Jul 24, 2017

இலக்கிய முகமூடி

ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அகஸ்மாத்தாக  ‘இலக்கியவாதிகள் என்ன பேசிக்கிறாங்க?’ என்றார். அந்தக் கேள்வி பொதுவானது. எது குறித்துப் பேசுகிறார்கள் என்ற அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்வி. சத்தியமாக பதில் தெரியாது. முன்பு நிறைய எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பேன். அவ்வப்போது யாரையாவது வலுக்கட்டாயமாக அழைத்துப் பேசுவதும் வழக்கம். அது அவ்வளவு உவப்பானதாக இல்லை. நட்பும் உரையாடலும் இயல்பானதாக இருத்தல் வேண்டும்- போலித்தனமில்லாமல். இப்பொழுது அதைச் செய்வதில்லை. மனதுக்கு நெருக்கமானவர்களைத் தவிர யாருடனும் அலைபேசியில் பேசுவதில்லை.

ஒரு வகையில் சலிப்புதான். 

எழுத்தை வாசிப்பது வேறு; எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருப்பது வேறு. எழுத்துக்களின் வழியாக ஒவ்வொரு எழுத்தாளன் குறித்தும் ஒரு சித்திரத்தை மனம் உருவாக்கி வைத்திருக்கும். நெருங்கிப் பார்க்கும் போது பெரும்பாலான சித்திரங்கள் உருகி உருவமழித்து வேறொன்றாக மாறி நிற்கும். எல்லோருமே கசப்பானவர்கள் என்ற அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. ஆனால் கசப்பான அனுபவங்கள் இல்லாமலும் இல்லை. எழுத்தாளர்கள் தமது எழுத்தின் வழியாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைச் சிதைத்து எழுத்தாளனுக்கும் நமக்குமான தூரத்தை அதிகமாக்கிக் கொண்டு வன்மமும் பொறாமையும் மிகுந்தவர்களாக சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. 

ஓர் எளிய வாசகனாக எழுத்துடன் தொடர்பில் இருந்தால் போதும். எழுத்தாளன் எப்படி இருந்தால் என்ன?

அதேசமயம் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நேர்காணல்களையும் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கலாம். அது சுவாரசியமானது. யாராவது ஒருவர் ஏதாவதொரு எழுத்தாளன் குறித்து எதையாவது சொல்லும் போது கேட்டுக் கொள்ளலாம். அவையெல்லாமே புனைவின் சூத்திரங்களையும் நாவலின் உற்சாகத்தையும் கொண்டவை. அப்படித்தான் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளை வாசிப்பதும் கூட.

அஃக் பரந்தாமன் பற்றிய தமது கட்டுரையை மு.வி.நந்தினி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். வலி ஏற்படுத்தக் கூடிய கட்டுரை அது. தாம் நடத்திய அஃக் என்ற பத்திரிக்கைக்காக தமது சொத்துக்களை இழந்தவர் பரந்தாமன். கட்டுரையை வாசித்து முடித்த போது வெறுமையாக இருந்தது. நந்தினி முன்பு எழுதிய தொடர் ஒன்றின் ஒற்றைக் கட்டுரைதான் அது. அவரிடமே கேட்டு வாங்கி அந்தத் தொடரின் மீதமிருக்கும் கட்டுரைகளையும் வாசித்து முடித்த போது மனம் எதை எதையோ யோசிக்கத் தொடங்கியது.


இலக்கியமும் எழுத்தும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைகழிக்கின்றன? கைகளுக்கு வசமாகாமல் பறந்து கொண்டேயிருக்கும் தட்டான் ஒன்றைப் பிடித்துவிடுவதான பாவனையில் அவனும் ஓடிக் கொண்டேயிருக்கிறான். இல்லையா? தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும் போது பிரான்சிஸ் கிருபாவின் கன்னியும், மு.சுயம்புலிங்கத்தின் நிறமழிந்த வண்ணத்துப்பூச்சிகளும்  நினைவுகள் முழுவதும் அடைத்துக் கிடக்கின்றன.

எழுத்தை நம்பி தமது வாழ்வையே தொலைத்த மனிதர்களுக்கிடையில்தான் ‘நானும் இலக்கியவாதி’ என்ற பெயரில் அடுத்தவர்களிடம் பணம் பறிக்கவும், தமது அந்தரங்கமான தொடர்புகளை நீட்டிக்கவும் இலக்கியம் என்ற முகமூடி அணிந்த மனிதர்கள் திரிகிறார்கள். அவர்களைத்தான் அடையாளாமாக்குகிறார்கள். அஃக் பரந்தாமனை மறந்துவிட்ட அதே இலக்கிய உலகம்தான் மாஃபியாக்களையும், பீடங்களையும் பார்த்து பயப்படுகிறது. 

