Jul 21, 2017

ராயல்டி

மூன்றாம் நதி நாவலை கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஏற்கனவே இதைச் சொல்லியிருக்கிறேன். ஆயிரத்து ஐநூறு பிரதிகள். கடந்த மாதமே பதிப்பாளர் ஆயிரத்து ஐநூறு பிரதிகளை புதிதாக அச்சிட்டு எடுத்துச் சென்று கல்லூரியில் வழங்கிவிட்டார். சில மாணவர்கள் அழைத்து ‘உங்க புக்கை கொடுத்திருக்காங்க’ என்று சொன்ன போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது. அடிக்கும் அல்லவா? பெரிய அங்கீகாரம் இது.

புத்தகங்களுக்கான தொகை நேற்று காசோலையாக வந்துவிட்டது போலிருக்கிறது. கரிகாலன் பண விஷயத்தில் துல்லியமாக இருப்பார். மாலையிலேயே அழைத்து ‘உங்க ராயல்டி கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வருது...செக் அனுப்பிடுறேன்’ என்றார். எழுத்து எனக்கு பிழைப்பு இல்லை. சம்பளம் வருகிறது. அது போதுமானதாக இருக்கிறது. எழுத்து வழியாகச் சில காரியங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகு எழுத்துச் சம்பாதியத்தை நல்ல காரியங்களுக்குக் கொடுத்துவிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்ததுதான்.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் புத்தக விற்பனை வழியாகக் கிடைத்த தொகையில்தான் முதன் முறையாக பள்ளிகளுக்கு நூல்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்டதன் அனுபவமும் தொடர்ச்சியான விரிவாக்கமும்தான் சமீபத்தில் பதினைந்து பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கிய நிகழ்வு. மூன்றாம் நதி நாவல் ஏலம் விடப்பட்டது. அமோகமான வரவேற்பு. திரட்டப்பட்ட தொகை கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாயை நெருங்கியது. அந்தத் தொகையை பெற்றோர் இல்லாத, கிராமப்புற மாணவிகள் சற்றேறக்குறைய பத்து பேர்களின் படிப்புச் செலவுக்காகக் கொடுத்தோம். அதில் கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களின் விரிவாக்கம்தான் மாணவர்களுடன் இப்பொழுது செய்து கொண்டிருக்கிற தொடர்ந்த உரையாடலும் வழிகாட்டும் திட்டமும் (Mentoring). 

எழுத்து வழியாகக் கிடைக்கக் கூடிய நிதியும் அதை பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்துவதனால் பெறக் கூடிய அனுபவங்களும் தொடர்ந்து கூர் தீட்டிக் கொள்ள உதவிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுதுதான் முதல் சில அடிகளை வைத்திருக்கிறோம். இன்னமும் நிறைய இருக்கிறது.

கரிகாலனிடம் ‘பணத்தை நீங்களே வைங்க’ என்று சொல்லியிருக்கிறேன். இது ஒரு தொகை ஆயிற்றா? இன்னொரு தொகைக்கான வித்து ஒன்றை ரிச்சர்ட் விதைத்திருக்கிறார். 

நேற்று ‘ரோபோஜாலம் புக்கை எங்க ஊர் ஸ்கூல் பசங்களுக்கு பத்து பிரதி வாங்கித் தர்றேன்..எவ்வளவு டிஸ்கவுண்ட் தருவாங்க?’ என்றார். ஒரு பிரதி எழுபது ரூபாய். 

பதிப்பாளரிடம் கேட்ட போது ‘பத்து வாங்கினா ஐநூறு ரூபாய்க்கு அனுப்பி வெச்சுடுறேன்..ஒரே அட்ரஸ்ன்னா தபால் செலவையும் நானே பார்த்துக்கிறேன்’ என்றார். மண்டைக்குள் பல்ப் எரிந்தது.

ரிச்சர்ட்டிடம் ‘ஐநூறு ரூபாய்க்குத் தர்றேன்னு சொல்லுறாருங்க..நீங்க ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக்குங்க’ என்ற போது சிரித்தார். அப்படிச் சொன்னதில் சிறு கணக்கு இருக்கிறது. ஐநூறு ரூபாய் பதிப்பாளருக்கு. இன்னொரு ஐநூறு ரூபாய் நமக்கு. ஏற்கனவே பத்தாயிரம் ரூபாய் கைவசம் இருக்கிறது அல்லவா? இப்படி ரோபோஜாலம் வழியாக இன்னுமொரு பத்தாயிரம் ரூபாயைத் திரட்டினால் மொத்தத் தொகையையும் சேர்த்து தக்கர் பாபா விடுதிக்கு ஒரு குளிர்பதனப்பெட்டி வாங்கிக் கொடுத்துவிடலாம்.

தக்கர் பாபா பற்றித் தெரியுமல்லவா? குஜராத்தைச் சார்ந்த சமூக சேவகர்.  காந்தியடிகள் ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கிய போது அப்பொழுது பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருந்த தக்கர் பாபாவை சங்கத்தின் முதல் செயலாளாராக்கினார். ஹரிஜன சேவா சங்கம் தனது முழுவடிவத்தையும் பெறுவதில் அவர்தான் முக்கியமான காரண கர்த்தா. டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொண்டிருந்த போது பழங்குடியின மக்களின் கிராமங்களைத் தேடிய தக்கர்பாபாவின் பயணங்களும் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர் அம்பேத்கரின் குழுவினருக்குக் கொடுத்த விவரங்களும் அரசியலைப்புச் சட்ட வடிவாக்கத்தில் மிக முக்கியமானவை. 

