அடுத்த புத்தகம் அச்சுக்குச் சென்றுவிட்டது. சத்தியமாகத்தான். ‘ரோபோஜாலம்’.
‘என்னப்பா திடீர்ன்னு சொல்லுற’ என்று யாராவது கேட்கக் கூடும். நாமும் அவ்வப்பொழுது ரவுடி என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? அதுதான். ரோபோடிக்ஸ் பற்றிய எளிய அறிமுகத்தைக் கொண்ட புத்தகம் இது. எனக்கு எதுக்கு ரோபோ பற்றித் தெரிய வேண்டும் என்று யாராவது கேட்டால் ரஜினியிடமும் ஷங்கரிடமும் பிடித்துக் கொடுத்துவிடுவேன். சீனாவுடன் போர் வரும் போலிருக்கிறது. அவரோடு எல்லைக்குச் சென்று போரிட வேண்டியிருக்கும். எப்படி வசதி என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
உளவு ரோபோவிலிருந்து உழவு ரோபோ வரை விதவிதமான ரோபோக்கள் பற்றிய தகவல்களும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற தொழில்நுட்பமும்தான் புத்தகத்தின் உள்ளடக்கம். புத்தகம் வெளியாகும் தருணத்தில் பில்ட்-அப் இல்லாமல் அறிவித்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்லவில்லை. வெறுமனே முப்பது பிரதிகள் மட்டும் விற்பனையானால் ‘யோவ் உன்னை நம்பி புக் போட்டேன் பாரு’ என்று பதிப்பகத்தினர் கதறக் கூடும். எப்படியும் இருநூறு முந்நூறு பிரதிகள் விற்றால் முதலீட்டை எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
மூன்றாம் நதியில் அவர்களுக்கு நல்ல இலாபம்தான். கலைக்கல்லூரியில் பாடத்திட்டமாகச் சேர்க்கப்பட்ட பிறகு அங்கு மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பிரதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ‘எவ்வளவு சம்பாதிச்சீங்க?’ என்று ரகசியமாகக் கேட்டாலும் கூட இலாபம் என்பது வணிக ரகசியம் என்பதால் சொல்ல மாட்டார்கள்.
கிராதகர்கள்.
ரோபோஜாலம் அநேகமாக புத்தகம் நாளை கையில் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த நூலையும் யாவரும் பதிப்பகம்தான் வெளியிடுகிறது. எட்டாவது புத்தகம் இது. ஊருக்குள் பந்தாவாகச் சொல்லிக் கொள்ளலாம். சைபர் சாத்தான்களுக்குப் பிறகு வெளியாகும் என்னுடைய இரண்டாவது அறிவியல் கட்டுரைத் தொகுப்பு.
- கண்ணாடியில் நகரும் வெயில் (கவிதை)
- சைபர் சாத்தான்கள் (சைபர் கிரைம் குறித்தான கட்டுரைகள்)
- என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி (கவிதை)
- லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (சிறுகதை)
- மசால்தோசை 38 ரூபாய் (மனிதர்கள் குறித்தான கட்டுரைகள்)
- மூன்றாம் நதி (நாவல்)
- ஃபாரின் சிடி (அயல் சினிமா)
- ரோபோஜாலம் (ரோபோடிக்ஸ் எளிய அறிமுகம்).
எழுத்து என்பது ஒரு விளையாட்டு. அத்தனை வகைமையிலும் கை வைத்துப் பார்த்துவிட வேண்டும். ‘இலக்கியம் வளர்ப்பேன்’ என்பதோ, விருது வாங்க வேண்டும் என்பதோவெல்லாம் லட்சியமாக இல்லை. ஒரு காலத்தில் ஜோல்னாபையாகத் திரிய வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. இப்பொழுது இல்லை. எழுதுவதற்கு எது வாகாக இருக்கிறதோ அதை எழுத வேண்டியதுதான். ஒவ்வொன்றை எழுதவும் ஒவ்வொருவிதமான மனநிலை தேவையாக இருக்கிறது. அந்த மனநிலை கெடுவதற்குள்ளாக அதை எழுதிவிட்டால் போதும். லிண்ட்சே லோஹன் பிடித்தவர்களில் சிலர் மூன்றாம் நதி பிடிக்கவில்லை என்று சொல்வதுண்டு. மூன்றாம் நதியைப் பிடித்தவர்களுக்கு ஃபாரின் சிடியோ ரோபோஜாலமோ பிடிக்காமல் இருக்கலாம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை. எழுதுகிறவன் திருப்தியாக எழுத வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் யாரோ ஒரு வாசகன் இருக்கக் கூடும். அது போதும்.
‘ரோபோஜாலம்’ புத்தகத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும் என ஜீவ கரிகாலன் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சில திருத்தங்களைச் செய்து தந்திருந்தால் கடந்த ஆண்டே கூட வெளியாகியிருக்கக் கூடும். என்னால்தான் சரியாக நேரத்தை ஒதுக்க முடியவில்லை. கடந்த மாதம் காலில் அடிபட்டுக் கிடந்த ஐந்து நாட்களில் திருத்தங்களைச் செய்தாகிவிட்டது.
கோபு ராசுவேல் அட்டையை வடிவமைத்து உள்ளடக்கத்தைச் சரி செய்து பதிப்பாளரின் கையில் கொடுத்துவிட்டார். எண்பத்தெட்டு பக்கங்கள்.
