர் இருந்திருக்குமா?’ என்றான். அதற்கு நாற்பத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த தொல்லுயிர் படிமத்தை தமிழகத்திலிருந்து எடுத்து வந்திருக்கிறார்கள். அப்படியே டைனோசர் காலமென்றாலும் கூட தமிழ்நாட்டில் டைனோசர் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

சொன்னவுடன் பொக்கென்று போய்விட்டார்கள். ‘எதுக்கு கேட்ட?’ என்றேன். அவன் பதில் சொல்வதற்குள் பேச்சு திசை மாறிவிட்டது.

புலிகள் குறித்தான சில ஆவணப்படங்களை முன்பு சேர்ந்து பார்த்திருக்கிறோம். சேகர் தத்தாத்ரியின் 'The Truth about Tiger' என்று நினைக்கிறேன். அதில் புலி ஒவ்வொரு மரமாக சிறுநீர் கழிப்பதைக் காட்டுவார்கள். ‘இது என்ர ஏரியா’ என்று பிற புலிகளுக்கு உணர்த்துவதற்கான சமிக்ஞை அது. நாய்களும் அதையே செய்வதை கவனித்திருக்கலாம். அதுவும் புது ஏரியா என்றால் எந்தக் கம்பத்தைக் கண்டாலும் வலது பின்னங்காலைத் தூக்கிவிடும். இத்தனை சிறுநீரை எங்குதான் தேக்கி வைத்திருக்குமோ எனத் தோன்றும். சிறு கழித்த பிறகும் சிறுநீர்ப் பைக்குள் தேங்குகிற மிச்சச் சிறுநீருக்கு Residual என்று பெயர். சில வருடங்களுக்கு முன்பாக எனக்கு சிறுநீரகத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தார்கள். பெங்களூரில் அப்படித்தான். ஏதாவது ஒரு சிறு பிரச்சினை என்றாலும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்துவிட்டுத்தான் வெளியில் அனுப்புவார்கள். முதலில் ஒரு முறை ஸ்கேன் செய்துவிட்டு சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் ஸ்கேன் செய்தார்கள். எவ்வளவு  மில்லிலிட்டர் என்று மறந்து போய்விட்டது. கொஞ்சம் தேங்குவதாகச் சொன்னார்கள். Residual. நிறையத் தண்ணீர் அருந்த வேண்டும், சிறுநீர் கழிக்கும் போது கீழே அமர்ந்து கழிக்க வேண்டும்- சிறுநீர்ப்பை அமுக்கப்படுவதால் மிச்சம் மீதியில்லாமல் வெளியேறும்- என்றெல்லாம் அறிவுரை சொன்னார்கள். ‘நான் புலி வம்சம் டாக்டர்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

லால்பாக்கில் கண்ணாடி மாளிகைக்கு முன்பாக ஒரு மரம் இருக்கிறது. சோவியத் ரஷ்யாவின் அதிபர் நிகிதா குருசேவ் நட்டு வைத்த மரம். நிகிதா என்றவுடன் நிகிதா துக்ரல் மாதிரி ஓர் அழகி என்று நினைத்துக் கொண்டேன். என்னை மாதிரியே ஒரு வழுக்கை. அப்பொழுதெல்லாம் நம்மவர்களுக்கு ரஷ்யாதானே தோழன்? நேருவுடன் சேர்ந்து வந்து நட்டு வைத்துப் போயிருக்க வேண்டும். இதையெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தேன். குழந்தைகளிடம் இப்படி எதையாவது கோர்த்து எதையாவது கதையாகச் சொல்லும் போது புரிந்து கொள்கிறார்கள். 

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் பனிப்போர் நடைபெற்றது என்பது மட்டும்தான் தெரியும். பனிப்போரின் அடியாழத்திலிருந்து அவர்கள் கேள்வி கேட்டால் விழி பிதுங்க வேண்டியிருக்கிறது. ஹைதர்அலிக்கும் திப்புசுல்தானுக்குமான உறவுதான் தெரியும். அவர்களைப் பற்றி வேறு கேள்விகளைக் கேட்டால் திணற வேண்டியிருக்கிறது. அதே போல தாவரங்களுக்கு அறிவியல் பெயர் பற்றிச் சொன்னால் - அங்கே பெரும்பாலான மரங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்- ஓரளவுக்கு மேல் சொல்லத் தெரிவதில்லை. இது ‘டேட்டாக்களின் யுகம்’.எல்லாவற்றிலும் நாய் வாய் வைப்பது போலத் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எதிலுமே ஆழமாகச் செல்வதில்லை. இதையே குழந்தைகளுக்குக் கடத்தினால் போதும். நமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுத்தபடியே இருந்தால் தங்களுக்கு அவற்றில் எதில் ஆர்வமோ அதில் உள்ளே இறங்கிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

