அலுவலகத்தில் எங்கள் அணியில் ஒரு பையன் புதிதாகச் சேர்ந்திருக்கிறான். வட இந்தியாவைச் சேர்ந்தவன். கன்னடப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு பாதிக்கன்னடத்தவன் ஆகிவிட்டான். என்னைவிட கன்னடம் அதிகமாகப் பேசுகிறான் என்று காதில் கொஞ்சம் புகை வந்தாலும் என்னையும் அவனையும் சேர்த்து ஒரு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். Toastmaster. இதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது என்று சொன்னேன். அலுவலகத்தில் பேசுவதே மிகக் குறைவு. மொத்தமாக ஐம்பது பேர்தான் எங்கள் அலுவலகத்தில். பெண்கள் வெகு குறைவு. கூட்டம் கூட்டமாகச் சென்று மதிய உணவை உண்பார்கள். இருக்கையிலேயே அமர்ந்து கோழி கொத்துவது போல மதிய உணவைக் கொத்தும் ஒரே ஆள் நான்தான். சேரக் கூடாது என்றில்லை. விவாதம் என்ற பெயரில் பல சமயங்களில் தாளித்துவிடுவார்கள். வாட்ஸப் செய்தியை எல்லாம் படித்துவிட்டு வந்து ஒருவர் மோடி பிரமாதம் என்பார். இன்னொருவர் மன்மோகன் சிங்தான் டாப் என்பார். விஷயம் தெரிந்து பேசுகிறவர்கள் கிடைப்பது வரம். அப்படியானவர்கள் பேசினால் காது கொடுக்கலாம்.
ஒரு சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தன்னை அந்தச் சித்தாந்தவாதியாகக் காட்டிக் கொள்கிறவர்களிடம் பேசுவதைப் போன்ற கடினமான காரியம் எதுவுமில்லை. இந்துத்துவா, திராவிடம், பெரியாரியம், அம்பேத்கரியம் என்று எந்தச் சித்தாந்தமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய விரிவான புரிதல் கொண்டவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. தம்மை இண்டலெக்சுவலாகக் காட்டிக் கொள்வதற்காக அரையும் குறையுமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு அதைக் கொட்டுகிறவர்கள்தான் அதிகம். தாம் நம்புகிற சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்துத்துவத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று இசுலாமியர்களைத் திட்டுவார்கள். தன்னைப் பெரியாரிஸ்ட் என்று காட்டிக் கொள்வதற்காக முரட்டுத்தனமாக மதங்களின் அத்தனை கூறுகளையும் எதிர்பார்கள். கூறு கெட்டதனமாகத் தெரியும். அலுவலகம் என்பதால் நாசூக்கைக் கடைபிடிக்க வேண்டும்.
யாருடனும் சேராமலிருப்பதால் நான் அறிவாளி என்று அர்த்தமில்லை. நாமும் அரைவேக்காடு. நம்முடன் விவாதிக்கிறவனும் அரைவேக்காடு என்றால் அவனும் பாவம்தானே?
முடிந்தவரைக்கும் எந்தச் சித்தாந்தத்திலும் உறுதியாகச் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் சித்தாந்தம். ஒரு சித்தாந்தத்தைத் தீவிரமாக நம்புகிறவனாக நாம் வெளிப்படத் தொடங்கினால் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வோம். ஒரு இந்துத்துவவாதி இந்து மதத்தின் அருமை பெருமைகளைப் பேசினால் அதற்காகக் கைதட்ட ஒரு கூட்டம் சேரும். அதே இந்துத்துவவாதி மாலிக் காபூரின் படையெடுப்பைப் பற்றி எழுதினாலும் அதே கூட்டம்தான் கைதட்டுமே தவிர வெளியில் இருப்பவர்கள் ‘அவன் முஸ்லீம்ன்னாவே அப்படித்தான் எழுதுவான்’என்பார்கள். ஒரு சித்தாந்தவாதியாக தம்மைக் கருதிக் கொண்டு அல்லது வெளியில் காட்டிக் கொண்டு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வதைவிடவும் காலம் முழுவதும் சிறு சிறு சலனங்களையும், விவாதங்களையும் தொடர்ந்து உருவாக்கி அது பற்றிய எதிர்கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு தேவைப்படுகிற இடங்களில் தம்முடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளவும் தயங்காதவனாக இருப்பதுதான் சமூகத்தில் நம்முடைய இருப்புக்கான அர்த்தத்தை உருவாக்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்படி இருந்தால் ‘இன்னைக்கு ஒரு பேச்சு..நாளைக்கு ஒரு பேச்சு’என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அதுவொன்றும் தவறில்லை. வாழ்க்கை அதன் போக்கில் போவதுதான் சரி. அந்தந்தத் தருணத்தில் எவையெல்லாம் மனதுக்குச் சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின்பற்றிக் கொள்ளலாம். நம் மனம் சரி என்று சொல்வதைப் பின்பற்றுவதில் ஒரு செளகரியம் இருக்கிறது. Comfort zone. ஒரு சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றினால் அதே சித்தாந்தத்தைப் பின்பற்றும் சக கொள்கையாளரோ அல்லது அந்தச் சித்தாந்தத்தின் தலைமையோ எதைச் சொன்னாலும் நாம் ஆதரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்காக நாம் கம்பு சுற்றிக் கொண்டிருப்போம். அதற்கான தேவை என்ன? முரட்டுத்தனமாக ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு மனிதரையோ நம்ப வேண்டியதற்கான அவசியம் என்ன?
