Jul 13, 2017

என்ன நடக்கிறது?

‘இந்த வேலைக்கு எதுக்குங்க உதவி செய்யறீங்க?’ என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும். ஒரு வினாடி அதிர்ச்சியாகவும் இருக்கும். ‘தப்பா முடிவு செஞ்சுட்டோமோ’ என்று குழப்பம் உண்டாகும். அது இயல்புதானே? ஒவ்வொரு செயல்பாட்டிலும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. செய்து முடித்த பிறகு ‘அட இதுல கோட்டை விட்டுவிட்டோமே’ என்று தோன்றாமல் இருந்ததேயில்லை. செய்து முடித்த பிறகு கற்றுக் கொள்வது வேறு கதை. ஆனால் தொடங்குவதற்கு முன்பாகவே தடை செய்கிறவர்கள் இருக்கிறார்களே- அபாயகரமான பேர்வழிகள்.

சமீபத்தில் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் குளம் தூர் வாரும் வேலையைத் தொடங்கியிருந்தோம். அது பெரிய குளம். சரியாகத் தூர் வாரினால் மழை காலத்தில் நிறைய நீரைத் தேக்கி வைக்க முடியும். தொடக்கவிழா முடிந்த ஓரிரு நாளில் ஒருவர் ‘குளம் வெட்டறதுக்கு எல்லாம் காசு கொடுக்கணுமா?’ என்றார். சுருக்கென்று குத்தியது மாதிரி இருந்தது. 

களத்தில் பிரச்சினை என்னவென்றால் வேலையைத் தொடங்குவதற்கு உள்ளூர்க்காரர்கள் தயங்கினார்கள். குளத்து மண் பாறையாக இறுகிக் கிடந்தது. மண்ணை விற்றால் வருகிற காசு ட்ராக்டர் வாடகைக்கும், ஜேசிபி எந்திரத்திற்கும் சரியாக இருக்கும். ஒருவேளை இறுகிக் கிடக்கும் மண்ணை உடைக்க முடியாமல் போனால் வேலை நேரம் இழுத்தடித்துவிடும். மண் விற்கப்படும் தொகையைக் காட்டிலும் கூடுதலாகச் செலவு பிடிக்கும். நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் எந்த உழவனால் பணம் தர முடியும் என்று அவர்களுக்கு மனத்தடை இருந்தது. 

அப்பொழுதுதான் ‘ஊருக்குள்ளேயே நல்ல டீம் ஒண்ணை வெச்சு நீங்க வேலையைச் செய்தால் மண்ணை உடைக்கிற பணத்துக்கு ஏற்பாடு செய்துவிட முடியும்’ என்று சொல்லியிருந்தேன். இதை நாங்கள் பேசிய போது இரவு பதினோரு மணி இருக்கும். ஊர்க்காரர்கள் நான்கைந்து பேர்களும் நாங்களும் சந்தித்துப் பேசினோம். ஊர் மற்றும் குளம் பற்றிய விவரங்களைச் சேகரித்துச் சொன்ன போது கோல்செஸ்டர் நண்பர்கள் உதவுவதாகச் சொன்னார்கள். அதன் பிறகுதான் குளத்தை தூர் வாருவதற்காக அறுபத்தைந்தாயிரம் ரூபாய் பணம் தருகிறோம் என்று ஊருக்கு உறுதியளித்தோம். உடனடியாக அரசாங்கத்திடம் அனுமதி பெறப்பட்டது. தள்ளிப்போட வேண்டியதில்லை என தொடக்கவிழாவை அதே வாரத்தில் குளத்திலேயே நடத்தினோம். 

அருமையான குழு களத்தில் இறங்கியது. கடந்த நான்கைந்து நாட்களாக பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இருபத்தேழு ட்ராக்டர்கள், இரண்டு டிப்பர் லாரிகள், மூன்று ஹிட்டாச்சி வண்டிகள் குளத்தில் படுமும்முரமாக களமாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்றாயிரம் சுமை (Load) மண் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. இன்னமும் பல்லாயிரம் சுமை மண் வெளியேற்றப்படும். ஊர்க்காரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். வெகு உற்சாகமாக இருக்கிறார்கள். ‘எப்போ ஊருக்கு வர்றீங்க?’ என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  நேற்று விரிவாகப் பேசினோம். 

‘பணம் தேவைப்படும்ன்னா சொல்லுங்க..’ என்றேன்.

‘பணமே வேண்டியிருக்காது போலிருக்குங்க..மண் உடைபடுது...தேவைப்பட்டால் மட்டும் கேட்கிறோம்..ஆனால் தேவைப்படுகிற மாதிரி தெரியலைங்க’என்றார்கள்.

இப்படியான மனநிலை கொண்ட ஊரையும் மக்களையும் கண்டறிவதுதான் பெரிய சிரமம். பயனாளிகளைக் கண்டறிவதில் வைத்துக் கொள்கிற அளவுகோலும் இதுதான். தமக்குத் தேவைப்படாத இடத்தில் இன்னொருவருக்குப் பயன்படட்டும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் முன்னுரிமையளிக்க வேண்டும். 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக அந்த ஊருக்கு ஆதரவாக நிற்கக் கூடிய ஆள்தான் தேவையாக இருந்தது. அந்த ஒரு காரியத்தைத்தான் செய்தோம். தீக்குச்சியை உரசி வீசுவது போல. வீசியாகிவிட்டது. அது கொழுந்துவிட்டு எரிகிறது.

அறக்கட்டளை என்பது வெறும் பணம் சார்ந்த உதவி மட்டுமே என்று நினைக்க வேண்டியதில்லை. பணம் என்பது பொருட்டே இல்லை. அது வெறும் காகிதம். மனிதனுக்கு மனிதன் ஆதரவாக நிற்பதுதான் முக்கியம். ‘அவன் யார்கிட்டவோ பணம் வாங்கித் தர்றேன்னு சொன்னான்ல..ஏன் வீணாப்போகுது? வேண்டாம்ன்னு சொல்லாம வாங்கிக்கலாம்’ என்று நினைக்கிறவர்களுக்குத்தான் பணம் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். ‘தேவைப்பட்டால் மட்டும் சொல்கிறோம்’ என்று சொல்லக் கூடியவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு நம்முடைய சொற்களும் ஆதரவும்தான் தேவையானதாக இருக்கிறது. பல இடங்களில் இதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களைத் தேடித்தான் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.

இப்பொழுதும் கூட அறக்கட்டளையில் முப்பது லட்ச ரூபாய் இருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற்காகக் கேட்கிறவர்களுக்கு எல்லாம் கொடுக்கலாம்தான். ஆனால் கொடுப்பதில்லை. அவகாசம் தேவைப்படுகிறது. அப்படியும் கூட ‘முடியாது’ என்று சொல்லுகிற தருணங்கள் அதிகம். அப்படி பணம் கொடுக்காமல் தயங்கும் போதெல்லாம் ஒரு எதிரியைச் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. எதிரிகளைச் சம்பாதித்தாலும் பரவாயில்லை. ஆனால் வெறுமனே பணத்தை எடுத்து நீட்ட வேண்டியதில்லை.

கோட்டுப்புள்ளாம்பாளையத்துக்கு இனி அநேகமாக பணம் தேவைப்படாது. கோல்செஸ்டர்காரர்களிடம் வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருந்த தொகையை வேறு எங்கே பயன்படுத்தலாம் என்று மூளை கணக்குப் போடத் தொடங்கியிருக்கிறது. அடுத்த தீக்குச்சியை வீசுவோம்.

குளத்தில் வேலை நடைபெறும் நிழற்படங்கள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. இந்த வாரம் நேரில் சென்று பார்க்கும் திட்டமிருக்கிறது. அடுத்த பத்து அல்லது பதினைந்து நாட்களில் குளம் எப்படி உருமாறுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள். இத்தகைய குழுவினர்தான் ‘யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை’ என்று நம்பிக்கையை அளிக்கிறார்கள். ‘குளம் வெட்டறதுக்கு எல்லாம் காசு கொடுக்கணுமா?’ என்று கேட்ட மனிதரை ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். 

11 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

அருமை

அமர பாரதி said...

அற்புதமான செயல் மணி. அரசாங்கம் செய்வதை தனி மனிதர்கள் செய்வதும், தனி மனிதர்கள் செய்வதை அரசாங்கம் செய்வதும் நம்முடைய சாபக்கேடு.

சேக்காளி said...

வெள்ள காலத்தில் நிவாரணம்,வறட்சிக்கு காலத்திற்கு குளம் தூர்வாரல், கல்விக்கு உதவி, மாணவர்களுக்கு நூலகம் இப்படி பல்வேறு காரியங்களை (அரசு) அதிகாரமின்றி மக்களின் ஆதரவோடு மட்டும் உங்களால் செய்ய முடிகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப் படும் அரசாங்கம் ச்சேய்ய்

kasivel said...

நித்தம் நித்தம் நிசப்தம் மணியே.. மனிதனுக்கு மனிதன் ஆதரவாக நிற்பதுதான் முக்கியம். அவர்களுக்கு நம்முடைய சொற்களும் ஆதரவும்தான் தேவையானதாக இருக்கிறது. பல இடங்களில் இதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களைத் தேடித்தான் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.ஐயா விஷயம் என்னன்னா உங்ககிட்ட இருக்குற நேர்மறை சக்திதான் எங்க எல்லாருக்கும் உத்வேகம் தருது. அது உங்களுக்கு அதிகமா கூடிகிட்டே இருக்கணும்னு வேண்டிகிறோம்.

Unknown said...

தகுந்த நேரத்தில் வேண்டிய உதவிகளை செய்கிறிர்கள்.
அருமை. வாழ்த்துக்கள் மணிகண்டன்!
அதேபோல், தேவைபட்டால் கேட்கிறோம் என்று சொன்ன
கோட்டம்பாளைய மக்களுக்கும் வாழ்த்துக்கள்!!

ss said...

வணக்கம்....நன்றிகள் பல ....நான் கிராமத்தில் பிறந்து சிறு நகரத்தை நோக்கி நகர்ந்தவன் ....சுமார் 5௦ வருடங்களுக்கு முன் கேட்ட , பார்த்த நிகழ்வு ..ஆம் ...குளம் , குட்டை , ஊரணி , எரி, வாய்க்கால் என்று கோடை காலங்களில் எல்லா கிராமங்களில் செய்யும் பணி ,நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு அதே சமயம் தூர் வாரி அடுத்து பருவத்தில் நீர் நீலை பராமரிப்பு ...சில நாட்களுக்கு முன் நூலகம் பற்றி படித்தேன் ..இன்று நீர் நீலை பராமரிப்பு ...புதிய பரிமாணம் ....வாழ்க ...வளர்க ..கவனமாக செல்க ....
Coz ...Politician in and around 360 degrees..
so very careful ..Good and Bad people always surrounding us..we must be watchful, and look forward to the venture whole heartedly...

If God be with us..who can be against us..BIBLE

அன்பே சிவம் said...

அந்த நீர்நிலை இந்த ஆண்டே நிறைந்து உமை
வாழ்த்தும்.

ADMIN said...

பணம் கொடுக்காத்தற்கு எதிரிகளை சம்பாதிக்க நேர்கிறது. ஹா..ஹா... உங்களுடைய நேர்மையை உணர்ந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். இன்னது, இதற்கு என ஒரு கொள்கையுடன் செயல்படுவதால்தான் உங்களால் நினைத்ததை நிறைவேற்ற முடிகிறது. மக்கள் ஆதரவு கிடைத்தால் அதுவே பெரும் பாக்கியம். தொடர்ந்து செயல்படுங்கள். வாழ்த்துகள் !

BalajiS said...

Dear Manikandan,

I know you read Jeyamohan's blog.

Thought this might interest you.

http://www.jeyamohan.in/100239#.WWhEWIh94cU

Aravind said...

nice balaji sir. thank you for sharing a very good timely article on solar power generation cost at historic low. dear manigandan sir, your jobs are incredible. as next step, we can encourage rural people install solar power generation devises and give excess power to government. we all are ready to contribute to you for such activities. america is creating lot of problems to us using solar cells. if we can do like this for entire country. our country can become super power and reduce import oil bill also in long run.

Paramasivam said...

குளம் உருவாகும் நேரம், நல்லம்பட்டி வந்து, கிராம மக்கள் அனைவரும் பயன் பெறுமாறு, குளம் நிறைந்து காணும் நிகழ்ச்சியை, புகைப் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.