Jul 31, 2017

கலாப்ரியாவும் பாரதிமணியும்

நேற்று கவிஞர் கலாப்ரியாவுக்கு பிறந்தநாள். பெங்களூரில்தான் இருந்தார். மதியம் அழைத்து ‘வெளியில் சாப்பிட போலாம் வாங்க’ என்றார். சனிக்கிழமையன்று ஊரில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு ஞாயிறு காலையில்தான் வந்து சேர்ந்திருந்தேன். ‘மத்தியானம் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொன்னால் கடித்துக் குதறிவிடுவார்கள் என்று தெரியும். ‘சார்..இன்னைக்குத்தான் அதிசயமா வீட்டில் இருக்கேன்.. உங்களைப் பார்க்க வர்றேன்..ஆனா சாப்பிட வரல சார்..’ என்று சொல்லிவிட்டு குக்கரில் விசில் அடங்குவதற்காகக் காத்திருந்தேன். 

கலாப்ரியா என்பது நா.முத்துக்குமார் அறிமுகப்படுத்தி வைத்த பெயர். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எழுதி வைத்திருந்தவற்றையெல்லாம் கவிதை என நம்பி அவரிடம் நீட்டிய போது ‘கலாப்ரியாவை படிங்க’ என்று சேலம் கேஸில் ஹோட்டல் அறையில் அவர் சொன்னது நினைவில் இருக்கிறது. எல்லோரையும் போலவே நானும் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு கலாப்ரியா அறிமுகம் ஆனார்- கவிதைகள் வழியாக. நினைவின் தாழ்வாரங்கள் நூல் வெளியான போது அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்திலிருந்து மதுரை வந்திருந்தேன். 

அவர் பெங்களூரு வரும்போதெல்லாம் எப்படியும் சந்தித்துவிடுகிற வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. ‘மணிகண்டன்..இங்க வந்திருக்கேன்’ என்பார். அதிர்ந்து பேச மாட்டார். அவர் ‘எப்ப வர்றீங்க?’ என்று கேட்டால் ‘எப்ப’ சற்று ஒலி மிகுந்தும் ‘வர்றீங்க’ என்பது ஒடுங்கியும் இருக்கும். பல சமயங்களில் கடைசிச் சொற்களை நாமாகத்தான் யூகித்துக் கொள்ள வேண்டும். ‘அரை மணி நேரத்தில் வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருந்தேன். இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று எனக்குத் தெரியும். கலாப்ரியாவின் மகள் வீடு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருக்கிறது. மதிய உணவுக்காக ஜூனியர் குப்பண்ணாவில் இருந்தார்கள். மகாலிங்கமும், திருஞானசம்பந்தமும் வந்திருந்தார்கள். சம்பந்தம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டேயிருப்பார். மகாலிங்கம் பேசவே மாட்டார். இருவருமே நிறைய வாசிக்கிற சுவாரசியமான மனிதர்கள். மகாலிங்கம் தனது நிழற்படம் வெளியாவதைக் கூட விரும்பமாட்டார்.  நேற்று சிக்கிக் கொண்டார்.


அவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு வெளியில் வரட்டும் என்று மரத்தடியில் காத்திருந்தேன். நவீன தமிழ்க் கவிதையில் இருந்துவந்த இறுக்கமான சூழல் கலாப்ரியா எழுத வந்தபிறகு உடைபட்டதை கவனிக்க முடியும். மிகப்பெரிய செய்திகளை மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடுகிற வித்தை அவரிடம் வாய்த்திருந்தது. பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவரது இரண்டு கவிதைகள் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை.

கூட்டிலிருந்து 
தவறிவிழுந்த 
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை

                                                                   ***

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

உணவை முடித்துவிட்டு அவர்கள் வந்த பிறகு கலாப்ரியாவின் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பேச்சு, பேச்சு மற்றும் பேச்சுதான். சம்பந்தம் பேசியவற்றையெல்லாம் நாவல் சிறுகதைகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகாக ‘பாரதிமணியைப் பார்க்க போலாமா?’ என்றார் கவிஞர். 

