Aug 14, 2017

காட்டைக் கொளுத்துதல்

அபிநயாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். 

மனதுக்குள் ஒரு கணக்கு இருக்கிறது. மாணவர்களுடன் உரையாடியதிலிருந்து அவர்களின் பலம் பலவீனங்கள் எனப் புரிந்து கொண்டதன் அடிப்படையிலான கணக்கு இது. அவர்களுக்கு ஆங்கிலம், ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயித்தல் மாதிரியான சில தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் பயிற்சியளிக்க வேண்டும். இந்தப் பயிற்சிகளின் மூலமாக திக்கில்லாமல் இருப்பவர்களையும், வெளியுலகத்தின் நெளிவு சுளிவு தெரியாதவர்களை ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கும் முன்பாக நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிற/ஏற்றுக் கொள்கிற மனநிலைக்கு அவர்களைக் கொண்டு வருவது முக்கியம். ஒரே நாளில் சாத்தியமில்லைதான். இதுவொரு பேக்கேஜ். தொடர்ச்சியான உரையாடல்கள், பயிற்சிகள் என ஒரு வருடம் முடியும் போது பதினாறு பேர்களையும் நாம் நினைக்கிற வடிவத்துக்கும் மனநிலைக்கும் கொண்டு வந்துவிட வேண்டும். தெளிவான இலக்குகளைக் கொண்ட, அதை அடைவதற்கான உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடன் உழைக்கிறவர்களாக இம்மாணவர்கள் மாறினால் போதும். அதன் பிறகு நம்முடைய உதவிகள் மட்டும் இருந்தால் போதும்- பெரிய அளவிலான பயிற்சிகள் எதுவும் தேவையிருக்காது. நாம் அடுத்த அணிக்கு (batch) நகர்ந்துவிடலாம். 


அபிநயாவிடம் ‘ஆளுமை’ என்பது குறித்து தயாரிப்புகளைச் செய்து வரக் கோரியிருந்தேன். ஆளாக வாழ்ந்து சாவதற்கும் ஆளுமையாக அர்த்தம் பொதிந்து வாழ்ந்து மறைவதற்குமான வித்தியாசங்களை ஒருவன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டத்திற்கு தயார்படுத்துகிற கட்டம் இது. அபிநயா இந்திய இராணுவத்துறையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்கிற துறையின் இளம் அதிகாரி. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கானத் தயாரிப்புகளைச் செய்திருந்தார். பவர் பாய்ண்ட், மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கான குழுச் செயல்பாடுகள் என்று மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. 

சனிக்கிழமையன்று இரவு பதினோரு மணி வரைக்கும் எம்.ஜி.ஆர் காலனி மாணவர்களுடன் இருந்தோம். அது பற்றித் தனியாக எழுதுகிறேன். பணியெல்லாம் முடிந்த பிறகு ‘இன்றைய பயிற்சி வகுப்பில் என்ன தெரிஞ்சுகிட்டீங்க?’ என்று ஆசிரியர் அரசு தாமஸ் மாணவர்களிடம் கேட்டார். பதில்களைக் கேட்டப் பிறகு அவர் அரண்டு விட்டார். மாணவர்கள் கிளம்பிய பிறகு ‘என்ன மணி..பசங்க பிரிச்சு மேயறானுக’ என்றார். உண்மையில் அந்த மாணவர்கள் பேசவே மாட்டார்கள். அதுவும் சாமிநாதன் மாதிரியானவர்கள் வார்த்தைகளை வெளியில் விடவே தயங்குவதுண்டு. அவனே பத்து நிமிடம் பேசினான். தெளிவாக. அதே சமயம் நிதானமாக. 

நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று வேறு எப்படிக் கணிப்பது?

ஆரம்பத்தில் கல்விக்கான நிதியுதவிகளை என்பது வெறும் மனிதாபிமான அடிப்படையில்தான் செய்யத் தோன்றியது. ‘இந்தத் தொகையால் அந்த மாணவர் படிப்பை முடித்துவிட முடியும்’ என்ற நம்பிக்கை. ஆனால் அது மட்டும் போதுமானதில்லை. பல மாணவர்கள் ‘தேமே’ என்றுதான் இருக்கிறார்கள். படித்து முடிக்கிறவர்கள் எல்லோரும் அந்தப் படிப்பைப் பயன்படுத்தி ஜொலிக்கிறார்களா என்ன? சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு வெளியுலக அறிமுகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை. அத்தகைய மாணவர்களில் தகுதியும் திறமையும் இருக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான ஜன்னல்களைத் திறந்துகாட்டினால் சிறகை விரித்துவிடுவார்கள்.

இது சோதனை முயற்சிதான்.

