Jul 7, 2017

பரமசிவன் பண்ணாடி

ராமசாமிதான் முதலில் ஓடினார். 

ஓட்டம் எடுப்பதற்கு முன்பாக ‘பெரிய தோட்டத்து மோட்டார் ரூமா?’ என்று கேட்டுக் கொண்டார். அவர் போய்ச் சேர்ந்த போது மோட்டார் அறையில் அரவமில்லை. கிணற்று மேட்டில் காரி மாடு மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது. மடி பெருத்திருந்த நல்ல கறவை. அதன் காம்பு எட்டாத தூரத்தில் கன்றுக் குட்டியைக் கட்டியிருந்தார்கள். அநேகமாக வீரக்காயன்தான் கட்டியிருக்க வேண்டும். பெரிய தோட்டத்தில் பண்டம்பாடிகளை மேய்க்கிற வேலை அவனுக்குத்தான்.

ராமசாமி நந்தியாம்பாளையத்து பஞ்சாயத்து போர்டில் க்ளர்க். கிணற்று மேட்டுக்கு யாராவது வருகிறார்களா என்று பார்த்தார். பெருந்தலைக்காகம் ஒன்று வலமிருந்து கரைந்தபடியே இடப்பக்கமாக பறந்தது. ‘கெரகத்த’ என்று சொல்லிக் கொண்டார். அவருக்கு சகுனங்களின் மீது நம்பிக்கை உண்டு. காகம் வலமிருந்து இடம் பறந்தால் தடத்தை மறிப்பது போல. கவனத்தைத் மாற்றுவதற்காக மோட்டார் அறையைப் பார்த்தார். அது  சீமை ஓடு வேயப்பட்டிருந்த அறையாக இருந்தது. நூற்றுக்கணக்கான முறை அந்த அறையைப் பார்த்திருக்கிறார். ஆனால் இப்பொழுது அது ஏதோ புத்தம் புதியதாகத் தெரிந்தது. அன்றைய தினம் கூட காலையில் பெரிய தோட்டத்துக் கிணற்றில்தான் குளித்துவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். மார்கழி மாதத்துக் குளிருக்கு கிணற்று நீர் நிலச்சூட்டோடு இதமாக இருந்தது. சிவாஜிகணேசனும் சரோஜாதேவியும் நடித்த படமொன்றின் பாடலைப் பாடிக் கொண்டே குளித்தது அவருக்கு நினைவில் வந்து போனது. ‘முத்து..பவளம்..முக்கனிச் சர்க்கரை..மூடி வைக்கலாமா’. ரிலீஸாகி ஒன்றரை மாதங்கழித்து புளியம்பட்டி ரவி கொட்டகையில் திரையிட்டிருந்தார்கள். பெஞ்ச் டிக்கெட் எட்டணா. தனியாகப் பார்த்துவிட்டு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. 

பெரிய தோட்டம் என்றால் அது உண்மைக்கே பெரிய்ய்ய்ய்ய தோட்டம். நந்தியாம்பாளையத்தில் முப்பது ஏக்கர். மொத்தமாக வளைத்துச் சுற்றிலும் கிளுவமரத்து வேலி போட்டிருந்தார்கள். மாரக்காயாள் தெம்பாக இருந்த வரைக்கும் வேலியில் பாகற்கொடிகளும் பூசணிக்கொடிகளும் படர்ந்திருக்கும். பண்ணாடியின் அம்மாதான் மாரக்காயாள். கிழவி ஓய்ந்து அமர்ந்த பிறகு ‘கண்டவிங்களும் பொறிச்சுட்டு போய்டுறாங்க’ என்று யாரும் கண்டு கொள்வதில்லை. கொடிகள் காய்ந்து கிடந்தன. 

பண்ணையத்து ஆட்களெல்லாம் ‘பண்ணாடி வெவரமப்போவ்’ என்பார்கள். பண்ணயத்து ஆட்கள் மட்டுமில்லை- ஊரே அப்படித்தான் சொல்லும். பண்ணாடி மட்டுமில்லை அவரது அப்பாவுமே விவரம்தான். இரண்டு தலைமுறைகளாகவே ஒற்றை வாரிசுகளுக்காக பார்த்துப் பார்த்து சேர்த்து வைக்கப்பட்ட சொத்துக்கள்தான் ஊர் பூராவும். பண்ணாடியுடன் கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அவருக்கும் மகனைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை.

