Jul 26, 2017

விதைகள்

நேற்று பட்டயக்கணக்கரின் அலுவலகத்தில் நேரம் கழிந்தது. கடந்த ஒரு வருடத்தில் நன்கொடையாக வந்த தொகை, அதில் வழங்கப்பட்ட தொகை, பயனாளிகளின் விவரம் என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வருமான வரித்துறையின் விதிகளின்படி ஒரு வருடத்தில் வரவாக வந்த தொகையில் எண்பத்தைந்து சதவீதம் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு வரி கட்ட வேண்டும். கணக்குப் போட்டுப் பார்த்தால் அவ்வளவு உதவிகளைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. 

‘செப்டம்பர் வரைக்கும் டைம் இருக்கு...கொடுத்துடுங்க’ என்றார் ஆடிட்டர். அது சாத்தியமில்லை. நோட்டீஸ் கொடுப்பது போலக் கொடுத்துவிடலாம்தான். தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியாவது கரைத்துவிடலாம். ஆனால் அப்படிச் செய்யப் போவதில்லை. நாம் செய்கிற உதவிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இன்றைக்கும் நாம் நான்கு பேருக்கு உதவினால் உதவி பெற்றவர்கள் நாளை வேறு யாரேனும் ஒருவருக்காவது உதவ வேண்டும். ஆரம்பத்தில் இது தானாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் நடக்காது. இதுவரையிலான அனுபவங்களை வைத்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு மாணவனுக்கு உதவும் போது ‘உங்க ஏரியாவில் நல்லா படிக்கிற வசதியில்லாத பையனோ பொண்ணோ இருந்தா சொல்லுப்பா’ என்று சொல்லி அனுப்பினால் அவர்கள் யாரிடமும் சொல்லியிருக்கமாட்டார்கள். ‘நிறையப் பேர் போய் இவன்கிட்ட காசு வாங்கிவிட்டால் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ’என்று பயப்படுகிறவர்கள்தான் இங்கே அதிகம். இவர்கள் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டால் அடுத்தவர்களுக்குத் தானாக உதவுவார்கள் என்று நம்ப வேண்டியதில்லை. யார் மீதும் குற்றச்சாட்டாக இதை முன்வைக்கவில்லை. இது சமூக இயல்பு. அடிப்படையான மனநிலையிலேயே மாறுதலை உண்டாக்க வேண்டியிருக்கிறது. மொத்தச் சமூகத்தையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நம்மிடம் உதவி பெறுகிறவர்களையாவது நமக்கு ஏற்ப வார்த்தெடுக்கலாம். 

முன்பெல்லாம் கல்வி உதவிகளைச் செய்தால் அதன் பிறகு அடுத்த முறை பணம் தேவைப்படும் போதுதான் அவர்கள் தொடர்பு கொள்வார்கள். நமக்கும் அப்பொழுதுதான் அவர்கள் குறித்த நினைவு வரும். அதில் என்ன பலன் இருக்கிறது? பணத்தைக் கொடுப்பதுடன் நம்முடைய கடமை முடிந்துவிடுவதில்லை. இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு மாணவ/மாணவியின் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு நேரம் இருக்கும் போது அழைத்துப் பேசுகிறேன். பேச ஏதாவது இருக்கும். குறைந்தபட்சம் ‘சாப்பிட்டாச்சா?’ என்றாவது கேட்டுவிடுவதுண்டு. அதே போலத்தான் இந்த ஆண்டிலிருந்து வழிகாட்டிகள் திட்டத்தையும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வழிகாட்டி. அவர்கள் அந்த மாணவனை கண்காணித்துக் கொள்வார்கள். அந்தந்த மாணவனும் மாணவியும் வாழ்க்கையில் நல்லதொரு இடத்தை அடையும் வரைக்கும் வழிகாட்டிதான் பொறுப்பு. அப்படியான வழிகாட்டிகள்தான் தேவையாக இருக்கிறார்கள். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான் என்கிற கணக்காக ஆரம்ப ஜோரில் வெகு தீவிரமாக பணியாற்றிவிட்டு மூன்றாவது மாதத்தில் கைவிட்டுவிட்டால் வீணாகிவிடும்.

மாணவர்களில் பலரும் கரடுமுரடாகத்தான் இருக்கிறார்கள். அடிப்படையான குணநலன்கள் கூட இருப்பதில்லை. இதைப் புரிந்து கொண்டவர்கள்தான் வழிகாட்டிகளாகச் செயல்பட முடியும். வழிகாட்டல் என்பது இனிமையான வேலை இல்லை. மூன்றாவது உரையாடலுக்குப் பிறகு ‘அந்தப் பையன் சரியில்லைங்க..எனக்கு வேற பையனை மாத்திக் கொடுங்க’ என்று கேட்டவர்கள் உண்டு. கரடுமுரடாக இருப்பது மாணவர்களின் தவறு இல்லை. வளர்ப்பு முறை, குடும்பச் சூழல் என பின்னணியில் நிறைய இருக்கிறது. மெல்ல மெல்லத்தான் நெகிழ்த்த முடியும். தனிப்பட்ட வழிகாட்டிகள் தவிர  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களை அழைத்து வைத்து ஒரு முக்கியமான ஆளுமையை வைத்து அவர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமும் இருக்கிறது.  இராணுவத்துறையில் பணியாற்றும் அபிநயா என்னும் அதிகாரி ஆகஸ்ட் மாதப் பயிற்சி வகுப்பினை நடத்துகிறார். இப்படியான பயிற்சி வகுப்புகளை நடத்தும் போது சில சிரமங்கள் இருக்கின்றன. தூத்துக்குடி, நாமக்கல் என்று திக்குக்கு ஒன்றாக இருக்கும் மாணவ மாணவிகளையெல்லாம் எப்படி ஒழுங்குபடுத்துவது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 

