Jul 24, 2017

என்னதான் பிரச்சினை உனக்கு?

மனிதர்கள் வெறியேறிக் கிடக்கிறார்கள். அதுவும் நகர்ப்புற மென்பொருள் ஆட்கள் இருக்கிறார்களே! எல்லாவற்றிலும் ஈகோதான். போக்குவரத்து நெரிசலில் ஒருவன் தெரியாமல் தவறு செய்தாலும் கூட கடித்துக் குதறிவிடுகிறார்கள். நெரிசலில் பத்து வினாடிகள் தாமதமானாலும் வண்டிகளில் ஒலியெழுப்பி தமது அத்தனை வன்மங்களையும் சக மனிதன் மீது கொட்டுகிறார்கள். அவசர வாழ்க்கை முறை மனிதர்களை அப்படியாக்கிவிடுகிறது. பெருநகரங்களில் அரை மணி நேரம் வாகனம் ஓட்டினால் இருபத்து நான்கு மணி நேரத்துக்கான அழுத்தத்தை இம்மாநகரம் ஏற்றிவிடுகிறது. வாகனங்களில் பயணிப்பது மட்டுமில்லை- குப்பை, தூசி, மாசு, ஒலி, வேலை அழுத்தம், குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாமை என எல்லாமும் சேர்ந்து ஒவ்வொரு மனிதனையும் நரகத்திற்குள் தள்ளுகின்றன.

தனது கோபம், வன்மம், எரிச்சல், இயலாமை என சகலத்தையும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எப்படித் துப்புவதென்றே தெரியாமல் துப்புகிறார்கள். ஒன்றை கவனித்துப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் அடிமனதில் வெகுவாகவாக பயந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். வேலையின் நிரந்தரமின்மையும் கார்போரேட் உலகம் உருவாக்கி வைத்திருக்கும் நடுக்கமும் மனிதர்களை உள்ளூர வலுவற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது. இந்த வலுவின்மையை மறைத்துக் கொள்ள வெளியில் கத்துகிறார்கள். பலவான்களாக நடிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் வெர்ச்சுவலாக போராளி வேடம் கட்டுவதும் கூட இத்தகைய மனநிலையின் அங்கம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ‘இந்த பிரச்சினை பற்றி பொதுவெளியில் விவாதிக்கிறவர்களை உளவுத்துறை கணக்கு எடுக்கிறது’ என்று தினத்தந்தியில் ஒரு செய்தி வந்தால் போதும். அப்படியே விட்டுவிட்டு பதுங்கிவிடுவார்கள். ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது அப்படித்தானே நிகழ்ந்தது? 

கடந்த வாரம் ஊரிலிருந்து வந்த போது சேலத்தில் அரசுப் பேருந்தில் ஏறியிருந்தேன். பின்புற இருக்கையில் இருந்தவன் ஒருவன் அலைபேசியில் யாரிடமோ பேசியபடியே இருந்தான். ஆங்கிலம் பேசுகிற தொனியிலிருந்தே அவன் நம்மவன் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பேருந்து நின்றிருந்த போது புழுக்கம் அதிகமாக இருந்தது. ஜன்னலை சற்று பின்பக்கமாகத் தள்ளினேன். என்னுடைய இருக்கைக்கான ஜன்னல்தான் அது. அவன் தலையை வெளியில் நீட்டியிருந்தானாம். 

‘யூ ப்ளடி’ என்றான். சுள்ளென்று கோபம் வந்தது. ‘நீ தலையை நீட்டியிருந்தது எனக்குத் தெரியல’ என்று கோபமாகவே சொன்னேன்.

‘பார்த்துட்டு திறக்க முடியாதா?’ என்றான்.

‘முன்னாடி சீட்ன்னா பார்க்கலாம்...பின்னாடி இருக்கிறவங்களை எப்படிப் பார்க்கிறது’ என்றதற்கு மீண்டும் எதோ அவன் சொல்ல ‘தலைய வெளியே நீட்டக் கூடாதான்னு தெரியாதா?’ என்றேன். கோபத்தின் உச்சஸ்தாயியில் பேசிக் கொண்டோம். அவனது அருகில் இருந்தவனிடம் எனக்குக் காது கேட்கும் படியாக ‘ஹீ இஸ் எ ப்ளடி இடியட்’ என்றான். என்னைத்தான் சொன்னான். அவன் இருக்கும் அதே ஊரில் அதே வேலையைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். அப்படியானவன் நம்மைப் பார்த்து முட்டாள் என்பது சுரண்டிவிடுவது மாதிரிதானே? 

