Jul 31, 2017

எப்படி முடிகின்றது?

வெள்ளிக்கிழமையன்று பேருந்து ஏறுவதற்கு முன்பாகவே தயாரிப்புகளைச் செய்து வைத்திருந்தேன். மாணவர்களை அழைத்து வைத்துப் பேசுவது பெரிய காரியமில்லை. அவர்களுக்கு சலித்துவிடக் கூடாது. நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துவிடக் கூடாது. வெளியூர்களிலிருந்தும் வரச் சொல்லியிருந்தோம். ஒவ்வொரு மாணவரிடமும் தொடர்பில் இருக்கிறேன். ‘இங்கிலீஷ்தான் கஷ்டம்’ என்றவர்கள்தான் கணிசமாக இருந்தார்கள். அதனால் ஆங்கிலம்தான் முதல் இலக்கு. மாணவர்களிடம் எப்படித் தொடங்க வேண்டும், அவர்களுக்கு ஏன் ஆங்கிலம் சிரமமாக இருக்கிறது என்பதை எப்படிப் புரிய வைப்பது என்பதெல்லாம்தான் மண்டைக்குள் உலாத்திக் கொண்டிருந்தன. 

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்கி வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே அரசு தாமசை எதிரில் பார்த்தேன். ‘இருபது அகராதிகள் வாங்கி வெச்சுடுங்க சார்’ என்று சொல்லியிருந்தேன். அதை யாரோ வாங்கி அவரது முகவரிக்கு பேருந்தில் கொடுத்துவிட்டிருந்தார்கள். அதை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தார். இம்மாதிரியான காரியங்களில் அவரும் கார்த்திகேயனும் பெரும் துணையாக இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை ஒவ்வொரு ஊரிலும் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்துவிட்டால் பல ஊர்களிலும் இறங்கி வேலை செய்ய முடியும்.

மதியம் இரண்டரை மணிக்கு நிகழ்வைத் தொடங்கினோம். மாணவர்களுக்குத் தேவையான ஏடுகள், எழுதுகோல், தி இந்து ஆங்கில நாளிதழ்களில் சில பிரதிகள் என வாங்கி வைத்திருந்தேன். ஆங்கிலத்தை எதிர்கொள்வதற்கு முதல் வேலையாக நமக்குத் தெரிந்த சொற்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட வேண்டும். சொற்களை அதிகரித்தால் புலமை எப்படி வரும் என்று மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒவ்வொருவரிடமும் வெள்ளைத்தாளைக் கொடுத்து தமக்குத் தெரிந்த தமிழ் சொற்களை எழுதச் சொன்னபோது மடமடவென்று எழுதினார்கள். இருபது நிமிடங்கள் அவகாசம். அதே இருபது நிமிடங்களைக் கொடுத்து தமக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை எழுதச் சொன்ன போது வேகம் தடைபட்டது. எழுதி முடித்த பிறகு அவர்கள் எழுதி தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைச் சொல்லச் சொன்ன போது பல சொற்களுக்குத் தெரியவில்லை.

இதுதான் சிக்கலின் அடிநாதம். 

தமிழில் நமக்கு நிறையச் சொற்கள் தெரிகின்றன. ஆங்கிலத்தில் அடிப்படையான சொற்களே தெரிவதில்லை. ஆக சொற்களைத் தெரிந்து கொண்டால் பெரும் தடையைத் தாண்டிவிடுவது மாதிரிதான். இலக்கணம் என்பது பெரிய சிரமமில்லை. ‘இரண்டு வாழைப்பழங்கள் கொடுங்கள்’ என்பதுதான் சரியான இலக்கணம். ‘இரண்டு வாழைப்பழம் கொடுங்கள்’ என்றுதானே கேட்கிறோம்? நிறைய இலக்கணப்பிழைகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படித்தான் ஆங்கிலத்திலும். அப்பட்டமாகத் தெரிகிற சில இலக்கணப்பிழைகளை மட்டும் சரி செய்து கொண்டால் போதும். 

இப்படி சில நுணுக்கங்களை விளக்க வேண்டியிருந்தது. 