சனிக்கிழமை அண்ணா நூலகத்தில் நடைபெறும் நிகழ்வில் இரண்டு நிமிடங்கள் மட்டும் இந்த நூல் வெளியீட்டுக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். உண்மையிலேயே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான். நோ வாழ்த்துரை. நோ கருத்துரை. திரு.அரவிந்தும் திரு.வினோத் சுப்பிரமணியனும் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் விழித்திறனற்றவர்கள். ஆனால் தொடர்ந்து நிசப்தம் தளத்தை வாசிக்கிறவர்கள். அவர்களுக்கு என்னால் செய்ய முடியக் கூடிய மிகச் சிறு கெளரவம் இது. திருப்பதியிலிருந்து மகேஷ் வருவதாக இருப்பின் அவரையும் இவர்களோடு சேர்ந்து வாங்கிக் கொள்ளச் சொல்லலாம். இந்நிகழ்வுக்காக வரச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்ய வேண்டுமா என யோசிக்கிறேன். மூவருமே என்னளவில் மிக முக்கியமானவர்கள். மனதுக்கு நெருக்கமானவர்கள்.
புத்தகத்தை வீகேன் ஷாப்பிங் தளத்தில் ஆன்லைன் விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். (இணைப்பு) பல்லாயிரக்கணக்கான பிரதிகளை ஆர்டர் செய்து பிரதமர் நாடு திரும்புவதற்குள்ளாக உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்கி உதவவும்.
***
நூலுக்கான முன்னுரை:
கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் இவை.
பொறியியல் முடித்துவிட்டு ரோபோடிக்ஸ் படிப்பேன் என்று நினைத்ததில்லை. 2005 ஆம் ஆண்டில் என்னை எம்.டெக் மெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்த்துவிட்டு அழுத முகத்தோடு அம்மாவும் கவலை தோய்ந்த அப்பாவும் தொடரூர்தியில் ஏறினார்கள். அவர்களுக்கு பிரிவுத் துன்பம். ஆனால் எனக்கு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றுக் கொள்ள நிறைய இருந்தன. பேராசிரியர் விவேகானந்தன் சண்முகநாதனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எதையாவது தூண்டி விட்டுக் கொண்டேயிருந்தார்.
ரோபோடிக்ஸில் வல்லுநர் ஆகவில்லையென்றாலும்- அங்கு அடிப்படையைக் கற்றுக் கொள்ள முடிந்தது.
படித்து முடித்த சில வருடங்களில் கல்கியில் பணியாற்றிய திரு.கதிர்பாரதி ‘ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்ட போது ‘ரோபோடிக்ஸ் பற்றி எழுதட்டுமா’ என்று கேட்டேன்.
ரோபோடிக்ஸ் பற்றியதொரு எளிமையான சித்திரத்தைத் தர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. எழுத ஆரம்பித்த பிறகுதான் ரோபோடிக்ஸ் என்ற பெருங்கடலுக்குள் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. படிப்பது வேறு. படித்ததைத் தாண்டி எழுதுவது வேறு. கையளவு நீரை அள்ளி எடுத்தாலே போதும் என்ற முடிவுக்கு வர வெகு காலம் பிடிக்கவில்லை.
அப்படி அள்ளி எடுத்த கையளவு ரோபோடிக்ஸ் பல வருடங்களுக்குப் அச்சு நூலாகிறது. மகிழ்ச்சி.
யாவரும் பதிப்பகத்திற்கு நன்றி.
**
எனது ஒவ்வொரு கட்டத்திலும் என்னிடம் காட்டிக் கொள்ளாமல் பெருமிதம் அடைந்த அப்பாவுக்கு நூலை சமர்ப்பித்திருக்கிறேன். அவர் மறைந்த பிறகு.
12 எதிர் சப்தங்கள்:
சந்தோசமா இருக்கு மணி
வாழ்த்துக்கள்.
Book cost is 70 and shipping cost is 50 :-(
ஓ..இந்த விஷயம் எனக்குத் தெரியாதே! பதிப்பாளரிடம் பேசிவிட்டு அப்டேட் செய்கிறேன்.
மணி...
நீங்க "பெரிய" ரௌடி ஆகி கொஞ்ச காலம் ஆச்சு...
அடுத்தது,
மிகப் பெரிய ரவுடி...
தாதா....
கல்வித் தந்தை...
ரூட் அப்படி போய்ட்டிருக்கு...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Blogger அன்புடன் அருண் said...
//மணி...
நீங்க "பெரிய" ரௌடி ஆகி கொஞ்ச காலம் ஆச்சு...
அடுத்தது,மிகப் பெரிய ரவுடி... தாதா....கல்வித் தந்தை...ரூட் அப்படி போய்ட்டிருக்கு.//
யாத்தாடி
Soft copya Kindle release pannalame. Para sir mathri. Delivery cost ellam irukkathu.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Please release a soft copy in Kindle. Will be helpful for NRI people. And Best wishes Mani :)
ஆமாம் சாமி ஆமாம்.
நீஈஈஈஈரு பெரிய்ய்ய்ய (ராவடி) தான்.
(ராவடின்னா இன்னான்னு தெரியதவங்க நேரத்தோட வந்தா நேரில் விளக்கப்படும்.)
எப்ப வந்தாலும்
எப்டி வந்தாலும்
சந்தோசம்.
அவசியம் வந்துடுங்க.
சனிக்கிழமை
சந்திப்போம்.🏃🚄💨💨💨
வாழ்த்துகள்.
கண்ணாடியில் நகரும் வெயில், மூன்றாம் நதி தவிர மற்றவை யாவும் வித்தியாசமான தலைப்புகள். யார்ரா இது.. தலைப்பே இப்படி வித்தியாசமா இருக்கேன்னு நினைச்சுதான் லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன், என்னைக் கடவுளாக்கிய தவுட்டுக் குருவி சைபர் சாத்தான்கள் புத்தகங்களை வாங்கினேன். அதன் பிறகே உங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.
வாழ்த்துக்கள் மணி... ரொம்பவே சந்தோசமா இருக்கு...
வாழ்த்துக்கள் மணி சார்!
Post a Comment