Jul 10, 2017

எப்படி இருந்தது?

அருமை.

பதினைந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நிகழ்வு குறித்து ஒரே சொல்லில் இப்படித்தான் சொல்ல முடியும். இந்த ஒரு சொல்லுக்குப் பின்னால் ஏகப்பட்டவர்களின் உழைப்பும் ஒத்துழைப்பும் இருக்கிறது.

‘சில பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துத் தருகிறோம். நீங்கள் வருவதாக இருந்தால் மட்டும் எளிமையாக நிகழ்ச்சி நடத்தலாம் என்று யோசனை. வர இயலுமா?’ என்று திரு. உதயச்சந்திரனிடம் கேட்ட அடுத்த கணம் அவர் ஒத்துக் கொண்டார்.


கரிகாலனை அழைத்துப் பேசுகையில் ‘நிகழ்ச்சியை யார் நடத்துவது?’என்றார். ‘நிசப்தம்ன்னு வைச்சுக்கலாம். அத்தனை பேர் வேலை செய்வாங்க’ என்று சொன்னேன். அப்படித்தான் நிசப்தம் வாசகர் அமைப்பு என்ற பெயர் முடிவானது. 

உண்மையிலேயே இவ்வளவு பலம் நம்மிடமிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. நிகழ்ச்சி நடத்துவது பெரிய காரியமில்லை. இத்தனை ஒழுங்குடன் நேர்த்தியாக நடத்துவதற்குப் பின்னணியில் ஏகப்பட்ட பேர் தங்களது உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.


சென்னையில் அண்ணா நூலகத்தினரிடம் பேசி இடத்தை முடிவு செய்வது, பதாகை அச்சடிப்பது, தேநீருக்கான ஏற்பாடு உள்ளிட்ட சகலத்தையும் கரிகாலன் பார்த்துக் கொண்டார். அவர் உடனிருந்தால் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்ய முடியும். ஒவ்வொரு பள்ளியிலும் பேசி அவர்களின் வருகையை உறுதி செய்தது அரசு தாமஸ். செயலருடன் கலந்துரையாடல் இருப்பதை அறிவித்து ‘என்ன கேள்விகளைக் கேட்கப் போகிறீர்கள்?’ என்று தெரிந்து ஒரே கேள்விகள் திரும்பக் கேட்கப்படாமல், பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த பொதுக்கேள்விகளாக இருக்கும்படி ஒழுங்கு செய்தது விஜயகுமார். ‘நான் என்ன வேலை செய்யட்டும்?’ என்று தானாகக் கேட்டு வந்த பிரகாஷ்தான் நேரடி ஒளிபரப்புக்கான பணிகளைச் செய்தார். சுந்தர், ஜெயக்குமார், பாண்டியராஜன் போன்றவர்கள் அத்தனை பேருக்கும் முன்பாக அரங்கில் வந்து ஏற்பாடுகளைச் செய்து வைத்தார்கள். 


தேர்ந்தெடுத்து வைத்திருந்த பள்ளிகளில் ஒரு பள்ளியைத் தவிர பிற அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் தலைமையாசிரியர்கள் வந்திருந்தார்கள். திருவாரூர் பள்ளிக் குழந்தைகள் மேடையில் பேசிக் காட்டினார்கள். ‘அரசுப் பள்ளிகளால் எதையெல்லாம் செய்ய முடியும்’ என்பதற்கான சாம்பிள் அந்தக் குழந்தைகள்.