அங்குராஜூக்கு அம்மா இல்லை. கூலி வேலை செய்யும் சித்தியின் வளர்ப்பில் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறான். பவித்ராவுக்கு அம்மாவும் அப்பாவும் தினக் கூலிகள். பள்ளியின் முதல் மாணவி. பி.ஏ தமிழ் படிக்கிறாள். ராஜேந்திரனின் பெற்றோர் கூலி வேலை. பி.எஸ்.சி வேதியியல் படிப்பில் அவன் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியிருந்தான். இப்பொழுது எம்.எஸ்.சி. அசாரூதீன் ஏழைப் பாட்டியின் வளர்ப்பில் இருக்கிறவன். பள்ளியில் முதலிடம். கால்நடை மருத்துவம் சேர்ந்திருக்கிறான். சுஜிதாவும் தமிழரசனும் சாமிநாதனும் விக்னேஷூம் நரிக்குறவர் இனக் குழந்தைகள். இந்தத் தலைமுறையில்தான் அவர்களுக்கு குடியிருக்க நிலையான இடம் கிடைத்திருக்கிறது. இதில் சுஜி அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கிறாள். சாமிநாதனுக்கும் விக்கேனேஷூக்கும் தமிழரசனுக்கும் கலைக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். அய்யாவின் அப்பா மரம் ஏறுகிறவர். இவன் பள்ளியில் முதலிடம். இப்பொழுது பொறியியல் சேர்ந்திருக்கிறான். பத்து பைசா செலவில்லாமல் முழுமையான ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. வனிதா மாதேஸ்வரி பற்றி எழுதியிருக்கிறேன் - பெற்றோர் இல்லாத குழந்தைகள். கசாப்புக் கடை நடத்தி தினசரி வருமானத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமாரும் அப்படித்தான். பால் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்தபடியே எம்.காம் படிக்கிறான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அத்தனை பேரும் அரசுப் பள்ளியில் படித்து ஜொலித்த மாணவர்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் நிசப்தம் வழியாகக் கல்விச் செலவில் உதவிக் கொண்டிருக்கிறோம்.


ஆங்கிலச் சொற்களைத் தெரிந்து கொள்வதற்கான வழிமுறையைச் சொல்லி அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் நேற்றிலிருந்தே பயிற்சியை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஒவ்வொருவரையும் பேசச் சொன்னேன். ‘இந்த முறை தமிழில் சொல்லுங்கள் அடுத்த முறை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்’என்பதுதான் நிபந்தனை. ஒவ்வொருவரும் தைரியமாகப் பேசினார்கள். அவர்களது உடல்மொழியில், பேசுகிற உள்ளடக்கத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களை ஒன்றிரண்டு பேருக்கு நான் சொல்ல அடுத்தடுத்துப் பேசிய மாணவர்களிடமிருந்த குறைகளை சகமாணவர்களையே சுட்டிக்காட்டச் சொல்லிய போது அதை மிகச் சரியாகச் செய்தார்கள். அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். தாம் பேசும் போது அந்தக் குறைகளை நிவர்த்திக்க முயற்சிப்பார்கள். அப்படித்தான் நடந்தது.

ஒவ்வொருவர் பேசுவதையும் கவனித்து அவர்களிடம் குறைகளைச் சொல்லி நிறைகளை வாழ்த்துவதற்கு நேரம் சரியாக இருந்தது. இப்படித்தான் முதல் நிகழ்வைத் தொடங்கியிருக்கிறோம். ஒற்றை வகுப்பறையில் ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாளில் முடிந்துவிடுகிற காரியமில்லை என்று தெரியும். சங்கிலி இது. கண்ணி அறுந்துவிடாமல் தொடர வேண்டியிருக்கும். வெவ்வேறு ஆளுமைகளை அழைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவிருக்கிறோம். ஆங்கிலம், மொழிப்புலமை, ஆளுமை மேம்பாடு, வேலை வாய்ப்புகளைத் தேடுதல், இலக்கை நோக்கிய பயணம் என சகலமும் நிறைந்த பயிற்சியாக இருக்கும். அதுதான் நோக்கம்.

