Aug 11, 2017

ஜூலை 2017

மூன்று லட்ச ரூபாயை சப்தமில்லாமல் யாரோ ஒருவர் அனுப்பி வைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பாகக் குறிப்பிட்டிருந்தேன். இன்று வங்கியின் பரிமாற்ற விவரம் மின்னஞ்சலில் வந்த பிறகு பெயரை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. கலையரசி. பெயர் மட்டும்தான் தெரியும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் பத்தாயிரம் ரூபாய் இந்தப் பெயரில் வந்துவிடும். இந்த முறையும் வழக்கம் போல பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். தொகைதான் அதிகம். மூன்று லட்சங்கள். சொன்னால் நம்பமாட்டார்கள்- இவர் எந்த ஊரில் இருக்கிறார், மின்னஞ்சல் என்ன, தொலைபேசி எண் என்ன? ம்ஹூம். ஒரு விவரமும் தெரியாது தெரியாது. நிசப்தம் தளத்தில் ஒன்றிரண்டு முறை இவரது பெயரைக் குறிப்பிட்டு PAN எண்ணை அனுப்பி வைக்கவும் எனவும் எழுதியிருக்கிறேன். இதுவரை அனுப்பியதில்லை. இப்பொழுதும் கூட அதே கோரிக்கைதான்.


ஜெயக்குமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் பகுதி நேரப் பணியாளனாக வேலை செய்து கொண்டிருக்கும் அம்மாணவனது கல்லூரிக் கட்டணம் ரூ.7733 

அம்மாவும் அப்பாவும் இல்லை. தாத்தா ஒரு சிறு நாட்டார் கோவிலில் பூசாரி. பேரன் டிப்ளமோ படிக்கிறான். இரண்டு வருடங்களாகக் கல்விக்கட்டணம் கட்டவில்லை. இரண்டாண்டுக்கும் சேர்ந்து பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

மகேந்திரனின் அப்பா செயல்படுவதில்லை. பக்கவாதத்திற்குப் பிறகு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவனது அம்மா கூலித் தொழிலாளி. மகேந்திரனின் கல்விக்கட்டணம் ரூ.10760

நரிக்குறவர் இனப்பெண்கள் இருவரை சாரதா கல்லூரியில் சேர்த்திருக்கிறோம். அவர்கள் இருவருக்குமான கல்விக்கட்டணம் ரூ.20000/-

மாதேஸ்வரனுக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை. அவனும் அவனது அக்காவும் சுயமாக சம்பாதித்து குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்கள். இருவரின் கல்விச்செலவையும் நிசப்தம் பார்த்துக் கொள்கிறது. மாதேஸ்வரனின் கல்விக்கட்டணம் ரூ.9778/-

சிவானந்தத்தின் இரண்டு குழந்தைகள் ஜவ்வாது மலையில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். சிவானந்தத்துக்கு நிரந்த வருமானம் இல்லை.  மகன் மற்றும் மகள் இருவருக்குமான கல்விக்கட்டணம் ரூ. 12000/-

தூத்துக்குடி டான் பாஸ்கோ கல்லூரியில் படிக்கும் மகேஸ்வரி என்ற மாணவியின் கல்விக்கட்டணம் ரூ.15000/- 

அரவிந்த்குமார் மீன்வளத்துறையியல் படிக்கிறான். கூலித் தொழிலாளிகளின் மகன். அவனது படிப்புச் செலவுக்காக ரூ.39000/- வழங்கப்பட்டிருக்கிறது.

சார்லஸ் மாதிரியும் கலையரசி மாதிரியும் இலட்சக்கணக்கில் நிதி அளிப்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டொரு நாட்களுக்கு முன்பாகக் கூட தீபக் அறுபத்து இரண்டாயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். ஆகஸ்ட் மாதப் பட்டியலில் வரும். இப்படியான மனிதர்களுக்கு நடுவில் பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐநூறு ரூபாய் அளிப்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாயை ஒருவர் அனுப்பிக் கொண்டேயிருப்பார். அதிகம் பேசியதில்லை. மின்னஞ்சல்கள் மட்டும் அவ்வப்பொழுது வரும். உற்பத்தி நிறுவனத்தில் பணியாளராக இருக்கிறார் என்று தெரியும். கடந்த வாரத்தில் அழைத்த போது ‘சாரிங்க..ரெண்டு மூணு மாசமா பணம் அனுப்பலை’ என்றார். அவர் பணம் அனுப்பவில்லை என்பதை நான் கவனிக்கவில்லை. அவரிடம் பேச வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அழைத்துப் பேசினேன். 

‘அதுக்காக கூப்பிடலைங்க..சும்மா பேசலாம்ன்னு தோணுச்சு’ என்றேன். 

வெகு அமைதியாகப் பேசினார். கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். 

‘ஏதாவது உதவி வேணுமா?’ என்றதற்கு ‘என்னைவிட மோசமான நிலைமையில் நிறையப் பேர் இருக்காங்க..உங்க உதவி அவங்களுக்குத்தாங்க தேவை..உதவி வேணும்ன்னா கண்டிப்பா கூப்பிடுறேன்’ என்கிறார். 

பேச எதுவுமில்லை.  இவ்வளவுதான் நிசப்தம்!

ஏதேனும் சந்தேகங்கள்/கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பேச எதுவுமில்லை. இவ்வளவுதான் நிசப்தம்!//

Bala said...

Super ....those kind of persons still exists