நிகழ்வில் ஒவ்வொரு பள்ளியிடம் புத்தகக் கட்டை கொடுப்பது சாத்தியமாகத் தெரியவில்லை. பள்ளி பற்றியக் குறிப்பைச் சொல்லி அந்தப் பள்ளியை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதற்கான காரணங்களைச் சொல்லி ஒவ்வொரு பள்ளிக்கும் சான்றிதழாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்த போது ஹைதராபாத்தில் இருக்கும் கைலாஷ் வடிவமைத்துக் கொடுத்தார். குறைந்தது ஏழெட்டு முறையாவது திருத்தங்களைச் சொல்லியிருப்பேன். நள்ளிரவு வரைக்கும் இருவரும் விழித்திருந்து வடிவமைப்பைச் செய்தோம். சான்றிதழை அச்சிட்டுக் கொணர்ந்தவர் கோடீஸ்வரன்.



பேராசிரியர் கல்யாணி, நாகேஸ்வரன், ரமணன், மருத்துவர் கலைச்செல்வி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கவிதா முரளிதரன், தேவநேயன், செல்லமுத்து குப்புசாமி, ஜெயராஜ், சிவசக்தி, பாலபாரதி, உமாநாத், பரிசல் கிருஷ்ணா, அகரமுதல்வன், குகன் மாதிரியான நான் மதிக்கும் மனிதர்கள் அரங்கில் இருந்தார்கள். எஸ்.வி.சரவணன், குமணன், வெற்றிவேல், கரோனா கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கியமான நண்பர்கள் என்று நான் கருதுகிறவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். செங்கல்பட்டு, பெங்களூர், மதுரை, கவுந்தப்பாடி, வேலூர் என்று வெளியூர்களிலிருந்து வந்திருந்து ‘நிகழ்வுக்காகத்தான் வந்தேன்’ என்று சொன்னவர்களுக்கு எப்படி நன்றியைச் சொல்வது? 

அரங்கு நிறைந்த கூட்டம். 


வந்திருந்த அத்தனை பேருமே ஏதாவதொருவகையில் எனக்கு முக்கியமானவர்கள்தான். திருப்பதி மகேஷ், வினோத், அரவிந்த் உட்பட ஒவ்வொருவரையும் குறிப்பிட்டாக வேண்டும். 

உதயச்சந்திரன் மாதிரியான பொருத்தமான அதிகாரி- தமிழுணர்வும், கல்வித்துறையில் அவ்வளவு அக்கறையும், எளிமையும் கொண்டவர் கிடைத்தது மிகப்பெரிய வரம். எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார். அரங்கில் கேட்கப்பட்ட அத்தனை வினாக்களுக்கு ஏதாவதொரு திட்டத்தை ஏற்கனவே மனதில் வைத்திருக்கிறார். மாணவர்கள் அணியும் செருப்பின் எடை கூடுதலாக இருப்பதிலிருந்து, அதன் வடிவம், பள்ளிக்கூட பைகளில் இருக்கும் அறைகளின் போதாமை என்று சின்னச்சின்ன விஷயங்களைக் கூடத் துல்லியமாகச் சொன்னதெல்லாம்...ப்பா! இன்னமும் சில ஆண்டுகளாவது இத்துறையில் அவர் தொடர வேண்டும் என்றும் அவரது பெருங்கனவுகளில் பத்து சதவீதமாவது சாத்தியமாக வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்ளலாம். அந்தளவுக்கு நிறைவேறினாலும் கூட கல்வித்துறையின் பெரும் மலர்ச்சியாக இருக்கும்.

யாரையும் முன்னிலைப்படுத்துவதாக இல்லாமல் பள்ளிகளுக்கும், கல்வித்துறைச் செயலருக்கும் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நடைபெறும் மேடையாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது. இதே நிகழ்வை இன்னமும் விரிவாக்கி சில கருத்தரங்குகளை நடத்தலாம் என்று யோசனை ஓடுகிறது.


அரசு தாமஸின் தொகுப்புரை வரைக்கும் ஒவ்வொரு கணமும் வெகுவாகத் திட்டமிடப்பட்டு கனகச்சிதமாக நிகழ்ச்சி நிறைவுற்றது. இத்தோடு முடிந்துவிடவில்லை. இனி பாரதி புத்தாகலயம் மற்றும் மெரினா புக்ஸ் ஆகிய கடைகளிலிருந்து புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிற வேலையைப் பின் தொடர சில நண்பர்கள் பணியாற்றப் போகிறார்கள். 