‘தம்பி..அளவா பேசு..மரியாதை கெட்டுடும்’ என்று திரும்பிப் பார்க்காமலேயே சொன்னேன். ‘பார்த்துட்டு திறக்க வேண்டியதுதாண்டா...பெரிய புடுங்கியாட்டம் பேசுற’ என்றான். இப்படி கோபத்தை அப்பட்டமாகக் காட்டுகிறவர்களிடம் உள்ளூர தாழ்வுணர்ச்சியும் பயமும் நிறைந்திருக்கும் என்பது என் புரிதல். எப்படியும் என்னைவிட பலவானாகத்தான் இருப்பான். ஆனால் பயம் நிறைந்தவர்களை மிரட்டுவதற்கு உடல் முக்கியமேயில்லை. குரலை மாற்றிக் காட்டினால் போதும்.

‘திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்குற...கேனக் கூ...ன்னு நினைச்சுட்டியா? மூடிட்டு வரலைன்னா நடக்கிறதே வேற’ என்றேன். எனக்கும் உள்ளூர பயம்தான். பேசி முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அரை பாட்டில் நீரைக் குடித்தேன். பேருந்தில் பலரும் திரும்பிப் பார்த்தார்கள். இப்படி அசிங்கமாகப் பேசியிருக்கக் கூடாது என்று சங்கடமாகத்தான் இருந்தது.  அவன் என்னைவிட பயந்தவன் போலிருக்கிறது. அதன் பிறகு பெங்களூரு வரும் வரைக்கும் எதுவும் பேசவில்லை.

நான் மட்டும் புஜபலத்தானா என்ன? வெறும் ஐம்பத்தெட்டு கிலோதான். ஒருவேளை அவன் என்னைவிடவும் குரலை உயர்த்தியிருந்தால் நான் அடங்கியிருப்பேன். ஆனால் அவன் அடங்கிக் கொண்டான்.

இந்த ஒரு விவகாரம் மட்டுமில்லை. பொதுவாகவே இன்றைய தலைமுறை முள் மீதுதான் நிற்கிறது- கைகளில் அரிவாள்களை ஏந்தியபடி. பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் பேஸ்மெண்ட் வீக். சூழலும் வாழ்க்கை முறையும் சக மனிதர்களோடு முகம் கொடுத்துப் பேசுவதற்கும் கூட விருப்பமில்லாதவர்களாக நம்மை மாற்றி வைத்திருக்கிறது. செல்போனும் ஹெட்போனும் இருந்தால் உலகமே நமக்குத் தெரியும் என கொள்கிறோம். ஆனால் அறிமுகமில்லாத சக மனிதர்களிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பது கூடத் தெரியாத மரங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

விதவிதமான மனிதர்களுடன் பழகுவதுதான் உண்மையிலேயே அற்புதமான கலை. அதைத்தான் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு தவறைச் செய்துவிட்டால் வழிந்தபடியே சிரிப்பது ஒன்றும் கேவலமான செயல் இல்லை. அப்படிச் சிரிக்கும் போது எதிராளி திட்டுவான். அதற்கும் சிரித்து வைத்தால் சுமூகமாக முடிந்துவிடும். ஆனால் ‘தவறு உன்னுடையதுதான்’ என்று நிரூபிக்க முயல்வதுதான் நம்மில் பெரும்பாலானவர்களின் நோக்கமாக இருக்கிறது. இல்லையா? எங்கள் நிறுவனத்தில் இந்தமாதிரியான அரசியல் எச்சக்கச்சம். ‘இவனுக டாக்குமெண்ட் சரியில்லை’ என்று அவர்கள் பழி போடுவதும் ‘அவர்களின் டிசைன் சரியில்லை’ என்று இவர்கள் பழி போடுவதுமாக ஆள் மாற்றி ஆள் பழியைப் போட்டுப் பழகி அதையே சாலையிலும் குடும்பத்திலும் அமுல்படுத்தி என எல்லாவற்றையும் நாராசமாக்கி...ச்சை!

ஆழத்தில் இழையோடும் பிரச்சினையைப் புரிந்து கொண்டாலே போதும். நம்மை நாமே மாற்றிக் கொள்வோம். ஆனால் யோசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்குமான அவகாசத்தையும் வெளியையும் மனநிலையையும் கொண்டிருக்கிறோமா என்பதுதான் சிக்கல்

தவறு நம்முடையதுதான் என்று கண நேரத்தில் புரிந்து கொள்வதற்கு மனப்பக்குவம் வேண்டும். ஒருவேளை அடுத்தவனின் தவறு என்றாலும் பொறுத்துக் கொள்வதற்கு வேறொரு மட்டத்திலான பக்குவம் வேண்டும். என்னதான் படித்து வேலைக்குச் சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் வாழ்க்கையில் இந்தப் பக்குவத்தை அடையவில்லையென்றால் நம்முடைய வளர்ச்சிக்கும் உயரத்திற்கும் அர்த்தமேயில்லை. 

14 எதிர் சப்தங்கள்:

Ravi said...

நிதர்சனமாண உண்மை

சேக்காளி said...

//இப்படி அசிங்கமாகப் பேசியிருக்கக் கூடாது என்று சங்கடமாகத்தான் இருந்தது.//
இதுல சங்கடப் பட என்ன இருக்கிறது.நம் மொழி தெரியாத ஒருவரிடம் அவரின் மொழியில் பேசினால் எளிதாய் புரிந்து கொள்வார் அல்லவா.அதே போல் அசிங்கமாக பேசுதல் அவனறிந்த மொழியாக இருக்கும்.

