Jul 17, 2017

எங்கே படிக்கிறாய்?

‘யாருகிட்ட சேட்ட?’ ‘தளபதிடா’ என்று டீ-ஷர்ட்டின் முன்பக்க வாசகம். ‘தமிழனை எதிர்த்தவனுக்கு தலை இருக்காது..தளபதியை எதிர்த்தவனுக்கு தலைமுறையே இருக்காது’ என்று பின்பக்க வாசகம். இரு பக்கமும் நடிகரின் படம். இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. சித்தோட்டில் பேருந்து ஏறிய போது அந்த டீஷர்ட்டை அணிந்திருந்த பையனின் அருகில் இடம் இருந்தது. அமர்ந்து கொண்டேன். 

கல்லூரியில் சேர்க்கையை முடித்துவிட்டு கோயமுத்தூரிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறான். 

‘எந்தக் காலேஜ்?’

கல்லூரியின் பெயரைச் சொன்னான். 

‘அட்மிஷன் முடிஞ்சுதா?’

‘அஞ்சாயிரம் கட்டிட்டோம்..கவுன்சிலிங்குக்கு வரச் சொன்னாங்க’ 

‘என்ன கோர்ஸ்?’

‘மெக்கானிக்கல்’

சிறிது நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

‘ஏன் மெக்கானிக்கல் எடுத்த?’

‘தெரியல...எங்க மாமா சொன்னார்’

‘ம்ம்ம்’

பவானி தாண்டி குமாரபாளையத்தில் தேநீருக்காக வண்டியை நிறுத்துவார்கள். இது வழமையான இடம். இறங்கிய போது அவனும் இறங்கினான். 

‘இதே டீஷர்ட்டோடதான் காலேஜ் போனயா?’ 

இந்தக் கேள்விக்கு பெருமிதமாகத் தலையை அசைத்தான். ‘யாரும் ஒன்னும் சொல்லலையா?’ என்றேன். அதை நான் கேட்டிருக்க வேண்டியதில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கு ஆட்கள்தான் தேவை. நிர்வாணமாகச் சென்றாலும் கூட எதுவும் சொல்லாமல் சேர்த்துக் கொள்வார்கள்.

இதெல்லாம் கூட அதிர்ச்சியளிப்பதாக இல்லை.

‘என்ன கட் ஆஃப்?’ - இந்தக் கேள்விக்கு மிகச் சாதாரணமாக ‘தெரியலை’ என்றான். 

‘அட உன் கட் ஆஃப்பைத்தான் கேட்கிறேன்’ என்ற போது அதே பதிலைத் திருப்பிச் சொன்னான். 

எனக்கு ஒரு வினாடி மூச்சு நின்று திரும்பியது. மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மதிப்பெண்களைப் பாடவாரியாகக் கேட்ட போது வரிசையாகச் சொன்னான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்தனை மதிப்பெண்கள் என்று அவனுக்கு நினைவில் இல்லை. அதிர்ச்சி ஏற்படாமல் என்ன செய்யும்? இனி பொறியியல் படிப்பில் எந்திரவியல் சேர்ந்து படிக்கப் போகிறான்.

‘வருஷம் எப்படியும் இரண்டு லட்ச ரூபாய் செலவாகும்ல’ என்றேன்.

‘அதைப் பத்தி காலேஜ்ல கேட்கலை’ என்றான். அவனுடைய செல்போனிலேயே இணைய வசதி இருந்தது. தேடச் சொன்ன போது விடுதிச் செலவு இல்லாமல் கல்லூரிக் கட்டணம் மட்டுமே ஒன்றேகால் லட்ச ரூபாய் என்று காட்டியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. 

அரசுப்பள்ளி மாணவனாக இருப்பான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. கிருஷ்ணகிரி அருகே உள்ள போச்சம்பள்ளி என்ற ஊரில் ஒரு மெட்ரிகுலேஷனில் பையன் படித்திருக்கிறான். மெட்ரிகுலேஷனில் படிப்பவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்று நம்புவது அபத்தம்.

அவனிடம் பேசி முடித்த பிறகு பேருந்துப் பயணம் முழுக்கவும் பவித்ராவின் முகம்தான் நினைவில் வந்து போனது. சனிக்கிழமையன்று அவளைச் சந்தித்தேன். கள்ளிப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியின் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுக்குச் சென்றிருந்த போது வந்திருந்தாள். மலையடிவாரத்திலிருந்து வந்து அந்தப் பள்ளியில் படித்தவள் பவித்ரா. அவளும் அவளது அம்மாவும் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். பெற்றவர்கள் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பில் அவள்தான் பள்ளியில் முதலிடம். 1123 மதிப்பெண்கள். பள்ளித் தலைமையாசிரியர் சுந்தராயாள் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

கலந்தாய்வுக்காக அந்தப் பெண் காத்திருக்கக் கூடும் என்றுதான் நினைத்தேன். 

‘பி.ஏ தமிழ் சேர்ந்திருக்கேன்’ என்றாள். 1123 மதிப்பெண்கள் வாங்கிவிட்டு தமிழ் படிக்கிற மாணவியைப் பார்த்தால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்? 

