Aug 10, 2017

எல்லாவற்றையும் குறித்து

மோட்டார் நியூரான் டிஸ்ஸீஸ். ஸ்டீபன் ஹாக்கிங்கைத் தாக்கிய நோய். நரம்பு மண்டலத்தை தாக்கத் தொடங்கி தசைகள் வலுவிழந்து, கை கால்களைப் பயன்படுத்தும் திறன் குறைந்து, பேச்சுக் குழறி என ஆளை முடித்துவிடுகிற நோய்.  1942 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் தமது இருபது வயது வரைக்கும் மற்றவர்களைப் போல நடந்து பள்ளிக்குச் செல்வது விளையாடுவது என இயல்பாகத்தான் இருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் போதுதான் முதன் முறையாக நோய் தாக்குகிறது. கல்லூரி வளாகத்தில் திடீரென சுருண்டு விழ பரிசோதிக்கும் சிறப்பு மருத்துவர் ‘என்னை மன்னிச்சுடு..என்னால ஒண்ணும் செய்ய முடியாது....அதிகபட்சம் உனக்கு இன்னும் ரெண்டு வருஷம்தான் ஆயுள்’ என்கிறார். ஸ்டீபன் உடைந்துதான் போகிறார். ‘அப்போ என் மூளைக்கு என்ன ஆகும்?’ என்பதுதான் அவரது கேள்வியாக இருக்கிறது. ‘அது பாதிக்காது’ என்பது மருத்துவரின் பதில்.

தமக்கு நோய் இருப்பது தெரிவதற்கு முன்பாகவே ஸ்டீபனுக்கு ஜேன் என்ற பெண்ணுடன் காதல் இருக்கிறது. மருத்துவருடன் பேசிவிட்டு வந்து தமது அறையில் எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் அவர் இருக்கும் போது ஸ்டீபனைத் தேடி ஜேன் வருகிறார். அவரைத் துரத்தியடிப்பதிலேயே ஸ்டீபன் குறியாக இருக்கிறார். ‘இன்னமும் நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று ஜேன் சொல்லவும் ஸ்டீபனின் தந்தையே கூட ‘இது சாதாரண விஷயமில்லை..அவசரப்பட்டு முடிவு எடுக்காத’என்கிறார். அவள் துணிந்து ஸ்டீபனைக் கரம்பிடிக்கிறாள்.

நேற்று முன் தினம் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி எழுதியிருந்த போது அவரைப் பற்றி த தியரி ஆஃப் எவ்ரிதிங் என்ற படம் வந்திருப்பதாக திருமதி.நல்லினி (நல்ல தமிழ்ப் பெயர்!) சொல்லியிருந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான படம்.  நேற்று படம் பார்த்தேன். அவ்வளவு அற்புதமான படம் இது. இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்ட ஸ்டீபன் இன்று வரை உயிருடன் இருக்கிறார். அவர் ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டி வந்ததையும், அறிவியல் மீதான அவரது ஈர்ப்பையும், கணவன் மனைவிக்கு இடையிலான காதலையும் இரண்டு மணி நேரக் காவியமாகச் சுருக்கியிருக்கிறார்கள். ஸ்டீபன் - ஜேனின் காதல் மட்டுமில்லையென்றால் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் விஞ்ஞானி இல்லாமலே கூட போயிருக்கக் கூடும். 

திருமணத்திற்குப் பிறகாக அவரின் நடக்கும் திறன் மொத்தமாகப் போய்விடுகிறது. குழந்தைகள் பிறக்கின்றன. பேச முடிவதில்லை, நடக்க முடிவதில்லை, கைகள் செயல்படுவதில்லை- பிறகு எப்படி குழந்தைகள்? படத்தில் நண்பர் ஒருவர் ஸ்டீபனிடமே கேட்பார். ‘அது ஆட்டோமேடிக்..அதுல ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்பார். 1965 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு முப்பது ஆண்டுகள் இணைந்திருந்தார்கள். மூன்று குழந்தைகள். 


ஸ்டீபன் ஜேன் தம்பதியினரின் வாழ்க்கையை இங்கிலாந்தின் கலாச்சாரப் பின்னணியுடன் இணைத்துப் பார்க்கும் போது முப்பது ஆண்டுகள் ஒன்றாக இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்த ஜேனின் பெருந்தன்மையும் காதலும் புரியும். ஆனாலும் அவருக்கு மன அழுத்தம் உருவாகிறது. குழந்தைகளைப் பராமரிக்க முடிவதில்லை என்பதும் தமது ஆர்வங்களைச் செய்ய முடிவதில்லை என்பதும் அவரை வாட்டுகின்றன. அவர் ஓரளவுக்குப் பாடக் கூடியவர். தமது மன அழுத்தத்திலிருந்து விடுபட சர்ச்சில் நடைபெறும் இசைப்பயிற்சிக்குச் செல்கிறார். அங்கே ஜோனாதன் அறிமுகமாகிறார். 