நிகழ்வை சாத்தியப்படுத்திய கோல்செஸ்டர் நண்பர்கள், சிலம்பரசன், வலசை, முத்துக்குமார், பத்மநாபன், அகமது குலாம் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி. 

ஆச்சரியப்படுத்தும்விதமாக நிகழ்வில் அத்தனை குழந்தைகள் இருந்தார்கள். ‘உன்னை மாதிரி ஆகணும்ன்னு சொல்லியிருக்கேன்’ என்று ரமணன் தனது பேரனைக் காட்டிய போது என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. கடவுளே! இப்படியான சொற்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் உள்ளே இருக்கும் எல்லாவிதமான கசடுகளையும் தூக்கி வெளியே வீச வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். அடுத்தவர்களின் நம்பிக்கைதான் நம்மை மென்மேலும் பக்குவப்படுத்துகிறது. தூய்மையும் ஆக்குகிறது.

நிகழ்வினை நிழற்படங்கள் எடுத்துக் கொடுத்த ரமேஷ் ரக்சன். நூலகர்கள் இளங்கோ சந்திரசேகர், தினேஷ், கல்யாணி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. மெரினா புக்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயத்தாருக்கு என் அன்பு.


கல்வித்துறைச் செயலரிடம் நான் அலைபேசியில் பேசுவதில்லை. பெரும்பாலும் குறுஞ்செய்திகள்தான். என்ன கேள்வி கேட்டாலும் ஒற்றைச் சொல்லில்தான் பதில் அனுப்புவார். ஆனால் உடனடியாக பதில் வந்துவிடும். நிகழ்ச்சி முடிந்த பிறகு நள்ளிரவில் ‘எனக்கு ரொம்பத் திருப்தி சார்’ என்று செய்தி அனுப்பினேன். மிகப்பெரிய சிரிப்பு ஸ்மைலியை அனுப்பி வைத்திருந்தார். அந்தவொரு பதிலைத்தான் மனம் எதிர்பார்த்திருந்தது.

நிகழ்வின் இன்னும் சில நிழற்படங்கள்:
  












முக்கியமான பணிதான் என்றாலும் கூட இன்னமும் பயணிக்க வேண்டிய தொலைவு வெகு தூரம் என்று தெரியும். ஆனால் யானை பலம் நம்மிடம் இருக்கிறது என்று இப்பொழுது புரிகிறது.

20 எதிர் சப்தங்கள்:

Thirumalai Kandasami said...

Link to view :

https://www.facebook.com/kingvijay023/videos/10209631165844573/

Krishnamoorthy said...

வாழ்த்துக்கள் சார்,தொடரட்டும் தங்களது இனிய பணிகள்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி.

Malar said...

Excellent!

Anonymous said...

MY DEAR MANIKANDAN,
GOOD DAY. I AM REPEATING WHATEVER I SENT TO YOU BY SMS ON SATURDADAY AFTER THE FUNCTION.
"MY DEAR MANIKANDAN,
the meeting was too good.
Well organised.
THIRU. Udhayachandran's speech was passionate and understanding.
NOW I KNOW why you chose him.
THE COMPERING WAS 'SUPER'.
TIRUVARUR children talks were really nice.
Your HUMILITY taking no credit for yourself and passing it on to others was the 'ICING' ON THE CAKE.
ANBUDAN,
M,NAGESWARAN.
INDRAYA ADDITION:
JEEVA KARIKALAN PEAYARUKKU ERPA VIZHAVIRKU 'UUIR/ JEEVAN' OOTINKONDU IRUNDHAR.
ANBUDAN,
M.NAGESWARAN.

kailash said...