பொதுவாக வசதி இல்லாதவர்களின் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதுண்டு. ஆனால் தமிழில் சேரமாட்டார்கள். இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் என்று ஏதேனுமொரு பாடத்தில்தான் சேர்வார்கள்.

‘எதனால தமிழ்ல சேர்ந்திருக்க?’ என்றேன்.

‘சிவில் சர்வீஸ் எழுதப் போறேன்’ என்றாள். என்னையுமறியாமல் அவளிடம் புன்னகைக்கத் தோன்றியது. இத்தகையை உறுதியானவர்கள் நிச்சயமாக இலக்கை அடைந்துவிடுவார்கள். தேர்வு பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறாள். அவள் சொல்லச் சொல்ல மண்டையில் ஓங்கி அடித்தது போல இருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விவரம் போதாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதற்கு பவித்ரா உதாரணம். அம்மாவும் அப்பாவும் தினக் கூலிகள்தான். பள்ளியிலேயே அவள்தான் முதலிடம். நிச்சயமாகப் பொறியியல் கிடைத்துவிடும். ஆனால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தமிழ் படிப்பவளை எப்படி நிராகரிக்க முடியும்?

அடுத்தடுத்த இரு நாட்களில் இருவிதமான மாணவர்களைப் பார்க்க நேர்ந்தது. இருவரும் இரு துருவங்கள். ஒருவேளை போச்சம்பள்ளி மாணவனைப் பார்க்காமல் இருந்திருந்தால் பவித்ராவின் அருமை எனக்கு அவ்வளவாகப் புரியாமல் கூட இருந்திருக்கும்.அபிநயாவிடம் பவித்ரா பற்றிச் பேசியிருக்கிறேன். அபிநயா சிவில் சர்வீஸ் தேர்வு வழியாக Indian Defence Accounts Serviceல் பணியாற்றுகிறார். பவித்ராவுக்கு அவர் வழிகாட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்.

அரசுப்பள்ளி மாணவர்களை இளக்காரமாகவும் பார்க்க வேண்டியதில்லை; பரிதாபமாகவும் பார்க்க வேண்டியதில்லை. அங்கே ரத்தினங்களும் மாணிக்கங்களும் உண்டு. மிகைப்படுத்திச் சொல்லவில்லை- அவர்களின் பிரச்சினையெல்லாம் வானத்தை யாரேனும் காட்டுவதற்கான வழிமுறைகள் இல்லாததுதான். வானத்தை மட்டும் காட்டிவிட்டால் போதும். அவர்கள் சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்துவிடுவார்கள்.  இந்தப் பதிவைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் பவித்ரா மாவட்ட ஆட்சியராகி இருப்பாள்.

13 எதிர் சப்தங்கள்:

thiru said...

//‘எதனால தமிழ்ல சேர்ந்திருக்க?’ என்றேன்.

‘சிவில் சர்வீஸ் எழுதப் போறேன்’ என்றாள்.//

-- கவித கவித

Anonymous said...

Little hard to talk with the T shirt type, unknown youth.

Unknown said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

//இன்னும் சில ஆண்டுகளில் பவித்ரா மாவட்ட ஆட்சியராகி இருப்பாள்//
பவித்ராவிற்கு அச்சார வாழ்த்துக்கள்

சேக்காளி said...

குப்பையில் கிடக்கும் மாணிக்கம் : பவித்ரா
மாணிக்கமென தெரிந்து அடையாளங்காட்டிய உரைகல் : சுந்தராயாள்
மாணிக்கத்தை பட்டை தீட்டப் போகும் சாணைக்கல் : அபிநயா
அட போய்யா.இந்த பொம்பளயள நெனச்சா பெருமிதமாத்தான் இருக்கு.

Parthasarathi said...

Sure Mani..She will be..

Kamaraj said...

வாழ்த்துக்கள்

RAJ said...

ADVANCE CONGRATULATIONS TO OUR (COLLECTOR ) BAVITHRA

viswa said...

உங்கள் தேடல் பெருமிதம் கொள்ள வைக்கிறது

விஸ்வநாதன்

அன்பே சிவம் said...

மணி நீங்களும் நாங்களும் (சுருக்,) நாம்) நம் கண் முன் இலக்கின்றி இருக்கும் அடுத்த தலை முறைக்காக இன்னும் அதிகம் உழைக்கத்தான் வேண்டும். தங்கள் சுமை தாங்கும் வலிமை கூடட்டும்.

Vinoth Subramanian said...

Very good. That is how she should go.

Jaypon , Canada said...

பவித்ராவிற்கு வாழ்த்துக்கள். ஆனால் காலம் எப்படி வேண்டுமானாலும் விளையாடும். டீ சர்ட் கல்லூரியில் தளபதி சங்க தலைவனாகி அரசியலில் நுழைந்து நாளை பவித்ரா கையெழுத்து கேட்டு நிற்கும் மினிஸ்டர் ஆகலாம்.இதற்கு டீ சர்ட்க்கு எல்லா தகுதியும் இருப்பதாகவே தெரிகிறது. தமிழகத்தின் கேடுகெட்ட நிலமை.

Malar said...

‘சிவில் சர்வீஸ் எழுதப் போறேன்’ என்றாள். என்னையுமறியாமல் அவளிடம் புன்னகைக்கத் தோன்றியது. ...// very good write up so that the readers also get the same emotion and feel..