Aug 1, 2017

ஏனய்யா கழுத்தை நெரிக்கிறீர்கள்?

குறிப்பு 1:
ஊரில் ஒரு தாத்தாவும் பாட்டியும் இருக்கிறார்கள். அவருக்கு எழுபத்தைந்தைத் தாண்டிய வயது. விவசாயக் கூலி. பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்து வயல்கள் காய்ந்து கிடப்பதால் வேலை எதுவுமில்லை. கட்டிட வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். ‘என்ர வயசுக்குச் செய்ய முடியறதில்லீங்..’ என்றார். ஆனால் சாப்பாட்டுக்கு வழி வேண்டுமல்லவா? சித்தாள் வேலைக்குச் செல்வார். அங்கு நாள் முழுவதும் செங்கல் தூக்க வேண்டும். கலவை கலக்க வேண்டும். மாலையில் இடுப்பு வலி வந்து படுக்கையில் கிடப்பார். கடந்த ஒரு மாதமாக வேலை இல்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குப் பிறகு கட்டிடங்கள் வேலே எழும் வேகம் குறைந்திருக்கிறது. வீட்டில்தான் இருக்கிறார். கடந்த வாரம் சந்தித்த போது தமக்கு வேறு வருமானம் இல்லை என்பதைச் சொன்னார். அவரது மனைவிக்கு இருதயத்தில் பழுது. வேலைக்குச் செல்ல முடியாது. ஒற்றை ஆள் சம்பளம். இப்பொழுது இருவருமே முடங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆதரவற்றோர் நிதி வருகிறது. 

குறிப்பு 2:
ஐடியில் இருக்கிறார். பெங்களூருவாசி. பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. மகிழ்வுந்து வைத்திருக்கிறார். வாரம் ஒரு முறை குடும்பத்தோடு ஊருக்குச் சென்று வருகிறார்கள். உடல் அசதி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். ‘எப்படிங்க பெட்ரோல் செலவைச் சமாளிக்கறீங்க?’ என்று கேட்டால் ‘கேஸ்தாங்க’ என்பார். இப்படி ஊரில் மானிய விலையில் சிலிண்டரை வாங்கி வண்டியில் மாட்டிக் கொண்டு வடக்கும் தெற்குமாகவும் கிழக்கும் மேற்குமாகவும் கேட்கவே ஆளில்லாமல் பறந்து கொண்டிருக்கிற கேஸ் பொருத்தப்பட்ட வண்டிகள் மட்டுமே இந்தியாவில லட்சக்கணக்கில் தேறும்.

குறிப்பு 3:
ஒரு ரேஷன் கார்டுக்கு வருடத்திற்கு பனிரெண்டு சிலிண்டர்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு குடும்பத்துக்கு பனிரெண்டு சிலிண்டர்கள் தேவைப்படாதவர்கள் ‘ஏன் வீணாகப் போகுது?’ என்று வாங்கி ஐம்பது நூறு லாபம் வைத்து ஹோட்டல் கடைகளிலும் குறிப்பு-2ல் வரும் கார்காரர்களிடமும் விற்றுவிடுவது பல ஊர்களிலும் நடக்கிறது. 

தகவல் 1:
ஜூலை 1 ஆம் தேதியன்று ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் கிட்டத்தட்ட முப்பத்தியிரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

தகவல் 2: 
இந்தியாவில் கிட்டத்தட்ட இருபது கோடி கியாஸ் இணைப்புகள் இருக்கின்றன. அதனால் இருபது கோடி குடும்பங்கள் பயன்படுத்துகின்றன என்று அர்த்தமில்லை- பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை வைத்திருக்கின்றன. 

தகவல் 3: 
ஒவ்வொரு சிலிண்டருக்கும் மத்திய அரசு மானியமாக கிட்டத்தட்ட எண்பத்து ஆறு ரூபாயை வழங்குகிறது. பதினெட்டுக்கோடி வாடிக்கையாளர்கள் மானிய விலையில் சிலிண்டரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தி:
மார்ச் 2018லிருந்து மானியம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிடும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கிறார். அதை ஈடுகட்டுவதற்காக ஒவ்வொரு சிலிண்டருக்கும் மாதம் நான்கு ரூபாயை என்ற அளவில் விலை உயர்வு இருக்கும். இப்பொழுது ஐநூற்றுச் சில்லரை ரூபாயில் விற்கப்படும் சிலிண்டரின் விலை 2018 ஆம் வருடம் மார்ச் மாதத்தின் போது எழுநூறு ரூபாயைத் தாண்டிவிடும்.

