Jul 20, 2017

எங்கே ஊழல்?

தமிழகத்தின் ஊழல்களை பட்டியல் எடுத்து அமைச்சர்களுக்கு அனுப்ப வேண்டுமாமே? அமைச்சர் பெருமக்கள் எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லையென்றல்லாம் மறுப்பது சும்மா லுலுலாயிக்கு. ஒப்பந்தப்புள்ளிகள் வழங்குவதில் யாருக்கு எவ்வளவு தரவுத் தொகை, எப்படி பங்கு பிரிக்கப்படுகிறது என்பதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். அப்பேர்பட்ட விவகாரங்கள் சாமானிய மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் துறை ரீதியிலான இடமாறுதலுக்குக் கூட பணம் வசூலிக்கப்படுகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த விவகாரம்தான். எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு மாறுதல் வாங்கினோம்? அதற்கு யாரிடம் எவ்வளவு கொடுத்தோம் செய்தோம் என்பதை மக்கள் அனுப்பினாலே போதும். சர்வர் ஸ்தம்பித்துவிடும். ஆதரவற்றோர் நிதியாக அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதற்காக உள்ளூர் கரைவேட்டிகளுக்கு சாமானிய மக்கள் எவ்வளவு தண்டம் அழுதார்கள் என்கிற பட்டியலை ஊர் வாரியாக எடுத்தால் கட்சி மற்றும் ஆட்சியின் பெயரில் அடிமட்டத்தில் விரவிக்கிடக்கும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஊழல் எங்கும் இருக்கிறது. எப்பொழுதுமே இருக்கிறது. ஆனால் ஊழல் என்பதே இன்றுதான் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது போல துள்ளுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியல் எப்படியோ போகட்டும்- ஒரேயொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். 

பல ஆண்டுகளாக தூர் வார அனுமதி வழங்கப்படாத குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதிக்காத தமிழக அரசு இப்பொழுது அனுமதி வழங்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் உத்தரவுகளில் மிக முக்கியமானது இது. மக்களுக்கு நேரடியாக பலனளிக்கக் கூடியது. ஆனால் பல ஊர்களில் குளங்கள் ஒழுங்காகத் தூர் வாரப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அதற்கான பிரச்சினையே உள்ளூர் கட்சிக்காரர்கள்தான். ‘நாங்கதான் மண் எடுப்போம்’ என்று வந்து குறுக்காட்டுகிறார்கள். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து ‘நீ யாரு தடுக்க?’ என்று கேட்டால் ஒதுங்கிவிடக் கூடும். ஆனால் மக்கள் அதைச் செய்வதில்லை. கட்சிக்காரர்களிடம் ஏன் பொல்லாப்பு என்று தயங்குகிறார்கள். அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. குளத்திலிருந்து மக்களே மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்கிற சூழலில் கரைவேட்டி கட்டியவர்கள் இடையில் நின்று மண்ணை எடுத்து விற்பது ஊழல் பட்டியலில் வராதா? அமைச்சர்களுக்கும், உள்ளூர் எம்.எல்.ஏக்களுக்கும் இது தெரியாதா என்ன? 

கீழ்மட்ட ஊழல்கள் பெரும்பாலானவை இரண்டு வகைப்பாட்டில் அடங்கும். மக்களின் அறியாமையின் மீது நிகழ்த்தப்படுவது முதல் வகையென்றால் மக்கள் தங்களின் சுயநலத்துக்காக ஒத்து ஊதுவது இரண்டாம் வகை.

‘எனக்கு பட்டா மாறுதல் வேணும்..பத்தாயிரம் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்கிற பிரச்சினையில் நாம் எதுவும் செய்ய முடியாது. ‘கோர்ட்டுக்கு போனா ஆயிரத்து ஐநூறு ரூபா...இங்கேயே கொடுத்தா முந்நூறு..எப்படி வசதி?’ என்று கேட்கும் போது அங்கேயே கொடுக்கத் தயாராக இருப்பதும் ஊழல்தான். நாமே ஒத்து ஊதுகிற இரண்டாம் வகை ஊழல்கள். எப்படியோ நாசமாக போகட்டும் என்று ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