‘பாஸிடிவ் பேரண்டிங்’பற்றிப் பேசினால் இதையெல்லாம் சேர்த்துப் பேசலாம். நம் குழந்தைகளிடம் நாம் சிலவற்றை எதிர்பார்ப்பதைப் போலவே குழந்தைகள் நம்மிடமிருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள். நாம் அதையெல்லாம் கைக்கொண்டிருக்கிறோமா என்பது நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வி. அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் பூர்த்தி செய்யாமல் நம்முடைய எதிர்பார்ப்புகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்? குழந்தைகளை அடிக்கமாட்டோம்; திட்ட மாட்டோம் என்பது மட்டுமில்லை. குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகிறோம், அவர்களிடம் எதையெல்லாம் பேசுகிறோம் என்பதில் ஆரம்பித்து அவர்களின் கவனம் திசைமாறாமல் எப்படி கடிவாளம் போடுகிறோம் என்பது வரை சகலமும் அடக்கம். நாம் சொல்லித் தருகிற, நாம் எதிர்பார்க்கிற விஷயங்களிலிருந்து அவர்கள் விலகும் போது சுள்ளென்றாகிறது. மிரட்டுகிறோம். தண்டிக்கிறோம். நமக்கு வயதும் உடல் பலமும் இருக்கிறது. அவர்களை மிரட்ட முடிகிறது. அவர்களால் அது முடிவதில்லை. அமைதியாக இருந்து கொள்கிறார்கள். வயது கூடக் கூட அது வேறு தொனியில் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.

குழந்தை வளர்ப்பில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நாட்கள் நகர நகர இதன் ஆழ அகலங்கள் விஸ்தரித்துக் கொண்டேயிருக்கின்றன. வாசிப்பிலும் அனுபவத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘எங்கப்பா என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டாவே அழுதுடுவேன்’ என்று சொன்னவரைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு முப்பது வயது இருக்கும். அவருடைய அப்பா எப்படி விரும்பினாரோ அப்படியே வளர்த்திருக்கிறார். அப்பாவைப் பார்த்தால் இன்னமும் பயப்படுகிறார். ‘ஒரு தடவை கூட அடிச்சதில்லைங்க’ என்றார். அப்புறம் எப்படி சாத்தியம் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எப்பொழுதுமே தங்கம், பொன்னு, குட்டி என்றுதான் அழைக்கிறார். கோபப்படும் போது மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். அதுவே உணர்த்திவிடுகிறது. அதோடு சரி. மாறுகிற ட்ராக்கிலிருந்து திரும்பவும் நேராகிவிடுகிறது. இதையே எல்லோருமே செயல்படுத்த முடியாது. ஒருவகையிலான கலை. குழந்தைகளுக்கும் நமக்குமான உறவு நிலையைப் பொறுத்து அவர்களின் வயதைப் பொறுத்து அவரவருக்கு எது எளிதாக வருமோ அவரவர் அந்த முறையைப் பின்பற்ற வேண்டியதுதான்.

மீண்டும் Fossil வழியாகத்தான் வெளியேறினோம். ‘டைனோசர் இருந்திருந்தா இந்த மரத்து மேல ஒண்ணுக்கு அடிச்சிருக்கும்ல’ என்றான். நல்ல கேள்வி. பின்னங்காலைத் தூக்கி அடித்திருக்குமா என்று தெரியவில்லை. ஏதாவது படத்தில் காட்டியிருக்கிறார்களா?

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அம்மாவும் அப்பாவும் எத்தனை முறை நம்மையெல்லாம் அழைத்துச் சென்றார்கள்?//
அழைத்துச் செல்லவில்லை. சரி
அதே நேரம் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கவும் இல்லை.
தினமும் மகியும், யுவியும் பள்ளி தவிர்த்து எத்தனை மணி நேரம் வீட்டை விட்டு வெளியிலிருக்கிறார்கள்?

Jaypon , Canada said...

Royal Tyrell Musium in Drumheller here in Alberta, Canada is full of dinosaur skeletons and fossils excavated during mining. Alberta's main revenue resource is oil and gas which is formed due to massive dinosaurs buried many years ago.Visit Drumheller website .

Anonymous said...

ஆண் நாய்கள் பின்னங்காலைத் தூக்கி அடிக்கக் காரணம் என்னவென்றால் அப்போதுதான் முடிந்த அளவுக்கு உயரமாக சிறு நீரைப் பாய்ச்சி தன் எல்லையை மார்க் செய்ய முடியுமாம்! என்ன ஒரு அறிவு! ஆனால் அது அப்படிப் பலனளிக்கிறதா என்று பெண் நாய்களைத்தான் கேட்க வேண்டும்! அவைகள் சிரிக்கும் சத்தம் கேட்கிறது!

மற்றபடி...குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை...இப்போதெல்லாம் நாம் குழந்தைகளை எங்க வளர்க்கிறோம்? எப்படி அவர்களை பணம் காய்ச்சி மரமாக மாற்றி இந்த ரேசில் களமிறக்கலாம் என்ற உள் நோக்கத்துடன் தான் அவர்களிடம் நாம் எதுவுமே சொல்கிறோம்!

அன்பே சிவம் said...

கூட்டிக் கொண்டு போனது அத விட பெருசுன்னு தெரியாதில்ல மகிக்கு.😄