‘மானிய கத்தரிப்பு’ என்ற பதத்தைக் கேள்விப்பட்டவுடன் மத்திய அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்வார்கள்?

அற்புதம். சீர்திருத்தத்தை நோக்கி நடைபோடுகிறது இந்த அரசாங்கம் என்பார்கள். 

உண்மையிலேயே இது சீர்திருத்தமா?

காருக்கு சமையல் கியாஸை நிரப்பி வண்டி ஓட்டுவது, மானிய சிலிண்டரை வாங்கி ஹோட்டலுக்கு விற்பது உள்ளிட்ட தகிடுதத்தங்களை நிவர்த்தி செய்வதுதான் சீர்திருத்தம். தவறான தகவல்களைக் கொடுத்து அயோக்கியத்தனமாக அரசாங்கப் பணத்தைச் சுரண்டுகிறவர்களை மிரட்டி ஒடுக்கி அவன் வயிறு வளர்ப்பதைத் தடுத்து அந்த நிதியை இல்லாதவனுக்கும் ஏழைக்கும் சற்று கூடுதலான மானியம் வழங்குவதுதான் மக்களுக்கான அரசாங்கமாக இருக்க முடியும். அப்படியான சீர்திருத்தம்தான் இங்கே தேவையானதாக இருக்கிறது.

சீர்திருத்தம் செய்கிறேன் என்ற பெயரில் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து பெரிய குண்டாந்தடியாக எடுத்து அத்தனை பேரையும் ஒரே போடாகப் போட்டால் அது சீர்திருத்தமில்லை- வணிகமயமாக்கல். ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்கு எண்பத்து ஆறு ரூபாய் மானியமில்லை என்றால் குடி மூழ்கிப் போய்விடாது. ஆனால் ஆயிரத்து முந்நூறு ரூபாய் ஆதரவற்றோர் நிதி வாங்கிக் கொண்டிருக்கும் கிழவனிடம் ‘இனி நீ எழுநூறு ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கிக்க’ என்று சொன்னால் அது எப்படிச் சீர்திருத்தம் ஆகும்? 

எளிய மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகளை திடுதிப்பென்று நிறுத்துவது கூட சுரண்டல்தான். அவர்களது பொருளாதார வளர்ச்சி என்ன? சுமையைத் தாங்குகிற பலம் பெற்றிருக்கிறார்களா என்பதையெல்லாம் கணிக்க வேண்டியதில்லையா? வரி, மானியக் கத்தரிப்பு என்று பணத்தை மலை மலையாகச் சேர்க்கிறார்கள். இப்படிச் சேர்க்கிற பணத்தைக் கொண்டு சாலைகள் அமைப்பதையும், பொருளாதார சிறப்பு மண்டலங்கள் அமைப்பதையும் சற்று மட்டுப்படுத்தலாம். தவறில்லை. ஒரு பக்கம் கண்ணாடி கட்டிடங்கள் வளர்ந்து கொண்டேயிருக்க பல கோடி மக்கள் இன்னமும் சாக்கடையோரத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேம்படுத்துவதும் வளர்ச்சிதான். இல்லையா? தின்று பெருத்து வீங்கிக் கொண்டிருப்பவனின் வேகத்தைக் குறைத்து இல்லாதவனை மேலே தூக்கிவிடுவதும் கூட வளர்ச்சிதான். வீங்க மட்டுமே விட்டுக் கொண்டிருந்தால் அதற்கு எப்படி வளர்ச்சி என்று பெயரிட முடியும்?