சேக்காளி said...

//பேசி முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்து அரை பாட்டில் நீரைக் குடித்தேன்.//
"நான் மொதலமைச்சர் ஆனால்" ன்னு கட்டுரையெல்லாம் எழுதிட்டு இப்பிடி தண்ணி குடிச்சா நல்லாவா இருக்கு.
வருமானவரி,அமலாக்கதொறை,சிபிஐ,தனிநீதிமன்றம் ன்னு சந்திக்க வேண்டியது நெறய இருக்கே.

Anonymous said...

ஒரு பச்சை மண்ண கண்ணாடியில வெச்சு 'நங்'குன்னு வெச்சு நசுக்கிட்டு வலியில கத்துறவன்கிட்ட ரூல்ஸெல்லாம் பேசியிருக்கீரு... பயபுள்ள காண்டாகவும் ஒரே கத்தா கத்தி பிறப்புறுப்ப பத்தியெல்லாம் கிளாஸ் எடுத்து அவன டோட்டல் டேமேஜ் பன்னிட்டு இங்க வந்து 'ஜூலி' மாதிரி சப்பைகட்டுப் பதிவு வேற போடுறீரு! என்ன நியாயம்ங்க இது? உங்களுக்குள்ள தூங்கிட்டு இருந்த ஒரு மிகப்பெரிய ரவுடி டான் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர்றான் பாருங்க...

வெட்டி ஆபீசர் said...

உண்மைய சொல்லுங்க...வீட்டுக்கு வந்து வீட்டுக்காரம்மா கிட்ட பீத்திக்கிட்டிங்களா இல்லையா?

அன்பே சிவம் said...

யாருகிட்ட கொய்யாலே தமிழன் கிட்டயேவா!?

மணியண்ணே இருந்தாலும் நமக்கும் இம்புட்டு

கோவம் ஆகாதுங்கோ.:-)

Vaa.Manikandan said...

வெட்டி ஆபிசர்,

“வேணியிடம் ஃபோனில் சொன்னேன். ‘ஒழுங்கா வீடு வந்து சேருங்க’ என்றாள்” என்று எழுதும் போதே ஒரு வரி சேர்த்திருந்தேன். பதிவு செய்வதற்கு முன்பாக நீக்கிவிட்டேன். ஆனாலும் சரியாக பல்ஸ் பிடித்துவிடுகிறீர்கள் :)

Dineshkumar Ponnusamy said...

பொது இடங்களில் எனக்கும் இதுபோன்று பல தடவை நடந்துருக்கு... ஆனா நீங்க கொஞ்சம் தைரியமான ஆள் தான்... என்ன ஒன்னு ஏதாவது பொண்ணுங்க சொன்னா உடனே உலகம் நம்பிடும்... நம்மள பத்தி அங்க சொல்லி அவங்களுக்கு புரிய வைக்க தான் முடியாது... ஓவியா மாதிரி ஓரமா ஒதுங்கிக்கனும்.

Anonymous said...

நீதானா அது, வாடி, வா எங்க போயிடுவ!!!!!

Anonymous said...

சும்மா வேடிக்கைக்குத்தான் மணி. Don't take it serious.

Rathinasamy said...

உண்மை பல இடங்களில் வார்த்தைகளை விட்டுவிடு பின் நடு இரவில் எல்லாம் உறக்கம் இழந்த நாட்களும் உண்டு


/* விதவிதமான மனிதர்களுடன் பழகுவதுதான் உண்மையிலேயே அற்புதமான கலை. அதைத்தான் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம். */

எல்லாரும் உணர வேண்டும்.

ADMIN said...

நீங்க இப்படி பேசினீங்களா? புதுசா இருக்கு.

Malar said...

நம்மள விட கோவகாரன இருப்பனோ \\ that guy's mindvoice..

Vinoth Subramanian said...

நீங்க தப்பு பண்ணிட்டீங்க சார். அப்பிடியே எழுந்து போயி கண்ணத்துல பலார்... பலார்... பலார்... பலார்... னு விட்டு இருக்கனும். தலைய வெளியவாடா நீட்டிட்டு வர? அப்பிடிநு தலைலையே நாலு போட்டு இருக்கனும் சார். எத்தன அடி அடிக்குரோம்னு முக்கியமில்ல. அடிக்குர மொத அடிதான் முக்கியம். அவன் திருப்பி அடிக்க யோசிக்கும்படியா இருக்கனும் உங்களுடைய மொத அடி. அடுத்தவாட்டி எவனாச்சும் இப்பிடி பண்ணா ஒங்கி அடிங்க. ஓங்கி நா... நீங்க அடிக்குர சத்தம் அவன் அலருர சத்தத்த விட அதிகமா கேக்கனும்.