மூன்று தலைமுறைக்கு முன்பாக சேவூர் பக்கத்திலிருந்து நந்தியாம்பாளையத்துக்கு பஞ்சம் பிழைப்பதற்காக வந்து சேர்ந்தார்கள். அப்பாரு காலத்தில் ஒன்றுமில்லாத குடும்பம் அது. ஆரம்பத்தில் கணக்குப்பிள்ளையிடம் பண்ணயத்தாளாக இருந்தவர் கொஞ்சம் காட்டை வாங்கிக் கிணறு வெட்ட முப்போகம் விளையத் தொடங்கியது. வருமானத்தில் இண்டம் பிடித்து மிச்ச மீதியை வட்டிக்குக் கொடுத்து என பரமசிவனின் தாத்தனும் அப்பனும் சேர்த்த சொத்துக்கள்தான் அத்தனையும். இனி காலாகாலத்துக்கு காலை நீட்டி அமர்ந்து தின்றாலும் கூட இன்னமும் இரண்டு தலைமுறைக்கு பாடுபடாமலேயே சாப்பிடலாம். அப்படியொரு கணக்கு. 

‘மூணு தலக்கட்டு பொழச்சவீங்களும் இல்ல..மூணு தலக்கட்டு தோத்தவீங்களும் இல்ல...அப்படித்தானுங்க சார்?’ என்று பரமசிவன் க்ளர்க்கை ஒரு முறை கேட்டான். 

‘நாங்க எல்லாத் தலக்கட்டுலயும் இப்பிடியேதான்..சம்பளத்து ஆளுங்க..என்னையக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டுச் சிரித்தார் ராமசாமி. 

‘அதுக்கு இல்லீங்க சார்...எங்களுதுல நான்தான் மூணாவது தலக்கட்டு...மூணு தலக்கட்டா பொழச்சாச்சு..நான்தான் சொத்து பூராத்தையும் தொலைக்கப் போடறனோ என்னமோ’ என்றான்.

பரமசிவன் வாட்டசாட்டம். அம்மாவின் லட்சணத்தை அப்படியே வாங்கிக் கொண்டு வந்திருந்த ஆணழகன். பெரும்பணக்காரன் என்பது நமக்கே தெரியுமே. அக்கம்பக்கத்துக்காரர்களுக்குத் தெரியாதா? ‘அங்க பொண்ணு இருக்குது..இங்க பொண்ணு இருக்குது’என்று ஆட்கள் வராத நாட்களே இல்லை. நடைக்கு அஞ்சு பத்து வாங்கிக் கொள்வார்கள். சோற்று நேரமாக இருந்தால் மொந்தை சோறு போட்டு அனுப்புவார்கள். ஒரு ஜாதகமும் பொருத்தமில்லை. குருபலம் வர இன்னமும் ஆறு மாதம் இருப்பதாக பாளையத்து ஜோசியகாரன் சொல்லி நாற்பத்தைந்து நாட்கள் ஆகியிருந்தது. பண்ணாடி பரமசிவனுக்கு புல்லட் வாங்கிக் கொடுத்திருந்தார். ‘செயினு போட்டுக்க சாமி’ என்று அம்மா அணிவித்துவிட்டிருந்ததை அவன் கழற்றியதே இல்லை.