சீர்திருத்தம் என்பது மேல்மட்ட அல்லது நடுத்தர குடும்பத்தினரின் மனநிலையில் நின்று பார்த்துச் செய்கிற காரியமில்லை. விளிம்பு நிலை மனிதர்களின் இடத்திலிருந்து பார்த்துச் செய்ய வேண்டியது. தங்கத்தின் விலை அதிகரிப்பு என்பதும் பெட்ரோல் விலை கூடுகிறது என்பதும் விளிம்பு நிலை மக்களை பெரிதாக பாதிக்காது. ஆனால் சமையல் சம்பந்தப்பட்ட எந்த விலையுயர்வும் எல்லோரையும் விட ஏழைகளைத்தான் பாதிக்கும். 

கியாஸூக்கு மானியம் வழங்குவதில் தவறில்லை. ‘நானும் ஏழை’ என்று பொய் சொல்லித் தில்லாலங்கடித்தனம் செய்பவர்களைத் தடுத்தால் போதும். அதைத்தான் அரசாங்கம் செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக கார்போரேட் நிறுவனங்கள் வலி தாங்கலாம். மேல்மட்ட மக்கள் வலியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குடிசையில் வசிக்கிறவனும், கூலி வேலைக்காரனும், தள்ளுவண்டி இழுக்கிறவனும் ஏன் வலி தாங்க வேண்டும்? அவனவன் குடும்பத்து வலியையே அவர்களால் தாங்க முடிவதில்லை. நாட்டுக்காக என்று சொல்லி அவர்களின் சுமையையும் வலியையும் கூடுதலாக்குவது கொடுமை இல்லையா?

6 எதிர் சப்தங்கள்:

vv9994013539@gmail.com said...

nala thiran aaivu vaalthukal aya. arasu satam seiel paduthu mun makalidam iruthu karthu matrum aalosanai ketu maru preselanai seithu veliyetal paadipu intha alavu irukathu enpathu enkarthu aya.

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே அரசு செய்ய வேண்டிய ஆய்வை அழகாக விளக்கி இருக்கின்றீர்கள்.

இலவசத்துக்கு மயங்கும் மக்கள் உள்ளவரை நம்மை காப்பாற்ற முடியாது.
- கில்லர்ஜி

சேக்காளி said...

//சீர்திருத்தம் என்பது மேல்மட்ட அல்லது நடுத்தர குடும்பத்தினரின் மனநிலையில் நின்று பார்த்துச் செய்கிற காரியமில்லை. விளிம்பு நிலை மனிதர்களின் இடத்திலிருந்து பார்த்துச் செய்ய வேண்டியது.//
பாசு(boss) நாம இந்தியாவுல இருக்கோம் ய்யா.
அவனே(விளிம்பன்) அவனை பத்தி யோசிக்கிறவனுக்கு ஓட்டு போடல.
"ஏழைகளை எல்லாம் ஒழிச்சுட்டா ஏழ்மை தன்னால ஒழிஞ்சிரும்" ன்னு நெனைக்குறவனுக்கு ஓட்டு போட்டு செயிக்க வச்சா இப்பிடித்தான் நடக்கும்.

A.SESHAGIRI said...

அருமையான ஆலோசனையை அரசுக்கு வழங்கியிருக்கிறீகள்!.அது சரி 'சேக்காளி' அவர்கள் "அவனை பத்தி யோசிக்கிறவனுக்கு ஓட்டு போடல" என்று அங்கலாய்த்திருக்கிறார்." அது மாதிரி 'யோசிக்கிறவன்' யார் என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்

Asok said...

Because of Ration shops and Subsidiary, branded and big companies set their own pricing without any control. If people cannot afford to buy from the grocery shops, they have to buy from ration shops. So, they cannot calculate the inflation and big companies are selling with high price. If you stop the subsidiary and ration shops, government has to maintain the inflation for all people. Those companies cannot price as their wish. If there is really needy people, government will deposit money to their account, they can buy it wherever they can. But the price should be same in all shop and all people. That is the idea behind all these changes. We never know the government is going to monitor all the inflation going forward. Moreover, if all people would pay taxes, they would surely raise questions against the government. Before GST, most of them never paid taxes, they did not care about anything. Now, all will raise to question.

Paramasivam said...

கீழ் மட்ட ஏழை மக்களுக்கு, இலவச ரேஷனுடன் விலையில்லா சமையல் காஸ் கொடுக்க முயற்சிக்கலாம்.