பயிற்சிகள் சரியான வடிவத்தை அடைந்துவிட்டால் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல மாணவர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்க முடியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் தேவைப்படக் கூடும். இத்தகைய பயிற்சிகளுக்கான பயிற்சியாளர்களைக் கூட வெறுமனே ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’ என்ற அடையாளத்துடன் இருப்பவர்களை அழைத்து ஜல்லியடிக்கப் போவதில்லை. அத்தகையவர்கள் நமக்கு அவசியமும் இல்லை. உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், திறமையாளர்களை மட்டும் அழைத்தால் போதும். அபிநயா அப்படியான அழைப்பாளர்தான். அவரை சமீபமாகத்தான் தெரியும். ஐ.ஏ.எஸ் கனவில் இருக்கும் பவித்ராவுக்கு அவர்தான் வழிகாட்டியாக இருக்கிறார். 

அபிநயாவை அவருடைய தம்பி கிரிசூடன் அழைத்து வந்திருந்தார். அக்காவுக்கேற்ற தம்பி.


சக மனிதர்களிடம் பேசும் போதே நமக்குத் தெரியுமல்லவா? அபிநயா அப்படித்தான். நெருப்புப் பொறியாகத் தெரிந்தார்.  ‘நீங்க சிறு காட்டைக் கொளுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தேன். ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சியை அபிநயா அளித்திருக்கிறார். இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர் சொல்லித் தந்துவிட்டுச் சென்றவற்றைத் திரும்பத் திரும்ப மாணவர்களுக்கு நினைவூட்டி அவற்றையெல்லாம் தொடர்ந்து செயல்படுத்தச் சொல்லி நாங்கள் கண்காணிப்போம். டிசம்பர் மாதவாக்கில் அபிநயா திரும்ப வந்து மீண்டுமொருமுறை வகுப்பு நடத்துவார். இதுதான் திட்டம். அடுத்த மாதம் கீர்த்தி நாராயணனிடம் தேதி கேட்டிருக்கிறோம்.. அவர் கேரளத்தில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி. அதன் பிறகு சந்திரசேகர்- துணை ஆட்சியர். இப்படித்தான் பட்டியல் மனதுக்குள் ஓடுகிறது. இவர்களின் நேரம் கிடைக்க வேண்டும்.

சமீபத்தில் கார்போரேட் நிறுவனங்களில் சிலவற்றுடனும் தொடர்பு உருவாகியிருக்கிறது. அவர்களை வைத்து எதிர்காலத்தில் செய்யக் கூடிய செயல்பாடுகள் குறித்து சில கனவுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் விவாதிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் நேரம் கேட்டுச் சென்று அவர்களிடம் நமது செயல்பாடுகள் குறித்துப் பேச வேண்டும். ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இதே களத்தில் வெவ்வேறு விதமான செயல்பாடுகளைச் செய்ய முடியும். திரண்டு வரும்போது பகிர்ந்து கொள்கிறேன்.

9 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Wow...can you share the powerpoint presentation here? It will be useful for us too!

gokul said...

அற்புதமான பணி. வாழ்க... வளர்க.. அனைவரும் !

சேக்காளி said...

//அதற்கும் முன்பாக நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிற/ஏற்றுக் கொள்கிற மனநிலைக்கு அவர்களைக் கொண்டு வருவது முக்கியம். //
புரிந்து கொள்ள வேண்டும் சரி.
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி?
மாற்றுக் கருத்துக்கள் வழிகள் இருக்கலாமல்லவா?

சேக்காளி said...

அபிநயா,
கீர்த்தி நாராயணன்,
சந்திர சேகர்
எல்லோருக்கும் நன்றி.

சேக்காளி said...

//சமீபத்தில் கார்போரேட் நிறுவனங்களில் சிலவற்றுடனும் தொடர்பு உருவாகியிருக்கிறது//
கார்ப்போரேட் அலுவலங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றிக்கு நேரடியாக அழைத்துச் சென்று காட்டி அங்கே நடக்கும் பணிகளையும்,அதிகார அடுக்குகளையும், பதவி படிகளையும் கவனிக்க, உணரச் செய்து(பார்க்க அல்ல)
யார் என்ன செய்கிறார்கள், எதற்காக அந்த பதவி அல்லது பணி, அது இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று விவாதம் செய்யச் சொல்லுங்கள்.
அப்புறம் ஏதோ ஒரு காரணத்திற்காக ஏதேனும் மறுக்கப் படும் போது தயக்கமின்றி தானாகவே கேள்விகள் கேட்க தொடங்கி வேலை வாங்குவார்கள்.
நல்ல நிர்வாகங்கள் நேர்மையான முறையில் வேலை வாங்குவதிலிருந்து துவங்கும்.

Jaypon , Canada said...

கொழுத்துங்க. திகு திகுவென எரியட்டும். வாழ்த்துக்கள்.

shrkalidoss said...

Very inspirational Mr.Mani... Hats off to you and Abhinaya and future contributors ! Silently you are making a revolution here!!

Anonymous said...

Yes... Please share the presentations in Nisaptham... Our readers will get use of it.

Unknown said...

please share Abinaya's presentation in nisaptham... So that it will reach out many people and it can motivate many...