‘நான் ஒரு பொண்ணை சிபாரிசு செய்கிறேன். உதவி செய்யுங்கள்’ என்று யாராவது கேட்டால் இப்படி சகலத்தையும் யோசித்துத்தான் ஆம்/இல்லை என்று பதில் சொல்ல முடிகிறது.  நம்மிடம் உதவியை வாங்கிக் கொண்டு வேறு இரண்டொரு பக்கம் சொல்லி பணத்தை சொகுசுக்காக வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். ‘வங்கியில் கடன் வாங்கிக்க’ என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். எங்கெல்லாம் பணம் வாங்க முடியுமோ அங்கெல்லாம் வாங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் புதியதொரு அனுபவம் கிடைக்கிறது. அனுபவங்கள்தானே நம்மையும் தட்டி வடிக்கிறது? இத்தகைய அனுபவங்கள்தான் நம்முடைய வடிகட்டல்களையும் கூராக்குகிறது. இப்படியெல்லாம் வடிகட்டல்களைச் செய்யும் போது பயனாளிகளைக் கண்டடைவதிலும் உதவிகளை வழங்குவதிலும் தாமதமாகிறது. தாமதமானாலும் பரவாயில்லை. ‘ஒரே வருஷத்துல ஒரு கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறோம்’ என்று படம் காட்டுவதைக் காட்டிலும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் அதனால் நான்கு நல்ல மனிதர்களை வார்த்தெடுக்க முடியும் என்றால் அது போதும் என்றுதான் தோன்றுகிறது.

மருத்துவ உதவியும் அப்படித்தான். ‘ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம்..வண்டியில் போகும் போது விபத்து. இரு குழந்தைகள் இருக்கிறார்கள்’ என்றார்கள். விசாரித்துப் பார்த்தால் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்கிறார். குழந்தைகளுக்காக உதவுவதா? விழுந்தவனுக்குத் தண்டனையாக இருக்கட்டும் என்று உதவாமல் விடுவதா? தர்ம சங்கடம்தான். 

பணம் வந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு கூட மூன்று லட்ச ரூபாயை யாரோ அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘பணம் அனுப்பியிருக்கிறேன் சரி பார்த்துக்குங்க’ என்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி என்று ஏதாவது? ம்ஹூம். கோவில் உண்டியலில் போடுவது போல போட்டிருக்கிறார்கள். இப்படி நிதி சேர்கிறது என்பதற்காக கேட்கிறவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி அதில் ஆயிரம் ரூபாயை அனுப்பி வைக்கிறவர்களையும் தெரியும். இப்படிச் சேர்கிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு விதையாக இருக்கட்டும்.

6 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

நல்லதொரு பாதை கண்முன்னே. பயணம் சிறக்கட்டும்

Malar said...

இப்படிச் சேர்கிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு விதையாக இருக்கட்டும் // உங்களது சமூக அக்கறை பிரமிக்க வைக்கிறது. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

//அடிப்படையான மனநிலையிலேயே மாறுதலை உண்டாக்க வேண்டியிருக்கிறது.//
நீ ஏன் உதவி செய்கிறாய்? என கேட்கும் சமுதாயத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாறுதல் அத்தனை எளிதில் சாத்தியமில்லை மணி.
எல்லாருமா எனக்கு உதவினார்கள்?. மணி மட்டும் தானே உதவினார்.அவருக்கு தேவை என்றால் உதவி செய்து கொள்கிறேன்.மற்றவர்களுக்கு நான் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலை தான் உங்களிடம் உதவி பெற்றவர்களில் பலருக்கு இருக்கும்.
உதவிகள் பெறுவதும் செய்வதும் ஒரு சங்கிலி தொடர் என்பது புரியாது. அல்லது புரிந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை.அது அவர்களுக்கு தேவையும் இல்லை.
நீங்கள் இந்த கட்டுரையை எழுதும் போது இருந்திருக்கும் மனநிலை உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணம். ஏனென்றால் பயனடைந்தவர்களே உதவ முன் வராத போது நான் ஏன் உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உதித்திருக்கும் தானே?.
கறை நல்லது.

Unknown said...

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இக்குறள் போல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

RiverMaker said...

There can be no benefit of doubt in the se matters Mani. As I see it (and as you have always seen with extraordinary clarity) the monetary help is the starting point of a change in society. Avoiding tax cannot be the basis for choosing where and how to catalyze change.

FWIW, I fully endorse your stance.

Best wishes

அன்புடன் அருண் said...

//சேக்காளி said...

//ஏனென்றால் பயனடைந்தவர்களே உதவ முன் வராத போது நான் ஏன் உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உதித்திருக்கும் தானே?.

மணி அந்த கட்டத்தை தாண்டி விட்டார் என்றே நினைக்கிறன்...