ராமசாமிக்கு அந்த ஊரில் பரமசிவன்தான் வெகு ஸ்நேகிதம். அவர் காங்கேயத்துக்காரர். வேலைக்காக நந்தியாம்பாளையம் வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகியிருந்தன. வந்த புதிதிலிருந்தே பரமசிவனோடு ஒட்டிக் கொண்டார். அவனும் பணக்கார தோரணையில்லாமல் பழகினான். அந்த ஊரில் படித்தவனாக மட்டுமில்லாமல் டவுனுக்குச் சென்று வரும்போதெல்லாம் விகடனோ, குமுதமோ, கல்கியோ வாங்கி வருவான். புது இதழ் வாசம் போகாமலேயே க்ளர்க்குக்கு கொண்டு வந்து தந்து தருவதாலேயே அவன் மேல் தனிப்பாசம் அவருக்கு. அவன் பைக் வரும் சத்தத்தை வைத்தே பஞ்சாயத்து போர்ட் பள்ளி மாணவர்கள் ‘ஓஓஓ’ என்று கூச்சலிடுவார்கள். வண்டியின் உறை நிறைய பரமசிவன் சாக்லெட் வைத்திருப்பான். ஈ மொய்ப்பது போல மொய்க்கும் பிள்ளைகளுக்கு ஒவ்வொன்றாகக் கொடுப்பதால் அவன் கிட்டத்தட்ட ஹீரோவாக இருந்தான். 

க்ளர்க்கும் பரமனும் ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘ஏதாச்சும் பொம்பளப் புள்ள சகவாசம்...’ என்று ராமசாமி இழுப்பதுண்டு. பரமசிவன் பிடி கொடுக்கவே மாட்டான். இந்தமாதிரியான விவகாரங்களில் வெகு இளக்கம். யாராவது விளையாட்டுக்குச் சொன்னால் கூட நெளிந்துவிடுகிற ஆளாக இருந்தான்.

பரமசிவன் மூன்று நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து போர்டுக்கு ராமசாமியைப் பார்க்க வந்திருந்தான். ‘எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சா நம்ம ஊர்ல நான்தான் மொதக் கொடிக்கம்பம் கட்டுவேன்’ என்பதைச் சொல்வதற்காகவே வந்திருந்தான். ராமசாமிக்கு எம்.ஜி.ஆர் போணி ஆவாரா என்ற சந்தேகமில்லாமல் இல்லை. ‘சினிமாவும் அரசியலும் சூதாட்டம் பரமு...ஜெயிச்சா தப்பிச்சுடலாம்..இல்லன்னா சொத்து போயிரும் பாத்துக்க’ என்றார். அவன் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தான். தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லிவிட்ட திருப்தி ராமசாமிக்கு. ஒருவேளை எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்தால் உள்ளூரில் பரமசிவன் எம்.எல்.ஏ ஆகிவிடுவான் என்று அவருக்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆரால் வெல்ல முடியவில்லையென்றால்? பரமனுக்கும் க்ளர்க் சொன்னது ஊசியில் குத்துவது போல இருந்தது. ஆனால் முப்பது ஏக்கரா பண்ணையம் அவ்வளவு சீக்கிரம் கரைந்துவிடுமா என்ன?

உள்ளூரில் தானொரு குட்டி எம்.ஜி.ஆர் என்ற நினைப்பில் இருந்தவன் அவன். தனது தலைவர் எப்படியும் முதல்வர் ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில்லாமல் இல்லை. அன்றைய தினம் தொண்டுப்பட்டியில் அமர்ந்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். குடோனில் மட்டும் ஆயிரம் மூட்டைகள் மஞ்சளை அப்பா அடுக்கி வைத்திருந்தார். மஞ்சள் விற்கிற விலைக்கு அது போதும். நாளைக்கே தேர்தல் என்றாலும் கூட கோயமுத்தூர் ஜில்லாவையே ஜெயிக்கலாம். ஆனால் அப்பனும் அம்மாவும் அதை விற்றுத்தான் கல்யாணச் செலவு செய்வதாக முடிவு செய்து வைத்திருந்தார்கள். எவள் வரப்போகிறாளோ என்று நினைத்த போது பெரு மூச்சு வந்தது. 

கருக்கல் ஏறிக் கிடந்தது. ‘மாசங்கெட்ட மாசத்துல மழை வருமா?’ என்று நினைத்துக் கொண்டே எம்.ஜி.ஆர் பற்றி மறுபடியும் யோசித்தான். ‘கருணாநிதி ஒன்னும் லேசுப்பட்ட ஆள் இல்லை..அந்த மனுஷனை எதிர்த்து நம்ம தலைவர் மேல வர முடியுமா?’ என்றுதான் திரும்பத் திரும்ப மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. 