Happy to hear this success story , hope this initiative achieves its objective of creating reading awareness . This initiative has motivated many of us to start a library in nearby government school . I will contact you soon to get more details on this to start one at a government school nearby my home . Reading is very important for a society to dream and achieve .

Keerthi said...

kalandhuraiyaadalin kaanoli enge?

சேக்காளி said...

//உதயச்சந்திரன் மாதிரியான பொருத்தமான அதிகாரி- தமிழுணர்வும், கல்வித்துறையில் அவ்வளவு அக்கறையும், எளிமையும் கொண்டவர் கிடைத்தது மிகப்பெரிய வரம்//
நன்றி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே.

சேக்காளி said...

//உண்மையிலேயே இவ்வளவு பலம் நம்மிடமிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. நிகழ்ச்சி நடத்துவது பெரிய காரியமில்லை. இத்தனை ஒழுங்குடன் நேர்த்தியாக நடத்துவதற்குப் பின்னணியில் ஏகப்பட்ட பேர் தங்களது உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.//
இதுவும் எளிதில் அமையாது.இதனையும் ஒரு வரமாகவே கொள்ள வேண்டும்.

ஓட்டு எந்திர வடிவமைப்பு,அதனை சாத்தியப் படுத்தியது பற்றிய ஒரு கட்டுரையில் சுஜாதா சரியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்ததை தவிர தான் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறி,
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
என்ற குறளை மேற்கோள் காட்டியிருப்பார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள இவணும், அவனும் கிடைப்பது வரம் தான்.அந்த இவணும் ,அவனும் மணிக்கு கிடைத்திருக்கிறார்கள்.

Vinoth Subramanian said...

Attending itself itself was a wonderful experience... Mr. Udhayachandran... Such a nice man... Happy to meet him and listen to him. You've got people support... Keep going...

Unknown said...

Dear Mani Anna,
Kindly upload the full event video... Awaiting for it as many people would be expecting though who couldn't able to make it in-person...

rakkoli said...

உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
கருஞ்சட்டை அணிந்த்தற்க்கு நன்றி.

பொன்.முத்துக்குமார் said...

அற்புதம். வாழ்த்துக்கள் மணி.

அன்பே சிவம் said...

🙏

அன்பே சிவம் said...

வா.மணி.. இப்போது என் காதில்
வாரேவா. மணி என்று கேட்கிறது.

உம்(ண்)மை ப்போல வ(ள)ரனுமென்று மூத்தோர் சொல் வெறும் வாழ்த்தல்ல., வரம்.
வாழ்க.

Jaypon , Canada said...

Kudos to everyone who offered their time and effort.

Unknown said...

நானும் நிகழ்வில் கலந்து கொண்டேன், மிக கட்சிதமாக நிகழ்ச்சி நடந்தது, அரசு தாமஸ் தொய்வில்லாமல் தொகுத்து வழங்கினார். நிறைவாக இருந்தது, உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் மணி. நன்றி
- சாம்

Umaganesh said...

Thanks for your initiation in the field of school library.keep going.

அன்புடன் அருண் said...

வாழ்த்துக்கள்!

இதோடு நிறுத்தவா போகிறீர்கள்! இன்னும் மேலும் மேலும் போகத்தான் போகிறீர்கள்!

Unknown said...

Excellent ur services. Apjak was not here. U do his taught. Congratulations - kavunthi kannan

மதுரை சரவணன் said...

மிக்க மகிழ்ச்சி. நல்ல நிகழ்வு. உதயசந்திரன் அவர்களின் வருகையும் அவரின் கல்வி சார்ந்த பேச்சும் ஆசிரியர்களாகிய எங்களை வியக்கவே செய்கின்றது. அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து, எங்கள் பள்ளிக்கு புத்தகம் வழங்கியமைக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் எளிமை இனிமை அருமையான கல்வித் தொண்டு.. என்றும் நட்புடன் உங்கள் சரவணன்.