வாழ்ந்து முடிக்கும் போது நம்மைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகும் அல்லவா? அதுதான் நிரந்தரம். வாழ்வின் கடைசித் தருணம் வரைக்கும் நம்மைப் பற்றிய பிம்பங்களையும் சித்திரங்களையும் தொடர்ந்து அழித்துக் கொண்டேயிருக்கலாம். சரியான புத்தகங்களை வாசித்து தகுதியான மனிதர்களுடன் உரையாடி புரிதலும் நெகிழ்தலும்தானே மனித மனதுக்கான வளர்ச்சி? உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையாக ஒன்றை ஏற்றுக் கொண்டு அதைவிட்டு விலக முடியாமல் இறுகிப் பிடித்துக் கொண்டு நாமும் அரைகுறையாகவே இருந்தபடி நம்மைப் போன்ற சக அரைகுறை எதிர்சித்தாந்தவாதியுடன் தம் கட்டி களமாடியபடி அப்படியே தேங்கிப் போவதில் என்ன பலன் இருக்கிறது?
பொதுவான உரையாடல் என்றால் பிரச்சினையே இல்லை. தீவிரமான விஷயங்களைப் பொறுத்த வரைக்கும் சரியான மனிதர்களுடன் விவாதிக்க வேண்டும். விவரம் தெரிந்தவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். இத்தகைய குழப்பங்களினால்தான் அலுவலக உரையாடல்களில் கலந்து கொள்வதில்லை. ‘ஜி.எஸ்.டியினால விலை குறைஞ்சுடுச்சு தெரியுமா?’ என்று தொடங்கினால் எதைப் பேசுவது? ஜி.எஸ்.டி பற்றி வேறு ஏதேனும் நல்ல அம்சம் இருந்து பேசினால் பரவாயில்லை. விலை குறைந்துவிட்டது என்றால் எப்படி நம்புவது? பதினெட்டு ரூபாயிலிருந்த காபி பத்தொன்பது ரூபாய் ஆகியிருக்கிறது. நேரடியாகக் கண்ணில் பார்க்கிறோம். ஆனால் விலை குறைந்துவிட்டது என்கிறார். ‘இவங்ககிட்ட பேசி ஏன் வாயைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று தோன்றும். முழுமையான புரிதல் இல்லாத மனிதர்களுடன் மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவதைவிடவும் மாஸ்டர்களிடம் கால் மணி நேரம் பேசினால் போதும். பேசுவது என்றால் வாசிப்பு என்று கூட இருக்கலாம். ஏதாவதொரு திறப்பைக் காட்டிவிடுவார்கள். தீக்குச்சியை உரசி வெளிச்சத்தைக் காட்டிவிடுவார்கள். அங்கே போய் அமைதியாக இருப்பதைவிடவும் இங்கேயே இருந்து கொள்ளலாம் என்று தனிக்கட்டைதான். அதனால்தான் என்னவோ ‘இவனைப் பேச வைக்கலாம்’ என்று இந்த டோஸ்ட் மாஸ்டர் பணியைக் கொடுத்துவிட்டார்கள்.
பிரச்சினை என்னவென்றால் எதற்காக ஒதுங்கி இருந்தேனோ அதே விவாதங்களை நான் நடத்த வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடைபெறும். ஒரு தலைப்பைக் கொடுத்து மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். ‘நீங்களே தலைப்பைக் கொடுங்க’ என்று கேட்டிருந்தேன். அதே தலைப்புகள்தான். அதே கடிதான். ஜிஎஸ்டி, சீனாவை வெல்லுமா இந்தியா? இப்படியெல்லாம். ‘இதைப்பத்தியெல்லாம் நமக்கு உண்மையிலேயே தெரியுமா? அல்லது நடத்துகிறவனுக்குத்தான் தெரியுமா?’ என்று துளி கூட யோசிக்கமாட்டார்களா? ஆத்து ஆத்து என்று ஆத்துவார்கள். ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்க்கை நம்மை வைத்துக் கபடியாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும்.
6 எதிர் சப்தங்கள்:
"வாழ்க்கை நம்மை வைத்துக் கபடியாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும்"
ஒன்று மட்டும் நிச்சயம்- வாழ்க்கை நம்மை வைத்துக் கபடியாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும். //ஹா ஹா
Vaalthukal aya. thagalin purithal arumai. iruthapodhum ualaga medayel pesa ithu oru vaaipaga amium.
//பிரச்சினை என்னவென்றால் எதற்காக ஒதுங்கி இருந்தேனோ அதே விவாதங்களை நான் நடத்த வேண்டும்.//
இந்த வரிகளை வாசிக்கும் போது
"நேரம் சரி இல்லே ன்னா ஒட்டகத்து மேல ஏறி உட்கார்ந்திருந்தாலும் ஓடி துள்ளி குதித்து நாய் கடிக்கும்" ன்னு பின்னூட்டம் எழுத நெனைச்சேன்
ஆனா கடைசியில நீங்க அதையே
//இமயமலைக்கே போனாலும் கரடியை அனுப்பி வைத்துக் கடிக்கும். //
எழுதி பதிவை முடிச்சிருக்கீங்க.
I accept one thing. Don't argue with "Araivekadu(Off Boiled Fellow)". They think they know everything without understanding anything.
it is a great golden opertunity sir to increase your skill in handling people as it is essential for one emerging leader like you. doing social activities requires handling various people with various background which can be achieved by using this as a practice platform given by your company without their knowledge.
you will here many nonsense arguments and points which will force you to learn deeply about those topics which will ultimately perfect your knowledge and your inner values in longer run.
all the best mani sir.
Post a Comment