ஸ்டீபன் ‘நான் மறுப்புத் தெரிவிக்க மாட்டேன்’ என்று சொன்னபிறகு ஜோனாதன் இவர்கள் இருவருக்கும் இடையில் வருகிறார். அவர் ஸ்டீபனுக்கான பணிவிடைகளைச் செய்வது, குழந்தைகளைப் பராமரிப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்கிறார். அந்தச் சமயத்தில் ஜேனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க, ஸ்டீபனின் தாயார் ‘இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்று கேட்டுப் பிரச்சினையாகிறது. ஸ்டீபனுக்குத்தான் பிறந்தது என்று ஜேன் சொல்லிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்துவிடும் ஜோனாதன் ‘எல்லோரும் தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க’ என்று சொல்லிவிட்டுப் பிரிய முயற்சிக்கிறார். மீண்டும் சர்ச்சுக்குச் சென்று அவரைச் சமாதானம் செய்து அழைத்து வருவது கூட ஸ்டீபன்தான்.

அதன் பிறகு ஸ்டீபனுக்கு நிமோனியா தாக்கி மூச்சுவிடாமல் கிடக்கும் போது ‘செத்துடுவாரு..வெண்டிலேட்டர் எடுத்துடலாமா’ என்று மருத்துவர் கேட்கிறார். ஸ்டீபனுக்கு இரண்டாவது மரணம் அது. ஜேன் ‘அவர் எனக்கு உயிரோட வேணும்’ என்றவுடன் ‘அப்போ தொண்டையில் ஒரு குழாயைப் பொருத்தினால் அவர் மூச்சுவிடுவார்..ஆனால் பேச முடியாது’ என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்று வரை குழாயுடன் தள்ளுவண்டியில் சென்று கொண்டிருக்கிறார் ஸ்டீபன்.

ஸ்டீபன் ஹாக்கிங் சுயமாகத் தள்ளுவண்டியை இயக்குவதற்கு, அவர் எழுத விரும்புவதை எழுதுவதற்கு எனத் தனித்தனியான கருவிகளை பல நிறுவனங்கள் வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றன. ஸ்டீபன் ஹாக்கிங் இன்னமும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டேயிருக்கிறார். தொண்ணூறுகளின் மத்தியில் எலைன் என்கிற பெண் ஸ்டீபனுக்குப் பணிவிடை செய்வதற்காக வருகிறார். 1995 ஆம் ஜோனாதனை ஜேன்னும், எலைன்னை ஸ்டீபனும் திருமணம் செய்து ஸ்டீபன் - ஜேன் தம்பதியினர் பிரிகிறார்கள். 2005 ஆம் ஆண்டில் ஸ்டீபன் - எலைன் பிரிந்துவிட்டார்கள். ஜோனாதனும் ஜேன்னும் இணைந்து வாழ்கிறார்கள்.

ஸ்டீபனின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது அவருடைய மாணவர்கள் நிறையப் பேர் உதவியிருப்பதை புரிந்து கொள்ள முடியும். அவருடைய பேராசியர்கள் பெரும் துணையாக இருந்திருக்கிறார். அவரது மகள் லூசி அவருடன் இருந்திருக்கிறாள். ஆனால் த தியரி ஆஃப் எவரிதிங் படத்தில் ஸ்டீபன் - ஜேன்தான் அதிகம். அதற்குக் காரணமிருக்கிறது. இது ஜேன்னின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். 'The Brief History of Time' நூலின் அணிந்துரையில் தமக்குத் தொண்டையில் குழாய் பொருத்துவதற்கு முன்பாகவே திருத்தப்படாத பிரதியை எழுதி முடித்துவிட்டதாக எழுதியிருக்கிறார். படத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எழுதத் தொடங்குவதாகக் காட்டுகிறார்கள். இரண்டில் எது சரியென்று தெரியவில்லை. இப்படிச் சிறு சிறு குழப்பங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம் இது.

சமீபத்தில் உறவுக்காரப் பையனொருவன் ‘கல்யாணம் ஆகற வரைக்கும் ஜாலியா இருந்தேன் மச்சான்..இப்போ எல்லாம் போச்சு...சுதந்திரம் போச்சு...சந்தோஷம் போச்சு’என்றான். திருமணமாகி இரண்டாண்டுகள்தான் ஆகின்ற அவனுக்கு. அப்படித்தான் தெரியும். அவன் சொல்லிக் கொண்டிருந்த போது வெறுமனே சிரித்து வைத்தேன். எதுவும் சொல்லவில்லை. முப்பதுகளைத் தாண்டிய பிறகு கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும்தான் பெரும்பலம். உடல் சார்ந்த பலவீனங்களும் வாழ்க்கையின் நெருக்கடிகளும் ஆரம்பிக்கும் அந்த வயதில் ஆயிரம் சண்டைகளும் சச்சரவுகளும் இருந்தாலும் துணையின் அருகாமையும் ஆதரவும்தான் எல்லாமுமாக மாறிப் போகிறது. ஜேன்னும் ஸ்டீபனும் அதைத்தான் உணர்த்துகிறார்கள்.