தக்கர் பாபா முதல் செயலாளாராகப் பணியாற்றிய ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிற பதினான்கு விடுதிகளும் பள்ளிகளும் தமிழகம் முழுக்கவும் உண்டு. சென்னையில் இருக்கும் தக்கர் பாபா பள்ளி மட்டும் ஓரளவுக்கு வெளியில் தெரிகிறது. தேனி, கோபி உள்ளிட்ட பல இடங்களில் செயல்படக் கூடிய பள்ளிகள் சப்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாள் விடுதிக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்த இரவு நேரத்தில் சென்றிருந்தோம். கிட்டத்தட்ட அத்தனை குழந்தைகளுமே தலித் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள். கல்வி நிறுவனங்கள் விடுதிகள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது ‘ஒரு குளிர்பதனப்பெட்டி கிடைச்சா செளகரியமாக இருக்கும்’ என்றார்கள். உள்ளூரில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை விடுதிக்கு அனுப்பி வைக்கிறவர்கள் உண்டு. அப்படி அனுப்பி வைக்கப்படும் உணவு மீதமானால் அதை குளிர்பதனப்பெட்டியில் வைத்து அடுத்த நாள் சூடு செய்து உண்டு கொள்ளலாம் என்பதற்காக அப்பெட்டி தேவைப்படுவதாகச் சொன்னார்கள். காய்கறிகளும் அப்படித்தான். பெரும்பாலும் அன்றாடத் தேவைக்காக அவ்வப்பொழுதுதான் வாங்கிக் கொள்கிறார்கள். சிற்சில சமயங்களில் அக்கம்பக்கத்து விவசாயிகள் கூடுதலாகத் தருவதும் உண்டு. அப்படிக் கிடைக்கும் காய்கறிகளைப் பதப்படுத்த இயலாமல் வீணாகப் போய்விடுவதாகச் சொன்னார்கள்.

அப்பொழுது அவர்களிடம் எதையும் உறுதியாகச் சொல்லவில்லை. எழுதுவதன் வழியாகக் கிடைக்கும் தொகையைப் புரட்டி அத்தொகையில் குளிர்பதனப்பெட்டியை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று அப்பொழுதே முடிவு செய்து வைத்திருந்தேன். அதற்கான நேரம் வாய்த்திருக்கிறது. 

அறக்கட்டளையின் நிதியை நேரடியான கல்வி(கற்பித்தல்) மற்றும் மருத்துவம் சார்ந்த செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இதுவும் முக்கியமான பணிதான். ஆனால் பணத்தைப் புரட்டுவதற்கு வேறொரு வழிமுறை. நாய் விற்ற காசு குரைக்க வேண்டியதில்லை. எழுத்து விற்ற காசு- பேசட்டும். விதவிதமான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேயிருப்போம். ஒவ்வொன்றும் நம்மை திருத்தியபடியும் புரட்டியபடியுமே இருக்கும்.

பத்து பிரதிகள் அடங்கிய ஒரு செட் ஆயிரம் ரூபாய். இணைந்து கொள்ள விரும்புகிறவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் பதிப்பாளரின் கணக்கு விவரங்களை அனுப்பி வைக்கிறேன். பயணித்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
vaamanikandan@gmail.com

7 எதிர் சப்தங்கள்:

vv9994013539@gmail.com said...

Arumai vaalthukal. kadantha 2 du 3 maathama thangalai patri thina sari naalithal, vaara idal, maada idal thangal pugai padathudan karuthum velivaruvathu makelchi. kulirsathana peti avargal ketathanal vaagi tharuvatha soli irukega. meethamana uanavai adil vaithu marupadium soodu pani thirumba payan padutha endru athanaal nanmai kaatelum theemaya adigam. melum thagavaluku http://www.anatomictherapy.org/

vijay said...

வாழ்த்துகள்

Unknown said...

கண் வியர்க்கிறது மணி.

Vaa.Manikandan said...

நன்றி. சிலவற்றைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. அவர்களிடம் இது குறித்துப் பேசினேன். இரவு பத்து மணிக்கு ரசமும் குழம்பும் வந்து சேரும் போது குளிர்பதனப்பெட்டியில் வைத்தால் அடுத்த நாள் காலையில் உண்பதற்கு சரியாக இருக்கும் என்றார்கள். மாணவர்களின் உடல்நலத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் முடிவுக்கு வந்தோம்.நீண்ட நாட்களுக்கு அவர்கள் வைத்துக் கொண்டிருப்பதில்லை. அடுத்த ஒரு நாள். உணவு மட்டுமில்லை- காய்கறிகளுக்கும் குளிர்பதனப்பெட்டி அவசியமானதாக இருக்கிறது.

சேக்காளி said...

தேடுகிறவன் கண்டடைகிறான்.

Ganpa said...

kangal panikkirathu maganae

Unknown said...

3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு: செங்கோட்டையன் அறிவிப்பு