நிகழ்வை ஆரம்பிக்கும் வரைக்கும் மாணவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று சற்று தயக்கமாகத்தான் இருந்தது. ஏனென்றால் கலவையான மாணவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரி. வெவ்வேறு வருடங்களில் படிக்கக் கூடிய மாணவர்கள். ஆனால் அத்தனை பேரின் பிரச்சினையும் ஒன்றுதான் என்ற எங்களின் கணிப்பு சரியாக இருந்தது. மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மாணவர்கள் மிகுந்த சந்தோஷமாக வெளியேறினார்கள்.

எனக்கு வெகு திருப்தி. 

இந்தப் பதிவை எழுத வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அரசு தாமஸ் இன்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது எழுதத் தூண்டியது. அவரது பதிவு-

பெங்களுருவிலிருந்து 7 மணி நேர பேருந்துப் பயணம். கோபிபாளையத்தில் 3 மணி நேர அமர்வு. அதற்கு முன்னும் பின்னும் என மொத்தமாக 6 மணி நேர இருப்பு. கோபி "திண்ணை" கடையில் 4பணியாரம்+ ஒரு தேநீர். அப்படியே மீண்டும் 7மணி நேரம் பெங்களூரை நோக்கிப் பயணம்.

எங்கே? என்ன அமர்வு? எதற்கு? என்பது பற்றியெல்லாம் அவரே எழுதுவார்...

எனக்கு என்னவென்றால் நிசப்தம் அறக்கட்டளை வளர்க்கும் அந்த "Super16" மாணவர்களுக்கான பயலரங்கில், தான் கருத்துகளைக் கூறியதோடு, அவர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச வைத்து , கூர்ந்து கவனித்து ழி நடத்தியது தான் பெரிதும் வியப்பாக இருந்தது..

எப்படி முடிகின்றது உங்களால்??

பதில் இருக்கிறது- வாசகர்கள், குடும்பம், தன்னார்வலர்கள் என எல்லோரையும் சுட்டிக்காட்ட முடியுமென்றாலும் யாரிடமுமே பேசாத அய்யாவு காலை ஆறு மணிக்கே அழைத்திருந்தான். ‘க்ளாஸ் டைம் டேபிள் அனுப்பியிருக்காங்க சார்...எப்படி படிக்கிறதுன்னு ஐடியா கொடுங்க’ என்றான். அவனது பயந்த சுபாவத்துக்கு அவன் என்னை அழைத்துப் பேசுவான் என்றெல்லாம் நினைத்ததில்லை. இப்படி புதிதாக முளைத்து வருகிறவர்கள் நம்மை நம்பி நெருங்குகிறார்கள் அல்லவா? அந்த ஒரு நம்பிக்கை போதும். நான்கு பணியாரமும் கூட இல்லாமல் அலைய முடியும்!

12 எதிர் சப்தங்கள்:

Amanullah said...

வணக்கம் மணி,

படிக்கும் போதே மிகவும் மன நிறைவை தந்த பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

சஹஜமொழி said...

வாழ்த்துக்கள் மணிகண்டன் சார்
உங்களைப்போல சில மனிதர்களே,
இந்த உலகம் நம்பிக்கையுடன்
இயங்க வழி காட்டியாக உள்ளீர்கள்

அன்பே சிவம் said...

வைரம் வேறு
உயரம்.. வேரு.
இரண்டும் வேறுbutஆலும் இங்கு
'வேர்' மிக த் தெளிவாகவும் தீர்க்,மாகவும் இருப்பது மகிழ்ச்சி.

அன்பே சிவம் said...

எங்கய்யா இந்த சேக்காளிய இன்னும் காணல.
ஒரு வேள BIG BOSS என்ன ஆவார்ன்னு பத்தி ஜி!ந்திப்பாரோ.:-)..

Anonymous said...

அருமை மணி!! தொடரட்டும் உங்கள் கல்விப்பணி!!

Anonymous said...

Great work indeed! All the best Mani!

Venkidu annan

Anonymous said...

