எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதையும் விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடியது அந்நூல் குறித்தான உரையாடல்கள். வாசித்துவிட்டு நூலின் ஆழ அகலங்களையும் பலம் பலவீனங்களையும் பேசுகிறவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். இத்தகைய உரையாடலும் விமர்சனங்களும்தான் எழுத்தை மெருகூட்டுவதற்கான எல்லாவிதமான வெளிகளையும் எழுதுகிறவனுக்குக் கொடுக்கின்றன.
‘புக் வெளியானவுடனேயே பேசி முடிச்சுடுவாங்க...கொஞ்சம் இடைவெளி விழும்...அப்புறம் இரண்டாவது ரவுண்ட் பேச ஆரம்பிப்பாங்க..அப்போ உங்க சந்தோஷம் வேற லெவல்ல இருக்கும் பாருங்க’ என்று புத்தகக் கண்காட்சியில் ஜீவகரிகாலன் சொன்னது நினைவில் இருக்கிறது. ‘இந்த நாவலுக்கான எதிர்வினைகள் எப்படி இருக்கும்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டதற்கு அப்படியொரு பதிலைச் சொன்னார். அப்படிப்பட்ட இடைவெளிக்குப் பிறகு என்னிடம் நாவல் குறித்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடுத்த நாவலுக்கான களமும் பெங்களூர்தான். விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மூன்றாம் நதியின் தொடர்ச்சியாக எழுதலாமா அல்லது துண்டித்துவிட்டு புதிய கதையாகச் சொல்லலாமா என்று குழப்பமாக இருக்கிறது. இத்தகைய விமர்சனங்கள் அந்தக் குழப்பத்தை தெளிவாக்குவதாகவே உணர்கிறேன்.
நூலகர் கல்யாணிக்கும், ஜீவாவுக்கும் நன்றி.
*******
*******
(1)
மூன்றாம் நதி, நண்பர் ஜீவ கரிகாலன் நூலகக் கொடையாக அளித்து சில மாதங்களாகிறது. நேற்று முன் தினம் தான் வாசித்து முடித்தேன்.
தலைப்பும், அதற்கேற்ற அட்டைப்பட வடிவமைப்பும் கச்சிதமாக பொருந்துகிறது. நம் கண்களுக்கு புலப்படாத மூன்றாம் நதி உண்டல்லவா ? அது போல நம் சிந்திக்க மறந்த, கவனத்தில் கொள்ளாத, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டுகிறது மூன்றாம் நதி. பெங்களூர் வசீகரமான மென்பொருள் நகரம். கோடிகளில் புரளும் கார்ப்பரேட் நிறுவனங்களும், நுனி நாக்கில் ஆங்கிலம் தவளும் கணினி வல்லுனர்களும் உலா வரும் சொர்க்க பூமி. ஆனால், அங்கு யாராலும் கண்டு கொள்ளப் படாத கதையின் நாயகி பவானி யின் கணவன் லிங்கப்பா வின் கொலையில் நாவல் தொடங்குகிறது.
விவசாயம் பொய்த்து, பிழைப்பு தேடி பெரும் நகரம் வரும் அமாசை, அங்கு தன் மனைவியை பலிக் கொடுத்து, வாழ்க்கையை தொடங்குகிறான்.
படிப்பில் ஆர்வமில்லாது போனாலும், பவானி கூர்மையான பெண்ணாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள். மணியிடம் சொன்னது தான். பவானி யை நேரில் கண்டு, அவள் பகிர்ந்த கதையை, எழுத்தில் வடிவமாக வெளிக் கொணர்ந்த நாவலாக என் உள்ளுணர்வு உணர்த்துகிறது. மிகவும் இயல்பான, நேர்மையாக அவள் கதாபாத்திரம் மிளிர்கிறது. அவள் சித்தி வசச் சொற்கள் வீசும் போதும், வருணு டன் பழகும் போதும், அந்த ஹரியானா பெண் மற்றும் காதலனிடமும் உதவியினை கோரும் போதும், தன் கம்பீரம் குலையாது, மிகவும் இயல்பாய், தன்னை சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்.
தண்ணீர் தேவைதான் கதையின் போக்கினை தீர்மானிக்கிறது. பால்காரரின் பேராசை, லிங்கப்பா வையும் சேர்த்து காவு வாங்கிவிடுகிறது. அதிலும், கூலிக் கொலையாளிகள் மிகவும் சாவகாசமாக, கிளம்பும் காட்சிகள் எல்லாம் நாமும் கண்டும், கேட்டும், மெளன சாட்சிகளாய் தான் கடந்து வருகிறோம்.
எதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? முப்பது வயதில், கையில் குழந்தை யுடன், ஒரு பெண் தன் துணையை இழப்பது பெரும் துயரம். பவானி யும் தன் கணவனை இழந்து, திராணியற்று, நிர்கதியாய் நிற்கிறாள். அதன் பிறகு, அவள் வாழ்க்கை பயணம் இன்னும் கடுமையானதாய் இருக்கலாம். அவள் மகள் பவித் ரா வும் இன்னொரு பவானி ஆகலாம். ஆனால், அதனை நம் கணிப்பினில் விட்டுவிடுகிறது முடிவு.
கதை முழுவதும் எந்தவிதமான அலங்கார வார்த்தைகள் எதுவுமில்லை. உணர்ச்சிகளை பிழியும் நாடகத் தன்னையும் இல்லை. சாதாரணமான நடையிலும் தொய்வில்லாமல் நம்மை கவர்கிற்து. நூறு பக்கங்களில் கதையினை சுருங்கச் சொல்லி இருக்கிறார். அது கச்சிதம். சோம்பேறியான என்னைப் போன்றவர்களும் விரைவில் வாசிக்கலாம்.
வாசித்து முடித்தவுடன், வேகமாய் நாம் வாழும் இயந்திர வாழ்க்கையில் தொலைத்த மனிதத்தை குறித்து நீங்கள் சிறிதேனும் சிந்திக்கலாம். அதுவே மூன்றாம் நதியின் தாக்கம் என்பேன்.
நூலகர் கே.எஸ்.கல்யாணி
***
(2)
மூன்றாம் நதி - அட்டை வடிவமைப்பே வித்யாசமா பட்டுச்சு. முதல்ல பட்டுன்னு பிடிபடல, ஆனா என்னமோ வித்யாசமா இருக்கே இருக்கேன்னு திருப்பி திருப்பி பாத்துட்டு இருந்தேன். அப்புறமா திடீர்னு தடவி பாக்கனும்னு தோணிச்சு. அட, கருப்பு அட்டைல நீல கலர்ல ஒரு பொண்ணோட அவுட்லைனும், மூன்றாம் நதின்னு எழுத்தும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க. எனக்கு அது ரொம்ப வசீகரமா இருந்த மாதிரி தோணிச்சு.
இந்த நாவல் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியதுன்னு முன்னுரை படிச்சு தெரிஞ்சிகிட்டேன். “பெரும் வேட்டைக் காடான இந்த உலகம் அவர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது” – முன்னுரைல இருந்த இந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது.
சமீப காலமா எனக்குள்ள ஒரு யதார்த்தம் பிடிபட்டு அதிக வலியை குடுத்துகிட்டே இருக்கு. வா. மணிகண்டன் சொன்ன மாதிரி இந்த உலகம் ஒரு வேட்டைக் காடு. ஆனா இங்க விளிம்பு நிலை மனிதர்கள் மட்டும் தான் இரையாகுறாங்கன்னு சொல்ல முடியாது. எல்லாருக்குள்ளேயும் ஒரு வன்மம் இருக்கு. சந்தர்ப்பங்கள் கிடைக்குற நேரத்துல எல்லாம் அத பயன்படுத்தி வேட்டையாடி தன்னோட வன்மங்கள தீத்துக்குறாங்க மக்கள்.
எனக்கு சென்னை, ஹைதராபாத், பெங்களூர்ன்னு எந்த பெரு நகரங்களோட பரிச்சயமும் இல்ல. அதனாலயே அங்க வாழ்ற விளிம்பு நிலை மனிதர்கள் பத்தின எந்தவிதமான எண்ண ஓட்டங்களும் இல்ல. இந்த மென்பொருள் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் பற்றி கூட எனக்கு எந்த பிரக்ஞையும் கிடையாது. உண்மைய சொன்னா எனக்கு யார் மேலயும் எந்த பரிதாபமும் கிடையாது.