அப்பனின் ஏப்பச் சத்தம் கேட்டது. இரவு உணவை முடித்துக் கொண்டார் போல. காற்று வாங்க தொண்டுபட்டிக்கு வருவது வழக்கம்தான். பண்டம்பாடிகளின் வயிறு நிரம்பியிருக்கிறதா என்பதை அவர் பார்ப்பதும் அப்பொழுதுதான். வெற்றுடம்போடு தன் நெஞ்சு முடிக்குள் கைகளை விட்டு அளாவியவர் ‘என்னப்பா ரோசனை பலமா இருக்குது?’ என்றார்.

‘ஒண்ணுமில்லீங்ப்பா’ என்றபடியே எழுந்து கொண்டான். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவதே அவருக்குப் பிடிக்காது. அவரும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

பரமசிவன் வீட்டுக்குள் நுழைந்தான். விசாலமான தொட்டிக் கட்டு வீடு. சோறாக்கி வைத்திருந்த போசியிலிருந்து எடுத்துப் போட்டு உண்டான். வீட்டில் அம்மாவைக் காணவில்லை. ‘இந்நேரத்துக்கு எங்க போச்சோ’ என்று நினைத்துக் கொண்டான். அப்பன் உள்ளே வரவும் ‘அம்மா எங்கீங்ப்பா’ என்றான். அவருக்கு காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. அம்மா பற்றி அப்பாவுக்குத் தெரியாது. குஞ்சம்மாள் இருந்தாள் அவளைக் கேட்கலாம். வீட்டில் அம்மாவுக்கு அவள்தான் ஒத்தாசை. இந்நேரம் வரைக்கும் அவளுக்கு என்ன வேலை? கிளம்பிச் சென்று வெகு நேரமாகியிருக்கும். அப்பா தனது இரும்புக்கட்டில் மீது சுருட்டி வைத்திருந்த மெத்தையை விரித்துத் தட்டிவிட்டு ரேடியோவைத் திருகினார். கோவை வானொலி நிலையம் கரகரத்தது. 

யாரேனும் மோட்டார் அறைப்பக்கமாக வந்திருக்கக் கூடும் என்று ராமசாமி நினைத்தார். ஒருவரையும் காணவில்லை. யாருமற்ற அந்தச் சமயத்தில் மோட்டார் அறைக்கதவைத் தட்டலாமா என்று ராமசாமி க்ளர்க்குக்கு குழப்பமாக இருந்தது. 

வீரக்காயன்தான் ஓடி வந்தான். அவன் முகம் வெலவெலத்து போயிருந்தது.

வந்தும் வராததுமாக ‘இப்படி ஆயிப்போச்சுங்களே சாமீ....இதெல்லாம் நெசமாத்தான் நடக்குதுங்களா?’ என்றான். 

‘என்ன நெசம்?’ என்றார் ராமசாமி.

‘அடசாமீ உங்களுக்குத் தெரியாதா?’ என்றான் அடக்கமுடியாத அழுகையுடன். 

‘நம்ம சின்னச்சாமி நாண்டுக்கிட்டுச்சுங்க’ என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக ராமசாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

‘என்ரா சொல்லுற?’ என்ற போது கிட்டத்தட்ட கத்திவிட்டார். அவருக்கு பரமசிவன் தூக்குப் போட்டுக் கொண்டான் என்ற தகவல் தெரியாது. மோட்டார் அறைக்குள் யாரோ ஒருவர் ஒளிந்து பூட்டிக் கொண்டதாகத்தான் அவருக்குத் தகவல் சொன்ன பொடியன் சொன்னான். திருடனாக இருக்கக் கூடும் என்கிற நினைப்பில்தான் ஓடி வந்திருந்தார். பரமசிவன் வெளியே எங்கேயாவது சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில்தான் அதுவரையிலும் இருந்தார். மாடு பிடித்துச் செல்ல வந்த வீரக்காயன் பரமசிவனைப் பார்த்துவிட்டு பண்ணாடியிடம் நேரடியாகத் தகவலைச் சொல்வதற்குப் பயந்து தன் வளவில் யாரிடமோ சொல்லிவிட்டு திரும்ப வந்திருக்கிறான்.