பாட்டையா எனக்கு நல்ல தோஸ்தாகிவிட்டார். எந்தளவுக்கு தோஸ்த் என்றால் நான் ஃபோனில் அழைத்தால் எடுக்கமாட்டார். அந்த அளவுக்கு ராவி விடுகிறேன். இந்திராகாந்தியிலிருந்து அம்பானி வரைக்கும், க.நா.சுவிலிருந்து சுப்புடு வரைக்கும் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. ஆஃப் த ரெக்கார்ட் விவகாரங்களையெல்லாம் வஞ்சகமே இல்லாமல் பேசுவார். ‘என் பேரைச் சொல்லிடாதடா’ என்பார். எப்பொழுதாவது அந்தக் காலத்து விவகாரங்களை கிசுகிசுவாக எழுதினால் அது பாட்டையா சொன்னது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

‘நான் ஃபோன் செஞ்சா எடுக்க மாட்டாரு..வேணும்ன்னா பாருங்க’ என்று சொல்லிவிட்டு அழைத்தேன். அதே போல எடுக்கவில்லை. ‘இப்போ நீங்க பண்ணுங்க’ என்றேன். கலாப்ரியா அழைத்தார். அப்பொழுதும் எடுக்கவில்லை. எனக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனால் அடுத்த பத்து நிமிடங்களில் கலாப்ரியாவை திரும்ப அழைத்தார். என்னை அழைக்கவில்லை. ‘உங்களை கவனிச்சுக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டேன்.

என்னிடம் யமஹா ரே இருக்கிறது. கலாப்ரியாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு கோரமங்களாவுக்குச் சென்றிருந்தோம். பாரதி மணி வெகு உற்சாகமான மனிதர். ‘எழுபத்தைந்து வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ்தான்’என்பது அவரது சித்தாந்தம். எந்தப் பெண்ணாவது சரி என்று சொன்னால் இன்னொரு திருமணம் செய்யக் கூடத் தயாராகத்தான் இருக்கிறார். சென்னையிலிருந்தால் தினசரி ஒரு பெண்ணாவது காதல் கடிதம் அனுப்புவதால் முகவரியை மாற்றிக் கொண்டு பெங்களூரு வந்துவிட்டவர். கலாப்ரியாவையும் என்னையும் அமர வைத்து பைப்பில் புகையிலையை உறிஞ்சியபடியே பேசிக் கொண்டிருந்தார்.


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஓடியிருந்தது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். சிண்ட்ரெல்லா மாதிரி.

‘சார் கிளம்பலாமா?’ என்றேன்.

‘அதுக்குள்ளவா?’ என்றார் பாட்டையா.

கிளம்பி வந்தோம். கலாப்ரியா ஹெல்மெட் இல்லாமல் வண்டியில் அமர்ந்திருந்தார். ட்ராபிக் போலீஸ் குறுக்காட்டினார். ‘சார் நான் வேணும்ன்னா டுபாக்கூரா இருக்கலாம்..பின்னாடி இருக்கிறவர் அப்பாடக்கர்...கலைஞர் முதல் கலாப்ரியா வரைன்னு புக் வந்திருக்கு தெரியுமா? கலைஞர் யாருன்னு உங்களுக்குத் தெரியும்..கலாப்ரியா உங்களுக்குத் தெரியாது..அது இவர்தான்’ என்று வசனம் பேசலாம் என்று நினைத்திருந்தேன். நூறு ரூபாய் அபராதம் விதிப்பார். அதற்காக கலைஞரையெல்லாம் இழுத்து ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் விட வேண்டுமா என்று நினைத்துக் கொண்டேன். அவர் அபராதம் விதித்தார்.

வீடு திரும்பும் போது மணி ஆறாகி இருந்தது. திட்டுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளையாக பாட்டையா நிழற்படங்களை அனுப்பி வைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸூம் போட்டிருந்தார். காட்டினேன். ‘இப்படியெல்லாம் ரெண்டு பெரிய மனுசங்களைச் சந்திக்கிறதுக்கு கொடுப்பினை வேணும்...’என்றேன். கூலாகிவிட்டார்கள். அது தப்பிப்பதற்காகச் சொன்னதில்லை. உண்மையும்தான். எனக்கு அவ்வப்பொழுது வாய்த்துவிடுகிறது.

3 எதிர் சப்தங்கள்:

ரிஷபன் said...

மனசோடு பேசிய பேச்சு

சேக்காளி said...

//‘இப்படியெல்லாம் ரெண்டு பெரிய மனுசங்களைச் சந்திக்கிறதுக்கு கொடுப்பினை வேணும்...//
ஆமாம்.
விழாவோ,நிகழ்ச்சிகளோ இல்லாத சமயம் சுவாராசியமாக மனதில் பட்டத்தை பேசும் சந்தர்ப்பம் அமைவதற்கு, அதிலும் ரெண்டு பெருசுகளையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கு கொடுப்பினை கண்டிப்பாக வேண்டும்.
அது (கொடுப்பினை) ஒங்க கிட்ட நெறைய இருக்கு. இல்லாத எங்களுக்கும் கொடுத்து ஒதவுற மாதிரி ஏதாவது திட்டம் (SCHEME) நிசப்தத்துல இருக்கா?

Paramasivam said...

கலாபிரியா என்பவரை உங்களைப் போல இளைய தலைமுறையாக எண்ணிஇருந்தேன். புகைப்படம் வேறாக உள்ளது. நல்ல கொடுப்பினை தான்.