எனக்கு இந்த நாவல படிச்சப்ப ஒரு பெண்ணோட வாழ்க்கை மேலோட்டமா சொல்லப்பட்டுருக்குன்னு தான் மனசுல பட்டுச்சு. ஒரு பெண்ணோட கஷ்டம் எந்த இடத்துலயும் ஆழமா சொல்லப்படலங்குறது என்னோட கருத்து. ஆசிரியர் கூட சொல்லி இருக்கார் “இருந்தாலும் துளி தயக்கம் ஏதோவொரு மூலையில் எட்டிப் பார்த்தப்படியே இருக்கிறது”ன்னு. அந்த தயக்கம் வேற எதுவும் இல்ல, சம்பவங்கள விவரிச்ச முடிஞ்ச அவரால அவளோட உணர்வுகள விவரிக்க முடியலன்னு நான் நினைக்குறேன்.
என்னை கேட்டா, பவானியோட வாழ்க்கைல வந்த எந்த சந்தர்ப்பமும் அவள கீழ் நோக்கி தள்ளாது. அவ எந்த சூழ்நிலையிலயும் வாழ, தன்னை பொருத்திக்குற ஒரு ஆத்மாவா தான் என் கண்ணுக்கு தெரியுறா. சித்திகிட்ட இருந்து கிடைக்குற வசவு சொல் அவள தற்கொலைக்கு தூண்டுது. அதே நேரம் வருணோட நட்பு அவள அதுல இருந்து காப்பாத்துது. இதெல்லாம் இன்னும் ஆழமா சொல்லி இருக்கலாம். வாழ்க்கையோட ஒவ்வொரு நகர்வுலயும் பவானி வாழ்ந்துகிட்டே தான் இருக்கா. அதனால அவளோட கணவன் இறப்பு கூட “இதுவும் கடந்து போகும்” வகை தான். அவ அவளையே செதுக்க அவளுக்கு கிடைச்ச அடுத்த சந்தர்ப்பம் அதுன்னு எனக்கு தோணுது. கண்டிப்பா பவானி அவ குழந்தைய அநாதையா விட மாட்டா. இந்த வேட்டை உலகத்துல தன்னையும் தன்னோட குழந்தையையும் கண்டிப்பா அவ பொருத்திப்பா.
பெண்ணோட உணர்வுகள் தான் இங்க குறையுதுன்னு சொன்னேனே தவிர, சம்பவங்கள விவரிச்சிருக்குற விதம் பயங்கரம். லிங்கப்பா உடம்பு எரிஞ்சி, கரிஞ்சி விழுறத விவரிச்ச விதம், பால்காரர் கொலைய விவரிக்குற இடம் எல்லாம் அப்படியே காட்சிய கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுது. லிங்கப்பாவோட பவானியோட கடைசி பயணமும் கண் கலங்க வைக்குது. அந்த இடத்துல பவானியோட மனச, உணர்வ கொஞ்சம் ஆழமா சொல்லி இருக்கார் ஆசிரியர்.
பவானிக்காக இந்த நாவல்னு சொன்னா அத என்னால ஏத்துக்க முடியாது. இதுல முழுக்க முழுக்க ஆண்களோட கதை தான் சொல்லப்பட்டுருக்கு. அதுல முதலும் பத்தொன்பதாம் அத்யாயம் தவிர்த்து, பவானி ஒரு அங்கம் அவ்வளவே தான்.
பஞ்சம், கொலை, அதிகாரம், கம்யூட்டர் வர்க்கம்ன்னு ஆசிரியர் விவரிக்குற எல்லாமே யதார்த்தத்த உணர்த்துது. ஒரு நகரம் எப்படி தன்னோட கிளைகளை பரப்பி மனிதாபிமானம், சுகாதாரம் எல்லாத்தையும் அழிக்குது, எப்படி அது தன்னை இன்னொரு நிலைக்கு தயார் படுத்திக்குதுன்னு எல்லா விசயங்களையும் அழகா அடுக்கி இருக்கார் வா.மணிகண்டன். அத படிச்சுட்டு நாம இங்க சொகுசா இருக்கோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி என் மனசுல வராம இல்ல.
மூன்றாம் நதி – ஒரு பெண் அப்படிங்குற காரணத்தால இன்னும் இந்த நாவல்ல என்னோட எதிர்பார்ப்பு அதிகமா இருந்துருக்கலாம். அதனால கொஞ்சம் ஏமாற்றம்னு தான் சொல்லணும். மத்தபடி எனக்கு தெரியாத ஒரு இடத்துல நின்னுகிட்டு மூச்சு முட்டின உணர்வு இத படிச்சதும். நகரம் பழகிக்கணும்.
ஜீவா
1 எதிர் சப்தங்கள்:
//விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.//
நான் ஒரு கதை சொல்லட்டுமா?
Post a Comment