முதல் வகையிலான ஊழல்களில் விவரம் தெரிந்தவர்கள் தலையிட முடியும். ‘உனக்கு அனாதைப்பணம் வேணும்ன்னா 2000 ரூபா கொடுக்கணும்’ என்று கேட்டால் ‘உனக்கு எதுக்கு நான் கொடுக்கணும்?’ என்று கேட்கச் சொல்லலாம். எங்கள் ஊரில் ஒரு தாத்தாவிடம் பணத்தைப் பறித்திருந்தார்கள். போனது போனதுதான். அப்பொழுது சப்கலெக்டராக இருந்த கிருஷ்ணன் உன்னிக்கு விவரத்தை அனுப்பி வைத்த பிறகு பத்து நாட்களில் ஆணை வழங்கிவிட்டார்கள். கீழ்மட்டத்தில் நடைபெறும் இத்தகைய சிறிய ஊழல்கள் என்பது எளிய மக்களின் அறியாமை மீது நிகழ்த்தப்படுகிற ஊழல். அரசாங்கத்தில் யாரை அணுக வேண்டும், எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியாத மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிற செயல். செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு பல பஞ்சாயத்துகளில் குளம் தூர்வாருவதைத் தடுப்பதும் கூட அப்படியான மிளகாய் அரைத்தல்தான். இதை மிக எளிதாக சமாளித்துவிட முடியும்.

ஒரு விண்ணப்பத்தில் குளத்தைக் குறிப்பிட்டு ஊர்க்காரர்கள் பத்துப் பேர் கையொப்பமிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். ‘ஏற்கனவே அவங்க பர்மிஷன் வாங்கிட்டாங்க’ என்று சொல்லி யாரேனும் இழுத்தடிப்பதாகத் தெரிந்தால் நேரடியாக தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓவை அணுகலாம். ஆர்.டி.ஓ அழைத்துப் பேசினால் ஒன்றிய அலுவலகத்தில் கதறியபடியே அனுமதி அளித்துவிடுவார்கள். தூர் வார அனுமதி வாங்கிவிட்ட பிறகு மண் எடுக்க காசு வேண்டுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.

மண் அள்ளுகிற வண்டிக்காரர்கள் (ஹிட்டாச்சி) ஒரு சுமை மண் எடுக்க இருநூறு ரூபாய் கேட்கிறார்கள். பல ஊர்களிலும் இதுதான் நிலவரம். ட்ராக்டர்காரர்களை அழைத்து ‘மண்ணை எடுத்துட்டுப் போய் நீங்க வித்துக்குங்க...சுமைக்கு இருநூறு ரூபாயை ஹிட்டாச்சிக்காரர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னால் நம் வேலை முடிந்தது. உதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் மண்ணைக் கொண்டு போய் கொட்டினால் ட்ராக்டர்காரர்கள்  முந்நூற்றைம்பது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம். அதில் இருநூறு ரூபாய் மண் அள்ளுகிற வண்டிக்காரர்களுக்கு. நூற்றைம்பது ரூபாய் டிராக்டர்காரர்களுக்கு. தொலைவு அதிகமாக அதிகமாக ட்ராக்டர் வாடகை அதிகமாகும். ஆனால் மண் அள்ளுகிறவர்களுக்கு எப்பொழுதுமே இருநூறு ரூபாய்தான் வாடகை. பல ஊர்களிலும் மண்ணுக்கு நிறையத் தேவை இருக்கிறது. விவசாயிகளும் இன்னபிறரும் வாங்கிக் கொள்கிறார்கள்.

மண்ணைக் கொண்டு போய் கொட்டுவது, மண்ணை வாங்கியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வருவது போன்ற வேலைகளை ட்ராக்டர்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். மண் அள்ளுகிற வேலையை ஹிட்டாச்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். குளம் முழுக்கவும் சீராக மண் எடுக்கிறார்களா, கரையை பாதிக்காமல் மண்ணை அள்ளுகிறார்களா போன்ற வேலையை மட்டும் உள்ளூர்க்காரர்கள் கவனித்துக் கொண்டால் போதும்.


கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் இந்த முறையில்தான் குளம் தூர்வாரப்படுகிறது. நல்லவேளையாக அங்கே தலையீடுகள் எதுவுமில்லை. நிதி ஆதாரத்தைத் திரட்டுவது எப்படி என்பதற்காக இந்த ஊரை உதாரணாமக் குறிப்பிட்டிருக்கிறேன். கைக்காசைச் செலவு செய்யாமல், நன்கொடை இல்லாமல் கிட்டத்தட்ட ஆறாயிரம் சுமை மண்ணை எடுத்திருக்கிறார்கள்.

வெறுமனே புலம்பாமலும் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று ஒதுங்காமல் சற்றேனும் இறங்க வேண்டியிருக்கிறது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் உள்ளூரில் எல்லோரும் தெரிந்த முகங்கள்தான். ‘நீங்களும் மண் எடுக்கறீங்களாண்ணா? நாங்க ஒரு ஐயாயிரம் லோடு எடுத்துக்கிறோம்..பர்மிஷன் வாங்கிட்டு வந்துட்டோம்..யார் எடுத்தா என்னங்கண்ணா? குளம் ஆழமானச் சரி’ என்று சிரித்தபடியே சொல்லிக் கொள்ளலாம். எந்தத் திட்டத்திலும் ஓட்டையைக் கண்டுபிடிக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. 

குற்றம் சுமத்துவது எளிது. யாரை வேண்டுமானாலும் கை நீட்டிவிடலாம். காரியத்தை நடத்துவதுதான் கடினம். ஒரு காரியத்தைச் செய்வதாக முடிவு செய்த பிறகு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பத்துப் பேர் திரண்டு நின்றால் எந்தக் கட்சிக்காரனும் பயப்படத்தான் செய்வான். நம்மிடம் அனுமதியிருக்கும் போது யாரும் தடுக்கவும் வாய்ப்பில்லை. மீறித் தடுத்தால் புகார் அளிக்க முடியும். அப்படியும் தடைபோட்டால் எப்படியிருந்தாலும் வாக்குக் கேட்க நம்மிடம்தான் வந்தாக வேண்டும். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். அந்தச் சமயத்திலும் கூட முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு வாக்களித்தாலோ, ராத்திரியோடு ராத்திரியாக பணம் கொடுப்பவர்களைக் காட்டிக் கொடுக்காமல் ‘எவனோ எப்படியோ போகட்டும்’ என்றிருந்தாலும் ஊழல் பற்றியெல்லாம் பேசுவதற்கு நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று அர்த்தம். குளமும் ஆழமாகாது. நம் மனமும் விரிவடையாது. 

5 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி,
குளமும் ஆழமாக வேண்டும் நம் மனமும் விரிய வேண்டும் என்பதற்கான எளிய வழி சொல்லி விட்டீர்கள். இனி தொடர்புடையவர்கள் செயல் படுத்த வேண்டும் என வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.

Paramasivam said...

நல்ல அறிவுரை!

அன்பே சிவம் said...

கண்ணுக் கெட்டிய வரை தேடிப் பார்த்தேன்.
எங்குமே தென்பட வில்லை.


'ஊழல்'

அப்டின்னா??? என்ன சார்.!!!

சேக்காளி said...

//Blogger அன்பே சிவம் said...
கண்ணுக் கெட்டிய வரை தேடிப் பார்த்தேன்.
எங்குமே தென்பட வில்லை//
"கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை"
ங்கறதோட தழுவல் தானே சார் இந்த கமெண்ட்?

கிரி said...

மணி, மருத்துவம் படிப்புக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி இருந்தீர்கள்.

இவை இரண்டும் முக்கியம் தான் ஆனால், அதே போல ஏரி குளம் தூர் வருவதும் நமக்கும் அடுத்து வரும் சந்ததியினருக்கும் மிக முக்கியம்.

நீங்கள் குளம் தூர் வார எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகுந்த மகிழ்வை அளிக்கின்றன.

நீங்கள் இன்னும் பல ஏரி குளங்களை தூர் வாரி பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

தண்ணீரின் முக்கியத்துவம் பலரும் உணராமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிரச்சனை வரும் போது மட்டுமே நினைக்கிறார்கள்.. பின் மறந்து விடுகிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் உங்களைப் போல பலர் தூர் வாரும் முயற்சியில் இறங்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி.