பள்ளியின் முதல் நாள் வணக்க வகுப்பு. கிராமப்புறத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளி அது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சில பயிற்சிகளைச் சொல்லித் தருகிறார். பள்ளி வளாகத்திற்குள் எங்கே சென்றாலும் வரிசையில் செல்ல வேண்டும் என்பது அதில் ஒரு பயிற்சி. நான்கு பேர்களை வரிசையாக நிறுத்தி வகுப்பறையிலிருந்து வெளியே வரச் சொல்கிறார். இன்னுமொரு நான்கு பேர்களை மற்றொரு வரிசையாக அதே வகுப்பிற்குள் நுழையச் சொல்கிறார். ஒருவரையொருவர் இடித்துக் கொள்ளாமல் சென்று வருவதற்கான இப்பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ‘அய்யோ...ஒரே தொல்லையா போச்சு’ என்று குரல் வருகிறது. குரலை எழுப்பியவன் ஒன்றாம் வகுப்பு மாணவன். பிறந்ததிலிருந்து சுதந்திரமாகத் திரிந்தவன். அவனுக்கு இந்த ஒழுங்குமுறையெல்லாம் ஒத்து வரவில்லை. கத்திவிட்டான். தலைமையாசிரியரிடமே லோலாயம் செய்துவிட்டானே என வகுப்பு ஆசிரியை பதறிவிட பயிற்சியை தலைமையாசிரியர் முடித்துக் கொள்கிறார்.
வகுப்புகள் தொடங்கியவுடன் அந்த மாணவனின் வகுப்பறைக்குச் சென்ற தலைமையாசிரியர் மிரட்டும் தொனியில் ‘யார்றா அவன்....ப்ரேயர்ல தொல்லையா போச்சுன்னு சொன்னவன்’ என்கிறார். எப்படியும் மாணவன் பயந்துவிடுவான் என்கிற நம்பிக்கை அவருக்கு. அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு ‘நான்தான்’ என்று வந்து நின்ற மாணவன் ‘ஒரு தடவை சொன்னா பத்தாதா? சும்மா தொண தொணன்னு’ என்று மீண்டும் மிரட்ட தலைமையாசிரியர் சில கணங்களில் சிரித்துவிடுகிறார்.
தலைமையாசிரியர்தான் இச்சம்பவத்தை விவரித்தார். அந்த மாணவனை அணைத்துக் கொண்டு ஆசிரியையிடம் ‘கொட்டி வழிக்குக் கொண்டு வந்துடாதீங்க..கொஞ்ச நாளைக்கு அவன் போக்குல இருக்கட்டும் பார்க்கலாம்’என்று சொல்லி வைத்திருக்கிறாராம். ஆனாலும் கொட்டி மொழுக்கிவிடுவார்கள் என்றார்.
குழந்தை பிறந்ததிலிருந்து நான்கு வயது வரைக்கும் ‘பேசு, தவழ், நட’ என்று எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். நான்கு வயதிற்கு மேலாக பள்ளிகளில் சேர்த்து ‘பேசாத, நடக்காத, ஓரிடத்தில் உட்கார்’ என்று அடக்குகிறோம் என்று யாரோ ஒருவர் மேடையில் பேசினார். எவ்வளவு சரியான சொற்கள் இவை! பால்யத்தின் முதல் சில வருடங்கள் நமக்குக் கிடைத்த சுதந்திரம் அதன் பிறகு எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை.
கடந்த வாரத்தில் சோனா தொழில்நுட்பக்கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு நேரெதிராக இருந்தார்கள். வாயைத் திறப்பதேயில்லை. கடந்த பதினேழு வருடங்களில் அவர்களைப் பள்ளிகளில் தட்டி நெகிழ்த்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்தனை பேரும் சற்றேறக்குறைய 190 கட்-ஆஃப் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் பேச்சுத்தான் இல்லை.
இதே கல்லூரியில்தான் பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக என்னைச் சேர்த்துவிட்டிருந்தார்கள். பாராசூட் தேங்காய் எண்ணெய் எப்பொழுதும் கால் லிட்டர் கைவசம் இருக்கும். தலை நிறையப் பூசி படிய வாரி, விபூதி அணிந்து கொண்டு ‘ஒழுக்கமான மாணவன்னு பேர் வாங்கணும்’ என்ற எண்ணத்தோடு முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். பல வருடங்களுக்குப் பிறகாக படித்த அதே கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர். வீட்டில் பெருமையாகச் சொன்னேன். யாரும் சலனத்தைக் கூட காட்டவில்லை. ‘இவங்க எப்பவும் இப்படித்தான்’ என்றும் நானும் கண்டு கொள்ளாமல் பேருந்து ஏறியிருந்தேன். இப்பொழுதெல்லாம் முதல் வருடம் என்பது அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவானது. இரண்டாம் வருடத்திலிருந்து அவர்களைத் துறை வாரியாகப் பிரிக்கிறார்கள். எலெக்ட்ரிக்கல் துறைக்குள் முதன்முறையாக நுழையும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசச் சொன்னார்கள். இப்படி கல்லூரிகளில் அழைக்கும் போது ‘ஆங்கிலத்தில் பேச வேண்டுமா? தமிழிலா?’ என்று கேட்டுவிடுவது வழக்கம். தமிழில் பேசச் சொன்னால் பிரச்சினையில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவிருந்தே எதைப் பேச வேண்டும் என்று தலையில் ஓட விட்டால் போதும். நிறைய விஷயங்கள் மண்டைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும். பேச வேண்டிய தினத்தில் பயண நேரத்தில் பேருந்தில் அமர்ந்தபடியே ஒரு துண்டுச் சீட்டில் வரிசைப்படுத்திக் கொள்வேன். இதுதான் தயாரிப்பு முறை.
எந்தக் கல்லூரியில் பேசினாலும் ஒரு செய்தியை மறக்காமல் சொல்வதுண்டு. தி ஹிந்து செய்தித்தாளிலிருந்து தினசரி மூன்று புதுச் சொற்களைப் பிடித்து அதை ஒரு குறிப்பேட்டில் அகரவரிசைப்படி அச்சொல்லின் பொருளுடன் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக Preternatural. அட்டகாசம் என்பதற்கான இன்னொரு சொல். இதை ‘P' என்ற பக்கத்தில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது. இப்படியே ஒவ்வொரு எழுத்திலும் சொற்கள் சேரச் சேர அந்தந்த பக்கங்களில் பொருளுடன் சேர்த்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் செய்தாலே எழுபத்தைந்து சொற்கள் நமக்குக் கிடைத்துவிடும். அதில் பாதி மறந்து போனாலும் மீதி மனதுக்குள் நிற்கும். நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து செய்தால் குறைந்தபட்சம் முந்நூறு சொற்கள் கைவசம் இருக்கும். ஐநூறு சொற்கள் இருந்தால் மொழியில் பண்டிதன் என்று அர்த்தம். சிரமமேயில்லாமல் நம்முடைய ஆங்கிலத்தை வலுப்படுத்திக் கொள்கிற வழிமுறை இது. GRE, TOEFL, IELTS தேர்வுகளின் ஆங்கிலப்பிரிவுக்குத் தனியாக மாரடிக்க வேண்டியதில்லை.
இரண்டாம் வருட மாணவர்கள் என்பதால் ‘எதிர்காலத்திற்கான திட்டமிடுதல்’ என்பது பொருத்தமான தலைப்பாகத் தெரிந்தது. இரண்டாம் வருடம் என்பது திட்டமிடுதலுக்கான சரியான தருணமும் கூட.
பொதுவாகவே நமக்கு அறுபத்தைந்து வயது ஆயுள் காலம் என்று வைத்துக் கொண்டால் முதல் பதினேழு அல்லது பதினெட்டு வருடங்களில் பெரிதாக எதையும் செய்துவிட முடிவதில்லை. பெற்றோர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தவர்களின் தாக்கம்தான் நாம் எதைப் படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயிக்கிறது. அடுத்த பதினைந்து அல்லது இருபது வருடங்கள் என்பது சமூகம் நம் மீது செலுத்துகிற அழுத்தத்திற்காக நாம் ஒதுக்க வேண்டிய காலம். இந்தக் காலகட்டத்தில் லெளகீக வாழ்வு சம்பந்தமான கடமைகளைச் சரியாகச் செய்துவிட வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. திருமணம், பிள்ளைகள், வீடு, வாகனம் என்பதையெல்லாம் இந்த பதினைந்து/இருபது வருடங்களில் நாம் அடைய வேண்டிய இலக்குகள் என்று சமூகம் நம்மை நிர்பந்திக்கிறது. ‘சமூகத்திற்காகவெல்லாம் வாழ மாட்டேன்..என் வாழ்க்கை எனக்கு’ என்று வீரவசனம் பேசலாம்தான். ஆனால் அதே சமூகத்தில்தான் மனைவி, மகன், மகளும் அடங்கியிருக்கிறார்கள். அவர்களது ஆசைகளை நிராகரித்துவிட்டு என்ன வாழ்க்கை வாழப் போகிறோம்?
நம்முடைய நாற்பதாவது வயதில் எதை அடையப் போகிறோம், எப்படி அடையப் போகிறோம் என்பதற்கான இலக்குகளை நம் கல்லூரி காலத்தில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். தெளிவாக்குதலுக்கு இரண்டாம் ஆண்டு. தெளிவான இலக்குகளை அடைவதற்கான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு. இதுதான் சூட்சமம். தெளிவான இலக்கை நிர்ணயித்து அதை சரியான தருணத்தில் அடைந்து விட்டால் முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுக்குள் நம்முடைய லெளகீகத் தேவைகள் ஒழுங்கு அடைந்துவிடும். அதன் பிறகான இருபத்தைந்து ஆண்டுகள் நமக்கே நமக்கானது. எப்படி வாழ வேண்டும் என விரும்புகிறோமோ அப்படி வாழலாம். நாற்பது வயதுக்குப் பிறகு மனிதனுக்கு இலக்குகள் இருக்கக் கூடாது என நினைப்பேன். அந்த வயதில் நாம் அடைந்திருக்கும் இடத்திலிருந்து பெரிய அலட்டல் இல்லாமல் ஆறு ஓடுவது போல அதன் போக்கில் சென்று கடலில் கலந்துவிட வேண்டும்.
இப்படிப் பேசினால் 'Practically Impossible' என்று சொல்கிறவர்களும் இருப்பார்கள். ஆனால் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. நம்மால் முடியும் என்று நினைப்பதும், அதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதையும் பொறுத்தது. திட்டமிடாதவர்கள் வாழ்வதில்லையா? என்றும் கூடக் கேட்கலாம். வாழ்கிறார்கள். நாயும் கூடத்தான் வாழ்கிறது. வாழ்வின் இறுதிக்கணம் வரைக்கும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அடுத்த நாள் குறித்தான புலம்பல்களுடனேயேதான் வாழ்ந்தால் வாழ்ந்ததற்கான அர்த்தம் என்ன? நமக்கென்று இருபத்தைந்து வருடங்களையாவது ஒதுக்கி பணம், பொருளாதாரம் பற்றிய அதிகப்படியான அலட்டல் இல்லாமல் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட வேண்டும்.
திட்டமிடுதல், அர்பணிப்பு என்று சரியாகப் பயணித்தும் கடைசி காலத்தில் இப்படி வாழ முடியவில்லையென்றால் விதி மீதும் தலையெழுத்து மீதும் பாரத்தைப் போட்டுவிடலாம். எந்தத் திட்டமிடலுமில்லாமல் வாழ்வில் சிரமப்பட்டுக் கொண்டேயிருந்தால் அது நம்முடைய பிரச்சினைதானே?
பேசும் போது மாணவர்கள் கவனித்தார்கள். சிரித்தார்கள். கை தட்டினார்கள். ‘ஏதாச்சும் கேள்வி கேளுங்கள்’ என்றால் உம்மென்று இருந்தார்கள். ஒன்றாம் வகுப்பு மாணவனின் ‘தொல்லையா போச்சு’ கதையைச் சொன்னாலும் கூட அப்படியேதான் இருந்தார்கள். இந்த ஒரு கல்லூரியில் மட்டுமில்லை- பெரும்பாலான கல்லூரிகளில் இப்படித்தான். அதுவே அரங்குக்கு வெளியில் குதியாட்டம் போடுவார்கள். குழுவிவாதங்களில் (Group Discussion) தமிழக மாணவர்கள் திணறுகிறார்கள் என்று மனிதவளத்துறை ஆட்கள் சொல்வதுண்டு. அதன் அடிப்படையே இங்கேயிருந்துதான் தொடங்குகிறது.
‘நீங்க பேசலைன்னா நான் அரியர் வெச்ச ஃபீல்ட் தியரியைப் படிச்சுட்டு வந்து பாடம் எடுப்பேன்’ என்று மிரட்டி வைத்திருக்கிறேன். அப்பொழுதும் அவர்கள் பேசுகிற மாதிரி தெரியவில்லை. ஃபீல்ட் தியரியைப் படித்துத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது. ஆண்டவா!
9 எதிர் சப்தங்கள்:
"அந்த வயதில் நாம் அடைந்திருக்கும் இடத்திலிருந்து பெரிய அலட்டல் இல்லாமல் ஆறு ஓடுவது போல அதன் போக்கில் சென்று கடலில் கலந்துவிட வேண்டும்." ஆனால் ஆறு ஓடுவதற்க்கே நாம் தான் இயங்க வேண்டிய சூழல் இங்கே இருக்கிறதே என்ன செய்வது.
நிசப்தம் அறக்கட்டளைக்காரரு பேசறாரு நிசப்தத்த கடைபிடிகலாம்னு மாணவர்கள் இருந்திருப்பாங்க. ஃபீல்ட் தியரி படிக்காதிங்க, மாணவர்கள் வாய் திறக்க தியரி எதாச்சும் இருந்த படிங்க. அப்துல் கலாம் ஐயா என்ன தியரி உபயோகிசிருபாரு??? தியரி இருந்த கொஞ்சம் சொல்லுங்க நிறயபேருக்கு தேவைபடுது
அன்பின் மணி,
அறுபத்து ஐந்து வயது ஆயுட்காலம்..நாள் தவறாமல் தினம் தோரும் உடல், உயிர் மற்றும் மனதிற்கு ஆன பொருத்தம் ஆன பயிற்சிகளை தன் வயப்படுத்திக் கொண்டால் ஆயுள் கால எல்லை இன்னும் நீண்டு கொண்டே போகலாம் மணி.
வாழ்க வளமுடன்
//செய்தித்தாளிலிருந்து தினசரி மூன்று புதுச் சொற்களைப் பிடித்து அதை ஒரு குறிப்பேட்டில் அகரவரிசைப்படி அச்சொல்லின் பொருளுடன் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்//
நான் படிக்கும் போது இதே போன்று தினமும் வகுப்பு ஆரம்பமாகும் போது நான்கு ஆங்கில வார்த்தைகளை கரும்பலகையில் எழுதி பின்பு அதற்கான அர்த்தத்தையும் சொல்லி விளக்கி விட்டு அப்புறமாக அவர் சொல்லிக் கொடுக்க வேண்டிய வரலாற்று பாடத்தை ஆரம்பிப்பார் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியின் திரு.மரியதாஸ் என்ற பேராசிரியர்.
அவரை நன்றியுணர்வோடு இத்தருணத்தில் நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள்.
சில பேருக்கு நாற்பதுக்கு மேல் தான் ஓடவேண்டி இருக்கிறது
னார்ப்பதுக்குமேல் குழன்தைகள் வளரும்போதுதான் உன்மையான தலைவலிகள் தொடங்கும் தலைவா.
நீங்கள் குறிப்பிட்ட நாற்பது வயதுக்குமேல் நமக்கான வாழ்க்கை என்பது இங்கு சாத்தியம். பிள்ளைகள் 16, 17 வயதானதும் வெளியே அனுப்பிவிடுவார்கள். திருமணத்திற்கு கூட "என் பெற்றோரை அழைக்கலாமா என்றிருக்கிறேன்"என்பார்கள் பிள்ளைகள். நம்மூரில் இது சாத்தியமா?
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்.
"நான் வணிகவுலகில்
வெற்றியின் உச்சத்தைத்
தொட்டிருக்கிறேன்.
பிறரின் பார்வையில்
என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான்.
எப்படியிருந்தாலும்
என்னுடைய பணிச்சுமைகளை
எல்லாம் தாண்டி
நானும் என் வாழ்க்கையில்
ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன்...
உணர்ந்திருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன்.
பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை
என் வாழ்க்கையின்
இறுதிக்கட்டத்தில்தான்
அறிந்துகொண்டேன்.
இதோ !
இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு
என் முழுவாழ்க்கையையும்
திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.
இந்த இருளில்
என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும்
மருத்துவ இயந்திரங்களின்
மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும்
மிக - மிகஅருகில் உணர்கிறேன்.
வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத - மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அவை
உறவாகவோ,
நட்பாகவோ,
கலையாகவோ,
அறமாகவோ,
நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம்.
அவைதான் வாழ்வில்
மிகமிக இன்றியமையாதன என்பதை - காலங்கடந்து
இப்போது நான் உணர்கிறேன்.
அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு
ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது,
என் வாழ்க்கையை போல.
கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும்
ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்,
பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும்
அனைத்து மகிழ்ச்சியும்
வெறும் மாயைகளே!
நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது.
நான் மகிழ்ந்திருந்த
என் நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன் இருக்கின்றன.
அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு
எந்த எல்லைகளுமில்லை.
எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ
அங்குச் செல்லுங்கள்.
தொட நினைக்கும் உயரத்தை - உச்சத்தைத் தொட முயலுங்கள்.
நீங்கள் வெற்றியடைவது
உங்கள் எண்ணத்திலும்
கைகளிலும்தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து
நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.
பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால்
மீண்டும் வாங்கிவிடலாம்.
ஆனால் நீங்கள் தொலைத்து,
அதைப் பணத்தால்
வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால்
அது உங்கள் வாழ்க்கைதான்.
வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை ,
இப்போதாவது வாழ்க்கையை
வாழத் தொடங்குங்கள்.
நாம் நடித்துக்கொண்டிருக்கும்
வாழ்க்கை எனும் நாடகத்தின்
திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின்
குடும்பத்தினருக்கு,
பெற்றோர்க்கு,
மனைவிக்கு,
மக்களுக்கு,
உறவினர்க்கு,
நண்பர்களுக்கு,
இயலாதவர்களுக்கு
அன்பை வாரிவாரி வழங்குங்கள்.
உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்"
மரணப்படுக்கையில் ஸ்டீவ்..
Apple Inc.,
Founder
U.S.A.
Manikandan,
Most of the students will have the language as a Barrier. So tell them to ask questions in whatever language they are comfortable.
So ask the Lectures and Professors to be out from the discussion.
Then see how many questions coming out from them.
Post a Comment