அடக்கமுடியாத பதற்றத்துடன் க்ளர்க்கும் வீரக்காயனும் கதவைத் தள்ளிப்பார்த்தார்கள். உள்ளே தாழிடப்பட்டிருந்தது. அடுத்த கணம் அறை மீதேறி சீமை ஓட்டைப் பிரிக்கத் தொடங்கினார். வீரக்காயன் கதறியழ ஆரம்பித்திருந்தான். ஊர்க்காரர்கள் அவனது கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். அறைக்குள் இறங்கியிருந்த ராமசாமியால் பரமசிவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. பார்க்கும் நிலையில் அது இல்லை. கோரமாகிக் கிடந்தது. எச்சில் ஒழுகியபடித் தொங்கியவனின் விழிகள் பிதுங்கியிருந்தன. அவனது சட்டைப்பையிலிருந்த காகிதத்தை உருவி மடக்கித் தனது சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்டார்.

அவர் கதவைத் திறந்த போது கிட்டத்தட்ட ஊரே வந்து சேர்ந்திருந்தது. மாரக்காயாள் கிழவி மாரை அடித்துக் கொண்டு அழுதபடியிருந்தாள். பண்ணாடி மூர்ச்சையற்று விழுந்தார். பரமசிவனின் அம்மா தலைவிரிகோலமாகத் தலையில் அடித்துக் கொண்டாள். போஸ்ட்மார்ட்டம், போலீஸ் என்றெல்லாம் போகாமல் அடுத்த அரை மணி நேரத்தில் கட்டையை அடுக்கி அவனைக் கரியாக்கினார்கள். பரமசிவன் எதனால் இறந்து போனான் என்று ஊரில் யாருக்கும் தெரியவில்லை. காரியங்கள் முடிந்த பிறகு தனது அறையில் ஒளித்து வைத்திருந்த கடிதத்தைக் கைகள் நடுங்க படிக்கத் தொடங்கினார் ராமசாமி க்ளர்க்.

‘எப்பொழுதும் உடலே மனதை வெல்லும் என்று தெரியும். வேறு யாரையும் அந்தக் கோலத்தில் பார்த்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன்...அம்மாவை’ என்று நீண்டிருந்த கடிதத்தை அதற்குமேல் படிக்க மனமின்றி கிழித்து வீசினார்.

உங்களுக்கு இருக்கும் அதே கேள்விகள்தான் எனக்கும். ராமசாமி க்ளர்க் பதில் எதுவும் சொல்லவில்லை.

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘எப்பொழுதும் உடலே மனதை வெல்லும் என்று தெரியும். வேறு யாரையும் அந்தக் கோலத்தில் பார்த்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன்...அம்மாவை’ என்று நீண்டிருந்த கடிதத்தை//
எத்தனை முறை அடித்து அடித்து திருத்திய பின் இந்த வாக்கியம் அமைந்தது மணி?.

Anonymous said...

Dear Mani Sir,

Nothing in the world is more important than life. pls avoid stories that related to suicide. Reason is not at all convincing..

If his father did the same thing , he would have committed suicide or take it easy? This is too sexist story as per my opinion. Mom is also human being not a god... Everyone do mistakes and suicide is not answer for anything...


Vaa.Manikandan said...

நாற்பதாண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. இந்தக் கதையை எழுதி முடித்துவிட்டு சம்பவத்தை என்னிடம் சொன்னவரை அழைத்து வாசிக்கச் சொன்னேன். வாசித்துவிட்டு தன்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

சம்பவத்தைச் சரியாகவே கதையாக மாற்றியிருக்கிறேன் என்று திருப்தியாக இருந்தது.

நடந்த கதை இது. நமக்கு convincing ஆக இல்லை என்பதற்காக முடிவை மாற்ற முடியாதல்லவா?

Anonymous said...

ok, i didn't know that its real incident..
I just thought as a story only. since many students/youngsters are reading ur blog, i wanted to mention about the suicide part..

Unknown said...

பெருமாள் முருக புலியுர் முருகேசனல்லா
பிச்ச வாங்கோனும் போ

Anonymous said...

Love, affection can come anytime anyone's life . In our society,even adult men/women 's love affairs are treated cheaply as "Kallakathal" also Marriage is focused as Holy.