ஸ்டீபன் ஹாக்கிங்கின் வரலாறைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஸ்டீபன் பற்றிப் பேச வேண்டும். தன்னம்பிக்கை என்பதன் மொத்த வடிவம் அந்த மனிதர். கை கால்கள் முடமாகி அசைய முடியாமல் ஆன பிறகுதான் அவரது கண்டுபிடிப்புகள் ஜொலிக்க ஆரம்பிக்கின்றன. உடல் வேறு; மனம் வேறு என்பதற்கான வாழும் உதாரணம் அவர். உடலில் என்ன பிரச்சினைகள் வேண்டுமானாலும் வரலாம். மனம் உறுதியாகிக் கிடக்க வேண்டும். எறும்புகளும் ஈக்களும் மொய்த்து சிதிலமடையச் செய்ய அதுவொன்றும் தேனடை இல்லை. எஃகுக் கோட்டை. எத்தனை வீழ்ச்சியிலும் எழுந்துவிட முடியும் என்ற உறுதியை மட்டும் கைவிடக் கூடாது. திரும்பிய பக்கமெல்லாம் சோதனைகள் என்றாலும் சமாளித்துவிட முடியும் என்கிற கெத்து வேண்டும். கலக்கிவிடலாம். முடமாகி பேச்சற்றுக் கிடக்கிற மனிதரே இத்தனை சாதனைகளைச் சாத்தியப்படுத்தும் போது மற்றவர்களால் எவ்வளவு உயரங்களை அடைய முடியும்? உயிரைத் தவிர வேறு எதை இழந்தாலும் அதெல்லாம் வெறும் மயிரை இழப்பது மாதிரிதான் சார்!

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஜேனின் பெருந்தன்மையும் காதலும் புரியும்//
பெருந்தன்மை புரிகிறது. காதல் புரியவில்லை.

Joe Mano Naveen X said...

mikavum sariyana varthaikal

Paramasivam said...

ஸ்டீபனை பற்றி அறிவியல் செய்திகள் தான் இது வரை தெரியும். அவரின் முழு வாழ்க்கை வரலாறு, அவர் மீது இன்னும் மதிப்பு அளிப்பதாக உள்ளது.

Anonymous said...

பச்சாதாபம் காதல்ல்ல.. ஜேனின் காதல் பச்சாதாபமல்லதால் பிரிந்தார்

Anonymous said...

ஸ்டீவன் ஹாக்கிங் ஒரு புத்திசாலிதான்...சந்தேகமில்லை....ஆனால் பூமியை விட்டு நாம் வேறு கிரகத்துக்குச் செல்லவேண்டும் என்ற வேண்டுகோளை அவர் வைத்தது முட்டாள்தனமான முடிவு. பூமியைக் கை விட்டு விடலாம் என அறிவுஜீவிகளே நினைக்கும் போது நாம் எம்மாத்திரம்?

Saravanan Sekar said...

There is one more book written by him Named as "Theory of Everything" which is my first reading of his books.
Known about his physical disabilities while reading about him. So far, I have not cared much about his personal life.
Your post sheds light on that life. My respect and love for this scientist gone-up further.

I do not know whether you remember my very first e-mail to written to you, 2 years back, dated : 16-04-2015.

Following is the excerpt from my e-mail:


//
இயற்பியல் மற்றும் வானியலில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதால் ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் புத்தகங்களையும் படிப்பது உண்டு. அறிவியலையும் தாண்டி அவரிடம் பிடித்த விஷயம் ,சிக்கலான வானியல் கோட்பாடுகளையும் எளிமையாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதி இருப்பார், உங்கள் பதிவுகளை போல.

எளிமையான , நேரடியான, துள்ளலான மொழிநடை

ஒரு எழுத்தாளரை ஒரு விஞ்ஞானியோடு ஒப்பிடுவது சரியான அணுகுமுறையா என்றெல்லாம் பெரிதாக சிந்திக்காமல், எழுதுபொருள் முற்றிலும் வேறாக இருப்பினும், எழுத்து நடையை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எனக்கு இயற்பியல் மற்றும் வானியலில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதால் ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் புத்தகங்களையும் படிப்பது உண்டு. அறிவியலையும் தாண்டி அவரிடம் பிடித்த விஷயம் ,சிக்கலான வானியல் கோட்பாடுகளையும் எளிமையாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதி இருப்பார், உங்கள் பதிவுகளை போல.

எளிமையான , நேரடியான, துள்ளலான மொழிநடை

ஒரு எழுத்தாளரை ஒரு விஞ்ஞானியோடு ஒப்பிடுவது சரியான அணுகுமுறையா என்றெல்லாம் பெரிதாக சிந்திக்காமல், எழுதுபொருள் முற்றிலும் வேறாக இருப்பினும், எழுத்து நடையை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எனக்கு தோன்றியது இது.

//

Still my comparison is valid, let me read " Robojaalam " and come back to you

Anbudan,

Saravanan S