சமூக ஊடகங்கள் வலுவடைந்த பிறகு சூழல் இன்னமும் மோசமாகியிருக்கிறது. 

பெங்களூரின் எம்.ஜி.சாலையின் உள்ளொடுங்கிய தெருவில் அரசமரம் ஒன்றிருக்கிறது. பேசுவதற்கு வாகான இடம். அங்கே அமர்ந்து ஒரு கல்லூரி மாணவனுடன் பேசிக் கொண்டிருந்த போது இலக்கியத்தைத் தனது கனவாக நினைத்துப் பேசினான். ‘வாழ்க்கையில் சம்பாதிச்சுட்டு டைம்பாஸூக்காகவும் மனத்திருப்திக்காகவும் மட்டுமே இலக்கியம் பக்கம் ஒதுங்கு’ என்றேன். அதுதான் என் நிலைப்பாடும் கூட. இதைச் சொல்வதில் குழப்பம் எதுவுமில்லை. பிற எந்தத் துறையையும் விட இது கச்சடா. இலக்கிய உலகில் நிகழ்கிற கீழ்த்தரமான அரசியலும் அடுத்தவன் கழுத்தை அறுக்கும் கயமைத்தனமும் கிட்டத்தட்ட அண்டர்கிரவுண்ட் உலகம் போல. ஒன்று அதில் எதிர்த்துப் போரிட வேண்டும். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். 

எழுத்துக்களை வாசிக்கலாம். அது அவசியமானது. தேடித் தேடி வாசிக்கவும் விவாதிக்கவும் நிறைய இருக்கின்றன. ஆனால் எழுத்தாளர்களை வெகு தூரத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமேயில்லை- எழுத்துக்கள் பிரம்மாண்டமானவை. எழுத்தாளர்கள் மிக மிகச் சிறிய மனிதர்கள்.

4 எதிர் சப்தங்கள்:

nallathorveenai said...

ஆமாம்.மிகச்சரியாக கூறியிருக்கிறீர்கள்.இது எனக்கு பலமுறை நடந்திருக்கிறது.இன்றைய இணையவெளியில் பல எழுத்தாளர்களின் பிம்பங்கள் இன்னும் இன்னும் சரிகின்றன.

சேக்காளி said...

//இலக்கிய உலகில் நிகழ்கிற கீழ்த்தரமான அரசியலும் அடுத்தவன் கழுத்தை அறுக்கும் கயமைத்தனமும் கிட்டத்தட்ட அண்டர்கிரவுண்ட் உலகம் போல.//
இலக்கிய உலகம்,அண்டர்கிரவுண்ட் உலகம் தவிர மற்றவற்றில் இல்லாமலா போய் விட்டது கயமைத்தனம்.ஒளி அடித்து காட்சிப் படுத்தி காட்டும் சதவீதங்களில் தான் வித்தியாசம்.அதில் இயற்கையாய் அமைந்து விடும் வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் தான் நாம் யாரென்ற பிம்பம் உருவாக்கப் படுகிறது.

Unknown said...

ஆமாம் எண்ணங்கள் , சிந்தனைகள் உயர்ந்தது மனிதர்களை விட....

வெட்டி ஆபீசர் said...

மனித மூளை பொதுவாகவே வக்கிரங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. இதை பொதுவெளியில் காட்டாமல் சமூகத்துக்கு உகந்தவர் போல் காட்டுவதிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது. எழுத்தாளர்கள் என்றில்லை கலை மற்றும் அறிவியல் சார்ந்த அனைவருக்கும் தான் என்ற எண்ணம் ஓங்கியே இருக்கும், இதோடு சேர்த்து புகழ்ச்சி என்பது ஒரு விதமான போதை. யாருக்கும் விமர்சனங்கள் பிடிப்பதில்லை, விமர்சிக்க பட்டால் அதை முதலில் ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி என்பது அரிதிலும் அரிது. இதை ஏற்றுகொள்ளுவத்திற்கு பதிலாக "உனக்கு என்ன தெரியும் நான் யார் தெரியுமா" என்ற என்னோட்டமே பொதுவாக இருக்கிறது. இதில் நம்ம மணி போன்ற ஆட்கள் ஒரு விலக்கு, அவருமே முதலில் எழும்புகிற எரிச்சலை விட்டே பதில் சொல்ல முனைவார் என்றே நினைக்கிறேன். மணி சொல்வது போல எழுத்துக்களை கொண்டாடுங்கள் எழுத்தாளர்களை அல்ல என்பது நிதர்சனமான வார்த்தைகள். அதுவே இன்னபிற பிரபலங்களுக்கும் பொருந்தும்.