Great Job!!

அன்புடன் அருண் said...

உங்கள பாராட்டி பாராட்டியே எனக்கு சலிச்சு போச்சு

இருந்தாலும், மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Ponchandar said...

வாழ்த்துகள் ! ! மணி ! ! ஜி ! ! !

தொடரட்டும் உங்கள் பணி ! ! !

சேக்காளி said...

//Blogger அன்பே சிவம் said...
எங்கய்யா இந்த சேக்காளிய இன்னும் காணல.
வந்துட்டேன் அன்பே சிவம்.
//அடுத்தவர்கள் என்ன தவறைச் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் போதும்.//
என் அனுபவத்தில் சொல்கிறேன்.
புதிய மொழியை கற்றல் வேறு,பேசுதல் வேறு.நம்மில் பலரும் குறிப்பாக ஆங்கிலம் கற்றிருக்கிறோம்.ஆனால் பேசுவதில்லை.காரணம் நமக்கு தவறுகள்(இலக்கணம்) கற்பிக்கப் பட்டிருக்கின்றன.தவறாக பேசி விடுவோமோ என்ற தயக்கம் வாயை திறக்க விடாமல் தடுக்கிறது.ஆனால் ஆங்கிலம் தவிர்த்த மொழிகளை அந்த மொழி அதிகமாக புழங்கும் இடங்களில் குடியேறும் அதிகம் கல்வி கற்காத ஒருவரால் அங்கே புழங்கும் மொழியை எளிதாக பேச முடிகிறது. இது எப்படி?
1.பேசியே ஆக வேண்டிய கட்டாயம்.
2.தவறாக இருக்குமோ என்ற தயக்கமின்மை.
3.தினம் தினம் கேட்டு மனதில் பதியும் வார்த்தைகள்.
எனவே ஆங்கிலம் (அல்லது வேறு மொழி) பேச வேண்டுமா? அதனை கற்றுக் கொடுக்காதீர்கள். அந்த மொழியில் பேசுங்கள்.
அடுத்து முக்கியமான ஒன்று.
நாம் ஆங்கிலம் கற்பதன் அடிப்படை நோக்கம் "பேச" என்பது மட்டுமே.கதை,கட்டுரை,கவிதை எழுதுவதற்கு அல்ல. எனவே நாம் நினைப்பதை சொல்லவும்,நம்மிடம் சொல்லப் படுவதை புரிந்து கொள்ளவுமே ஆங்கிலம் தெரிய வேண்டும். எனவே பேசுங்கள் ,பேச விடுங்கள்
சித்திரமும் கைப்பழக்கம்.செந்தமிழும் நாப்பழக்கம். இதில் "செந்தமிழும்" என்பதற்கு பதில் "எம்மொழியும்" என மாற்றிக் கொள்ளலாம்.
நான் வளைகுடாவிற்கு வரும் போது ஆங்கிலத்தில் சில வார்த்தைகளே பேச தெரியும்.ஆனால் இப்போது ஆங்கிலம் தவிர்த்து மலையாளம்,ஹிந்தி,அரபி(ஓரளவு) பேசுபர்களுடன் தயக்கமின்றி அவர்கள் மொழியில் பேசுவேன்.காரணம் அந்த மொழியின் இலக்கணம் தெரியாததே.
எனவே பேசுங்கள்.

சேக்காளி said...

இன்னொரு எளிய வழியையும் சொல்லுகிறேன்.முயன்று பாருங்கள்.
இன்று செல்பேசி(செல்லுமிடமெல்லாம் பேச முடிவதால் "செல்பேசி") இல்லாதவர்கள் யாரும் இல்லை எனலாம். எனவே நம்பிக்கையான தன்னார்வலர்களிடம் மாணவர்களின் செல்பேசி அல்லது "Whatsapp" இலக்கங்களை பகிர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சுழற்சி முறையில் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பேச சொல்லுங்கள். ஆங்கிலமும் வரும். பிறரிடம் பேச இருக்கும் தயக்கமும் தீரும்.

Paramasivam said...

அருமையான துவக்கம். நிச்சயம் வெற்றி.